தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7286

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

உயைனா இப்னு ஹிஸ்ன் இப்னி ஹுதைஃபா இப்னு பத்ர்(ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு இப்னு கைஸ் இப்னி ஹிஸ்ன்(ரலி) அவர்களிடம் தங்கினார்கள். உமர்(ரலி) அவர்கள் தம் அருகே (தமக்கு நெருக்கமாக) வைத்துக் கொள்பவர்களில் ஒருவராக ஹுர்ரு இப்னு கைஸ்(ரலி) அவர்கள் இருந்தார்கள். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும் (குர்ஆனையும் ஹதீஸையும்) கற்றறிந்தவர்களே உமர்(ரலி) அவர்களின் அவையோராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர். எனவே, உயைனா(ரலி) அவர்கள் தம் சகோதரருடைய புதல்வரிடம், ‘என் சகோதரர் மகனே! இந்தத் தலைவர் (உமர்(ரலி) அவர்களிடம் உனக்கு செல்வாக்கு உள்ளதா? அப்படி இருந்தால் நான் அவரிடம் செல்ல எனக்காக நீ அனுமதி பெற்றுத் தா’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘உமர்(ரலி) அவர்களிடம் செல்ல உங்களுக்காக நான் அனுமதி கோருகிறேன்’ என்றார். அவ்வாறே உயைனாவுக்காக ஹுர்ரு இப்னு கைஸ் அனுமதி கேட்டார்கள்.

உயைனா(ரலி) அவர்கள் உள்ளே சென்றவுடன், ‘கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை; எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை’ என்றார். உடனே உமர்(ரலி) அவர்கள் கோபமடைந்து அவரை அடிக்க முன்வந்தார்கள். அப்போது ஹுர்ரு அவர்கள், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு ‘(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக நன்மை புரியுமாறு ஏவுவீராக. அறிவீனர்களைப் புறக்கணிப்பீராக’ (திருக்குர்ஆன் 07:199) என்று கூறியுள்ளான். இவர் அறிவீனர்களில் ஒருவராவார்’ என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு அவர்கள் இந்த வசனத்தை உமர்(ரலி) அவர்களுக்கு ஓதி காட்டியபோது உமர் அதை மீறவில்லை. (பொதுவாகவே) உமர் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படுபவர்களாய் இருந்தார்கள்.15

Book :96

(புகாரி: 7286)

حَدَّثَنِي إِسْمَاعِيلُ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

قَدِمَ عُيَيْنَةُ بْنُ حِصْنِ بْنِ حُذَيْفَةَ بْنِ بَدْرٍ، فَنَزَلَ عَلَى ابْنِ أَخِيهِ الحُرِّ بْنِ قَيْسِ بْنِ حِصْنٍ، وَكَانَ مِنَ النَّفَرِ الَّذِينَ يُدْنِيهِمْ عُمَرُ، وَكَانَ القُرَّاءُ أَصْحَابَ مَجْلِسِ عُمَرَ وَمُشَاوَرَتِهِ، كُهُولًا كَانُوا أَوْ شُبَّانًا، فَقَالَ عُيَيْنَةُ لِابْنِ أَخِيهِ: يَا ابْنَ أَخِي، هَلْ لَكَ وَجْهٌ عِنْدَ هَذَا الأَمِيرِ فَتَسْتَأْذِنَ لِي عَلَيْهِ؟ قَالَ: سَأَسْتَأْذِنُ لَكَ عَلَيْهِ، قَالَ ابْنُ عَبَّاسٍ: فَاسْتَأْذَنَ لِعُيَيْنَةَ، فَلَمَّا دَخَلَ، قَالَ: يَا ابْنَ الخَطَّابِ، وَاللَّهِ مَا تُعْطِينَا الجَزْلَ، وَمَا تَحْكُمُ بَيْنَنَا بِالعَدْلِ، فَغَضِبَ عُمَرُ، حَتَّى هَمَّ بِأَنْ يَقَعَ بِهِ، فَقَالَ الحُرُّ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، إِنَّ اللَّهَ تَعَالَى قَالَ لِنَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {خُذِ العَفْوَ وَأْمُرْ بِالعُرْفِ وَأَعْرِضْ عَنِ الجَاهِلِينَ} [الأعراف: 199]، وَإِنَّ هَذَا مِنَ الجَاهِلِينَ، «فَوَاللَّهِ مَا جَاوَزَهَا عُمَرُ حِينَ تَلاَهَا عَلَيْهِ، وَكَانَ وَقَّافًا عِنْدَ كِتَابِ اللَّهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.