தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2272

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 கூலிக்கு அமர்த்தப்பட்டவர் கூலியை வாங்காமல் சென்ற பிறகு, கூலிக்கு அமர்த்தியவர் அதைக் கொண்டு உழைத்து அதைப் பெருகச் செய்திருந்தால் அல்லது ஒருவர் பிறரது செல்வத்தைக் கொண்டு உழைத்து அதில் லாபம் பெற்றிருந்தால்…

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் ‘நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!’ என்று தமக்குள் கூறினர்.

அவர்களில் ஒருவர் ‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன்.

ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!

மற்றொருவர், ‘இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, ‘முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!’ என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமே விட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.

மூன்றாமவர், ‘இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!’ என்று கூறினார்.

‘நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!’ என்று கூறினேன். அதற்கவர் ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!’ என்றார். ‘நான் உம்மை கேலி செய்யவில்லை!’ என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். ‘இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!’ எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!’
என அப்துல்லாஹ்வின் உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 37

(புகாரி: 2272)

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

انْطَلَقَ ثَلاَثَةُ رَهْطٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ حَتَّى أَوَوْا المَبِيتَ إِلَى غَارٍ، فَدَخَلُوهُ فَانْحَدَرَتْ صَخْرَةٌ مِنَ الجَبَلِ، فَسَدَّتْ عَلَيْهِمُ الغَارَ، فَقَالُوا: إِنَّهُ لاَ يُنْجِيكُمْ مِنْ هَذِهِ الصَّخْرَةِ إِلَّا أَنْ تَدْعُوا اللَّهَ بِصَالِحِ أَعْمَالِكُمْ، فَقَالَ رَجُلٌ مِنْهُمْ: اللَّهُمَّ كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ، وَكُنْتُ لاَ أَغْبِقُ قَبْلَهُمَا أَهْلًا، وَلاَ مَالًا فَنَأَى بِي فِي طَلَبِ شَيْءٍ يَوْمًا، فَلَمْ أُرِحْ عَلَيْهِمَا حَتَّى نَامَا، فَحَلَبْتُ لَهُمَا غَبُوقَهُمَا، فَوَجَدْتُهُمَا نَائِمَيْنِ وَكَرِهْتُ أَنْ أَغْبِقَ قَبْلَهُمَا أَهْلًا أَوْ مَالًا، فَلَبِثْتُ وَالقَدَحُ عَلَى يَدَيَّ، أَنْتَظِرُ اسْتِيقَاظَهُمَا حَتَّى بَرَقَ الفَجْرُ، فَاسْتَيْقَظَا، فَشَرِبَا غَبُوقَهُمَا، اللَّهُمَّ إِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَفَرِّجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ مِنْ هَذِهِ الصَّخْرَةِ، فَانْفَرَجَتْ شَيْئًا لاَ يَسْتَطِيعُونَ الخُرُوجَ “، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” وَقَالَ الآخَرُ: اللَّهُمَّ كَانَتْ لِي بِنْتُ عَمٍّ، كَانَتْ أَحَبَّ النَّاسِ إِلَيَّ، فَأَرَدْتُهَا عَنْ نَفْسِهَا، فَامْتَنَعَتْ مِنِّي حَتَّى أَلَمَّتْ بِهَا سَنَةٌ مِنَ السِّنِينَ، فَجَاءَتْنِي، فَأَعْطَيْتُهَا عِشْرِينَ وَمِائَةَ دِينَارٍ عَلَى أَنْ تُخَلِّيَ بَيْنِي وَبَيْنَ نَفْسِهَا، فَفَعَلَتْ حَتَّى إِذَا قَدَرْتُ عَلَيْهَا، قَالَتْ: لاَ أُحِلُّ لَكَ أَنْ تَفُضَّ الخَاتَمَ إِلَّا بِحَقِّهِ، فَتَحَرَّجْتُ مِنَ الوُقُوعِ عَلَيْهَا، فَانْصَرَفْتُ عَنْهَا وَهِيَ أَحَبُّ النَّاسِ إِلَيَّ، وَتَرَكْتُ الذَّهَبَ الَّذِي أَعْطَيْتُهَا، اللَّهُمَّ إِنْ كُنْتُ فَعَلْتُ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ، فَانْفَرَجَتِ الصَّخْرَةُ غَيْرَ أَنَّهُمْ لاَ يَسْتَطِيعُونَ الخُرُوجَ مِنْهَا “، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” وَقَالَ الثَّالِثُ: اللَّهُمَّ إِنِّي اسْتَأْجَرْتُ أُجَرَاءَ، فَأَعْطَيْتُهُمْ أَجْرَهُمْ غَيْرَ رَجُلٍ وَاحِدٍ تَرَكَ الَّذِي لَهُ وَذَهَبَ، فَثَمَّرْتُ أَجْرَهُ حَتَّى كَثُرَتْ مِنْهُ الأَمْوَالُ، فَجَاءَنِي بَعْدَ حِينٍ فَقَالَ: يَا عَبْدَ اللَّهِ أَدِّ إِلَيَّ أَجْرِي، فَقُلْتُ لَهُ: كُلُّ مَا تَرَى مِنْ أَجْرِكَ مِنَ الإِبِلِ وَالبَقَرِ وَالغَنَمِ وَالرَّقِيقِ، فَقَالَ: يَا عَبْدَ اللَّهِ لاَ تَسْتَهْزِئُ بِي، فَقُلْتُ: إِنِّي لاَ أَسْتَهْزِئُ بِكَ، فَأَخَذَهُ كُلَّهُ، فَاسْتَاقَهُ، فَلَمْ يَتْرُكْ مِنْهُ شَيْئًا، اللَّهُمَّ فَإِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ، فَانْفَرَجَتِ الصَّخْرَةُ، فَخَرَجُوا يَمْشُونَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.