தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2468

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களில் இருவரைப் பற்றி உமர்(ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான் அல்லாஹ் (திருக்குர்ஆனில்),

‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்.) ஏனெனில், உங்கள் உள்ளங்கள் நேரிய வழியிலிருந்து (சற்றே) பிறழ்ந்து விட்டிருக்கின்றன’ (திருக்குர்ஆன் 66:04) என்று கூறியிருந்தான்.

(ஒரு முறை) உமர்(ரலி) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். அவர்கள் (மலஜலம் கழிப்பதற்காக) விலகிச் சென்றார்கள். நானும் அவர்களுடன் தண்ணீர்க் குவளையை எடுத்துக் கொண்டு விலகிச் சென்றேன். அவர்கள் மலஜலம் கழித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் அவர்களின் கைகளில் குவளையிலிருந்த தண்ணீரை ஊற்றினேன். (அதில்) அவர்கள் உளூச் செய்தார்கள்.

அப்போது நான், ‘விசுவாசிகளின் தலைவரே! நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களில் இருவரைக் குறித்து, ‘நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்)’ என்று இறைவன் கூறியுள்ளானே, அந்த இருவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு உமர்(ரலி), ‘இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன்.

(குர்ஆனின் விளக்கத்தில் பெரும் அறிஞரான உங்களுக்கு இது கூடவா தெரியாது?) ஆயிஷா(ரலி) அவர்களும் ஹஃப்ஸா(ரலி) அவர்களும் தான் அந்த இருவர்’ என்று கூறினார்கள். பிறகு உமர்(ரலி) நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள், நான் அன்சாரியான என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருடன் பனூ உமய்யா இப்னு ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்து வந்தேன். அது மதீனாவை ஒட்டிய ஒரு குடிறியிருப்புப் பகுதியாகும். நாங்கள் இருவரும் முறை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் தங்குவோம். அவர் ஒரு நாள் நபி(ஸல்) அவர்களுடன் இருப்பார். நான் ஒரு நாள் அவர்களுடன் இருப்பேன். நான் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது நபி(ஸல்) அவர்களின் அன்றைய நாளின் கட்டளைகள், போதனைகளையும் பிறவற்றையும் அவரிடம் தெரிவிப்பேன். அவர் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது இதே போன்று அவரும் எனக்குத் தெரிவிப்பார்.

குறைஷிக் குலத்தினராகிய நாங்கள் பெண்களை மிஞ்சி விடுபவர்களாக இருந்து வந்தோம். (பெண்களை எங்கள் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்.) நாங்கள் அன்சாரிகளிடம் (மதீனா நகருக்கு) வந்தபோது பெண்கள் அவர்களை (ஆண்களை) மிஞ்சி விடக் கூடியவர்களாக இருக்கக் கண்டோம். (பெண்கள் ஆண்களைக் கட்டுப்படுத்துபவர்களாக, தம் மனத்திற்குப் பிடிக்காதவற்றைக் கூறும்போது ஆண்களை எதிர்த்துப் பேசக் கூடியவர்களாக இருக்கக் கண்டோம்.)

(இதைக் கண்ட) எங்களுடைய பெண்களும் அன்சாரிப் பெண்களின் வழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினார்கள். (ஒரு நாள்) நான் என் மனைவியிடம் (கோபத்துடன்) இரைந்து பேசினேன். அவள் என்னை எதிர்த்துப் பேசினாள், அவள் என்னை எதிர்த்துப் பேசியதை நான் வெறுத்தேன். நான் உம்மை எதிர்த்துப் பேசியதை நீர் ஏன் வெறுக்கிறீர்?அல்லாஹ்வின் மீதாணையாக!நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் கூட அவர்களிடம் எதிர்த்துப் பேசுகிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் ஒருநாள் முழுக்கவும் இரவு வரை பேசுவதில்லை’ என்று கூறினாள்.

இதைக் கேட்டு நான் அச்சமுற்று, ‘அவர்களில் இப்படிச் செய்தவர் பெரும் இழப்புக்கு ஆளாகிவிட்டார்’ என்று கூறினேன். பிறகு உடையணிந்து (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். ‘ஹஃப்ஸாவே! உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் நாள் முழுக்க, இரவு வரை கோபமாக இருக்கிறார்களாமே! (உண்மையா?)’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஆம்’ என்று பதிலளித்தார். நான், ‘அப்படி இருப்பவர் நஷ்டப்பட்டுவிட்டார்; இழப்புக்குள்ளாகிவிட்டார்.

இறைத் தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அதனால் அல்லாஹ்வும் நம் மீது கோபமடைந்து நாம் அழிந்து போய்விடுவோம் என்னும் அச்சம் அவருக்கில்லையா? அல்லாஹ்வின் தூதரிடம் அதிகமாக (தேவைகளை) நீ கேட்காதே. எந்த விஷயத்திலும் அவர்களை எதிர்த்துப் பேசாதே. அவர்களிடம் பேசாமல் இருக்காதே. உனக்கு (அவசியத் தேவையென்று) தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா(ரலி) உன்னை விட அழகு மிக்கவராகவும் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைப் பார்த்து) நீ ஏமாந்துவிடாதே’ என்று (அறிவுரை) கூறினேன்.

அந்தக் காலகட்டத்தில் நாங்கள், கஸ்ஸானியர்கள் (ஷாம் நாட்டில் வாழும் ஒரு குலத்தினர்) எங்களின் மீது படையெடுப்பதற்காக, தங்கள் குதிரைகளுக்கு லாடம் அடித்துத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் என்று ஒரு (வதந்தியான) செய்தியைப் பேசிக் கொண்டிருந்தோம். என் அன்சாரித் தோழர் தம் முறை வந்தபோது, நபி(ஸல்) அவர்களிடம் சென்று தங்கி, இஷா நேரத்தில் திரும்பி வந்தார். என் வீட்டுக் கதவை பலமாகத் தட்டி, ‘அவர் (உமர்) அங்கே இருக்கிறாரா?’ என்று கேட்டார். நான் அச்சமுற்று அவரைப் பார்க்க வெளியே வந்தேன். அவர், ‘மிகப் பெரிய ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது’ என்று கூறினார். நான், ‘என்ன அது? கஸ்ஸானியர்கள் (படையெடுத்து) வந்துவிட்டனரா?’ என்று கேட்டேன். ‘இல்லை. அதை விடப் பெரிய, அதை விட (அதிகக்) கவலைக்குரிய சம்பவம் நடந்துவிட்டது.

இறைத்தூதர்(ஸல்) தம் மனைவிமார்களை விவாகரத்து (தலாக்) செய்துவிட்டார்கள்’ என்று கூறினார். நான், ‘ஹஃப்ஸா நஷ்டமடைந்து பெரும் இழப்புக்குள்ளாகிவிட்டாள். நான் ‘இது (விரைவில் என்றாவது ஒரு நாள்) நடக்கத்தான் போகிறது’ என்று எண்ணியிருந்தேன்’ என்று கூறிவிட்டு உடையணிந்து கொண்டு புறப்பட்டேன். நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகை தொழுதேன். நபி(ஸல்) அவர்கள் தொழுகை முடிந்தவுடன் தம் மாடியறைக்குள் (சென்று) அங்கே தனியே இருந்தார்கள். நான் ஹஃப்ஸாவிடம் சென்றேன். அப்போது அவர் அழுது கொண்டிருந்தார். நான், ‘ஏன் அழுகிறாய்? நான் உன்னை எச்சரித்திருக்கவில்லையா? இறைத்தூதர்(ஸல்) உங்களை விவாகரத்து (தலாக்) செய்துவிட்டாரா?’ என்று கேட்டேன்.

அதற்கு அவர், ‘எனக்கொன்றும் தெரியாது. அவர் அந்த அறையில்தான் இருக்கிறார்’ என்று கூறினார். நான் மிம்பருக்கருகில் சென்றேன். அதைச் சுற்றி ஒரு கூட்டத்தினர் அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் (கேள்விப்பட்ட செய்தியை எண்ணி) அழுது கொண்டிருந்தனர். அவர்களுடன் நான் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பிறகு நான் அந்த (துக்ககரமான) சூழ்நிலையத் தாங்க முடியாமல் நபியவர்கள் இருந்த அறைக்கு அருகே சென்றேன். அங்கிருந்த, நபி(ஸல்) அவர்களின் கறுப்பு அடிமையிடம், ‘உமருக்காக (எனக்காக) நபியவர்களிடம் (அறைக்குள் வர) அனுமதி கேள்’ என்று சொன்னேன்.

அந்த அடிமை அறைக்கு உள்ளே சென்று நபி(ஸல்) அவர்களிடம் பேசிவிட்டுப் பிறகு வெளியே வந்து, ‘உங்களைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் மெளனமாக இருந்துவிட்டார்கள்’ என்று கூறினார். எனவே, நான் திரும்பி வந்து மிம்பருக்கருகில் இருந்த கூட்டத்தினருடன் அமர்ந்து கொண்டேன். பின்னர், அங்கு நிலவிய (துக்ககரமான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் மீண்டும் அந்த அடிமையிடம் சென்று, ‘உமருக்காக நீ (நபி(ஸல்) அவர்களிடம் அவர்களின் அறைக்குள் வர) அனுமதி கேள்’ என்று கூறினேன். அவர் (உள்ளே சென்று வந்து) முன்பு சொன்னதைப் போன்றே இப்போதும் கூறினார். நான் (மறுபடியும்) மிம்பருக்கருகில் இருந்த கூட்டத்தாருடன் அமர்ந்து கொண்டேன். மறுபடி அங்கு நான் கண்ட (கவலையான) சூழ்நிலையைத் தாங்க முடியாமல் அந்த அடிமையிடம் சென்று, ‘உமருக்காக அனுமதி கேள்’ என்று கூறினேன். அப்போதும் அந்த அடிமை முன் போன்றே கூறினார். நான் திரும்பிச் செல்ல இருந்தபோது அந்த அடிமை என்னை அழைத்து, ‘உங்களுக்கு இறைத்தூதர் அனுமதியளித்துவிட்டார்கள்’ என்று கூறினார்.

உடனே, நான் நபி(ஸல்) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் படுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே மெத்தை எதுவும் இருக்கவில்லை. எனவே, அவர்களின் விலாவில் அந்த ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது. அவர்கள் ஈச்ச நார்கள் அடைத்த தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் சலாம் கூறினேன்.

பிறகு நான் நின்று கொண்டே, ‘தங்கள் மனைவிமார்களை தாங்கள் தலாக் (விவாகரத்து) செய்து விட்டீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள் தங்களின் பார்வையை என் பக்கம் உயர்த்தி, ‘இல்லை’ என்று கூறினார்கள். பிறகு, நான் நின்று கொண்டே (அவர்களின் கோபத்தைக் குறைத்து) அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டுவர விரும்பி, பின்வருமாறு சொல்லத் தொடங்கினேன்: இறைத்தூதர் அவர்களே! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். குறைஷிகளான நாங்கள் பெண்களை எங்கள் அதிகாரத்திற்குள் வைத்திருந்தோம். பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரிடம் (மதீனா வாசிகளிடம்) நாங்கள் வந்தபோது… (எங்கள் பெண்களும் அவர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டு எங்களிடம் எதிர்த்துப் பேசத் தொடங்கினர்)… என்று தொடங்கி, (முன்பு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் என் மனைவி பற்றிச் சொன்னவை) எல்லாவற்றையும் கூறினேன். (அதைக் கேட்டு) நபி(ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள்.

பிறகு நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் ஹஃப்ஸாவிடம் சென்று, ‘உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா(ரலி) உன்னை விட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு ஊடலும் கோபமும் கொள்வதைக் கண்டு) நீ ஏமாந்துவிடாதே’ என்று கூறியதைச் சொன்னேன். (இதை நான் சொல்லக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் இன்னொரு முறை புன்னகைத்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் புன்னகைத்ததைக் கண்ட நான் அமர்ந்து கொண்டேன். பிறகு, நான் அவர்களின் அறையை என் பார்வையை உயர்த்தி நோட்டமிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! கண்ணைக் கவருகிற பொருள் எதையும் நான் அதில் காணவில்லை; மூன்றே மூன்று (பதனிடப்படாத) தோல்களைத் தவிர.

அப்போது நான், ‘தங்கள் சமுதாயத்தினருக்கு உலகச் செல்வங்களை தாராளமாக வழங்கும்படி தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். ஏனெனில், பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் – அவர்கள் அல்லாஹ்வை வணங்காதவர்களாக இருந்தும் (உலகச் செல்வங்கள்) தாரளமாக வழங்கப்பட்டிருக்கின்றனவே’ என்று கூறினேன்.

நபி(ஸல்) அவர்கள் (தலையணை மீது) சாய்ந்து உட்கார்ந்து, ‘கத்தாபின் மகனே! நீங்கள் சந்தேகத்தில் இருக்கிறீர்களா? அவர்கள், தம் (நற் செயல்களுக்கான) பிரதிபலன்கள் எல்லாம் இந்த உலக வாழ்விலேயே (மறுமை வாழ்வுக்கு) முன்னதாகக் கொடுக்கப்பட்டுவிட்டார்கள்’ என்று கூறினார்கள்.

உடனே நான், ‘இறைத்தூதர் அவர்களே! (அவரசப்பட்டு இப்படிக் கேட்டதற்காக) எனக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிராந்தியுங்கள்’ என்று கூறினேன்.
நபி(ஸல்) அவர்களின் அந்த இரகசியத்தை ஹஃப்ஸா(ரலி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறி பகிரங்கப்படுத்திவிட்ட போது, அதன் காரணத்தால்தான் நபி(ஸல்) அவர்கள் தம் மனைவிமார்களிடமிருந்து விலகித் தனிமையில் இருக்கத் தொடங்கினார்கள். மேலும், ‘அவர்களிடம் ஒரு மாத காலத்திற்கு செல்ல மாட்டேன்’ என்றும் கூறியிருந்தார்கள். அல்லாஹ் அவர்களைக் கண்டித்த போது தம் மனைவிமார்களின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட கடும் வருத்தமே இவ்வாறு அவர்கள் சொல்லக் காரணமாகும்.

இருபத்தொன்பது நாள்கள் கழிந்துவிட்ட பொழுது, நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று, அவர்களிலிருந்து (மற்ற மனைவிமார்களிடம் செல்லத்) தொடங்கினார்கள். ஆயிஷா(ரலி), அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம், ‘எங்களிடம் ஒரு மாத காலத்திற்கு வரப் போவதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே, நாங்கள் இருபத்தொன்பது இரவுகளல்லவா கழித்திருக்கிறோம்? (ஒரு நாள் முன்னதாக வந்து விட்டீர்களே!) அதை நான் ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டே வருகிறேனே’ என்று கூறினார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மாதம் என்பது (குறைந்த பட்சம்) இருபத்தொன்பது நாள்களும் தான்’ என்று பதில் கூறினார்கள். அந்த மாதமும் இருபத்தொன்பது நாள்களாகவே இருந்தது. ஆயிஷா(ரலி) கூறினார்:

அப்போதுதான், (‘நபி(ஸல்) அவர்களுடன் வாழ்ந்து, அல்லது அவர்களின் மணபந்தத்திலிருந்து விலகி விடுவது’ ஆகிய இரண்டு விஷயங்களில்) நாங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கட்டளையிடும் இறைவசனம் அருளப்பட்டது. எனவே, நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவிமார்களில் முதலாவதாக என்னிடம் தொடங்கி, ‘உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்; நீ உன் தாய் தந்தையரிடம் (அதற்காக) அனுமதி வாங்கும் வரை அவசரப்படத் தேவையில்லை’ என்று கூறினார்கள்.

அதற்கு நான், ‘என் தாய் தந்தையர் தங்களைவிட்டுப் பிரிந்து வாழும்படி ஒருபோதும் சொல்ல மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்’ என்று கூறினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘நபியே! நீங்கள் உங்கள் மனைவிமார்களிடம் கூறிவிடுங்கள்: ‘நீங்கள் உலக வாழ்வையும் அதன் அழகையும் விரும்புகிறீர்களென்றால் வாருங்கள். நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பி விடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுவுலகத்தையும் விரும்புகிறீர்கள் என்றால் (அறிந்து கொள்ளுங்கள்:) உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான பிரதிபலனைத் தயார் செய்து வைத்துள்ளான்’ என்று அல்லாஹ் கூறினான்.

(எனவே, உங்கள் முடிவு என்ன?)’ என்று கேட்டார்கள். நான், ‘இந்த விஷயத்திலா என் தாய் தந்தையரிடம் நான் அனுமதி கேட்பேன். நானோ அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமையையும் தான் விரும்புகிறேன்’ என்றேன். பிறகு, தம் மனைவியர் அனைவருக்கும் (‘தம்முடன் வாழ்வது, தம்மைவிட்டுப் பிரிவது’ ஆகிய இரண்டில்) விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கினார்கள். அவர்கள் அனைவருமே நான் சொன்னது போன்றே சொன்னார்கள்.
Book :46

(புகாரி: 2468)

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

لَمْ أَزَلْ حَرِيصًا عَلَى أَنْ أَسْأَلَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ المَرْأَتَيْنِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّتَيْنِ

قَالَ اللَّهُ لَهُمَا: {إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا} [التحريم: 4] فَحَجَجْتُ مَعَهُ، فَعَدَلَ وَعَدَلْتُ مَعَهُ بِالْإِدَاوَةِ، فَتَبَرَّزَ حَتَّى جَاءَ، فَسَكَبْتُ عَلَى يَدَيْهِ مِنَ الْإِدَاوَةِ فَتَوَضَّأَ، فَقُلْتُ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، مَنِ المَرْأَتَانِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّتَانِ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُمَا: {إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا} [التحريم: 4]؟

فَقَالَ: وَاعَجَبِي لَكَ يَا ابْنَ عَبَّاسٍ، عَائِشَةُ وَحَفْصَةُ، ثُمَّ اسْتَقْبَلَ عُمَرُ الحَدِيثَ يَسُوقُهُ، فَقَالَ: إِنِّي كُنْتُ وَجَارٌ لِي مِنَ الأَنْصَارِ فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ، وَهِيَ مِنْ عَوَالِي المَدِينَةِ، وَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا، فَإِذَا نَزَلْتُ جِئْتُهُ مِنْ خَبَرِ ذَلِكَ اليَوْمِ مِنَ الأَمْرِ وَغَيْرِهِ، وَإِذَا نَزَلَ فَعَلَ مِثْلَهُ، وَكُنَّا مَعْشَرَ قُرَيْشٍ نَغْلِبُ النِّسَاءَ، فَلَمَّا قَدِمْنَا عَلَى الأَنْصَارِ إِذَا هُمْ قَوْمٌ تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ، فَطَفِقَ نِسَاؤُنَا يَأْخُذْنَ مِنْ أَدَبِ نِسَاءِ الأَنْصَارِ، فَصِحْتُ عَلَى امْرَأَتِي، فَرَاجَعَتْنِي، فَأَنْكَرْتُ أَنْ تُرَاجِعَنِي، فَقَالَتْ: وَلِمَ تُنْكِرُ أَنْ أُرَاجِعَكَ، فَوَاللَّهِ إِنَّ أَزْوَاجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ليُرَاجِعْنَهُ، وَإِنَّ إِحْدَاهُنَّ لَتَهْجُرُهُ اليَوْمَ حَتَّى اللَّيْلِ، فَأَفْزَعَنِي، فَقُلْتُ: خَابَتْ مَنْ فَعَلَ مِنْهُنَّ بِعَظِيمٍ، ثُمَّ جَمَعْتُ عَلَيَّ ثِيَابِي، فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ، فَقُلْتُ: أَيْ حَفْصَةُ أَتُغَاضِبُ إِحْدَاكُنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اليَوْمَ حَتَّى اللَّيْلِ؟ فَقَالَتْ: نَعَمْ، فَقُلْتُ: خَابَتْ وَخَسِرَتْ أَفَتَأْمَنُ أَنْ يَغْضَبَ اللَّهُ لِغَضَبِ رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَهْلِكِينَ لاَ تَسْتَكْثِرِي عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلاَ تُرَاجِعِيهِ فِي شَيْءٍ، وَلاَ تَهْجُرِيهِ، وَاسْأَلِينِي مَا بَدَا لَكِ، وَلاَ يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ هِيَ أَوْضَأَ مِنْكِ، وَأَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – يُرِيدُ عَائِشَةَ – وَكُنَّا تَحَدَّثْنَا أَنَّ  غَسَّانَ تُنْعِلُ النِّعَالَ لِغَزْوِنَا، فَنَزَلَ صَاحِبِي يَوْمَ نَوْبَتِهِ فَرَجَعَ عِشَاءً، فَضَرَبَ بَابِي ضَرْبًا شَدِيدًا، وَقَالَ: أَنَائِمٌ هُوَ، فَفَزِعْتُ، فَخَرَجْتُ إِلَيْهِ، وَقَالَ: حَدَثَ أَمْرٌ عَظِيمٌ، قُلْتُ: مَا هُوَ؟ أَجَاءَتْ غَسَّانُ؟ قَالَ: لاَ، بَلْ أَعْظَمُ مِنْهُ وَأَطْوَلُ طَلَّقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نِسَاءَهُ، قَالَ: قَدْ خَابَتْ حَفْصَةُ وَخَسِرَتْ، كُنْتُ أَظُنُّ أَنَّ هَذَا يُوشِكُ أَنْ يَكُونَ، فَجَمَعْتُ عَلَيَّ ثِيَابِي، فَصَلَّيْتُ صَلاَةَ الفَجْرِ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ مَشْرُبَةً لَهُ، فَاعْتَزَلَ فِيهَا، فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ، فَإِذَا هِيَ تَبْكِي، قُلْتُ: مَا يُبْكِيكِ؟ أَوَلَمْ أَكُنْ حَذَّرْتُكِ، أَطَلَّقَكُنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: لاَ أَدْرِي هُوَ ذَا فِي المَشْرُبَةِ، فَخَرَجْتُ، فَجِئْتُ المِنْبَرَ، فَإِذَا حَوْلَهُ رَهْطٌ يَبْكِي بَعْضُهُمْ، فَجَلَسْتُ مَعَهُمْ قَلِيلًا، ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ، فَجِئْتُ المَشْرُبَةَ الَّتِي هُوَ فِيهَا، فَقُلْتُ لِغُلاَمٍ لَهُ أَسْوَدَ: اسْتَأْذِنْ لِعُمَرَ، فَدَخَلَ، فَكَلَّمَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ خَرَجَ فَقَالَ: ذَكَرْتُكَ لَهُ، فَصَمَتَ، فَانْصَرَفْتُ، حَتَّى جَلَسْتُ مَعَ الرَّهْطِ الَّذِينَ عِنْدَ المِنْبَرِ، ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ، فَجِئْتُ، فَذَكَرَ مِثْلَهُ، فَجَلَسْتُ مَعَ الرَّهْطِ الَّذِينَ عِنْدَ المِنْبَرِ، ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ، فَجِئْتُ الغُلاَمَ فَقُلْتُ: اسْتَأْذِنْ لِعُمَرَ، فَذَكَرَ مِثْلَهُ، فَلَمَّا وَلَّيْتُ مُنْصَرِفًا، فَإِذَا الغُلاَمُ يَدْعُونِي قَالَ: أَذِنَ لَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلْتُ عَلَيْهِ، فَإِذَا هُوَ مُضْطَجِعٌ عَلَى رِمَالِ حَصِيرٍ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ فِرَاشٌ، قَدْ أَثَّرَ الرِّمَالُ بِجَنْبِهِ مُتَّكِئٌ عَلَى وِسَادَةٍ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ، فَسَلَّمْتُ عَلَيْهِ، ثُمَّ قُلْتُ وَأَنَا قَائِمٌ: طَلَّقْتَ نِسَاءَكَ، فَرَفَعَ بَصَرَهُ إِلَيَّ، فَقَالَ: «لاَ»، ثُمَّ قُلْتُ وَأَنَا قَائِمٌ: أَسْتَأْنِسُ يَا رَسُولَ اللَّهِ، لَوْ رَأَيْتَنِي وَكُنَّا مَعْشَرَ قُرَيْشٍ نَغْلِبُ النِّسَاءَ، فَلَمَّا قَدِمْنَا عَلَى قَوْمٍ تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ، فَذَكَرَهُ فَتَبَسَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قُلْتُ: لَوْ رَأَيْتَنِي، وَدَخَلْتُ عَلَى حَفْصَةَ، فَقُلْتُ: لاَ يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ هِيَ أَوْضَأَ مِنْكِ، وَأَحَبَّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – يُرِيدُ عَائِشَةَ -، فَتَبَسَّمَ أُخْرَى، فَجَلَسْتُ حِينَ رَأَيْتُهُ تَبَسَّمَ، ثُمَّ رَفَعْتُ بَصَرِي فِي بَيْتِهِ، فَوَاللَّهِ مَا رَأَيْتُ فِيهِ شَيْئًا يَرُدُّ البَصَرَ غَيْرَ أَهَبَةٍ ثَلاَثَةٍ، فَقُلْتُ: ادْعُ اللَّهَ فَلْيُوَسِّعْ عَلَى أُمَّتِكَ، فَإِنَّ فَارِسَ وَالرُّومَ وُسِّعَ عَلَيْهِمْ، وَأُعْطُوا الدُّنْيَا وَهُمْ لاَ يَعْبُدُونَ اللَّهَ، وَكَانَ مُتَّكِئًا فَقَالَ: «أَوَفِي شَكٍّ أَنْتَ يَا ابْنَ الخَطَّابِ أُولَئِكَ قَوْمٌ عُجِّلَتْ لَهُمْ طَيِّبَاتُهُمْ فِي الحَيَاةِ الدُّنْيَا»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، اسْتَغْفِرْ لِي، فَاعْتَزَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَجْلِ ذَلِكَ الحَدِيثِ حِينَ أَفْشَتْهُ حَفْصَةُ إِلَى عَائِشَةَ، وَكَانَ قَدْ قَالَ: «مَا أَنَا بِدَاخِلٍ عَلَيْهِنَّ شَهْرًا مِنْ شِدَّةِ مَوْجِدَتِهِ عَلَيْهِنَّ، حِينَ عَاتَبَهُ اللَّهُ» فَلَمَّا مَضَتْ تِسْعٌ وَعِشْرُونَ، دَخَلَ عَلَى عَائِشَةَ، فَبَدَأَ بِهَا، فَقَالَتْ لَهُ: عَائِشَةُ إِنَّكَ أَقْسَمْتَ أَنْ لاَ تَدْخُلَ عَلَيْنَا شَهْرًا، وَإِنَّا أَصْبَحْنَا لِتِسْعٍ وَعِشْرِينَ لَيْلَةً أَعُدُّهَا عَدًّا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ»، وَكَانَ ذَلِكَ الشَّهْرُ تِسْعًا وَعِشْرِينَ، قَالَتْ عَائِشَةُ: فَأُنْزِلَتْ: آيَةُ التَّخْيِيرِ فَبَدَأَ بِي أَوَّلَ امْرَأَةٍ، فَقَالَ: «إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا، وَلاَ عَلَيْكِ أَنْ لاَ تَعْجَلِي حَتَّى تَسْتَأْمِرِي أَبَوَيْكِ»، قَالَتْ: قَدْ أَعْلَمُ أَنَّ أَبَوَيَّ لَمْ يَكُونَا يَأْمُرَانِي بِفِرَاقِكَ، ثُمَّ قَالَ: ” إِنَّ اللَّهَ قَالَ: {يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ} [الأحزاب: 28] إِلَى قَوْلِهِ {عَظِيمًا} [النساء: 27] “، قُلْتُ: أَفِي هَذَا أَسْتَأْمِرُ أَبَوَيَّ، فَإِنِّي أُرِيدُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الآخِرَةَ، ثُمَّ خَيَّرَ نِسَاءَهُ، فَقُلْنَ مِثْلَ مَا قَالَتْ عَائِشَةُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.