தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3401

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘நவ்ஃப் அல் பிக்காலீ என்பவர், ‘களிர்'(அலை) அவர்களின் தோழரான மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல்களின் (இறைத் தூதரான) மூஸா (அலை) அவர்கள் அல்லர்; அவர் வேறொரு மூஸா தான் என்று கருதுகிறார்’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் பகைவன் பொய் சொல்லிவிட்டான். உபை இப்னு கஅப் (ரலி) நபி (ஸல்) அவர்களிடமிருந்து நமக்கு அறிவித்து உள்ளார்கள்:

(ஒரு முறை) மூஸா(அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல்களிடையே எழுந்து நின்று உரையாற்றினார்கள். அப்போது அவர்களிடம், ‘மக்களிடையே மிகவும் அறிந்தவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நானே’ என்று பதிலளித்துவிட்டார்கள். எனவே, அல்லாஹ் அவர்களைக் கண்டித்தான். ஏனெனில், மூஸா (அலை) அவர்கள் ‘அல்லாஹ்வே அறிந்தவன்’ என்று சொல்லாமல் விட்டு விட்டார்கள்.

எனவே, அல்லாஹ், மூஸா (அலை) அவர்களிடம், இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார் ஒருவர் இருக்கிறார். அவர் உங்களை விட அதிகமாக அறிந்தவர், ‘என் இறைவா! அவரை நான் சந்திப்பதற்கு யார் (வழி காட்டுவார்?)’ என்று கேட்டார்.

(அறிவிப்பாளர் அலீ இப்னு அப்தில்லாஹ் அல் மதீனி (ரஹ்) அறிவித்தார்: சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள், ‘இறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி?’ என்று மூஸா (அலை) அவர்கள் கேட்டதாகவும் சொல்லியிருக்கலாம்.)

அதற்கு அல்லாஹ், ‘நீங்கள் ஒரு மீனை எடுத்து அதை ஒரு (ஈச்சங்) கூடையில் போட்டுக் கொள்ளுங்கள். (அப்படியே கடற்கரையோரமாக நடந்து செல்லுங்கள்.) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவற விடுகிறீர்களோ அங்கே தான் அவர் இருப்பார்’ என்று சொன்னான். அதன்படியே மூஸா (அலை) அவர்களும் அவர்களின் உதவியாளர் யூஷஉ இப்னு நூன் அவர்களும் ஒரு மீனை எடுத்துக் கூடையில் போட்டுக் கொண்டு நடந்தார்கள்.

அவர்கள் ஒரு பாறையருகே சென்று சேர்ந்தபோது அங்கே படுத்து ஓய்வெடுத்தார்கள். உடனே, மூஸா (அலை) அவர்கள் தூங்கிவிட்டார்கள். மீன் குதித்து வெளியேறிக் கடலில் விழுந்தது. அது கடலில் (சுரங்கம் போல்) வழியமைத்துக் கொண்டது. மீனின் வழியில் குறுக்கிடாதவாறு நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிட (மீனைச் சுற்றி) ஒரு வளையம் போல் தண்ணீர் ஆகிவிட்டது.

மீதமிருந்த இரவும் பகலும் அவர்கள் நடந்து சென்று கொண்டேயிருந்தார்கள். இறுதியில், அடுத்த நாள் வந்தபோது தம் உதவியாளரை நோக்கி, ‘நம்முடைய காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வா! நாம் நம்முடைய இந்தப் பயணத்தால் மிகவும் களைப்படைந்து விட்டோம்’ என்று மூஸா (அலை) கூறினார்கள்.

அல்லாஹ் கட்டளையிட்ட இடத்தை மூஸா (அலை) தாண்டிச் செல்லும்வரை அவர்களுக்குக் களைப்பு ஏற்படவில்லை. அவர்களின் உதவியாளர் அவர்களிடம், ‘நாம் அந்தப் பாறையில் ஓய்வெடுக்க தங்கினோமே, பார்த்தீர்களா? அங்கே தான் நான் மீனை மறந்து (தவறவிட்டு) விட்டேன். (அதை நினைவில் வைத்திருக்காதபடி) ஷைத்தான் தான் எனக்கு அதை மறக்கடித்துவிட்டான்.

அது வியப்பான முறையில் கடலில் வழியமைத்துக் கொண்டது’ என்று கூறினார். மீனுக்கு அது (தப்பிக்க) வழியாகவும், அவ்விருவருக்கும் அது வியப்பாகவும் அமைந்தது. மூஸா (அலை) அவர்கள் அந்த உதவியாளரிடம், ‘அதுதான் நாம் தேடிக் கொண்டிருந்த இடம்’ என்று கூறினார்கள்.’ உடனே, அவர்கள் இருவரும் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். இறுதியில், அந்தப் பாறையை அடைந்தார்கள். அங்கே ஒருவர் தம்மை முழுவதுமாக ஆடையால் போர்த்தி மூடியிருந்தார்.

மூஸா (அலை) அவர்கள் அவருக்கு ஸலாம் கூற, அம்மனிதர் அவர்களுக்கு பதில் ஸலாம் கூறினார். பிறகு, ‘உங்களுடைய (இந்தப்) பகுதியில் (அறியப்படாத) ஸலாம் (உங்களுக்கு மட்டும்) எப்படி (வந்தது? நீங்கள் யார்?)’ என்று களிர் வினவினார். மூஸா (அலை) அவர்கள், ‘நானே மூஸா’ என்று பதிலளித்தார்கள். அதற்கு அம்மனிதர், ‘பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூஸாவா’ என்று கேட்டார். மூஸா (அலை) அவர்கள், ‘ஆம், உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக நான் உங்களிடம் வந்திருக்கிறேன்’ என்று கூறினார்கள்.

அதற்கு அவர், ‘மூஸாவே! அல்லாஹ் எனக்குக் கற்றத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறிய மாட்டேன்’ என்று கூறினார். மூஸா(அலை) அவர்கள், ‘நான் உங்களைத் தொடர்ந்து வரட்டுமா?’ என்று கேட்டார்கள். அவர், ‘உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது. நீங்கள் அறியாத விஷயத்தை எப்படிச் சகித்துக் கொண்டிருப்பீர்கள்’ என்று கேட்டதற்கு மூஸா (அலை) அவர்கள், ‘இன்ஷா அல்லாஹ்.. இறைவன் நாடினால் நீங்கள் என்னைப் பொறுமையாளராகக் காண்பீர்கள். எந்த விவகாரத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்’ என்று கூறினார்கள்.

பிறகு, இருவரும் கடற்கரையோரத்தில் நடந்து சென்றார்கள். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அதன் உரிமையாளர்(களான ஏழைத் தொழிலாளர்)களிடம் தங்களை ஏற்றிச் செல்லும்படி பேசினார்கள். அவர்கள் களிர் (அலை) அவர்களை அடையாளம் புரிந்து கொண்டு அவர்களை வாடகை கேட்காமல் ஏற்றிச் சென்றார்கள்.

அவர்கள் இருவரும் மரக்கலம் ஏறியபோது சிட்டுக்குருவி ஒன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்தது. பிறகு, அது கடலில் (அலகால்) ஒரு முறை அல்லது இருமுறை கொத்தி (நீர் அருந்தி)யது. உடனே மூஸா(அலை) அவர்களிடம் களிர்(அலை), ‘மூஸாவே! இந்தச் சிட்டுக்குருவி தன் அலகால் (கொத்தி நீரருந்தியதால்) இந்தக் கடலிலிருந்து எவ்வளவு (நீரை) எடுத்திருக்குமோ அந்த அளவு தான் என் அறிவும் உங்கள் அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது’ என்று கூறினார்கள்.

அப்போது களிர் ஒரு கோடரியை எடுத்து மரக்கலத்தின் (அடித்தளப்) பலகை ஒன்றைக் கழற்றிவிட்டார்கள். களிர்(அலை) அவர்கள் வாய்ச்சியின் உதவியால் (மரக்கலத்தின்) பலகையைக் கழற்றிய பின்புதான் மூஸா(அலை) அவர்களுக்குத் தெரியவந்தது. உடனே மூஸா(அலை) அவர்கள், ‘என்ன காரியம் செய்து விட்டீர்கள்? வாடகை இல்லாமலே நம்மை ஏற்றி வந்தவர்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே ஓட்டையாக்கி விட்டீர்களே! அதில் சவாரி செய்பவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் மிகப்பெரும் (கொடுஞ்) செயலைச் செய்து விட்டீர்கள்’ என்று கூறினார்கள்.

களிர்(அலை) அவர்கள், ‘உங்களால் என்னுடன் பொறுமையோடு இருக்கமுடியாது என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா?’ என்றார்கள். மூஸா(அலை) அவர்கள், ‘நான் மறந்துவிட்டதை வைத்து என்னை தண்டித்து (போகச் சொல்லி) விடாதீர்கள். என் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்’ என்று கூறினார்கள். ஆக, மூஸா(அலை) அவர்கள் முதல் முறையாகப் பொறுமையிழந்தது அவர்கள் மறந்து போனதால் தான்.

(பிறகு) கடலிலிருந்து அவர்கள் வெளியேறியபோது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கடந்து சென்றார்கள். களிர்(அலை) அவர்கள் அச்சிறுவனின் தலையைப் பிடித்து, தம் கையால் இப்படிப் பிடுங்கி (தனியே எடுத்து)விட்டார்கள்.

இந்த இடத்தில் அறிவிப்பாளர் கஃப்யான் இப்னு உயைனா (ரஹ்), தம் விரல் நுனிகளை எதையோ பறிப்பதைப் போல் காட்டி சைகை செய்தார்கள்.

அப்போது மூஸா(அலை) அவர்கள் களிர்(அலை) அவர்களிடம், ‘ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரையா நீங்கள் கொன்றுவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே? நீங்கள் மிகவும் தீய செயலைச் செய்துவிட்டீர்கள்’ என்று கூறினார்கள். அதற்கு களிர்(அலை) அவர்கள், ‘நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது’ என்று நான் (முன்பே) சொல்லவில்லையா?’ என்று கூறினார்கள்.

மூஸா(அலை) அவர்கள், ‘இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால் என்னை உங்களுடன் வைத்திருக்காதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்துவிட்டது’ என்றார்கள்.

மீண்டும் இருவரும் நடந்தார்கள். இறுதியில், ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால், அவர்கள் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்துவிட்டார்கள். அந்த ஊரில் சாய்ந்தபடி கீழே விழ இருந்த சுவர் ஒன்றை இருவரும் கண்டார்கள். (இதைக் கண்ட) உடனே, களிர்(அலை) அவர்கள் (இந்தச் சுவரை நிலை நிறுத்துவோம் என்பதற்கு அடையாளமாக) தம் கையால் இப்படிச் சைகை செய்தார்கள்.

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) மேலே ஏதோ ஒரு பொருளைத் தடவுவது போல் சைகை காட்டினார்கள்.

மேலும், அறிவிப்பாளர் அலீ இப்னு அப்தில்லாஹ் அல் மதீனீ (ரஹ்), ‘சுஃப்யான், இப்னு உயைனா (ரஹ்) ‘சாய்ந்தபடி’ என்னும் வார்த்தையை ஒரேயொரு முறைதான் சொல்லக் கேட்டேன்’ என்று கூறுகிறார்.

மூஸா(அலை) அவர்கள், ‘இந்த சமுதாயத்தினரிடம் நாம் வந்து (உணவு கேட்டு)ம் அவர்கள் நமக்கு உணவளிக்கவும் இல்லை; விருந்துபசாரம் செய்யவுமில்லை (அவ்வாறிருந்தும்) வேண்டுமென்றே நீங்கள் அவர்களின் சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள். நீங்கள் விரும்பியிருந்தால் அதற்குக் கூலி வாங்கிக் கொண்டிருக்கலாம்’ என்றார்கள்.

களிர்(அலை) அவர்கள், ‘இதுதான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களின் விளக்கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறிவித்து விடுகிறேன்’ என்று கூறினார்கள்.

– நபி(ஸல்) அவர்கள், ‘மூஸா(அலை) அவர்கள் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என்று நாம் விரும்பினோம். அவ்வாறிருந்திருந்தால் அல்லாஹ் அவ்விருவரின் நிகழ்சசிகள் பற்றி (இன்னும் நிறை) எடுத்துரைத்திருப்பான்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) கூறினார்கள்: “மூசா  அலை பொறுமையாக இருந்திருப்பாரேயானால் அவ்விருவர் பற்றி(ய நிறைய செய்திகள்) நமக்கு அறிவிக்கப்பட்டிருக்கும்” என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

 இப்னு அப்பாஸ் (ரலி), ‘அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் ஒவ்வொரு பழுதில்லாத ஒழுங்கான மரக்கலத்தையும் நிர்பந்தமாக அபகரித்துக் கொண்டிருந்தான். மேலும், அந்தச் சிறுவனுடைய விஷயம் என்னவெனில் அவன் இறை மறுப்பாளனாக இருந்தான். அவனுடைய தாய் தந்தையார் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தனர்’ என்று ஓதினார்கள்.

அறிவிப்பாளர் அலீ இப்னு அப்தில்லாஹ் அல் மதீனீ (ரஹ்) கூறினார்: பிறகு சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) என்னிடம், ‘அம்ர் இப்னு தீனார் (ரஹ்) என்னிடம், ‘அம்ர் இப்னு தீனார் (ரஹ்) இப்படி ஓதுவதை இரண்டு முறை கேட்டு நான் அதை அவர்களிடமிருந்து மனனம் செய்திருக்கிறேன்.

சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்களிடம், ‘இதை அம்ர் இப்னு தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்து நீங்கள் மனனம் செய்தீர்களா? அல்லது அம்ர் இப்னு தீனாரிடமிருந்து கேட்பதற்கு முன்பு வெறெந்த மனிதரிடமிருந்தாவது அதை மனனம் செய்தீர்களா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘வேறெவரிடமிருந்து இதை நான் மனனம் செய்வேன்? அம்ர் இப்னு தீனாரிடமிருந்து அதை என்னைத் தவிர வேறெவராவது அறிவித்திருக்கிறார்களா? அவரிடமிருந்து இரண்டு அல்லது மூன்று முறை நான் செவியுற்று அதை மனனம் செய்திருக்கிறேன்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 60

(புகாரி: 3401)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، قَالَ

قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: إِنَّ نَوْفًا البَكَالِيَّ يَزْعُمُ: أَنَّ مُوسَى صَاحِبَ الخَضِرِ لَيْسَ هُوَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ، إِنَّمَا هُوَ مُوسَى آخَرُ، فَقَالَ: كَذَبَ عَدُوُّ اللَّهِ، حَدَّثَنَا أُبَيُّ بْنُ كَعْبٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَنَّ مُوسَى قَامَ خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ، فَسُئِلَ أَيُّ النَّاسِ أَعْلَمُ؟ فَقَالَ: أَنَا، فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ، إِذْ لَمْ يَرُدَّ العِلْمَ إِلَيْهِ، فَقَالَ لَهُ: بَلَى، لِي عَبْدٌ بِمَجْمَعِ البَحْرَيْنِ هُوَ أَعْلَمُ مِنْكَ قَالَ: أَيْ رَبِّ وَمَنْ لِي بِهِ؟ – وَرُبَّمَا قَالَ سُفْيَانُ، أَيْ رَبِّ، وَكَيْفَ لِي بِهِ؟ – قَالَ: تَأْخُذُ حُوتًا، فَتَجْعَلُهُ فِي مِكْتَلٍ، حَيْثُمَا فَقَدْتَ  الحُوتَ فَهُوَ ثَمَّ، – وَرُبَّمَا قَالَ: فَهُوَ ثَمَّهْ -، وَأَخَذَ حُوتًا فَجَعَلَهُ فِي مِكْتَلٍ، ثُمَّ انْطَلَقَ هُوَ وَفَتَاهُ يُوشَعُ بْنُ نُونٍ، حَتَّى إِذَا أَتَيَا الصَّخْرَةَ وَضَعَا رُءُوسَهُمَا، فَرَقَدَ مُوسَى وَاضْطَرَبَ الحُوتُ فَخَرَجَ، فَسَقَطَ فِي البَحْرِ فَاتَّخَذَ سَبِيلَهُ فِي البَحْرِ سَرَبًا، فَأَمْسَكَ اللَّهُ عَنِ الحُوتِ جِرْيَةَ المَاءِ، فَصَارَ مِثْلَ الطَّاقِ، فَقَالَ: هَكَذَا مِثْلُ الطَّاقِ، فَانْطَلَقَا يَمْشِيَانِ بَقِيَّةَ لَيْلَتِهِمَا وَيَوْمَهُمَا، حَتَّى إِذَا كَانَ مِنَ الغَدِ قَالَ لِفَتَاهُ: آتِنَا غَدَاءَنَا، لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا، وَلَمْ يَجِدْ مُوسَى النَّصَبَ حَتَّى جَاوَزَ حَيْثُ أَمَرَهُ اللَّهُ، قَالَ لَهُ فَتَاهُ: (أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الحُوتَ وَمَا أَنْسَانِيهِ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي البَحْرِ عَجَبًا) فَكَانَ لِلْحُوتِ سَرَبًا وَلَهُمَا عَجَبًا، قَالَ لَهُ مُوسَى: (ذَلِكَ مَا كُنَّا نَبْغِي فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا)، رَجَعَا يَقُصَّانِ آثَارَهُمَا، حَتَّى انْتَهَيَا إِلَى الصَّخْرَةِ، فَإِذَا رَجُلٌ مُسَجًّى بِثَوْبٍ، فَسَلَّمَ مُوسَى فَرَدَّ عَلَيْهِ، فَقَالَ وَأَنَّى بِأَرْضِكَ السَّلاَمُ؟ قَالَ: أَنَا مُوسَى، قَالَ: مُوسَى بَنِي إِسْرَائِيلَ قَالَ: نَعَمْ، أَتَيْتُكَ لِتُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رُشْدًا، قَالَ: يَا مُوسَى: إِنِّي عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَنِيهِ اللَّهُ لاَ تَعْلَمُهُ، وَأَنْتَ عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَكَهُ اللَّهُ لاَ أَعْلَمُهُ، قَالَ: هَلْ أَتَّبِعُكَ؟ قَالَ: {إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا. وَكَيْفَ تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا} [الكهف: 68]- إِلَى قَوْلِهِ – {إِمْرًا} [الكهف: 71] فَانْطَلَقَا يَمْشِيَانِ عَلَى سَاحِلِ البَحْرِ، فَمَرَّتْ بِهِمَا سَفِينَةٌ كَلَّمُوهُمْ أَنْ يَحْمِلُوهُمْ، فَعَرَفُوا الخَضِرَ فَحَمَلُوهُ بِغَيْرِ نَوْلٍ، فَلَمَّا رَكِبَا فِي السَّفِينَةِ جَاءَ عُصْفُورٌ، فَوَقَعَ عَلَى حَرْفِ السَّفِينَةِ فَنَقَرَ فِي البَحْرِ نَقْرَةً أَوْ نَقْرَتَيْنِ، قَالَ لَهُ الخَضِرُ يَا مُوسَى مَا نَقَصَ عِلْمِي وَعِلْمُكَ مِنْ عِلْمِ اللَّهِ إِلَّا مِثْلَ مَا نَقَصَ هَذَا العُصْفُورُ بِمِنْقَارِهِ مِنَ البَحْرِ، إِذْ أَخَذَ الفَأْسَ فَنَزَعَ لَوْحًا، قَالَ: فَلَمْ يَفْجَأْ مُوسَى إِلَّا وَقَدْ قَلَعَ لَوْحًا بِالقَدُّومِ، فَقَالَ لَهُ مُوسَى: مَا صَنَعْتَ؟ قَوْمٌ حَمَلُونَا بِغَيْرِ نَوْلٍ عَمَدْتَ إِلَى سَفِينَتِهِمْ فَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا، لَقَدْ جِئْتَ شَيْئًا إِمْرًا، قَالَ: {أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا، قَالَ: لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلاَ تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا} [الكهف: 72]، فَكَانَتِ الأُولَى مِنْ مُوسَى نِسْيَانًا، فَلَمَّا خَرَجَا مِنَ البَحْرِ مَرُّوا بِغُلاَمٍ يَلْعَبُ مَعَ الصِّبْيَانِ، فَأَخَذَ الخَضِرُ بِرَأْسِهِ فَقَلَعَهُ بِيَدِهِ هَكَذَا، – وَأَوْمَأَ سُفْيَانُ بِأَطْرَافِ أَصَابِعِهِ كَأَنَّهُ يَقْطِفُ شَيْئًا -، فَقَالَ لَهُ مُوسَى: أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ، لَقَدْ جِئْتَ شَيْئًا نُكْرًا، قَالَ: أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا، قَالَ: إِنْ سَأَلْتُكَ عَنْ شَيْءٍ بَعْدَهَا فَلاَ تُصَاحِبْنِي قَدْ بَلَغْتَ مِنْ لَدُنِّي عُذْرًا، فَانْطَلَقَا، حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا، فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا، فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ، مَائِلًا ، أَوْمَأَ بِيَدِهِ هَكَذَا، – وَأَشَارَ سُفْيَانُ كَأَنَّهُ يَمْسَحُ شَيْئًا إِلَى فَوْقُ، فَلَمْ أَسْمَعْ سُفْيَانَ يَذْكُرُ مَائِلًا إِلَّا مَرَّةً -، قَالَ: قَوْمٌ أَتَيْنَاهُمْ فَلَمْ يُطْعِمُونَا وَلَمْ يُضَيِّفُونَا، عَمَدْتَ إِلَى حَائِطِهِمْ، لَوْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا، قَالَ: هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ، سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِعْ عَلَيْهِ صَبْرًا، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَدِدْنَا أَنَّ مُوسَى كَانَ صَبَرَ فَقَصَّ اللَّهُ عَلَيْنَا مِنْ خَبَرِهِمَا، – قَالَ سُفْيَانُ -، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَرْحَمُ اللَّهُ مُوسَى لَوْ كَانَ صَبَرَ لَقُصَّ عَلَيْنَا مِنْ أَمْرِهِمَا» وَقَرَأَ ابْنُ عَبَّاسٍ: «أَمَامَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ صَالِحَةٍ غَصْبًا» وَأَمَّا الغُلاَمُ فَكَانَ كَافِرًا وَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ ” ثُمَّ قَالَ لِي سُفْيَانُ: سَمِعْتُهُ مِنْهُ مَرَّتَيْنِ، وَحَفِظْتُهُ مِنْهُ، قِيلَ لِسُفْيَانَ: حَفِظْتَهُ قَبْلَ أَنْ تَسْمَعَهُ مِنْ عَمْرٍو، أَوْ تَحَفَّظْتَهُ مِنْ إِنْسَانٍ؟، فَقَالَ: مِمَّنْ أَتَحَفَّظُهُ، وَرَوَاهُ أَحَدٌ، عَنْ عَمْرٍو غَيْرِي سَمِعْتُهُ مِنْهُ مَرَّتَيْنِ، أَوْ ثَلاَثًا وَحَفِظْتُهُ مِنْهُ


Bukhari-Tamil-3401.
Bukhari-TamilMisc-3401.
Bukhari-Shamila-3401.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.