தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5269

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9

மணமுடிப்பதற்கு முன்னால் மணவிலக்கு என்பது கிடையாது.

அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களைத் தொடுவதற்கு முன்பே மணவிலக்குச் செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய (இத்தா) தவணை உங்களுக்கு ஒன்றுமில்லை. ஆகவே, அவர்களுக்கு (ஏற்ற வகையில்) ஏதேனும் அளித்து நல்ல முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். (33:49)

(இந்த வசனத்தில்) மணவிலக்கைப் பற்றி திருமணத்திற்குப் பின்னரே அல்லாஹ் கூறியுள்ளான் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(மண முடிப்பதற்கு முன்னால் ஒரு பெண்ணிற்கு மணவிலக்கு அளித்தால்) அவள் மண விலக்குப் பெற்றவளாக மாட்டாள் என்று அலீ (ரலி), சயீத் பின் முஸய்யப் ,உர்வா பின் ஸுபைர், அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா,அபான் பின் உஸ்மான், அலீ பின் ஹுசைன், ஷுரைஹ், சயீத் பின் ஜுபைர், காசிம், சாலிம், தாவூஸ்,ஹஸன் அல்பஸரீ, இக்ரிமா, அதாஉ, ஆமிர் பின் சஅத், ஜாபிர் பின் ஸைத், நாஃபிஉ பின் ஜுபைர்,முஹம்மத் பின் கஅப், சுலைமான் பின் யசார், முஜாஹித், காசிம் பின் அப்திர் ரஹ்மான், அம்ர் பின் ஹரிம் மற்றும் ஷஅபீ (ரஹ்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்படுகின்றது.24

பாடம் : 10

ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் தம் மனைவியை நோக்கி இவள் என் சகோதரி என்று கூறினால் அது அவரைப் பாதிக்கும் (மணவிலக்கு போன்ற) ஒரு விஷயமே அல்ல. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியாரான) சாராவைப் பார்த்து இவர் என் சகோதரி என்று கூறினார்கள். அல்லாஹ்வின் திருப்திக் காகவே அப்படிச் சொன்னார்கள்.25

பாடம் : 11

நெருக்கடி, நிர்ப்பந்தம், போதை, பைத்தியம், தவறுதல், மறதி ஆகிய நிலைகளில் ஒருவர் மணவிலக்கு அளித்தல், (இறைவனுக்கு) இணைவைத்தல் உள்ளிட்ட செயல்களைச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)?குடிகாரனின் நிலையும் பைத்தியக்காரனின் நிலையும் (ஒன்றா? வேறா?)26

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியதே கிடைக்கும். 27

(தவறுதலாக அல்லது மறதியாக தலாக் சொன்னால் அது நிகழாது’ என்பதற்கு ஆதாரமாக) ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் எங்கள் இறைவா! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறுதலாகச் செய்திருப்பினும் எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக! எனும் (2:286 ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

மனபிரமைக்கு உள்ளானவனின் ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது (என்பது பற்றிய விளக்கம்). (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) தமக்குத் தாமே வாக்குமூலம் அளித்த ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் உனக்குப் பைத்தியமா? என்று கேட்டார்கள்.

அலீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: ஹம்ஸா (ரலி) அவர்கள் எனது இரு (கிழ) ஒட்டகங்களின் இடுப்புகளை (குடி போதையில்) பிளந்துவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸாவைக் கண்டிக்கலானார்கள். அப்போது ஹம்ஸாவின் இரு கண்களும் சிவந்திருக்க அவர் போதையிலிருந்தார். பிறகு ஹம்ஸா (எங்களைப் பார்த்து), நீங்கள் எல்லோரும் என் தந்தையின் அடிமைகள் தாமே? என்று கேட்டார். அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, (திரும்பாமல் அப்படியே பின்வாங்கிய வண்ணம் வந்த வழியே) நபி (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.28

போதையிலுள்ளவன் மற்றும் நிர்ப்பந்திக்கப்பட்டவனின் மணவிலக்கு செல்லாது என உஸ்மான் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறினார்கள்.

மனபிரமையில் உள்ளவனின் மணவிலக்கு செல்லாது என உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

ஒருவர் மணவிலக்குச் செய்யும் போது (தாம் விரும்பும்) நிபந்தனை களைச் சேர்க்க அவருக்கு உரிமையுண்டு என அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், தம் மனைவி வீட்டை விட்டு வெளியேறினால் ஒட்டுமொத்த (அல்பத்தா)த் தலாக் சொல்லப்பட்டவள் ஆவாள் என்று கூறினார். (இது குறித்து நான் வினவிய போது) இப்னு உமர் (ரலி) அவர்கள் அவ்வாறு அவள் (வீட்டைவிட்டு) வெளியேறினால் அவன் மூலம் ஒட்டுமொத்தத் தலாக் சொல்லப்பட்டவளாகிவிடுவாள். வெளியேறா விட்டால் ஒன்றும் நிகழாதுஎன்று கூறினார்கள்.

முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், நான் இப்படி இப்படிச் செய்யாவிட்டால் என் மனைவி மூன்று தலாக் சொல்லப்பட்டவள் ஆகிவிடுவாள்’ என்று கூறினால், அவர் அந்தப் பிரமாணத்தைக் கூறும் போது எப்படிக் கூறினார்? மேலும், எதைக் கருத்தில் கொண்டு சொன்னார்? என்று கேட்கப்படும். அந்தப் பிரமாணத்தைக் கூறும் போது குறிப்பிட்ட ஒரு தவணையை மனத்தில் உறுதி செய்து கொண்டே நான் அவ்வாறு கூறினேன்’ என்று அவர் குறிப்பிட்டால், அது அவரது பொறுப்பிலும் நம்பிக்கையிலும் விடப்படும்.

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி நீ எனக்குத் தேவையில்லை’ என்று கூறினால் அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அதன்படி அமையும். ஒவ்வொரு சமுதாயத்தாரின் தலாக்கும் அவரவர் மொழிப்படியே அமையும்.

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி நீ கர்ப்பமுற்றால் மூன்று தலாக் சொல்லப் பட்டவள் ஆகிவிடுவாய் என்று கூறியிருந்தால், மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் ஒவ்வொரு நேரத்திலும் ஒரு தடவை அவளுடன் அவர் தாம்பத்திய உறவு கொள்ளலாம். எப்போது அவள் கர்ப்பம டைந்திருப்பது தெரியவருகிறதோ அப்போது அவரிடமிருந்து அவள் பிரிந்துவிடுவாள். ஒருவர் தம் மனைவியிடம், நீ உன் தாய் வீட்டிற்குப் போய்விடு’ என்று கூறினால் அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும் என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அவசியத்தை முன்னிட்டே தலாக் சொல்லப்பட வேண்டும். (ஆனால்) அடிமை விடுதலை அல்லாஹ்வின் திருப்பொருத்தத் திற்காக (எப்போதும்) நடைபெறலாம் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒருவர் தம் மனைவியை நோக்கி நீ என் மனைவி அல்லள்’ என்று சொன்னால், அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும். (அதாவது) மணவிலக்குச் செய்யும் எண்ணத்தில் அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவர் எண்ணப்படியே மணவிலக்கு நிகழ்ந்து விடும் என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்.

அலீ (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி மூன்று நபர்களிடமிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா? எனக் கேட்டார்கள்:29 1. பைத்தியக்காரனிடமிருந்து அவன் புத்தி சுவாதீனம் அடையும் வரை. 2. சிறுவனிடமிருந்து அவன் பருவ வயதை அடையும் வரை. 3. தூங்குபவனிடமிருந்து அவன் கண் விழிக்கும் வரை. மேலும், அறிவு குறைந்தவனின் மணவிலக்கைத் தவிர மற்றெல்லா மணவிலக்குகளும் செல்லும் என்று அலீ (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாத வரை அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா இப்னு திஆமா (ரஹ்) கூறினார்.

ஒருவர் மனத்துக்குள்ளேயே தலாக் சொல்லிக் கொண்டால் அதனால் (தலாக்) எதுவும் நிகழப்போவதில்லை.

Book : 68

(புகாரி: 5269)

بَابُ الطَّلاَقِ فِي الإِغْلاَقِ وَالكُرْهِ، وَالسَّكْرَانِ وَالمَجْنُونِ وَأَمْرِهِمَا، وَالغَلَطِ وَالنِّسْيَانِ فِي الطَّلاَقِ وَالشِّرْكِ وَغَيْرِهِ
لِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى» وَتَلاَ الشَّعْبِيُّ: {لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا} [البقرة: 286] ” وَمَا لاَ يَجُوزُ مِنْ إِقْرَارِ المُوَسْوِسِ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلَّذِي أَقَرَّ عَلَى نَفْسِهِ: «أَبِكَ جُنُونٌ» وَقَالَ عَلِيٌّ: بَقَرَ حَمْزَةُ خَوَاصِرَ شَارِفَيَّ، فَطَفِقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلُومُ حَمْزَةَ، فَإِذَا حَمْزَةُ قَدْ ثَمِلَ مُحْمَرَّةٌ عَيْنَاهُ، ثُمَّ قَالَ حَمْزَةُ: هَلْ أَنْتُمْ إِلَّا عَبِيدٌ لِأَبِي، فَعَرَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَدْ ثَمِلَ، فَخَرَجَ وَخَرَجْنَا مَعَهُ وَقَالَ عُثْمَانُ: «لَيْسَ لِمَجْنُونٍ وَلاَ لِسَكْرَانَ طَلاَقٌ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «طَلاَقُ السَّكْرَانِ وَالمُسْتَكْرَهِ لَيْسَ بِجَائِزٍ» وَقَالَ عُقْبَةُ بْنُ عَامِرٍ: «لاَ يَجُوزُ طَلاَقُ المُوَسْوِسِ» وَقَالَ عَطَاءٌ: «إِذَا بَدَا بِالطَّلاَقِ فَلَهُ شَرْطُهُ» وَقَالَ نَافِعٌ: طَلَّقَ رَجُلٌ امْرَأَتَهُ البَتَّةَ إِنْ خَرَجَتْ فَقَالَ ابْنُ عُمَرَ: «إِنْ خَرَجَتْ فَقَدْ بُتَّتْ مِنْهُ، وَإِنْ لَمْ تَخْرُجْ فَلَيْسَ بِشَيْءٍ» وَقَالَ الزُّهْرِيُّ: ” فِيمَنْ قَالَ: إِنْ لَمْ أَفْعَلْ كَذَا وَكَذَا فَامْرَأَتِي طَالِقٌ ثَلاَثًا: يُسْأَلُ عَمَّا قَالَ وَعَقَدَ عَلَيْهِ قَلْبُهُ حِينَ حَلَفَ بِتِلْكَ اليَمِينِ؟ فَإِنْ سَمَّى أَجَلًا أَرَادَهُ وَعَقَدَ عَلَيْهِ قَلْبُهُ حِينَ حَلَفَ، جُعِلَ ذَلِكَ فِي دِينِهِ وَأَمَانَتِهِ ” وَقَالَ إِبْرَاهِيمُ: ” إِنْ قَالَ: لاَ حَاجَةَ لِي فِيكِ، نِيَّتُهُ، وَطَلاَقُ كُلِّ قَوْمٍ بِلِسَانهِمْ ” وَقَالَ قَتَادَةُ: ” إِذَا قَالَ: إِذَا حَمَلْتِ فَأَنْتِ طَالِقٌ ثَلاَثًا، يَغْشَاهَا عِنْدَ كُلِّ طُهْرٍ مَرَّةً، فَإِنِ اسْتَبَانَ حَمْلُهَا فَقَدْ بَانَتْ مِنْهُ ” وَقَالَ الحَسَنُ: ” إِذَا قَالَ: الحَقِي بِأَهْلِكِ، نِيَّتُهُ وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «الطَّلاَقُ [ص:46] عَنْ وَطَرٍ، وَالعَتَاقُ مَا أُرِيدَ بِهِ وَجْهُ اللَّهِ» وَقَالَ الزُّهْرِيُّ: ” إِنْ قَالَ: مَا أَنْتِ بِامْرَأَتِي، نِيَّتُهُ، وَإِنْ نَوَى طَلاَقًا فَهُوَ مَا نَوَى ” وَقَالَ عَلِيٌّ: ” أَلَمْ تَعْلَمْ أَنَّ القَلَمَ رُفِعَ عَنْ ثَلاَثَةٍ: عَنِ المَجْنُونِ حَتَّى يُفِيقَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يُدْرِكَ، وَعَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ ” وَقَالَ عَلِيٌّ: «وَكُلُّ الطَّلاَقِ جَائِزٌ، إِلَّا طَلاَقَ المَعْتُوهِ»

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ»

قَالَ قَتَادَةُ: «إِذَا طَلَّقَ فِي نَفْسِهِ فَلَيْسَ بِشَيْءٍ»


Bukhari-Tamil-5269.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5269.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-4890.




மேலும் பார்க்க: புகாரி-2528 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.