தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

(குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியா நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை அனுப்பினார். அந்தத் தூதர்கள் அபூ சுஃப்யானிடம் வந்து சேர்ந்தார்கள். ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும் தம் அவைக்கு அவர்களை அழைத்திருந்தார். மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரையும் அழைத்து வரக்கூறினார்.

அபூ சுஃப்யான் இது குறித்துக் கூறும்போது, (எங்களிடம்) மன்னர் ‘தம்மை இறைவனின் திருத்தூதர் என்று கருதிக் கொண்டிருக்கும் அம்மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?’ எனக் கேட்டார். நானே அவருக்கு மிக நெருங்கிய உறவினன் எனக் கூறினேன். உடனே மன்னர், (தம் அதிகாரியிடம்) ‘அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; அவருடன் வந்திருப்பவர்களையும் என் பக்கத்தில் கொண்டு வந்து அவருக்குப் பின்னால் நிறுத்துங்கள்’ என்று ஆணையிட்டார். பின்னர் தம் மொழி பெயர்ப்பாளரிடம், ‘நான் அந்த மனிதரைப் பற்றி (அபூ சுஃப்யானிகிய) இவரிடம் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் அதை என்னிடம் கூறி விட வேண்டும் என்று அவருடன் வந்திருப்பவர்களிடம் மொழி பெயர்த்துச் சொல்’ என ஆணையிட்டார். நான் பொய் கூறுகிறேன் என இவர்கள் சொல்லி விடுவார்களோ என்ற நாணம் மாத்திரம் அப்போது எனக்கு இல்லை என்றால் இறைவன் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பொய்யுரைத்திருப்பேன்.

பிறகு மன்னர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, ‘உங்களில் அவரின் குலம் எத்தகையது?’ அதற்கு, அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சார்ந்தவர் என்றேன். ‘இவருக்கு முன்னர் உங்களில் யாரேனும் எப்போதாவது இந்த வாதத்தைச் செய்ததுண்டா?’ என்று கேட்டார். இல்லை என்றேன். ‘இவரின் முன்னோர்களில், எவரேனும் மன்னர்களாக இருந்திருக்கிறார்களா? என்றார். இல்லை என்றேன். ‘அவரைப் பின்பற்றுவோர் மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா?’ என்றார். மக்களில் சாமானியர்கள் தாம் என்றேன். ‘அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா?’ என்று வினவினார். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்றேன். ‘அவரின் மார்க்கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப்தியுற்று யாரேனும் மதம் மாறியிருக்கின்றனரா?’ என்று கேட்டார். நான் இல்லை என்றேன். ‘அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?’ என்றார். நான் இல்லை என்றேன். ‘அவர் வாக்கு மீறியது உண்டா?’ என்றார். (இதுவரை) இல்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது என்றேன்.

அப்போதைக்கு (நபி(ஸல்) மீது குறை கற்பிக்க) அந்த வார்த்தையைவிட்டால் வேறு எந்த வார்த்தையையும் என்னுடைய பதிலில் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை! ‘அவருடன் நீங்கள் போரிட்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டார். ஆம் என்றேன். ‘அவருடன் நீங்கள் நடத்திய போரின் முடிவுகள் எவ்வாறிருந்தன?’ என்றார். எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்திருக்கின்றன. சில சமயம் அவர் எங்களை வென்றிருக்கிறார்; சில சமயம் நாங்கள் அவரை வென்றிருக்கிறோம் என்றேன்.

‘அவர் உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்?’ என்று கேட்டார். ‘அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்; உங்கள் முன்னோர்கள் கூறி வந்தவற்றையெல்லாம்விட்டுவிடுங்கள்’ என்கிறார். தொழுகை, உண்மை, கற்பு நெறி, உறவினர்களுடன் இணங்கி இருத்தல் போன்ற பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார் என்றேன்.

மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரிடம் மொழி பெயர்க்கச் சொன்னதாவது; ‘அவரின் குலத்தைப் பற்றி உம்மிடம் விசாரித்தேன். அதற்கு நீர் உங்களில் அவர் உயர் குலத்தைச் சேர்ந்தவர் தாம் என்று குறிப்பிட்டீர். எல்லா இறைத்தூதர்களும் அப்படித்தான். அவர்களின் சமூகத்திலுள்ள உயர் குலத்தில்தான் அனுப்பப்பட்டுள்ளார்கள். உங்களில் யாரேனும் இந்த வாதத்தை இதற்கு முன் செய்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். இவருக்கு முன்னர் யாரேனும் இவ்வாதத்தைச் செய்திருந்தால், முன்னர் செய்யப்பட்டு வந்த ஒரு வாதத்தைப் பின்பற்றித் தான் இவரும் செய்கிறார் என்று கூறியிருப்பேன். இவரின் முன்னோர்களில் யாரேனும் மன்னராக இருந்திருக்கிறார்களா என்று உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்று சொன்னீர். இவரின் முன்னோர்களில் எவரேனும் மன்னராக இருந்திருந்தால், தம் முன்னோரின் ஆட்சியை அடைய விரும்பும் ஒருவர் இவர் என்று சொல்லியிருப்பேன். இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன். மக்களில் சிறப்பு வாய்ந்தவர்கள் அவரைப் பின்பற்றுகின்றனரா? அல்லது சாமானியர்களா? என்று கேட்டேன். சாமானிய மக்கள் தாம் அவரைப் பின்பற்றுகின்றனர் என்று குறிப்பிட்டீர். அப்படிப்பட்டவர்கள் தாம் இறைத்தூதர்களை (துவக்கத்தில்) பின்பற்றுவோராய் இருந்திருக்கிறார்கள். அவரைப் பின்பற்றுகிறவர்கள் அதிகரிக்கின்றனரா அல்லது குறைகின்றனரா என்றும் உம்மிடம் கேட்டேன். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்று குறிப்பிட்டீர். இறை நம்பிக்கை, நினைவு பெறும் வரை அப்படித்தான் (வளர்ந்து கொண்டே) இருக்கும். அவரின் மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரேனும் அம்மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து மதம் மாறி இருக்கின்றனரா? என்று உம்மிடம் கேட்டேன். நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். அப்படித்தான் இதயத்தில் நுழைந்த இறை நம்பிக்கையின் எழில் (உறுதியானது). அவர் (எப்போதேனும்) வாக்கு மீறியதுண்டா? என உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்றீர். (இறைவனின்) திருத்தூதர்கள் அப்படித்தான் வாக்கு மீற மாட்டார்கள். அவர் உங்களுக்கு எதைக் கட்டளையிடுகிறார்? என்று உம்மிடம் கேட்டேன். அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும் அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாததென்றும் உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் சிலை வணக்கங்களிலிருந்து அவர் உங்களைத் தடுப்பதாகவும் தொழுகை, உண்மை, கற்புநெறி ஆகியவற்றை உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் நீர் கூறினீர்.

நீர் சொல்லியது அனைத்தும் உண்மையானால் (ஒரு காலத்தில்) என்னுடைய இரண்டு பாதங்களுக்குமுள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார். (இப்படிப்பட்ட) ஓர் இறைத்தூதர் (வெகு விரைவில்) தோன்றுவார் என்று முன்பே அறிந்திருந்தேன். ஆனால் அவர் (அரபிகளாகிய) உங்களிலிருந்து தாம் தோன்றுவார் என்று நான் கருதியிருக்கவில்லை. அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந்தால் மிகுந்த சிரமப்பட்டாவது அவரைச் சந்தித்திருப்பேன். (இப்போது) நான் அவரருகே இருந்தால் அவரின் பாதங்களைக் கழுவி விடுவேன்’.

புஸ்ராவில் ஆளுநர் மூலம் ஹெர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக திஹ்யா வசம் நபி(ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தம்மிடம் கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார். ஆளுநர் அதனை மன்னரிடம் ஒப்படைத்தார். மன்னர் அதனைப் படித்துப் பார்த்தார். அந்தக் கடிதத்தில்,

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான முஹம்மத் என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர் வழியைப் பின்பற்றுவோரின் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க, இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு அழைப்பு விடுக்கிறேன்! நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரண்டு மடங்கு சன்மானம் வழங்குவான். (இவ்வழைப்பை) நீர் புறக்கணித்தால் (உம்முடைய) குடி மக்களின் பாவமும் உம்மைச் சாரும்.

வேதத்தை உடையவர்களே! நாம் அல்லாஹ்வைத் தவிர (வேறு எவரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; அல்லாஹ்வைவிட்டுவிட்டு நம்மில் சிலர் சிலரை நம்முடைய இரட்சகனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது; என்ற எங்களுக்கு உங்களுக்கும் பொதுவான ஒரு கொள்கையை நோக்கி வந்து விடுங்கள். (இக் கொள்கையை) நீங்கள் (ஏற்க மறுத்து) புறக்கணித்தால், நாங்கள் நிச்சயமாக (அந்த ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக ஆகி விடுங்கள்’ என்று கூறப்பட்டிருந்தது.

மன்னர் தாம் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி, நபி(ஸல்) அவர்களின் கடிதத்தைப் படித்து முடித்ததும் அங்கே ஒரே கூச்சலும் குழப்பமும் மிகுந்து குரல்கள் உயர்ந்து கொண்டே போயின. நாங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டோம். அப்போது என்னுடன் வந்தவர்களிடம், ரோமர்களின் மன்னன் அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு முஹம்மதின் காரியம் இப்போது மேலோங்கிவிட்டது என்று கூறினேன். (அப்போதிருந்தே) அவர்கள் தாம் வெற்றியடைவார்கள் என்ற நம்பிக்கையில் திளைத்தவனாகவே இருந்து வந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்குள்ளேயும் இஸ்லாத்தை நுழைத்துவிட்டான்.

(எங்கள் மன்னர் அழைத்த காரணம் பற்றி) சிரியாவிலுள்ள கிறித்தவர்களின் தலைமைக் குருவும் ரோமாபுரியின் மாமன்னர் ஹெர்குஸிலின் அருமை நண்பரும் அல்அக்ஸா ஆலயத்தின் நிர்வாகியுமான இப்னு நாத்தூர் என்பார், கூறினார்.

‘மன்னர் அல் அக்ஸா ஆலயத்திற்கு வருகை தந்தபோது ஒரு நாள் கவலை தோய்ந்த முகத்தினராகக் காணப்பட்டார். அப்போது அவரின் அரசவைப் பிரதானிகளில் சிலர் மன்னரிடம் தங்களின் கவலை தோய்ந்த இந்தத் தோற்றம் எங்களுக்குக் கவலையைத் தருகிறது என்று கூறினார்கள்.

ஹெர்குலிஸ் மன்னர் விண் கோள்களை ஆய்ந்து சோதிடம் சொல்லுவதில் வல்ல வராயிருந்தார். மன்னரின் கவலைக்குக் காரணமென்னவென்று வினவியவர்களிடம் அவர், ‘இன்றிரவு நான் நட்சத்திர மண்டலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தபோது விருத்த சேதனம் செய்யப்பட்டவர்களின் மன்னர் தோன்றிவிட்டதாக அறிந்தேன்’ என்று கூறிவிட்டு,

‘இக்கால மக்களில் விருத்தசேதனம் செய்து கொள்ளும் வழக்கமுடையவர்கள் யார்?’ என வினவினார். ‘யூதர்களைத் தவிர வேறு யாரும் விருத்த சேதனம் செய்து கொள்வதில்லை; அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்; உங்கள் ஆட்சிக்குட்பட்ட நகரங்களுக்கெல்லாம் எழுதி அங்குள்ள யூதர்களைக் கொன்று விடுமாறு கட்டளையிடுங்கள்’ என்றார்கள்.

இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போதே நபி(ஸல்) அவர்களைப் பற்றிய தகவல் ஒன்றைக் கொண்டு வந்திருக்கும் ஒரு மனிதரை ‘கஸ்ஸான்’ என்ற கோத்திரத்தின் குறுநில மன்னர் ஹெர்குலிஸிடம் அனுப்பியிருந்தார். அம்மனிதர் அவரின் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார். அவரிடம் தகவல்களைப் பெற்ற ஹெர்குலிஸ், ‘இவரை அழைத்துச் சென்று இவர் விருத்த சேதனம் செய்திருக்கிறாரா? அல்லவா? சோதியுங்கள்’ என்று ஆணையிட்டார். அவரை அழைத்துச் சென்று பரிசோதித்தவர்கள் அவர் விருத்த சேதனம் செய்திருப்பதாகக் கூறினார்கள். அவரிடம் அரபிகளின் வழக்கம் பற்றி மன்னர் விசாரித்தபோது, ‘அவர்கள் விருத்த சேதனம் செய்து கொள்ளும் வழக்கமுடையவர்கள் தாம்’ என்றார். உடனே ஹெர்குலிஸ், ‘அவர் தாம் – (முஹம்மத்(ஸல்) இக்காலத்தின் மன்னராவார்; அவர் தோன்றிவிட்டார் என்று கூறினார். பின்னர் ரோமாபுரியிலிருந்த, தமக்கு நிகரான கல்வியறிவும் ஞானமும் பெற்றிருந்த தம் நண்பர் ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு ‘ஹிம்ஸ்’ என்ற நகரத்திற்குப் பயணமானார். அவர் ஹிம் ஸுக்குப் போய் சேர்வதற்குள் பதில் கடிதம் வந்தது. அக்கடிதத்தில், ஹெர்குலிஸின் கருத்துப்படியே, இறைத்தூதரின் வருகை பற்றியும் அத்தூதர் இவர் தாம் என்றும் எழுதப்பட்டிருந்தது.

(இதன் பிறகே மன்னர் எங்களை அவரின் அவைக்கு அழைத்தார். எங்களைச் சந்தித்த பின் நடந்ததாவது:)

ஹிம்ஸ் நகரிலிருந்த தம் கோட்டை ஒன்றிற்கு வருமாறு ரோமாபுரியின் பிரமுகர்கள் அனைவருக்கும் மன்னர் ஆணையிட்டார். (அவர்கள் வந்து சேர்ந்ததும்) அந்தக் கோட்டையின் வாயில்களை எல்லாம் பூட்டி விடும்படி உத்தரவிட்டார். கோட்டையின் வாயில்கள் அடைக்கப்பட்டன. பின்னர் மன்னர் அப்பிரமுகர்கள் முன் தோன்றி ‘ரோமா புரியினரே! நீங்கள் வெற்றியும் நேர்வழியும் பெற வேண்டும் என்றும் உங்கள் ஆட்சி நிலைத்திருக்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால் இந்த இறைத்தூதரை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்.

(இதைக் கேட்டவுடனே) காட்டுக் கழுதைகள் வெருண்டோடுவதைப் போன்று கோட்டை வாசல்களை நோக்கி அவர்கள் வெருண்டோடினார்கள். வாசல் அருகில் சென்றதும் அவை தாளிடப்பட்டிருப்பதை அறிந்தார்கள். அவர்கள் வெருண்டோடியதையும் நபி(ஸல்) அவர்களின் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்பதையும் மன்னர் பார்த்ததும் அவர்களை என்னிடம் திருப்பியனுப்புங்கள்’ என்று (காவலர்களுக்குக்) கட்டளையிட்டார். (அவர்கள் திரும்பி வந்ததும்) ‘நீங்கள் உங்கள் மதத்தில் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்கள் என்பதைச் சோதிப்பதற்காகவே நான் சற்று முன்னர் கூறிய வார்த்தைகளை கூறினேன். (இப்போது உங்கள் உறுதியை) சந்தேகமற அறிந்து கொண்டேன்’ என்று அவர் கூறியதும், அனைவரும் அவருக்குச் சிரம் பணிந்தனர். அவரைப் பற்றித் திருப்தியுற்றார்கள். ஹெர்குலிஸ் மன்னரைப் பற்றிக் கிடைத்த கடைசித் தகவல் இதுவாகவே இருக்கிறது’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book :1

(புகாரி: 7)

حَدَّثَنَا أَبُو اليَمَانِ الحَكَمُ بْنُ نَافِعٍ قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ أَخْبَرَهُ: أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ فِي رَكْبٍ مِنْ قُرَيْشٍ، وَكَانُوا تُجَّارًا بِالشَّأْمِ فِي المُدَّةِ الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَادَّ فِيهَا أَبَا سُفْيَانَ وَكُفَّارَ قُرَيْشٍ، فَأَتَوْهُ وَهُمْ بِإِيلِيَاءَ، فَدَعَاهُمْ فِي مَجْلِسِهِ، وَحَوْلَهُ عُظَمَاءُ الرُّومِ، ثُمَّ دَعَاهُمْ وَدَعَا بِتَرْجُمَانِهِ، فَقَالَ: أَيُّكُمْ أَقْرَبُ نَسَبًا بِهَذَا الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ؟ فَقَالَ أَبُو سُفْيَانَ: فَقُلْتُ أَنَا أَقْرَبُهُمْ نَسَبًا، فَقَالَ: أَدْنُوهُ مِنِّي، وَقَرِّبُوا أَصْحَابَهُ فَاجْعَلُوهُمْ عِنْدَ ظَهْرِهِ، ثُمَّ قَالَ لِتَرْجُمَانِهِ: قُلْ لَهُمْ إِنِّي سَائِلٌ هَذَا عَنْ هَذَا الرَّجُلِ، فَإِنْ كَذَبَنِي فَكَذِّبُوهُ. فَوَاللَّهِ لَوْلاَ الحَيَاءُ مِنْ أَنْ يَأْثِرُوا عَلَيَّ كَذِبًا لَكَذَبْتُ عَنْهُ. ثُمَّ كَانَ أَوَّلَ مَا سَأَلَنِي عَنْهُ أَنْ قَالَ: كَيْفَ نَسَبُهُ فِيكُمْ؟ قُلْتُ: هُوَ فِينَا ذُو نَسَبٍ، قَالَ: فَهَلْ قَالَ هَذَا القَوْلَ مِنْكُمْ أَحَدٌ قَطُّ قَبْلَهُ؟ قُلْتُ: لاَ. قَالَ: فَهَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ؟ قُلْتُ: لاَ قَالَ: فَأَشْرَافُ النَّاسِ يَتَّبِعُونَهُ أَمْ ضُعَفَاؤُهُمْ؟ فَقُلْتُ بَلْ ضُعَفَاؤُهُمْ. قَالَ: أَيَزِيدُونَ أَمْ يَنْقُصُونَ؟ قُلْتُ: بَلْ يَزِيدُونَ. قَالَ: فَهَلْ يَرْتَدُّ أَحَدٌ مِنْهُمْ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ؟ قُلْتُ: لاَ. قَالَ: فَهَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ؟ قُلْتُ: لاَ. قَالَ: فَهَلْ يَغْدِرُ؟ قُلْتُ: لاَ، وَنَحْنُ مِنْهُ فِي مُدَّةٍ لاَ نَدْرِي مَا هُوَ فَاعِلٌ فِيهَا، قَالَ: وَلَمْ تُمْكِنِّي كَلِمَةٌ أُدْخِلُ فِيهَا شَيْئًا غَيْرُ هَذِهِ الكَلِمَةِ، قَالَ: فَهَلْ قَاتَلْتُمُوهُ؟ قُلْتُ: نَعَمْ. قَالَ: فَكَيْفَ كَانَ قِتَالُكُمْ إِيَّاهُ؟ قُلْتُ: الحَرْبُ بَيْنَنَا وَبَيْنَهُ سِجَالٌ، يَنَالُ مِنَّا وَنَنَالُ مِنْهُ. قَالَ: مَاذَا يَأْمُرُكُمْ؟ قُلْتُ: يَقُولُ: اعْبُدُوا اللَّهَ وَحْدَهُ وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَاتْرُكُوا مَا يَقُولُ آبَاؤُكُمْ، وَيَأْمُرُنَا بِالصَّلاَةِ وَالزَّكَاةِ وَالصِّدْقِ وَالعَفَافِ وَالصِّلَةِ. فَقَالَ لِلتَّرْجُمَانِ: قُلْ لَهُ: سَأَلْتُكَ عَنْ نَسَبِهِ فَذَكَرْتَ أَنَّهُ فِيكُمْ ذُو نَسَبٍ، فَكَذَلِكَ الرُّسُلُ تُبْعَثُ فِي نَسَبِ قَوْمِهَا. وَسَأَلْتُكَ هَلْ قَالَ أَحَدٌ مِنْكُمْ هَذَا القَوْلَ، فَذَكَرْتَ أَنْ لاَ، فَقُلْتُ: لَوْ كَانَ أَحَدٌ قَالَ هَذَا القَوْلَ قَبْلَهُ، لَقُلْتُ رَجُلٌ يَأْتَسِي بِقَوْلٍ قِيلَ قَبْلَهُ. وَسَأَلْتُكَ هَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ، فَذَكَرْتَ أَنْ لاَ، قُلْتُ فَلَوْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ، قُلْتُ رَجُلٌ يَطْلُبُ مُلْكَ أَبِيهِ، وَسَأَلْتُكَ، هَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ، فَذَكَرْتَ أَنْ لاَ، فَقَدْ أَعْرِفُ أَنَّهُ لَمْ يَكُنْ لِيَذَرَ الكَذِبَ عَلَى النَّاسِ وَيَكْذِبَ عَلَى اللَّهِ. وَسَأَلْتُكَ أَشْرَافُ النَّاسِ اتَّبَعُوهُ أَمْ ضُعَفَاؤُهُمْ، فَذَكَرْتَ أَنَّ ضُعَفَاءَهُمُ اتَّبَعُوهُ، وَهُمْ أَتْبَاعُ الرُّسُلِ. وَسَأَلْتُكَ أَيَزِيدُونَ أَمْ يَنْقُصُونَ، فَذَكَرْتَ أَنَّهُمْ يَزِيدُونَ، وَكَذَلِكَ أَمْرُ الإِيمَانِ حَتَّى يَتِمَّ. وَسَأَلْتُكَ أَيَرْتَدُّ أَحَدٌ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ، فَذَكَرْتَ أَنْ لاَ، وَكَذَلِكَ الإِيمَانُ حِينَ تُخَالِطُ بَشَاشَتُهُ القُلُوبَ. وَسَأَلْتُكَ هَلْ يَغْدِرُ، فَذَكَرْتَ أَنْ لاَ، وَكَذَلِكَ الرُّسُلُ لاَ تَغْدِرُ. وَسَأَلْتُكَ بِمَا يَأْمُرُكُمْ، فَذَكَرْتَ أَنَّهُ يَأْمُرُكُمْ أَنْ تَعْبُدُوا اللَّهَ وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَيَنْهَاكُمْ عَنْ عِبَادَةِ الأَوْثَانِ، وَيَأْمُرُكُمْ بِالصَّلاَةِ وَالصِّدْقِ وَالعَفَافِ، فَإِنْ كَانَ مَا تَقُولُ حَقًّا فَسَيَمْلِكُ مَوْضِعَ قَدَمَيَّ هَاتَيْنِ، وَقَدْ كُنْتُ أَعْلَمُ أَنَّهُ خَارِجٌ، لَمْ أَكُنْ أَظُنُّ أَنَّهُ مِنْكُمْ، فَلَوْ أَنِّي أَعْلَمُ أَنِّي أَخْلُصُ إِلَيْهِ لَتَجَشَّمْتُ لِقَاءَهُ، وَلَوْ كُنْتُ عِنْدَهُ لَغَسَلْتُ عَنْ قَدَمِهِ. ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي بَعَثَ بِهِ دِحْيَةُ إِلَى عَظِيمِ بُصْرَى، فَدَفَعَهُ إِلَى هِرَقْلَ، فَقَرَأَهُ فَإِذَا فِيهِ ” بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ: سَلاَمٌ عَلَى مَنِ اتَّبَعَ الهُدَى، أَمَّا بَعْدُ، فَإِنِّي أَدْعُوكَ بِدِعَايَةِ الإِسْلاَمِ، أَسْلِمْ تَسْلَمْ، يُؤْتِكَ اللَّهُ أَجْرَكَ مَرَّتَيْنِ، فَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ إِثْمَ الأَرِيسِيِّينَ ” وَ {يَا أَهْلَ الكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَنْ لاَ نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلاَ نُشْرِكَ بِهِ شَيْئًا وَلاَ يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ} قَالَ أَبُو سُفْيَانَ : فَلَمَّا قَالَ مَا قَالَ، وَفَرَغَ مِنْ قِرَاءَةِ الكِتَابِ، كَثُرَ عِنْدَهُ الصَّخَبُ وَارْتَفَعَتِ الأَصْوَاتُ وَأُخْرِجْنَا، فَقُلْتُ لِأَصْحَابِي حِينَ أُخْرِجْنَا: لَقَدْ أَمِرَ أَمْرُ ابْنِ أَبِي كَبْشَةَ، إِنَّهُ يَخَافُهُ مَلِكُ بَنِي الأَصْفَرِ. فَمَا زِلْتُ مُوقِنًا أَنَّهُ سَيَظْهَرُ حَتَّى أَدْخَلَ اللَّهُ عَلَيَّ الإِسْلاَمَ. وَكَانَ ابْنُ النَّاظُورِ، صَاحِبُ إِيلِيَاءَ وَهِرَقْلَ، سُقُفًّا عَلَى نَصَارَى الشَّأْمِ يُحَدِّثُ أَنَّ هِرَقْلَ حِينَ قَدِمَ إِيلِيَاءَ، أَصْبَحَ يَوْمًا خَبِيثَ النَّفْسِ، فَقَالَ بَعْضُ بَطَارِقَتِهِ: قَدِ اسْتَنْكَرْنَا هَيْئَتَكَ، قَالَ ابْنُ النَّاظُورِ: وَكَانَ هِرَقْلُ حَزَّاءً يَنْظُرُ فِي النُّجُومِ، فَقَالَ لَهُمْ حِينَ سَأَلُوهُ: إِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ حِينَ نَظَرْتُ فِي النُّجُومِ مَلِكَ الخِتَانِ قَدْ ظَهَرَ، فَمَنْ يَخْتَتِنُ مِنْ هَذِهِ الأُمَّةِ؟ قَالُوا: لَيْسَ يَخْتَتِنُ إِلَّا اليَهُودُ، فَلاَ يُهِمَّنَّكَ شَأْنُهُمْ، وَاكْتُبْ إِلَى مَدَايِنِ مُلْكِكَ، فَيَقْتُلُوا مَنْ فِيهِمْ مِنَ اليَهُودِ. فَبَيْنَمَا هُمْ عَلَى أَمْرِهِمْ، أُتِيَ هِرَقْلُ بِرَجُلٍ أَرْسَلَ بِهِ مَلِكُ غَسَّانَ يُخْبِرُ عَنْ خَبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا اسْتَخْبَرَهُ هِرَقْلُ قَالَ: اذْهَبُوا فَانْظُرُوا أَمُخْتَتِنٌ هُوَ أَمْ لاَ، فَنَظَرُوا إِلَيْهِ، فَحَدَّثُوهُ أَنَّهُ مُخْتَتِنٌ، وَسَأَلَهُ عَنِ العَرَبِ، فَقَالَ: هُمْ يَخْتَتِنُونَ، فَقَالَ هِرَقْلُ: هَذَا مُلْكُ هَذِهِ الأُمَّةِ قَدْ ظَهَرَ. ثُمَّ كَتَبَ هِرَقْلُ إِلَى صَاحِبٍ لَهُ بِرُومِيَةَ، وَكَانَ نَظِيرَهُ فِي العِلْمِ، وَسَارَ هِرَقْلُ إِلَى حِمْصَ، فَلَمْ يَرِمْ حِمْصَ حَتَّى أَتَاهُ كِتَابٌ مِنْ صَاحِبِهِ يُوَافِقُ رَأْيَ هِرَقْلَ عَلَى خُرُوجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَّهُ نَبِيٌّ، فَأَذِنَ هِرَقْلُ لِعُظَمَاءِ الرُّومِ فِي دَسْكَرَةٍ لَهُ بِحِمْصَ، ثُمَّ أَمَرَ بِأَبْوَابِهَا فَغُلِّقَتْ، ثُمَّ اطَّلَعَ فَقَالَ: يَا مَعْشَرَ الرُّومِ، هَلْ لَكُمْ فِي الفَلاَحِ وَالرُّشْدِ، وَأَنْ يَثْبُتَ مُلْكُكُمْ، فَتُبَايِعُوا هَذَا النَّبِيَّ؟ فَحَاصُوا حَيْصَةَ حُمُرِ الوَحْشِ إِلَى الأَبْوَابِ، فَوَجَدُوهَا قَدْ غُلِّقَتْ، فَلَمَّا رَأَى هِرَقْلُ نَفْرَتَهُمْ، وَأَيِسَ مِنَ الإِيمَانِ، قَالَ: رُدُّوهُمْ عَلَيَّ، وَقَالَ: إِنِّي قُلْتُ مَقَالَتِي آنِفًا أَخْتَبِرُ بِهَا شِدَّتَكُمْ عَلَى دِينِكُمْ، فَقَدْ رَأَيْتُ، فَسَجَدُوا لَهُ وَرَضُوا عَنْهُ، فَكَانَ ذَلِكَ آخِرَ شَأْنِ هِرَقْلَ رَوَاهُ صَالِحُ بْنُ كَيْسَانَ، وَيُونُسُ، وَمَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.