அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு “லைலத்துல் கத்ர்” இரவு பற்றிய குறிப்பு வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னர் ரமளான் மாதத்தின் நடுப்பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடியவாறு “இஃதிகாஃப்” இருந்தார்கள். நடுப்பத்து நாட்கள் முடிந்ததும் (தாம் வீற்றிருந்த) கூடாரத்தை அகற்றுமாறு உத்தரவிட, அவ்வாறே அது அகற்றப்பட்டது. பின்னர் அவர்களுக்கு “லைலத்துல் கத்ர்” இரவு இறுதிப்பத்து இரவுகளில் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டது. எனவே, மீண்டும் கூடாரம் அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். மீண்டும் கூடாரம் அமைக்கப்பட்ட பிறகு மக்களிடம் புறப்பட்டுவந்து, “மக்களே! லைலத்துல் கத்ர் பற்றிய குறிப்பு எனக்கு அறிவிக்கப்பட்டது. அதைப் பற்றிச் சொல்வதற்காக உங்களிடம் நான் புறப்பட்டுவந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் தமது உரிமை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அவ்விருவருடன் ஷைத்தானும் இருந்தான். அதனால் அதை(ப் பற்றிய குறிப்பை) நான் மறக்கவைக்கப்பட்டேன். ஆகவே, ரமளானின் இறுதிப் பத்தில் அந்த இரவை நீங்கள் தேடிக்கொள்ளுங்கள்;ஒன்பது, ஏழு, ஐந்து ஆகிய இரவுகளில் அதை நீங்கள் தேடிக்கொள்ளுங்கள்!” என்றார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூநள்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அபூசயீத் (ரலி) அவர்களிடம் “அதன் எண்ணிக்கை பற்றி எங்களைவிட நீங்களே நன்கறிந்தவர்கள்” என்றேன். அதற்கு அவர்கள், “ஆம். உங்களைவிட நாங்களே அதற்குத் தகுதியானவர்கள்” என்றார்கள். நான், “ஒன்பது, ஏழு, ஐந்து என்பவை எவை?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இருபத்தொன்றாவது இரவு முடிந்து, அதையடுத்து வரும் இருபத்து இரண்டாவது இரவே “ஒன்பது” ஆகும். இருபத்து மூன்றாவது இரவு முடிந்து அடுத்து வரும் (இருபத்து நான்காவது) இரவே “ஏழு” ஆகும். இருபத்து ஐந்தாவது இரவு முடிந்து அடுத்து வரும் இரவே “ஐந்து” ஆகும்” என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அபூபக்ர் பின் கல்லாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (“இரண்டு மனிதர்கள் தமது உரிமை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்” என்பதற்குப் பகரமாக) “சச்சரவு செய்துகொண்டிருந்தனர்” என்று இடம்பெற்றுள்ளது.
Book : 13
(முஸ்லிம்: 2172)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَأَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ
اعْتَكَفَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَشْرَ الْأَوْسَطَ مِنْ رَمَضَانَ، يَلْتَمِسُ لَيْلَةَ الْقَدْرِ قَبْلَ أَنْ تُبَانَ لَهُ، فَلَمَّا انْقَضَيْنَ أَمَرَ بِالْبِنَاءِ فَقُوِّضَ، ثُمَّ أُبِينَتْ لَهُ أَنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ، فَأَمَرَ بِالْبِنَاءِ فَأُعِيدَ، ثُمَّ خَرَجَ عَلَى النَّاسِ، فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّهَا كَانَتْ أُبِينَتْ لِي لَيْلَةُ الْقَدْرِ، وَإِنِّي خَرَجْتُ لِأُخْبِرَكُمْ بِهَا، فَجَاءَ رَجُلَانِ يَحْتَقَّانِ مَعَهُمَا الشَّيْطَانُ، فَنُسِّيتُهَا، فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ، الْتَمِسُوهَا فِي التَّاسِعَةِ وَالسَّابِعَةِ وَالْخَامِسَةِ» قَالَ قُلْتُ: يَا أَبَا سَعِيدٍ، إِنَّكُمْ أَعْلَمُ بِالْعَدَدِ مِنَّا، قَالَ: «أَجَلْ، نَحْنُ أَحَقُّ بِذَلِكَ مِنْكُمْ»، قَالَ قُلْتُ: مَا التَّاسِعَةُ وَالسَّابِعَةُ وَالْخَامِسَةُ؟ قَالَ: «إِذَا مَضَتْ وَاحِدَةٌ وَعِشْرُونَ، فَالَّتِي تَلِيهَا ثِنْتَيْنِ وَعِشْرِينَ وَهِيَ التَّاسِعَةُ، فَإِذَا مَضَتْ ثَلَاثٌ وَعِشْرُونَ، فَالَّتِي تَلِيهَا السَّابِعَةُ، فَإِذَا مَضَى خَمْسٌ وَعِشْرُونَ فَالَّتِي تَلِيهَا الْخَامِسَةُ» – وقَالَ ابْنُ خَلَّادٍ مَكَانَ يَحْتَقَّانِ: يَخْتَصِمَانِ
Tamil-2172
Shamila-1167
JawamiulKalim-2003
சமீப விமர்சனங்கள்