தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3553

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 சுவைத் பின் ஃகஃபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் ஸைத் பின் ஸூஹான் (ரலி) அவர்களும் சல்மான பின் ரபீஆ (ரலி) அவர்களும் ஒரு போருக்காகப் புறப்பட்டுச் சென்றபோது, (ஓரிடத்தில்) சாட்டை ஒன்றை நான் கண்டேன். அதை நான் எடுத்துக் கொண்டேன். (என் தோழர்கள்) இருவரும், ‘அதை போட்டுவிடு’ என்று கூறினார்கள். நான், ‘இல்லை. நூன் இதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொண்டிருப்பேன். இதன் உரிமையாளர் வந்தால் சரி (அதை அவரிடம் ஒப்படைத்து விடுவேன்). இல்லையென்றால், இதை நான் பயன்படுத்திக்கொள்வேன்’ என்று அவர்களிடம் கூறி மறுத்துவிட்டேன் .

நாங்கள் போரை முடித்துக்கொண்டு திரும்பியபோது, நான் ஹஜ்ஜுக்குச் செல்வேன் என என் விதியில் இருந்தது (நான் ஹஜ்ஜுக்குச் சென்றேன்). அப்போது நான் மதீனா (வழியாகச்) சென்றேன். (அங்கு) உபை பின் கஅப் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அந்தச் சாட்டையைப் பற்றியும் அதைப் பற்றி என் தோழர்கள் இருவரும் கூறியதைப் பற்றியும் அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு சுருக்குப் பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் (பொற்காசுகள்) இருந்தன. ஆதை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் அறிவிப்புச் செய்துகொண்டிருந்தேன். அதை அறிந்துகொள்ளும் (உரிமையாளர்) யாரையும் நான் காணவில்லை.

பிறகு மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள், ‘மேலும் ஓராண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்துகொண்டிரு’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் அறிவிப்புச் செய்துகொண்டிருந்தேன். அதை அறிந்துகொள்ளும் (உரிமையாளர்) யாரையும் நான் காணவில்லை. பிறகு திரும்பவும் அவர்களிடம் சென்றேன்.

அப்போதும் அவர்கள், ‘மேலும் ஓராண்டுக் காலத்திற்கு அறிவிப்பு செய்’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் அதைப் பற்றி அறிவிப்பு செய்தேன். அதை அறிந்துகொள்ளும் (உரிமையளர்) யாரையும் நான் காணவில்லை. (நான்காம் முறையாக நான் அவர்களிடம் சென்றபோது) அந்த பையிலுள்ள காசின் எண்ணிக்கையையும், பையையும், அதன் முடிச்சையும் நினைவில் வைத்துக்கொள். அதன் உரிமையாளர் வந்தால் சரி (அவரிடம் அதை ஒப்டைத்துவிடு). இல்லையென்றால், அதை நீ பயன்படுத்திக்கொள்’ என்று கூறினார்கள். ஆகவே நான் பயன்படுத்திக்கொண்டேன்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்களை அதன் பின்னர் மக்காவில் நான் சந்தித்தபோது, ‘மூன்றாண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்ய வேண்டுமா, அல்லது ஒரேயோர் ஆண்டு அறிவிப்புச் செய்ய வேண்டுமா என எனக்கு தெரியவில்லை’ என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

மேற்கண்ட ஹதீஸ் சுவைத் பின் கஃபலா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், ‘நான் ஸைத் பின் ஸூஹான் (ரலி) அவர்களுடனும் சல்மான் பின் ரபீஆ (ரலி) அவர்களுடனும் (போருக்குப்) புறப்பட்டுச் சென்றபோது சாட்டை ஒன்றைக் கண்டேன்…’ என்று ஹதீஸ் ஆரம்பமாகி, ‘ஆகவே அதை நான் பயன்படுத்திக்கொண்டேன்’ என்பதோடு முடிவடைகிறது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்களைப் பத்தாண்டுகளுக்குப் பிறகு நான் சந்தித்தேன். அப்போது அவர்கள் ‘ஓரேயோர் ஆண்டு நீ அறிவிப்புச் செய்’ என்று கூறினார்கள்.

Book : 31

(முஸ்லிம்: 3553)

وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ: سَمِعْتُ سُوَيْدَ بْنَ غَفَلَةَ، قَالَ

خَرَجْتُ أَنَا وَزَيْدُ بْنُ صُوحَانَ، وَسَلْمَانُ بْنُ رَبِيعَةَ، غَازِينَ، فَوَجَدْتُ سَوْطًا فَأَخَذْتُهُ، فَقَالَا لِي: دَعْهُ، فَقُلْتُ: لَا، وَلَكِنِّي أُعَرِّفُهُ، فَإِنْ جَاءَ صَاحِبُهُ، وَإِلَّا اسْتَمْتَعْتُ بِهِ، قَالَ: فَأَبَيْتُ عَلَيْهِمَا، فَلَمَّا رَجَعْنَا مِنْ غَزَاتِنَا، قُضِيَ لِي أَنِّي حَجَجْتُ، فَأَتَيْتُ الْمَدِينَةَ، فَلَقِيتُ أُبَيَّ بْنَ كَعْبٍ، فَأَخْبَرْتُهُ بِشَأْنِ السَّوْطِ وَبِقَوْلِهِمَا، فَقَالَ: إِنِّي وَجَدْتُ صُرَّةً فِيهَا مِائَةُ دِينَارٍ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُ بِهَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «عَرِّفْهَا حَوْلًا»، قَالَ: فَعَرَّفْتُهَا فَلَمْ أَجِدْ مَنْ يَعْرِفُهَا، ثُمَّ أَتَيْتُهُ، فَقَالَ: «عَرِّفْهَا حَوْلًا»، فَعَرَّفْتُهَا، فَلَمْ أَجِدْ مَنْ يَعْرِفُهَا، ثُمَّ أَتَيْتُهُ، فَقَالَ: «عَرِّفْهَا حَوْلًا»، فَعَرَّفْتُهَا فَلَمْ أَجِدْ مَنْ يَعْرِفُهَا، فَقَالَ: «احْفَظْ عَدَدَهَا، وَوِعَاءَهَا، وَوِكَاءَهَا، فَإِنْ جَاءَ صَاحِبُهَا وَإِلَّا، فَاسْتَمْتِعْ بِهَا»، فَاسْتَمْتَعْتُ بِهَا، فَلَقِيتُهُ بَعْدَ ذَلِكَ بِمَكَّةَ، فَقَالَ: لَا أَدْرِي بِثَلَاثَةِ أَحْوَالٍ أَوْ حَوْلٍ وَاحِدٍ

– وحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، أَوْ أَخْبَرَ الْقَوْمَ وَأَنَا فِيهِمْ، قَالَ: سَمِعْتُ سُوَيْدَ بْنَ غَفَلَةَ، قَالَ: خَرَجْتُ مَعَ زَيْدِ بْنِ صُوحَانَ، وَسَلْمَانَ بْنِ رَبِيعَةَ، فَوَجَدْتُ سَوْطًا، وَاقْتَصَّ الْحَدِيثَ بِمِثْلِهِ إِلَى قَوْلِهِ، فَاسْتَمْتَعْتُ بِهَا، قَالَ شُعْبَةُ: فَسَمِعْتُهُ بَعْدَ عَشْرِ سِنِينَ، يَقُولُ: عَرَّفَهَا عَامًا وَاحِدًا


Tamil-3553
Shamila-1723
JawamiulKalim-3257




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.