பாடம் : 26
இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் என்னிடம் நேரடியாகக் கூறினார்கள்: (குறைஷியரின் தலைவனாயிருந்த) எனக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே (ஹுதைபியா) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் (குறைஷியரின் வணிகக் குழுவில்) சென்று ஷாம் (சிரியா) நாட்டில் நான் இருந்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ரோமப் பைஸாந்திய மன்னர் ஹெராக்ளியஸுக்குக் கடிதம் வந்தது. அக்கடிதத்தை (நபித்தோழர்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்கள் கொண்டுவந்து, புஸ்ரா (ஹூரான்) சிற்றரசரிடம் கொடுக்க, அவர் அதை ஹெராக்ளியஸிடம் ஒப்படைத்திருந்தார்.
அப்போது ஹெராக்ளியஸ் “தம்மை இறைத்தூதர் எனக் கூறும் அந்த மனிதரின் குலத்தாரில் யாரேனும் இங்கு (நம் நாட்டில்) உள்ளனரா?” என்று கேட்டார். அ(வையிலிருந்த)வர்கள் “ஆம்” என விடையளித்தனர்.
குறைஷி (வணிக)க் குழுவினருடன் இருந்த என்னை அழைத்து வரும்படி ஆளனுப்பப்பட்டது. நாங்கள் அனைவரும் ஹெராக்ளியஸிடம் சென்றோம். எங்கள் அனைவரையும் தமக்கு முன்னால் உட்காரச் சொன்னார் ஹெராக்ளியஸ். பிறகு, “தம்மை இறைத்தூதர் எனச் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த (முஹம்மத் எனும்) மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?” என்று கேட்டார்.
நான் “நானே (அவருக்கு நெருங்கிய உறவினர் ஆவேன்)” என்று பதிலளித்தேன். எனவே, என்னை அவருக்கு எதிரில் (நெருக்கமாக) உட்காரவைத்தனர். என் நண்பர்களை எனக்குப் பின்னால் உட்காரவைத்தனர்.
பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழி பெயர்ப்பாளரை அழைத்து, “தம்மை இறைத்தூதர் எனச் சொல்லிக்கொண்டிருக்கும் அந்த (முஹம்மத் எனும்) மனிதரைப் பற்றி நான் இவரிடம் கேட்பேன். இவர் பொய் (ஏதும்) சொன்னால் உடனே “அவர் பொய் சொல்கிறார்” என்று கூறிவிட வேண்டும்” என அவருடைய நண்பர்களிடம் (மொழிபெயர்த்துச்) சொல் என்றார்.
“நான் பொய் பேசினேன்” என என்னைப் பற்றி என் நண்பர்கள் (ஊரில் வந்து) பேசுவார்களே என்ற அச்சம் மட்டும் எனக்கு இல்லாதிருந்தால், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (நபியவர்களைப் பற்றி) பொய்யான தகவல்களைச் சொல்லியிருப்பேன்.
பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம், “இவரிடம் “அந்த (முஹம்மத் எனும்) மனிதரின் குலம் எப்படிப்பட்டது?” எனக் கேள்” என்றார். நான் “அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சேர்ந்தவர்” என்றேன். “அடுத்து அந்த மனிதருடைய முன்னோரில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றனரா?” என்று கேட்டார். நான் “இல்லை” என்றேன்.
அவர், “அந்த மனிதர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன் அவர் மக்களிடம் பொய்(யேதும்) சொன்னார் என நீங்கள் அவரைக் குற்றம் சாட்டியதுண்டா?” என்று கேட்டார். நான் “இல்லை” என்றேன். “அந்த மனிதரை யார் பின்பற்றுகின்றனர்? மேட்டுக்குடி மக்களா, அல்லது நலிந்த பிரிவினரா?” என்று கேட்டார். நான் “அல்ல. நலிந்த பிரிவினரே (அவரைப் பின்பற்றுகின்றனர்)” என்றேன்.
“அவரைப் பின்பற்றுவோர் கூடிக்கொண்டே செல்கின்றனரா, அல்லது குறைந்துவருகின்ற னரா?” என்று கேட்டார். நான் “குறைவதில்லை. (நாளுக்கு நாள்) அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்” என்றேன்.
“அவரது மார்க்கத்தில் இணைந்த பிறகு அதன் மீது அதிருப்தியடைந்து எவரேனும் அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?” என்று கேட்டார். நான் “இல்லை (யாரும் பழைய மதத்திற்குத் திரும்புவதில்லை)” என்றேன்.
“அந்த மனிதருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?” என்று கேட்டார். நான் “ஆம்” என்றேன். “அவருடன் நீங்கள் நடத்திய போர்(களின் முடிவு)கள் எவ்வாறு அமைந்தன?” என்று கேட்டார். நான் “எங்களுக்கிடையேயான போர், (வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் வரும்) கிணற்று வாளியாக உள்ளது. ஒரு முறை அவர் எங்களை வெல்கிறார்;மறுமுறை நாங்கள் அவரை வெல்கிறோம்” என்றேன்.
“அந்த மனிதர் ஒப்பந்த மீறல் செய்கின்றாரா?” என்று கேட்டார். நான் “இல்லை (தற்போது நடைமுறையிலுள்ள இந்த ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் கால கட்டத்தில் நாங்களும் அவரும் இருந்துவருகிறோம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எங்களுக்குத் தெரியாது” என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இதைத் தவிர (நபியவர்களைக் குறை சொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் திணிக்க எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
தொடர்ந்து அவர், “(உங்களில்) எவரேனும் இவருக்கு முன் இப்படி(த் தம்மை இறைத்தூதர் என) எப்போதாவது வாதித்ததுண்டா?” என்று கேட்டார். நான் “இல்லை” என்று கூறினேன்.
பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம் பின்வருமாறு கூறினார்:
அவரிடம் (அபூசுஃப்யானிடம்) கூறிவிடு: நான் உம்மிடம் அந்த மனிதருடைய குலத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நீர் “அவர் எங்களில் சிறந்த குலத்தை உடையவர்” என்று கூறினீர். இவ்வாறே இறைத்தூதர்கள் ஒரு சமுதாயத்தின் நற்குடியில்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
நான் உம்மிடம் “அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றனரா?” என்று கேட்டேன். அதற்கு நீர் “இல்லை” என்று விடையளித்தீர். அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்(ததாக நீர் கூறியிருந்)தால், “தம் முன்னோரின் ஆட்சியதிகாரத்தை(த் தாமும்) அடைய விரும்பும் ஒரு (சராசரி) மனிதர்தாம் இவர்” என்று நான் கூறியிருப்பேன்.
நான் உம்மிடம் அவரைப் பின்பற்றுவோர் பற்றி, “மக்களில் மேட்டுக்குடியினர் அவரைப் பின்பற்றுகின்றனரா, அல்லது நலிந்த பிரிவினரா?” என்று கேட்டேன். அதற்கு நீர் “நலிந்த பிரிவினரே அவரைப் பின்பற்றுகின்றனர்” என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) நலிந்த பிரிவினர்தாம் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர்.
நான் உம்மிடம் “அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன்பு, (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என நீங்கள் குற்றம் சாட்டியதுண்டா” என்று கேட்டேன். அதற்கு நீர் “இல்லை” என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த் துணிய)ôத அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்லமாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன்.
நான் உம்மிடம் “அவரது மார்க்கத்தில் இணைந்த பின் எவரேனும் அதன் மீது அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நீர் “இல்லை” என்று விடையளித்தீர். இறைநம்பிக்கை (ஈமான்) இத்தகையதே; அதன் மலர்ச்சி மனங்களில் கலந்துவிடும்போது (அதைக் குறித்து எவருமே அதிருப்தியடையமாட்டார்).
நான் உம்மிடம் “அவ(ரைப் பின்பற்றுபவ)ர்கள் (நாளுக்கு நாள்) அதிகரித்துவருகின்றனரா, அல்லது குறைந்துவருகின்றனரா” என்று கேட்டேன். அதற்கு நீர் “அவர்கள் அதிகரித்தே வருகின்றனர்” என்று பதிலளித்தீர். இறைநம்பிக்கை என்பது, அது முழுமையடையும்வரை அவ்வாறுதான் (வளர்ச்சியை நோக்கியே செல்லும்).
நான் உம்மிடம் “அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நீர் “அவருடன் நீங்கள் போர் செய்துள்ளதாகவும் உங்களுக்கும் அவருக்கும் இடையே நடைபெறும் போரில் (வெற்றியும் தோல்வியும்) கிணற்று வாளிகள் போன்று சுழல் (முறையில் அமை)கின்றன. ஒரு முறை உங்களை அவர் வெல்வார். மறுமுறை அவரை நீங்கள் வெல்கிறீர்கள்” என்று கூறினீர். இறைத்தூதர்கள் இத்தகையோரே. முதலில் அவர்கள் சோதிக்கப்படுவார்கள். பிறகு இறுதி முடிவு அவர்களுக்கே (சாதகமாக) அமையும்.
நான் உம்மிடம் “அவர் ஒப்பந்த மீறல் செய்கிறாரா?” என்று கேட்டேன். அதற்கு நீர் “அவர் ஒப்பந்த மீறல் செய்வதில்லை” என்று பதிலளித்தீர். இறைத்தூதர்கள் இத்தகையோரே. அவர்கள் வாக்கு மீறமாட்டார்கள்.
நான் உம்மிடம் “இவருக்கு முன்னர் (உங்களில்) எவரேனும் இவ்வாதத்தை முன்வைத்த துண்டா?” என்று கேட்டேன். அதற்கு நீர் “இல்லை” என்று பதிலளித்தீர். இவருக்கு முன்னர் எவரேனும் இவ்வாதத்தை முன்வைத்திருந்(ததாக நீர் கூறியிருந்)தால், “தமக்கு முன்னர் (சிலரால்) முன்வைக்கப்பட்ட ஒரு வாதத்தைப் பின் பற்றிச் செல்கின்ற ஒரு (சராசரி) மனிதரே இவர்” என்று நான் சொல்லியிருப்பேன்.
பிறகு ஹெராக்ளியஸ், “அந்த மனிதர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?” என்று கேட்டார். “தொழுகையை நிறைவேற்றுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் உறவுகளைப் பேணுமாறும் சுயக்கட்டுப்பாட்டுடன் வாழுமாறும் எங்களுக்குக் கட்டளையிடுகிறார்” என்று நான் கூறினேன்.
அதற்கு ஹெராக்ளியஸ், “நீர் சொல்வது உண்மையாயிருப்பின், நிச்சயமாக அவர் ஓர் இறைத்தூதர்தாம். (இறைத்தூதரான) அவர் வரவிருப்பதாக நான் அறிந்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷியரான) உங்களிலிருந்து வருவார் என்று நான் நினைத்திருக்க வில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால், அவரைச் சந்திப்பதில் எனக்கு விருப்பம் உண்டு. நான் அவருக்கு அருகில் இருந்திருந்தால் அவருடைய பாதங்களைக் கழுவியிருப்பேன். அவரது ஆட்சி(யின் எல்லை) என் பாதங்களுக்குக் கீழ்வரை வந்து சேரும்” என்று கூறினார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தைக் கொண்டுவந்து வாசிக்கச் சொன்னார் ஹெராக்ளியஸ். அக்கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்): நேர்வழியைப் பின்பற்றியவர்மீது சாந்தி (சலாம்) நிலவட்டும். இறை வாழ்த்துக்குப் பின்!
இஸ்லாத்தின் (ஏகத்துவ) அழைப்பை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்க. (ஏற்றுக்கொண்டால் ஈருலகிலும்) பாதுகாப்புப் பெறுவீர். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அல்லாஹ் உங்களுக்குச் சேர வேண்டிய நற்பலனை இரு மடங்காகத் தருவான்.
நீங்கள் புறக்கணித்தால் குடி(யானவர்)களின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போனதற்கான குற்றமும்) உங்களையே சேரும். “வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பொதுவானதொரு கொள்கையின்பால் நீங்கள் வாருங்கள். (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வழிபடக் கூடாது; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது; அல்லாஹ்வை விடுத்து நம்மில் சிலர் வேறு சிலரைக் கடவுள்களாக ஆக்கிக்கொள்ளக் கூடாது என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதற்குப் பிறகும்) அவர்கள் புறக்கணித்தால், நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிந்த) முஸ்லிம்கள்தாம் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள் என்று சொல்லிவிடுங்கள். (3:64)
ஹெராக்ளியஸ் அந்தக் கடிதத்தைப் படித்து முடித்தபோது, அவர் அருகிலிருந்த (மதகுருமார்கள் மற்றும் ரோம பைஸாந்திய ஆட்சியாளர்களின்) குரல்கள் உயர்ந்தன. கூச்சல் அதிகரித்தது. ஹெராக்ளியஸின் உத்தரவின்பேரில் நாங்கள் (அவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம்.
நாங்கள் வெளியே வந்தபோது நான் என் நண்பர்களிடம் “இப்னு அபீகப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் (மார்க்கம்) வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரான (ரோமானிய) மன்னரே அவருக்கு (முஹம்மதுக்கு) அஞ்சுகிறாரே!”என்று சொன்னேன்.
அன்று தொட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விவகாரம் (மார்க்கம்) விரைவில் வெற்றிபெறும் என உறுதிபூண்டவனாக நான் இருக்கலானேன். முடிவில் அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தைப் புகுத்தினான்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், “பாரசீகப் படையை (ரோமாபுரி மன்னர்) கைஸர் (சீசர்) மூலம் அல்லாஹ் விரட்டியடித்தபோது, தமக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக “ஹிம்ஸி”லிருந்து பைத்துல் மக்திஸுக்கு (ஈலியா) கைஸர் (ஹெராக்ளியஸ்) வந்தார்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்புகளில் “அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான (முஹம்மத் எழுதிய கடிதம்)” என்று காணப்படுகிறது. “குடி(யானவர்)கள்” என்பதைக் குறிக்க (“அரீசிய்யீன்” என்பதற்குப் பதிலாக) “யரீசிய்யீன” என்ற சொல்லும் “இஸ்லாத்தின் அழைப்பு” என்பதைக் குறிக்க (“திஆயத்துல் இஸ்லாம்” என்பதற்குப் பகரமாக) “தாஇயத்துல் இஸ்லாம்” எனும் சொற்றொடரும் ஆளப்பெற்றுள்ளன.
Book : 32
(முஸ்லிம்: 3637)26 – بَابُ كِتَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى هِرَقْلَ يَدْعُوهُ إِلَى الْإِسْلَامِ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَابْنُ أَبِي عُمَرَ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، وَاللَّفْظُ لِابْنِ رَافِعٍ، قَالَ ابْنُ رَافِعٍ: وَابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا، وقَالَ الْآخَرَانِ: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ أَبَا سُفْيَانَ، أَخْبَرَهُ مِنْ فِيهِ إِلَى فِيهِ، قَالَ
انْطَلَقْتُ فِي الْمُدَّةِ الَّتِي كَانَتْ بَيْنِي وَبَيْنَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَبَيْنَا أَنَا بِالشَّامِ إِذْ جِيءَ بِكِتَابٍ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى هِرَقْلَ يَعْنِي عَظِيمَ الرُّومِ، قَالَ: وَكَانَ دَحْيَةُ الْكَلْبِيُّ جَاءَ بِهِ، فَدَفَعَهُ إِلَى عَظِيمِ بُصْرَى، فَدَفَعَهُ عَظِيمُ بُصْرَى إِلَى هِرَقْلَ، فَقَالَ هِرَقْلُ: هَلْ هَاهُنَا أَحَدٌ مِنْ قَوْمِ هَذَا الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ؟ قَالُوا: نَعَمْ، قَالَ: فَدُعِيتُ فِي نَفَرٍ مِنْ قُرَيْشٍ، فَدَخَلْنَا عَلَى هِرَقْلَ، فَأَجْلَسَنَا بَيْنَ يَدَيْهِ، فَقَالَ: أَيُّكُمْ أَقْرَبُ نَسَبًا مِنْ هَذَا الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ؟ فَقَالَ أَبُو سُفْيَانَ: فَقُلْتُ: أَنَا، فَأَجْلَسُونِي بَيْنَ يَدَيْهِ، وَأَجْلَسُوا أَصْحَابِي خَلْفِي، ثُمَّ دَعَا بِتَرْجُمَانِهِ، فَقَالَ لَهُ: قُلْ لَهُمْ إِنِّي سَائِلٌ هَذَا عَنِ الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، فَإِنْ كَذَبَنِي فَكَذِّبُوهُ، قَالَ: فَقَالَ أَبُو سُفْيَانَ: وَايْمُ اللهِ، لَوْلَا مَخَافَةُ أَنْ يُؤْثَرَ عَلَيَّ الْكَذِبُ لَكَذَبْتُ، ثُمَّ قَالَ لِتَرْجُمَانِهِ: سَلْهُ كَيْفَ حَسَبُهُ فِيكُمْ، قَالَ: قُلْتُ: هُوَ فِينَا ذُو حَسَبٍ، قَالَ: فَهَلْ كَانَ مِنْ آبَائِهِ مَلِكٌ؟ قُلْتُ: لَا، قَالَ: فَهَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالْكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ؟ قُلْتُ: لَا، قَالَ: وَمَنْ يَتَّبِعُهُ؟ أَشْرَافُ النَّاسِ أَمْ ضُعَفَاؤُهُمْ؟ قَالَ: قُلْتُ: بَلْ ضُعَفَاؤُهُمْ، قَالَ: أَيَزِيدُونَ أَمْ يَنْقُصُونَ؟ قَالَ: قُلْتُ: لَا، بَلْ يَزِيدُونَ، قَالَ: هَلْ يَرْتَدُّ أَحَدٌ مِنْهُمْ عَنْ دِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ سَخْطَةً لَهُ؟ قَالَ: قُلْتُ: لَا، قَالَ: فَهَلْ قَاتَلْتُمُوهُ؟ قُلْتُ: نَعَمْ، قَالَ: فَكَيْفَ كَانَ قِتَالُكُمْ إِيَّاهُ؟ قَالَ: قُلْتُ: تَكُونُ الْحَرْبُ بَيْنَنَا وَبَيْنَهُ سِجَالًا يُصِيبُ مِنَّا وَنُصِيبُ مِنْهُ، قَالَ: فَهَلْ يَغْدِرُ؟ قُلْتُ: لَا، وَنَحْنُ مِنْهُ فِي مُدَّةٍ لَا نَدْرِي مَا هُوَ صَانِعٌ فِيهَا، قَالَ: فَوَاللهِ مَا أَمْكَنَنِي مِنْ كَلِمَةٍ أُدْخِلُ فِيهَا شَيْئًا غَيْرَ هَذِهِ، قَالَ: فَهَلْ قَالَ هَذَا الْقَوْلَ أَحَدٌ قَبْلَهُ؟ قَالَ: قُلْتُ: لَا، قَالَ لِتَرْجُمَانِهِ: قُلْ لَهُ إِنِّي سَأَلْتُكَ عَنْ حَسَبِهِ، فَزَعَمْتَ أَنَّهُ فِيكُمْ ذُو حَسَبٍ، وَكَذَلِكَ الرُّسُلُ تُبْعَثُ فِي أَحْسَابِ قَوْمِهَا، وَسَأَلْتُكَ: هَلْ كَانَ فِي آبَائِهِ مَلِكٌ، فَزَعَمْتَ أَنْ لَا، فَقُلْتُ: لَوْ كَانَ مِنْ آبَائِهِ مَلِكٌ قُلْتُ رَجُلٌ يَطْلُبُ مُلْكَ آبَائِهِ، وَسَأَلْتُكَ عَنْ أَتْبَاعِهِ أَضُعَفَاؤُهُمْ أَمْ أَشْرَافُهُمْ، فَقُلْتَ: بَلْ ضُعَفَاؤُهُمْ وَهُمْ أَتْبَاعُ الرُّسُلِ، وَسَأَلْتُكَ: هَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالْكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ؟ فَزَعَمْتَ أَنْ لَا، فَقَدْ عَرَفْتُ أَنَّهُ لَمْ يَكُنْ لِيَدَعَ الْكَذِبَ عَلَى النَّاسِ، ثُمَّ يَذْهَبَ فَيَكْذِبَ عَلَى اللهِ، وَسَأَلْتُكَ: هَلْ يَرْتَدُّ أَحَدٌ مِنْهُمْ عَنْ دِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَهُ سَخْطَةً لَهُ؟ فَزَعَمْتَ أَنْ لَا، وَكَذَلِكَ الْإِيمَانُ إِذَا خَالَطَ بَشَاشَةَ الْقُلُوبِ، وَسَأَلْتُكَ: هَلْ يَزِيدُونَ أَوْ يَنْقُصُونَ؟ فَزَعَمْتَ أَنَّهُمْ يَزِيدُونَ، وَكَذَلِكَ الْإِيمَانُ حَتَّى يَتِمَّ، وَسَأَلْتُكَ: هَلْ قَاتَلْتُمُوهُ؟ فَزَعَمْتَ أَنَّكُمْ قَدْ قَاتَلْتُمُوهُ فَتَكُونُ الْحَرْبُ بَيْنَكُمْ وَبَيْنَهُ سِجَالًا يَنَالُ مِنْكُمْ وَتَنَالُونَ مِنْهُ، وَكَذَلِكَ الرُّسُلُ تُبْتَلَى ثُمَّ تَكُونُ لَهُمُ الْعَاقِبَةُ، وَسَأَلْتُكَ: هَلْ يَغْدِرُ؟ فَزَعَمْتَ أَنَّهُ لَا يَغْدِرُ، وَكَذَلِكَ الرُّسُلُ لَا تَغْدِرُ، وَسَأَلْتُكَ: هَلْ قَالَ هَذَا الْقَوْلَ أَحَدٌ قَبْلَهُ؟ فَزَعَمْتَ أَنْ لَا فَقُلْتُ: لَو قَالَ هَذَا الْقَوْلَ أَحَدٌ قَبْلَهُ قُلْتُ رَجُلٌ ائْتَمَّ بِقَوْلٍ قِيلَ قَبْلَهُ، قَالَ: ثُمَّ قَالَ: بِمَ يَأْمُرُكُمْ؟ قُلْتُ: يَأْمُرُنَا بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَالصِّلَةِ وَالْعَفَافِ، قَالَ: إِنْ يَكُنْ مَا تَقُولُ فِيهِ حَقًّا فَإِنَّهُ نَبِيٌّ، وَقَدْ كُنْتُ أَعْلَمُ أَنَّهُ خَارِجٌ، وَلَمْ أَكُنْ أَظُنُّهُ مِنْكُمْ، وَلَوْ أَنِّي أَعْلَمُ أَنِّي أَخْلُصُ إِلَيْهِ لَأَحْبَبْتُ لِقَاءَهُ، وَلَوْ كُنْتُ عِنْدَهُ لَغَسَلْتُ عَنْ قَدَمَيْهِ، وَلَيَبْلُغَنَّ مُلْكُهُ مَا تَحْتَ قَدَمَيَّ ، قَالَ: ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَرَأَهُ فَإِذَا فِيهِ «بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ، سَلَامٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى، أَمَّا بَعْدُ، فَإِنِّي أَدْعُوكَ بِدِعَايَةِ الْإِسْلَامِ أَسْلِمْ تَسْلَمْ، وَأَسْلِمْ يُؤْتِكَ اللهُ أَجْرَكَ مَرَّتَيْنِ، وَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ إِثْمَ الْأَرِيسِيِّينَ، وَ {يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَنْ لَا نَعْبُدَ إِلَّا اللهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابا مِنْ دُونِ اللهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ}» فَلَمَّا فَرَغَ مِنْ قِرَاءَةِ الْكِتَابِ ارْتَفَعَتِ الْأَصْوَاتُ عِنْدَهُ وَكَثُرَ اللَّغْطُ، وَأَمَرَ بِنَا فَأُخْرِجْنَا، قَالَ، فَقُلْتُ لِأَصْحَابِي حِينَ خَرَجْنَا: لَقَدْ أَمِرَ أَمْرُ ابْنِ أَبِي كَبْشَةَ، إِنَّهُ لَيَخَافُهُ مَلِكُ بَنِي الْأَصْفَرِ، قَالَ: فَمَا زِلْتُ مُوقِنًا بِأَمْرِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ سَيَظْهَرُ، حَتَّى أَدْخَلَ اللهُ عَلَيَّ الْإِسْلَامَ
– وَحَدَّثَنَاهُ حَسَنٌ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَا: حَدَّثَنَا يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، بِهَذَا الْإِسْنَادِ وَزَادَ فِي الْحَدِيثِ، وَكَانَ قَيْصَرُ لَمَّا كَشَفَ اللهُ عَنْهُ جُنُودَ فَارِسَ مَشَى مِنْ حِمْصَ إِلَى إِيلِيَاءَ شُكْرًا لِمَا أَبْلَاهُ اللهُ، وَقَالَ فِي الْحَدِيثِ: «مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللهِ وَرَسُولِهِ»، وَقَالَ: «إِثْمَ الْيَرِيسِيِّينَ»، وَقَالَ: «بِدَاعِيَةِ الْإِسْلَامِ»
Tamil-3637
Shamila-1773
JawamiulKalim-3328
சமீப விமர்சனங்கள்