தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6933

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

(இதயங்களிடையே) நெருக்கத்தை ஏற்படுத்தவும் தம்மைவிட்டு மக்கள் விலகிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும் காரிஜிய்யாக்களைக்கூட ஒருவர் கொல்லாமல் விட்டுவிடுவது.

 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.

(அலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து அனுப்பியிருந்த தங்கக் கட்டியை) நபி (ஸல்) அவர்கள் (மக்களில் சிலருக்குப்) பங்கிட்டுக் கொண்டிருந்தபோது பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ‘அப்துல்லாஹ் இப்னு தில் குவைஸிரா’ என்பவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உனக்குக் கேடுதான். (இறைத்தூதராகிய) நானே நீதியுடன் நடந்துகொள்ளாவிட்டால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்துகொள்ளப் போகிறார்கள்?’ என்று கேட்டார்கள்.

(அப்போது அங்கிருந்த) உமர் (ரலி) அவர்கள், ‘என்னை விடுங்கள்; இவர் கழுத்தை நான் வெட்டிவிடுகிறேன்’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இவரைவிட்விடுங்கள். இவருக்குத் தோழர்கள் சிலர் உள்ளனர். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும் அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களின் தொழுகையையும் உங்களின் நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபுறம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கின்றதா? என்று) அம்பின் இறகு கூர்ந்து பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் முனை பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணக்கிடைக்காது. பிறகு அம்பின் நாண் பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சி பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. அம்பானது, சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்திக் கொண்டிருக்கும்.

அவர்களின் அடையாளம் ஒரு (கறுப்பு நிற) மனிதராவார். அவரின் ‘இரண்டு கரங்களில்’ அல்லது ‘இரண்டு மார்பகங்களில்’ ஒன்று ‘பெண்ணின் கொங்கை போன்று’ அல்லது ‘துடிக்கும் இறைச்சித் துண்டு போன்று’ இருக்கும். அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்’ என்றார்கள்.

நான் இந்த நபிமொழியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று உறுதி அளிக்கிறேன். மேலும், அந்தக் கூட்டத்தாரை (நஹ்ரான் எனுமிடத்தில்) அலீ (ரலி) அவர்கள் கொன்றார்கள். அப்போது நானும் அலீ (ரலி) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதன் அலீ (ரலி) அவர்கள் முன்னிலையில்) கொண்டு வரப்பட்டான். நபி (ஸல்) அவர்கள் அறிவித்த வர்ணனையின்படியே அவன் இருந்தான். அவன் விஷயத்தில் தான் 9:58 வது இறைவசனம் அருளப்பெற்றது என்றும் உறுதி கூறுகிறேன்.19

Book : 88

(புகாரி: 6933)

بَابُ مَنْ تَرَكَ قِتَالَ الخَوَارِجِ لِلتَّأَلُّفِ، وَأَنْ لاَ يَنْفِرَ النَّاسُ عَنْهُ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ:

بَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْسِمُ، جَاءَ عَبْدُ اللَّهِ بْنُ ذِي الخُوَيْصِرَةِ التَّمِيمِيُّ، فَقَالَ: اعْدِلْ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «وَيْلَكَ، وَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ أَعْدِلْ» قَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ: دَعْنِي أَضْرِبْ عُنُقَهُ، قَالَ: ” دَعْهُ، فَإِنَّ لَهُ أَصْحَابًا، يَحْقِرُ أَحَدُكُمْ صَلاَتَهُ مَعَ صَلاَتِهِ، وَصِيَامَهُ مَعَ صِيَامِهِ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، يُنْظَرُ فِي قُذَذِهِ فَلاَ يُوجَدُ فِيهِ شَيْءٌ، ثُمَّ يُنْظَرُ فِي نَصْلِهِ فَلاَ يُوجَدُ فِيهِ شَيْءٌ، ثُمَّ يُنْظَرُ فِي رِصَافِهِ فَلاَ يُوجَدُ فِيهِ شَيْءٌ، ثُمَّ يُنْظَرُ فِي نَضِيِّهِ فَلاَ يُوجَدُ فِيهِ شَيْءٌ، قَدْ سَبَقَ الفَرْثَ وَالدَّمَ، آيَتُهُمْ رَجُلٌ إِحْدَى يَدَيْهِ، أَوْقَالَ: ثَدْيَيْهِ، مِثْلُ ثَدْيِ المَرْأَةِ، أَوْقَالَ: مِثْلُ البَضْعَةِ تَدَرْدَرُ، يَخْرُجُونَ عَلَى حِينِ فُرْقَةٍ مِنَ النَّاسِ ” قَالَ أَبُو سَعِيدٍ: أَشْهَدُ سَمِعْتُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَشْهَدُ أَنَّ عَلِيًّا، قَتَلَهُمْ، وَأَنَا مَعَهُ، جِيءَ بِالرَّجُلِ عَلَى النَّعْتِ الَّذِي نَعَتَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَنَزَلَتْ فِيهِ: {وَمِنْهُمْ مَنْ يَلْمِزُكَ فِي الصَّدَقَاتِ} [التوبة: 58]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.