தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-320

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 யஸீத் அல்ஃபகீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

காரிஜிய்யாக்களின் கொள்கைகளில் ஒன்று என் உள்ளத்தை உறுத்திக்கொண்டேயிருந்தது. இந்நிலையில் (கணிசமான) எண்ணிக்கை கொண்ட ஒரு குழுவாக நாங்கள் ஹஜ் செய்துவிட்டுப் பிறகு (காரிஜிய்யாக்களின் அக்கொள்கை குறித்து விவாதிக்க) மக்களிடம் புறப்பட்டுச் செல்லத் தீர்மானித்தோம். அப்(பயணத்தின்)போது நாங்கள் மதீனாவைக் கடந்துசென்றோம். அங்கு ஒரு தூண் அருகில் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அமர்ந்துகொண்டு மக்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய செய்திகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்போது “நரக விடுதலை பெறுவோர்” பற்றியும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நான், “இறைத்தூதரின் தோழரே! நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள்? அல்லாஹ்வோ, “நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்” (3:192) என்றும், “அவர்கள் அ(ந்த நரகத்) திலிருந்து வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்படுவார்கள்” (32:20) என்றும் கூறுகின்றானே? ஆனால், நீங்களோ வேறுவிதமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே?” என்று கேட்டேன்.

அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “நீங்கள் குர்ஆனை ஓதிவருபவர்தாமே?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அவ்வாறாயின், நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உயர் தகுதியைப் பற்றி -அதாவது நபியவர்களை அல்லாஹ் (“மகாமு மஹ்மூத்” எனும் உயர் இடத்திற்கு) அனுப்புவானே அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அப்போது அவர்கள், “அந்த “மகாமு மஹ்மூத்” எனும் உயர் இடத்திலிருந்து கொண்டுதான் நபி (ஸல்) அவர்களின் மூலம் அல்லாஹ் சிலரை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவான்” என்று கூறிவிட்டு, பிறகு “ஸிராத்” எனும் பாலம் அமைக்கப்படுவது பற்றியும் அதைக் கடந்து மக்கள் செல்வது பற்றியும் விவரித்தார்கள். மேலும் “இதை நான் நினைவிலிருத்தாதவனாக ஆகிவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்றும் குறிப்பிட்டார்கள்.

மேலும், “ஆயினும், சிலர் நரகத்திலிருந்த பின் அங்கிருந்து வெளியேறுவார்கள்- அதாவது எள்ளுச் செடியின் குச்சிகளைப் போன்று (கரிய நிறத்தில் கருகி) வெளியேறுவார்கள். பிறகு சொர்க்க நதிகளில் ஒன்றில் நீராடுவார்கள். அதையடுத்து வெள்ளைத் தாள்களைப் போன்று (புதுப் பொலிவுடன்) வெளியேறுவார்கள்” என்று கூறினார்கள்.

நாங்கள் “(காரிஜிய்யாக்களே!) உங்களுக்கு நாசம் உண்டாகட்டும். இந்த மூதறிஞர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது பொய்யுரைக்கிறார் என்றா நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று சொல்லிக்கொண்டே (அங்கிருந்து) திரும்பினோம். அல்லாஹ்வின் மீதாணையாக! (பரிந்துரையும் நரக விடுதலையும் உண்டு எனும் எங்கள் கொள்கையிலிருந்து) எங்களில் ஒரேயொரு மனிதரைத் தவிர வேறெவரும் விலகிவிடாத நிலையில் நாங்கள் (ஹஜ்ஜிலிருந்து) திரும்பினோம்.

(முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் கூறுகின்றேன்:)

(ஹஜ்ஜாஜ் பின் அஷ்ஷாஇர் (ரஹ்) அவர்கள், அபூநுஐம் ஃபள்ல் பின் துகைன் (ரஹ்) அவர்களிடமிருந்து இவ்வாறுதான் எனக்கு அறிவித்தார்கள் என்று நான் கருதுகிறேன்.) அல்லது அபூநுஐம் (ரஹ்) அவர்கள் எவ்வாறு கூறினார்களோ அவ்வாறு.

Book : 1

(முஸ்லிம்: 320)

وَحَدَّثَنَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، يَعْنِي مُحَمَّدَ بْنَ أَبِي أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي يَزِيدُ الْفَقِيرُ، قَالَ

كُنْتُ قَدْ شَغَفَنِي رَأْيٌ مِنْ رَأْيِ الْخَوَارِجِ، فَخَرَجْنَا فِي عِصَابَةٍ ذَوِي عَدَدٍ نُرِيدُ أَنْ نَحُجَّ، ثُمَّ نَخْرُجَ عَلَى النَّاسِ، قَالَ: فَمَرَرْنَا عَلَى الْمَدِينَةِ، فَإِذَا جَابِرُ بْنُ عَبْدِ اللهِ يُحَدِّثُ الْقَوْمَ، جَالِسٌ إِلَى سَارِيَةٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَإِذَا هُوَ قَدْ ذَكَرَ الْجَهَنَّمِيِّينَ، قَالَ: فَقُلْتُ لَهُ: يَا صَاحِبَ رَسُولِ اللهِ، مَا هَذَا الَّذِي تُحَدِّثُونَ؟ وَاللهُ يَقُولُ: {إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ} [آل عمران: 192] وَ {كُلَّمَا أَرَادُوا أَنْ يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا} [السجدة: 20]، فَمَا هَذَا الَّذِي تَقُولُونَ؟ قَالَ: فَقَالَ: «أَتَقْرَأُ الْقُرْآنَ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَهَلْ سَمِعْتَ بِمَقَامِ مُحَمَّدٍ عَلَيْهِ السَّلَامُ – يَعْنِي الَّذِي يَبْعَثُهُ اللهُ فِيهِ -؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَإِنَّهُ مَقَامُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَحْمُودُ الَّذِي يُخْرِجُ اللهُ بِهِ مَنْ يُخْرِجُ»، قَالَ: ثُمَّ نَعَتَ وَضْعَ الصِّرَاطِ، وَمَرَّ النَّاسِ عَلَيْهِ، – قَالَ: وَأَخَافُ أَنْ لَا أَكُونَ أَحْفَظُ ذَاكَ – قَالَ: غَيْرَ أَنَّهُ قَدْ زَعَمَ أَنَّ قَوْمًا يَخْرُجُونَ مِنَ النَّارِ بَعْدَ أَنْ يَكُونُوا فِيهَا، قَالَ: – يَعْنِي – فَيَخْرُجُونَ كَأَنَّهُمْ عِيدَانُ السَّمَاسِمِ، قَالَ: «فَيَدْخُلُونَ نَهَرًا مِنْ أَنْهَارِ الْجَنَّةِ، فَيَغْتَسِلُونَ فِيهِ، فَيَخْرُجُونَ كَأَنَّهُمُ الْقَرَاطِيسُ»، فَرَجَعْنَا قُلْنَا: وَيْحَكُمْ أَتُرَوْنَ الشَّيْخَ يَكْذِبُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَرَجَعْنَا فَلَا وَاللهِ مَا خَرَجَ مِنَّا غَيْرُ رَجُلٍ وَاحِدٍ، أَوْ كَمَا قَالَ: أَبُو نُعَيْمٍ


Tamil-320
Shamila-191
JawamiulKalim-287




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.