தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1226

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஹஃப்ஸ் பின் ஆஸிம் பின் உமர் பின் அல்கத்தாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு பயணத்தில் என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர்களுடன் மக்கா செல்லும் பாதையில் இருந்தேன். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகையை எங்களுக்கு இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். பிறகு தமது ஓய்விடம் நோக்கிச் சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம்; அவர்கள் அமர்ந்தபோது அவர்களுடன் நாங்களும் அமர்ந்தோம். அப்போது தாம் தொழுதுவிட்டு வந்த இடத்தைத் தற்செயலாகத் திரும்பிப் பார்த்தார்கள். அங்கு சிலர் நின்றுகொண்டிருந்தனர். உடனே, “இவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்டார்கள். “கூடுதலான தொழுகைகளைத் தொழுதுகொண்டிருக்கிறார்கள்” என்று நான் பதிலளித்தேன். இப்னு உமர் (ரலி) அவர்கள், “(பயணத்தில்) கூடுதலான தொழுகைகளை நான் தொழுபவனாக இருந்தால் எனது (கடமையான) தொழுகையை முழுமைப்படுத்தியிருப்பேன். என் சகோதரர் (ஆஸிமின்) மகனே! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்திருக்கிறேன். அவர்கள் பயணத்தின்போது (கடமையான) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாக (வேறெந்த முன், பின் சுன்னத்களையும்) தொழமாட்டார்கள். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும் வரை (அவ்வாறே செய்தார்கள்).

நான் அபூபக்ர் (ரலி) அவர்களுடனும் இருந்திருக்கிறேன். (பயணத்தில்) அவர்களும் இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை (அவ்வாறே செய்தார்கள்). நான் உமர் (ரலி) அவர்களுடனும் இருந்திருக்கிறேன். அவர்களும் இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை (அவ்வாறே செய்தார்கள்). பிறகு நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும் இருந்திருக்கிறேன். அவர்களும் இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழுததில்லை. அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும் வரை (அவ்வாறே செய்தார்கள்). அல்லாஹ்வோ, “அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” (33:21) என்று கூறுகின்றான்” என்றார்கள்.

Book : 6

(முஸ்லிம்: 1226)

وَحَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ حَفْصِ بْنِ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ أَبِيهِ، قَالَ

صَحِبْتُ ابْنَ عُمَرَ فِي طَرِيقِ مَكَّةَ، قَالَ: فَصَلَّى لَنَا الظُّهْرَ رَكْعَتَيْنِ، ثُمَّ أَقْبَلَ وَأَقْبَلْنَا مَعَهُ، حَتَّى جَاءَ رَحْلَهُ، وَجَلَسَ وَجَلَسْنَا مَعَهُ، فَحَانَتْ مِنْهُ الْتِفَاتَةٌ نَحْوَ حَيْثُ صَلَّى، فَرَأَى نَاسًا قِيَامًا، فَقَالَ: «مَا يَصْنَعُ هَؤُلَاءِ؟» قُلْتُ: يُسَبِّحُونَ، قَالَ: «لَوْ كُنْتُ مُسَبِّحًا لَأَتْمَمْتُ صَلَاتِي، يَا ابْنَ أَخِي إِنِّي صَحِبْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ، فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللهُ، وَصَحِبْتُ أَبَا بَكْرٍ، فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللهُ، وَصَحِبْتُ عُمَرَ، فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللهُ، ثُمَّ صَحِبْتُ عُثْمَانَ، فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُ اللهُ» وَقَدْ قَالَ اللهُ: {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ} [الأحزاب: 21]


Tamil-1226
Shamila-689
JawamiulKalim-1118




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.