தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1813

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10

செல்வத்தைக் குவித்து வைத்(துக்கொண்டு அதற்கான கடமையை நிறைவேற்றா) தோர் குறித்து வந்துள்ள கண்டனம்.

 அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மதீனாவிற்குச் சென்றேன். அங்கு ஓர் அவையில் பங்கேற்றேன். அந்த அவையில் குறைஷிப் பிரமுகர்களும் இருந்தனர். அப்போது மிகவும் சொரசொரப்பான ஆடையும் முரட்டுத்தனமான தோற்றமும் முகமும் கொண்ட ஒரு மனிதர் (அங்கு) வந்து அவர்கள் முன் நின்று, “(ஸகாத் வழங்காமல்) செல்வத்தைக் குவித்து வைத்திருப்போருக்கு “நற்செய்தி” கூறுக: நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் அவருக்கு உண்டு. அந்தக் கல் அவர்களில் ஒருவரது மார்புக் காம்பின் மேல் வைக்கப்படும். உடனே அது அவரது தோளின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியேறும். பிறகு அந்தக் கல் அவரது தோளின் மேற்பகுதியில் வைக்கப்படும். உடனே அது மார்புக்காம்பின் வழியாக ஊடுருவி வெளியேறும்” என்று கூறினார்.

(இதைக் கேட்டவுடன்) மக்கள் தங்கள் தலைகளைத் தாழ்த்திக்கொண்டனர். அவர்களில் ஒருவர்கூட அவருக்கு எந்தப் பதிலும் அளித்ததை நான் பார்க்கவில்லை.

பிறகு அந்த மனிதர் திரும்பிச்சென்றார். அவரைப் பின்தொடர்ந்து நான் சென்றேன். அவர் ஒரு தூணுக்கு அருகில் போய் உட்கார்ந்தார். அப்போது அவரிடம் நான், “தாங்கள் கூறியதைக் கேட்டு இம்மக்கள் வெறுப்படைந்ததையே நான் கண்டேன்” என்றேன். அதற்கு அவர், “இவர்கள் விவரமற்ற மக்கள். என் உற்ற தோழர் அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னை அழைத்தார்கள். நான் அவர்களது அழைப்பிற்குப் பதிலளித்தேன். அப்போது அவர்கள் “உஹுத் மலையை நீர் பார்க்கிறீரா?” என்று கேட்டார்கள். தமது தேவை ஒன்றுக்காக அவர்கள் என்னை அங்கு அனுப்பப்போகிறார்கள் என எண்ணியவாறு (நேரத்தை அறிந்துகொள்ள) எனக்கு மேலே உள்ள சூரியனைப் பார்த்து விட்டு, “(ஆம்; உஹுத் மலையைப்) பார்க்கிறேன்” என்றேன். அப்போது “இந்த (உஹுத் மலை) அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும், அதில் அனைத்தையும் ஈந்து மகிழவே நான் விரும்புவேன். (அதில் எதையும் சேகரித்து வைக்கமாட்டேன். என் கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும்) மூன்று பொற்காசுகளைத் தவிர” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், இந்த மக்களோ எதையுமே அறியாதவர்களாய் உலக ஆதாயங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.

நான், “உங்களுக்கும் உங்களுடைய குறைஷி சகோதர்களுக்கும் என்ன ஆயிற்று? நீங்கள் அவர்களை அணுகி அவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லையே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “உம்முடைய இறைவன் மீதாணையாக! நான் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் சந்திக்கும்வரை இவர்களிடம் இவ்வுலகப் பொருட்கள் எதையும் கேட்கமாட்டேன்; மார்க்க விஷயங்களைப் பற்றிய எந்தத் தீர்ப்பையும் கோரவுமாட்டேன்” என்று கூறினார்.

Book : 12

(முஸ்லிம்: 1813)

10 – بَابٌ فِي الْكَنَّازِينَ لِلْأَمْوَالِ وَالتَّغْلِيظِ عَلَيْهِمْ

وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلَاءِ، عَنِ الْأَحْنَفِ بْنِ قَيْسٍ، قَالَ

قَدِمْتُ الْمَدِينَةَ فَبَيْنَا أَنَا فِي حَلْقَةٍ فِيهَا مَلَأٌ مِنْ قُرَيْشٍ إِذْ جَاءَ رَجُلٌ أَخْشَنُ الثِّيَابِ، أَخْشَنُ الْجَسَدِ، أَخْشَنُ الْوَجْهِ، فَقَامَ عَلَيْهِمْ، فَقَالَ: بَشِّرِ الْكَانِزِينَ بِرَضْفٍ يُحْمَى عَلَيْهِ فِي نَارِ جَهَنَّمَ، فَيُوضَعُ عَلَى حَلَمَةِ ثَدْيِ أَحَدِهِمْ، حَتَّى يَخْرُجَ مِنْ نُغْضِ كَتِفَيْهِ، وَيُوضَعُ عَلَى نُغْضِ كَتِفَيْهِ، حَتَّى يَخْرُجَ مِنْ حَلَمَةِ ثَدْيَيْهِ يَتَزَلْزَلُ، قَالَ: فَوَضَعَ الْقَوْمُ رُءُوسَهُمْ، فَمَا رَأَيْتُ أَحَدًا مِنْهُمْ رَجَعَ إِلَيْهِ شَيْئًا، قَالَ: فَأَدْبَرَ، وَاتَّبَعْتُهُ حَتَّى جَلَسَ إِلَى سَارِيَةٍ، فَقُلْتُ: مَا رَأَيْتُ هَؤُلَاءِ إِلَّا كَرِهُوا مَا قُلْتَ لَهُمْ، قَالَ: إِنَّ هَؤُلَاءِ لَا يَعْقِلُونَ شَيْئًا، إِنَّ خَلِيلِي أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَانِي فَأَجَبْتُهُ، فَقَالَ: «أَتَرَى أُحُدًا؟» فَنَظَرْتُ مَا عَلَيَّ مِنَ الشَّمْسِ وَأَنَا أَظُنُّ أَنَّهُ يَبْعَثُنِي فِي حَاجَةٍ لَهُ، فَقُلْتُ: أَرَاهُ، فَقَالَ: «مَا يَسُرُّنِي أَنَّ لِي مِثْلَهُ ذَهَبًا أُنْفِقُهُ كُلَّهُ إِلَّا ثَلَاثَةَ دَنَانِيرَ» ثُمَّ هَؤُلَاءِ يَجْمَعُونَ الدُّنْيَا، لَا يَعْقِلُونَ شَيْئًا، قَالَ: قُلْتُ: مَا لَكَ وَلِإِخْوَتِكَ مِنْ قُرَيْشٍ، لَا تَعْتَرِيهِمْ وَتُصِيبُ مِنْهُمْ، قَالَ: لَا، وَرَبِّكَ، لَا أَسْأَلُهُمْ عَنْ دُنْيَا، وَلَا أَسْتَفْتِيهِمْ عَنْ دِينٍ، حَتَّى أَلْحَقَ بِاللهِ وَرَسُولِهِ


Tamil-1813
Shamila-992
JawamiulKalim-1662




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.