தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1934

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நஹ்ரவான் நகரத்தைச் சேர்ந்த) காரிஜிய்யாக்களை நோக்கிச் சென்ற அலீ (ரலி) அவர்களின் படையில் நானும் இருந்தேன். (செல்லும் வழியில்) அலீ (ரலி) அவர்கள், “மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “என் சமுதாயத்திலிருந்து ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். அவர்களின் ஓதலுடன் உங்களின் ஓதலை ஒப்பிடும்போது,உங்களின் ஓதல் ஒன்றுமேயில்லை; அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை ஒப்பிடும்போது, உங்களது தொழுகை ஒன்றுமேயில்லை; அவர்களது நோன்புடன் உங்களது நோன்பை ஒப்பிடும்போது, உங்களது நோன்பு ஒன்றுமேயில்லை. (அந்த அளவிற்கு அவர்களுடைய வணக்க வழிபாடுகள் அதிகமாயிருக்கும்.) தங்களுக்குச் சாதகமான ஆதாரம் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுக்கு எதிரான ஆதாரமாகவே இருக்கும். அவர்களது தொழுகை(யில் அவர்கள் குர்ஆனை ஓதுவது), அவர்களது கழுத்தெலும்பைத் தாண்டிச்செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

அவர்களை வீழ்த்தும் படையினர், அதற்காகத் தமக்கு வழங்கப்படவுள்ள நற்பலன் குறித்துத் தங்களுடைய நபியின் நாவினால் அறிவிக்கப்பட்டுள்ளதை அறிவார்களாயின், அதையே நம்பிக்கொண்டு நற்செயல் புரியாமல் இருந்துவிடுவார்கள். அவர்களிடையே கைபுஜம் மட்டுமே உள்ள ஒரு மனிதன் அவர்களுக்கு அடையாளம் ஆவான். முழங்கைக்குக் கீழே அவனுக்குக் கையிருக்காது. அவனது கை புஜத்தின் மீது மார்புக்காம்பைப் போன்று ஒரு கட்டியிருக்கும். அதன் மீது வெள்ளை முடிகள் முளைத்திருக்கும். நீங்கள் சந்ததிகளையும் செல்வங்களையும் கவனிக்கும் பிரதிநிதிகளாக இவர்களை விட்டுவிட்டு, முஆவியா (ரலி) அவர்களிடமும் ஷாம்வாசிகளிடமும் (ஸிஃப்பீன் போருக்காகச்) சென்று விடுவீர்கள். (இந்த காரிஜிய்யாக்களோ உங்கள் குழந்தை குட்டிகளைத் துன்புறுத்துவார்கள். உங்கள் சொத்துக்களைச் சூறையாடுவார்கள்.) அல்லாஹ்வின் மீதாணையாக! (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வர்ணித்த) அந்த(காரிஜிய்யா)க் கூட்டத்தார் இவர்களாகத்தாம் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், இவர்கள் அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிர்களைக் கொலை செய்துள்ளார்கள்; மக்களுடைய கால்நடைகளைக் கொள்ளையடித்துள்ளார்கள். எனவே, அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி, அவர்களை நோக்கிச் செல்லுங்கள் (அவர்களை வெல்லுங்கள்)” என்று சொன்னார்கள்.

இதன் அறிவிப்பாளரான சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(அந்தப் பயணத்தில்) ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் (காரிஜிய்யாக்கள்) முகாமிட்டிருந்த ஒவ்வொரு தளங்களையும் எனக்குக் காட்டினார்கள். இறுதியாக நாங்கள் (“அத்தப்ரஜான்” எனும்) ஒரு பாலத்தைக் கடந்துசென்றோம். (கலகக்காரர்களான காரிஜிய்யாக்களை) நாங்கள் சந்தித்தபோது, காரிஜிய்யாக்களின் அன்றைய தளபதியாக அப்துல்லாஹ் பின் வஹ்ப் அர்ராசிபீ என்பான் இருந்தான். அவன் காரிஜிய்யாக்களிடம் “ஹரூரா போரின்போது இவர்கள் அல்லாஹ்வின் பெயரால் ஆணையிட்டு உங்களிடம் (சமாதான ஒப்பந்தக்) கோரிக்கையை முன்வைத்ததைப் போன்று இப்போதும் கோரிக்கை வைத்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். (அதற்கு இடமளித்துவிடாமல்) ஈட்டியை எறியுங்கள்; வாட்களை உறைகளிலிருந்து உருவி(த் தயாராக வைத்து)க் கொள்ளுங்கள்” என்று கூறினான். உடனே அவர்கள் திரும்பிச்சென்று தூரத்தில் நின்று கொண்டு தங்களுடைய ஈட்டிகளை வீசினர்; தங்களுடைய வாட்களை உருவி(யவாறு மக்களிடையே புகுந்த)னர். (அலீ (ரலி) அவர்களுடைய படையிலிருந்த) மக்களும் அவர்கள்மீது தங்களுடைய ஈட்டிகளைப் பாய்ச்சினர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்பட்டனர். அன்றைய தினம் (அலீ (ரலி) அவர்களின் அணியிலிருந்த) மக்களில் இருவர் மட்டுமே கொல்லப்பட்டனர்.

பிறகு (எங்களிடம்) அலீ (ரலி) அவர்கள், “அவர்களிடையே ஊனமான கையுடைய அந்த மனிதனைத் தேடிப்பாருங்கள்” என்று கூறினார்கள். மக்கள் தேடிப்பார்த்தபோது அவன் தட்டுப்படவில்லை. எனவே, அலீ (ரலி) அவர்களே எழுந்து சென்று, ஒருவர்மீது ஒருவராக அவர்கள் கொல்லப்பட்டுக் கிடந்த பகுதிக்கு வந்து “உடல்களை நகர்த்துங்கள்” என்று கூறினார்கள். அவனது உடல் தரைப் பகுதியின் அடியில் கிடப்பதைக் கண்டார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் “தக்பீர்” (அல்லாஹ் மிகப்பெரியவன் என்று) கூறினார்கள். பிறகு “அல்லாஹ் உண்மையே சொன்னான்; அவனுடைய தூதர் (அவனது செய்தியை) எட்டச் செய்தார்கள்” என்று சொன்னார்கள்.

அப்போது அலீ (ரலி) அவர்களிடம் அபீதா அஸ்ஸல்மானீ (ரஹ்) அவர்கள் வந்து, “இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! (காரிஜிய்யாக்கள் குறித்த) இந்த ஹதீஸை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “ஆம்;எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக!” என்று பதிலளித்தார்கள். இவ்வாறு மூன்று முறை சத்தியம் செய்யுமாறு அலீ (ரலி) அவர்களை அபீதா (ரஹ்) அவர்கள் கோரினார்கள். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே சத்தியம் செய்தார்கள்.

Book : 12

(முஸ்லிம்: 1934)

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ بْنُ هَمَّامٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، حَدَّثَنِي زَيْدُ بْنُ وَهْبٍ الْجُهَنِيُّ

أَنَّهُ كَانَ فِي الْجَيْشِ الَّذِينَ كَانُوا مَعَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ، الَّذِينَ سَارُوا إِلَى الْخَوَارِجِ، فَقَالَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ: أَيُّهَا النَّاسُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَخْرُجُ قَوْمٌ مِنْ أُمَّتِي يَقْرَءُونَ الْقُرْآنَ، لَيْسَ قِرَاءَتُكُمْ إِلَى قِرَاءَتِهِمْ بِشَيْءٍ، وَلَا صَلَاتُكُمْ إِلَى صَلَاتِهِمْ بِشَيْءٍ، وَلَا صِيَامُكُمْ إِلَى صِيَامِهِمْ بِشَيْءٍ، يَقْرَءُونَ الْقُرْآنَ يَحْسِبُونَ أَنَّهُ لَهُمْ وَهُوَ عَلَيْهِمْ، لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ تَرَاقِيَهُمْ يَمْرُقُونَ مِنَ الْإِسْلَامِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ»، لَوْ يَعْلَمُ الْجَيْشُ الَّذِينَ يُصِيبُونَهُمْ، مَا قُضِيَ لَهُمْ عَلَى لِسَانِ نَبِيِّهِمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَاتَّكَلُوا عَنِ الْعَمَلِ، «وَآيَةُ ذَلِكَ أَنَّ فِيهِمْ رَجُلًا لَهُ عَضُدٌ، وَلَيْسَ لَهُ ذِرَاعٌ، عَلَى رَأْسِ عَضُدِهِ مِثْلُ حَلَمَةِ الثَّدْيِ، عَلَيْهِ شَعَرَاتٌ بِيضٌ» فَتَذْهَبُونَ إِلَى مُعَاوِيَةَ وَأَهْلِ الشَّامِ وَتَتْرُكُونَ هَؤُلَاءِ يَخْلُفُونَكُمْ فِي ذَرَارِيِّكُمْ وَأَمْوَالِكُمْ، وَاللهِ، إِنِّي لَأَرْجُو أَنْ يَكُونُوا هَؤُلَاءِ الْقَوْمَ، فَإِنَّهُمْ قَدْ سَفَكُوا الدَّمَ الْحَرَامَ، وَأَغَارُوا فِي سَرْحِ النَّاسِ، فَسِيرُوا عَلَى اسْمِ اللهِ. قَالَ سَلَمَةُ بْنُ كُهَيْلٍ: فَنَزَّلَنِي زَيْدُ بْنُ وَهْبٍ مَنْزِلًا، حَتَّى قَالَ: مَرَرْنَا عَلَى قَنْطَرَةٍ، فَلَمَّا الْتَقَيْنَا وَعَلَى الْخَوَارِجِ يَوْمَئِذٍ عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ الرَّاسِبِيُّ، فَقَالَ: لَهُمْ أَلْقُوا الرِّمَاحَ، وَسُلُّوا سُيُوفَكُمْ مِنْ جُفُونِهَا، فَإِنِّي أَخَافُ أَنْ يُنَاشِدُوكُمْ كَمَا نَاشَدُوكُمْ يَوْمَ حَرُورَاءَ، فَرَجَعُوا فَوَحَّشُوا بِرِمَاحِهِمْ، وَسَلُّوا السُّيُوفَ، وَشَجَرَهُمُ النَّاسُ بِرِمَاحِهِمْ، قَالَ: وَقُتِلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ، وَمَا أُصِيبَ مِنَ النَّاسِ يَوْمَئِذٍ إِلَّا رَجُلَانِ، فَقَالَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ: الْتَمِسُوا فِيهِمُ الْمُخْدَجَ، فَالْتَمَسُوهُ فَلَمْ يَجِدُوهُ، فَقَامَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ بِنَفْسِهِ حَتَّى أَتَى نَاسًا قَدْ قُتِلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ، قَالَ: أَخِّرُوهُمْ، فَوَجَدُوهُ مِمَّا يَلِي الْأَرْضَ، فَكَبَّرَ، ثُمَّ قَالَ: صَدَقَ اللهُ، وَبَلَّغَ رَسُولُهُ، قَالَ: فَقَامَ إِلَيْهِ عَبِيدَةُ السَّلْمَانِيُّ، فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَلِلَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ، لَسَمِعْتَ هَذَا الْحَدِيثَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: إِي، وَاللهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ، حَتَّى اسْتَحْلَفَهُ ثَلَاثًا، وَهُوَ يَحْلِفُ لَهُ


Tamil-1934
Shamila-1066
JawamiulKalim-1780




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.