தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2590

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் பின் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல் மலிக் பின் மர்வான் ஆட்சிக் காலத்தில், அவரிடம் ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்) அவர்கள் ஒரு தூதுக் குழுவில் சென்றார்கள். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான், “அபூகுபைப் (இப்னுஸ் ஸுபைர்) ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து தாம் கேட்டதாகக் கூறும் செய்தியை, அவர் அவர்களிடமிருந்து கேட்டிருக்கமாட்டார் என்றே நான் எண்ணுகிறேன்” என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், “ஆம் (அபூகுபைப் உண்மையே சொல்கிறார்). இதை நானும் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன்” என்றார்கள்.

அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், “ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதைக் கூறுங்கள்” என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னுடைய சமுதாயத்தார் இறையில்லம் கஅபாவின் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர். அவர்கள் இணைவைப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின், அவர்கள் விட்டுவிட்டதை நான் மறுபடியும் இணைத்துக் கட்டியிருப்பேன். எனக்குப் பின் உன் சமுதாயத்தாருக்கு அதை (விரிவாக்கிக்) கட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றினால் (அவ்வாறு செய்யட்டும்!) என் அருகில் வா! அவர்கள் விட்டுவிட்ட (இடத்)தை உனக்கு நான் காட்டித்தருகிறேன்”என்று கூறிவிட்டு, (கஅபா அருகில்) ஏழு முழங்கள் அளவிற்கு இடத்தை எனக்குக் காட்டினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு இடம்பெற்றுள்ளது.

வலீத் பின் அதாஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு கூடுதலாக இடம் பெற்றுள்ளது:

நபி (ஸல்) அவர்கள் “நான் பூமியோடு ஒட்டினாற்போல் ஒரு கிழக்கு வாசலையும் ஒரு மேற்கு வாசலையும் அதற்கு அமைத்திருப்பேன்” என்று கூறிவிட்டு, “ஏன் உன் சமுதாயத்தார் கஅபாவின் வாசலை (பூமியோடு ஒட்டினாற்போல் அமைக்காமல்) உயர்த்தினார்கள் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் “இல்லை (தெரியாது)” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “சுய கௌரவத்திற்காகத்தான்; தாம் விரும்பியவரைத் தவிர வேறெவரும் நுழையக் கூடாது என்பதற்காகவே (அவ்வாறு உயர்த்தினர்). எவரேனும் ஒருவர் அதனுள் நுழைய முற்பட்டால், அதில் ஏறும்வரை அவர்கள் அவரை விட்டுவிடுவார்கள். அவர் (மேலே ஏறி) உள்ளே நுழையப்போகும் போது அவரைப் பிடித்துக் கீழே தள்ளிவிடுவார்கள்” என்றார்கள்.

பிறகு ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் அப்துல் மலிக் பின் மர்வான், “ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் “ஆம்” என்றார்கள். பிறகு அப்துல் மலிக் பின் மர்வான் தம்மிடமிருந்த குச்சியால் தரையைச் சிறிது நேரம் குத்திக் கீறி(யபடி ஆழ்ந்து யோசித்து)விட்டு, “இறையில்லத்தையும் இப்னுஸ் ஸுபைர் மேற்கொண்டதையும் (அதே நிலையில்) விட்டிருக்க வேண்டுமென (இப்போது) விரும்புகிறேன்” என்றார்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 15

(முஸ்லிம்: 2590)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، وَالْوَلِيدَ بْنَ عَطَاءٍ، يُحَدِّثَانِ عَنِ الْحَارِثِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي رَبِيعَةَ، قَالَ عَبْدُ اللهِ بْنُ عُبَيْدٍ

وَفَدَ الْحَارِثُ بْنُ عَبْدِ اللهِ عَلَى عَبْدِ الْمَلِكِ بْنِ مَرْوَانَ فِي خِلَافَتِهِ، فَقَالَ عَبْدُ الْمَلِكِ: مَا أَظُنُّ أَبَا خُبَيْبٍ يَعْنِي ابْنَ الزُّبَيْرِ، سَمِعَ مِنْ عَائِشَةَ مَا كَانَ يَزْعُمُ أَنَّهُ سَمِعَهُ مِنْهَا، قَالَ الْحَارِثُ: بَلَى أَنَا سَمِعْتُهُ مِنْهَا، قَالَ: سَمِعْتَهَا تَقُولُ مَاذَا؟ قَالَ: قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ قَوْمَكِ اسْتَقْصَرُوا مِنْ بُنْيَانِ الْبَيْتِ، وَلَوْلَا حَدَاثَةُ عَهْدِهِمْ بِالشِّرْكِ، أَعَدْتُ مَا تَرَكُوا مِنْهُ، فَإِنْ بَدَا لِقَوْمِكِ مِنْ بَعْدِي أَنْ يَبْنُوهُ فَهَلُمِّي لِأُرِيَكِ مَا تَرَكُوا مِنْهُ»، فَأَرَاهَا قَرِيبًا مِنْ سَبْعَةِ أَذْرُعٍ، هَذَا حَدِيثُ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدٍ، وَزَادَ عَلَيْهِ الْوَلِيدُ بْنُ عَطَاءٍ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَلَجَعَلْتُ لَهَا بَابَيْنِ مَوْضُوعَيْنِ فِي الْأَرْضِ شَرْقِيًّا وَغَرْبِيًّا، وَهَلْ تَدْرِينَ لِمَ كَانَ قَوْمُكِ رَفَعُوا بَابَهَا؟»، قَالَتْ: قُلْتُ: لَا، قَالَ: «تَعَزُّزًا أَنْ لَا يَدْخُلَهَا إِلَّا مَنْ أَرَادُوا، فَكَانَ الرَّجُلُ إِذَا هُوَ أَرَادَ أَنْ يَدْخُلَهَا يَدَعُونَهُ يَرْتَقِي، حَتَّى إِذَا كَادَ أَنْ يَدْخُلَ دَفَعُوهُ فَسَقَطَ»، قَالَ عَبْدُ الْمَلِكِ، لِلْحَارِثِ: أَنْتَ سَمِعْتَهَا تَقُولُ هَذَا؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَنَكَتَ سَاعَةً بِعَصَاهُ، ثُمَّ قَالَ: وَدِدْتُ أَنِّي تَرَكْتُهُ وَمَا تَحَمَّلَ

– وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، ح وحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، كِلَاهُمَا عَنِ ابْنِ جُرَيْجٍ، بِهَذَا الْإِسْنَادِ. مِثْلَ حَدِيثِ ابْنِ بَكْرٍ


Tamil-2590
Shamila-1333
JawamiulKalim-2380




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.