தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2632

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 82

மக்காவும், அதன் வேட்டைப் பிராணிகளும், புற்பூண்டுகளும், மரங்களும், அங்கு கண்டெடுக்கப்படும் பொருளும் -அதை அறிவிப்புச் செய்பவருக்குத் தவிர- என்றென்றும் புனிதமானவை ஆகும்.

 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நிகழ்ந்த நாளில், “இனி ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் போருக்குச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். மேலும் (அதே) மக்காவெற்றி நாளில், “(மக்களே!) அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் இந்த நகரத்தை அவன் புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதமாக்கிய காரணத்தால் இது மறுமை நாள் வரை புனிதமானதாகவே இருக்கும். மேலும், எனக்கு முன்னர் (வாழ்ந்த) யாருக்கும் இங்கு போர் புரிய அனுமதி தரப்படவில்லை. எனக்கும் கூட (இந்த மக்காவெற்றி நாளில்) பகலில் சிறிது நேரம் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி வழங்கப்பட்டது. அல்லாஹ் இந்த நகரத்தை புனிதமாக்கியுள்ள காரணத்தால் இது மறுமை நாள்வரை புனிதமானதாகவே திகழும். இங்கு அதன் முட்கள் வெட்டப்படக் கூடாது. அதன் வேட்டைப் பிராணி விரட்டப்படக்கூடாது. இங்கே கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்(து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைப் பறிக்கக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே (என் தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! “இத்கிர்” புல்லைத் தவிரவா? ஏனெனில், அது அவர்களுடைய உலோகத் தொழிலாளர்களுக்கு (உலை மூட்டவு)ம், அவர்களுடைய வீடுக(ளின் மேல்கூரை)களுக்கும் பயன்படுகிறதே?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ஆம்) “இத்கிரை”த் தவிர” என்று விடையளித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை. “போர் புரிய” என்பதற்குப் பகரமாக “உயிர்ச் சேதம் விளைவிக்க” என்று காணப்படுகிறது. (“இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது” என்பதைக் குறிக்க) “லா யல்தகிது லுக்தத்தஹு இல்லா மன் அர்ரஃபஹா” எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது.

Book : 15

(முஸ்லிம்: 2632)

82 – بَابُ تَحْرِيمِ مَكَّةَ وَصَيْدِهَا وَخَلَاهَا وَشَجَرِهَا وَلُقَطَتِهَا، إِلَّا لِمُنْشِدٍ عَلَى الدَّوَامِ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ، أَخْبَرَنَا جَرِيرٌ ، عَنْ مَنْصُورٍ ، عَنْ مُجَاهِدٍ ، عَنْ طَاوُسٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ فَتْحِ مَكَّةَ : لَا هِجْرَةَ ، وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا ، وَقَالَ : يَوْمَ الْفَتْحِ فَتْحِ مَكَّةَ : إِنَّ هَذَا الْبَلَدَ حَرَّمَهُ اللهُ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ، فَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ، وَإِنَّهُ لَمْ يَحِلَّ الْقِتَالُ فِيهِ لِأَحَدٍ قَبْلِي ، وَلَمْ يَحِلَّ لِي إِلَّا سَاعَةً مِنْ نَهَارٍ ، فَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ، لَا يُعْضَدُ شَوْكُهُ ، وَلَا يُنَفَّرُ صَيْدُهُ ، وَلَا يَلْتَقِطُ إِلَّا مَنْ عَرَّفَهَا ، وَلَا يُخْتَلَى خَلَاهَا ، فَقَالَ الْعَبَّاسُ : يَا رَسُولَ اللهِ ، إِلَّا الْإِذْخِرَ ، فَإِنَّهُ لِقَيْنِهِمْ وَلِبُيُوتِهِمْ ، فَقَالَ : إِلَّا الْإِذْخِرَ

– وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا مُفَضَّلٌ، عَنْ مَنْصُورٍ، فِي هَذَا الْإِسْنَادِ، بِمِثْلِهِ، وَلَمْ يَذْكُرْ: «يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ»، وَقَالَ: بَدَلَ الْقِتَالِ: «الْقَتْلَ» وَقَالَ: «لَا يَلْتَقِطُ لُقَطَتَهُ إِلَّا مَنْ عَرَّفَهَا»


Tamil-2632
Shamila-1353
JawamiulKalim-2420




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.