தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3649

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் பின் ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (சிரியாவிலிருந்த) முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களைச் சந்திக்க ஒரு தூதுக் குழுவில் சென்றோம். எங்களிடையே அபூஹுரைரா (ரலி) அவர்களும் இருந்தார்கள்.

எங்களில் ஒவ்வொருவரும் தம் சக பயணிகளுக்கு ஒரு நாளைக்கு ஒருவர் என்ற முறையில் உணவு தயாரித்தோம். என்னுடைய முறைநாள் வந்தபோது நான், “அபூஹுரைரா (ரலி) அவர்களே! இன்று எனது முறைநாள். மக்கள் (எனது) இருப்பிடத்திற்கு வந்துவிட்டனர். ஆனால், உணவு இன்னும் வந்து சேரவில்லை. உணவு வரும்வரை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி(ய ஹதீஸ்) கூறினால் நன்றாயிருக்குமே!” என்று கூறினேன். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

மக்கா வெற்றி நாளில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை வலப் பக்க அணியினருக்குத் தளபதியாக நியமித்தார்கள்; ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை இடப் பக்க அணியினருக்கும் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை (நிராயுதபாணிகளாயிருந்த) காலாட்படையினர் மற்றும் பள்ளத்தாக்கின் மையப் பகுதியில் இருந்தோர் ஆகியோருக்கும் தளபதியாக நியமித்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூஹுரைரா! அன்சாரிகளை எனக்காக அழையுங்கள்!” என்று கூறினார்கள். அவ்வாறே நான் அவர்களை அழைத்தேன். அப்போது அன்சாரிகள் விரைந்து வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அன்சாரி சமுதாயத்தாரே! (எதிரிக்) குறைஷியரின் பல்வேறு குலத்தாரை நீங்கள் காண்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “ஆம்” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது கையை வெளியிலெடுத்து வலக் கையை இடக் கையின் மீது வைத்து சைகை செய்து காட்டியபடி, “நாளைய தினம் (களத்தில்) அவர்களை நீங்கள் சந்தித்தால் அவர்களை அறுவடை செய்துவிடுங்கள்” என்று கூறினார்கள். பிறகு, “ஸஃபாவில் சந்திப்போம்” என்று கூறி(விட்டுச் செல்லலா)னார்கள். அவ்வாறே முஸ்லிம்கள் கண்ணில் தென்பட்ட (எதிரிகள்) எவரையும் (ஒரேயடியாகத்) தூங்க வைக்காமல் விடவில்லை.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸஃபா மலைமீது ஏறினார்கள். அன்சாரிகள் வந்து ஸஃபா மலையைச் சுற்றி நின்றுகொண்டனர். அப்போது அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் கூட்டத்தார் முற்றாகத் துடைத்தெறியப் படுகின்றனர். இன்றைய தினத்திற்குப் பிறகு குறைஷியர் எவரும் இருக்கமாட்டார்கள்” என்று கூறினார்கள்.

அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் அபூசுஃப்யானின் இல்லத்தினுள் நுழைந்துகொள்கிறாரோ அவர் அபயம் பெற்றவராவார். யார் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டாரோ அவரும் அபயம் பெற்றவராவார். யார் தமது வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டாரோ அவரும் அபயம் பெற்றவராவார்”என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகள், “இம்மனிதரை (நபி (ஸல்) அவர்களை) குலப் பாசமும் ஊர்ப் பற்றும் பற்றிக்கொண்டுவிட்டன” என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி (வஹீ) வந்தது. (அன்சாரிகள் தம்மைப் பற்றிப் பேசிக் கொண்டதை நபியவர்கள் அறிந்துகொண்டார்கள்). பிறகு “இம்மனிதரை குலப்பாசமும் ஊர்ப்பற்றும் பற்றிக்கொண்டுவிட்டன” என்று கூறினீர்களா? நன்றாக அறிந்துகொள்ளுங்கள்: அப்படியானால் எனது (முஹம்மத் – புகழப்பட்டவர் எனும்) பெயருக்கு என்ன அர்த்தமிருக்க முடியும்?” என்று (மூன்று முறை) கூறிவிட்டு, “நான் அல்லாஹ்வின் அடிமையும் அவனுடைய தூதருமான முஹம்மத் ஆவேன். நான் அல்லாஹ்வின் பக்கமும் உங்களிடமும் (நாடு துறந்து) ஹிஜ்ரத் வந்தேன். இனி என் வாழ்வு உங்கள் வாழ்வோடுதான்; என் இறப்பு உங்கள் இறப்போடுதான்” என்று கூறினார்கள்.

அதற்கு அன்சாரிகள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் கொண்ட பேராசையின் காரணத்தாலேயே நாங்கள் அவ்வாறு சொன்னோம்” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்படியானால், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களது சொல்லை ஏற்று, நீங்கள் கூறிய காரணத்தையும் ஏற்கின்றனர்” என்று கூறினார்கள்.

Book : 32

(முஸ்லிம்: 3649)

حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ رَبَاحٍ، قَالَ

وَفَدْنَا إِلَى مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، وَفِينَا أَبُو هُرَيْرَةَ، فَكَانَ كُلُّ رَجُلٍ مِنَّا يَصْنَعُ طَعَامًا يَوْمًا لِأَصْحَابِهِ، فَكَانَتْ نَوْبَتِي، فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ، الْيَوْمُ نَوْبَتِي، فَجَاءُوا إِلَى الْمَنْزِلِ وَلَمْ يُدْرِكْ طَعَامُنَا، فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ، لَوْ حَدَّثْتَنَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى يُدْرِكَ طَعَامُنَا، فَقَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ، فَجَعَلَ خَالِدَ بْنَ الْوَلِيدِ عَلَى الْمُجَنِّبَةِ الْيُمْنَى، وَجَعَلَ الزُّبَيْرَ عَلَى الْمُجَنِّبَةِ الْيُسْرَى، وَجَعَلَ أَبَا عُبَيْدَةَ عَلَى الْبَيَاذِقَةِ، وَبَطْنِ الْوَادِي، فَقَالَ: «يَا أَبَا هُرَيْرَةَ، ادْعُ لِي الْأَنْصَارَ»، فَدَعَوْتُهُمْ، فَجَاءُوا يُهَرْوِلُونَ، فَقَالَ: «يَا مَعْشَرَ الْأَنْصَارِ، هَلْ تَرَوْنَ أَوْبَاشَ قُرَيْشٍ؟» قَالُوا: نَعَمْ، قَالَ: «انْظُرُوا، إِذَا لَقِيتُمُوهُمْ غَدًا أَنْ تَحْصُدُوهُمْ حَصْدًا»، وَأَخْفَى بِيَدِهِ وَوَضَعَ يَمِينَهُ عَلَى شِمَالِهِ، وَقَالَ: «مَوْعِدُكُمُ الصَّفَا»، قَالَ: فَمَا أَشْرَفَ يَوْمَئِذٍ لَهُمْ أَحَدٌ إِلَّا أَنَامُوهُ، قَالَ: وَصَعِدَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّفَا، وَجَاءَتِ الْأَنْصَارُ فَأَطَافُوا بِالصَّفَا، فَجَاءَ أَبُو سُفْيَانَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أُبِيدَتْ خَضْرَاءُ قُرَيْشٍ لَا قُرَيْشَ بَعْدَ الْيَوْمِ، قَالَ أَبُو سُفْيَانَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ دَخَلَ دَارَ أَبِي سُفْيَانَ فَهُوَ آمِنٌ، وَمَنْ أَلْقَى السِّلَاحَ فَهُوَ آمِنٌ، وَمَنْ أَغْلَقَ بَابهُ فَهُوَ آمِنٌ»، فَقَالَتِ الْأَنْصَارُ: أَمَّا الرَّجُلُ فَقَدْ أَخَذَتْهُ رَأْفَةٌ بِعَشِيرَتِهِ، وَرَغْبَةٌ فِي قَرْيَتِهِ، وَنَزَلَ الْوَحْيُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” قُلْتُمْ: أَمَّا الرَّجُلُ فَقَدْ أَخَذَتْهُ رَأْفَةٌ بِعَشِيرَتِهِ، وَرَغْبَةٌ فِي قَرْيَتِهِ، أَلَا فَمَا اسْمِي إِذًا؟ – ثَلَاثَ مَرَّاتٍ – أَنَا مُحَمَّدٌ عَبْدُ اللهِ وَرَسُولُهُ، هَاجَرْتُ إِلَى اللهِ وَإِلَيْكُمْ، فَالْمَحْيَا مَحْيَاكُمْ، وَالْمَمَاتُ مَمَاتُكُمْ ” قَالُوا: وَاللهِ، مَا قُلْنَا إِلَّا ضَنًّا بِاللهِ وَرَسُولِهِ، قَالَ: «فَإِنَّ اللهَ وَرَسُولَهُ يُصَدِّقَانِكُمْ وَيَعْذِرَانِكُمْ»


Tamil-3649
Shamila-1780
JawamiulKalim-3338




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.