நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போர் நாளைவிடக் கடுமையானதொரு நாளைத் தாங்கள் சந்தித்ததுண்டா?” என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உன் சமுதாயத்தாரால் (நிறையத் துன்பங்களைச்) சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது, (தாயிஃபில் உள்ள) “அகபா” நாளில் சந்தித்த துன்பமேயாகும்.
ஏனெனில், அன்று நான் என்னை (இறைவனின் தூதராக) ஏற்றுக்கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவரிடம் எடுத்துரைத்தேன். எனக்கு இசைவான பதிலை அவர் அளிக்கவில்லை.
ஆகவே, நான் கவலையோடு எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். “கர்னுஸ் ஸஆலிப்” எனும் இடத்தை அடையும்வரை நான் சுயஉணர்வுக்குத் திரும்பவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது அங்கே (வானத்தில்) ஒரு மேகம் என்மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது, அதில் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள்.
அவர்கள் என்னை அழைத்து, “உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் செவியுற்றான். அவர்களை நீங்கள் விரும்பியபடி (தண்டிப்பதற்கு) ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள்.
உடனே மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து, எனக்கு முகமன் (சலாம்) கூறினார். பிறகு “முஹம்மதே! உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் பேசியதை அல்லாஹ் கேட்டான். நான் மலைகளுக்கான வானவர். (இந்த மக்கள் விஷயத்தில்) நீங்கள் விரும்பியபடி கட்டளையிடுவதற்காக உங்களிடம் என்னை அல்லாஹ் அனுப்பியுள்ளான். உங்கள் விருப்பம் என்ன? (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள்மீது நான் புரட்டிப் போட்டுவிட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)” என்று கூறினார்.
உடனே நான் அவரிடம், “வேண்டாம். இந்த (நகரத்து) மக்களின் வழித்தோன்றல்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வழிபடுவோரை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களைத் தண்டிக்க வேண்டாம்)” என்று கூறிவிட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 32
(முஸ்லிம்: 3674)وحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، وَعَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ، وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ، قَالُوا: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَتْهُ
أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللهِ، هَلْ أَتَى عَلَيْكَ يَوْمٌ كَانَ أَشَدَّ مِنْ يَوْمِ أُحُدٍ؟ فَقَالَ: ” لَقَدْ لَقِيتُ مِنْ قَوْمِكِ وَكَانَ أَشَدَّ مَا لَقِيتُ مِنْهُمْ يَوْمَ الْعَقَبَةِ، إِذْ عَرَضْتُ نَفْسِي عَلَى ابْنِ عَبْدِ يَالِيلَ بْنِ عَبْدِ كُلَالٍ فَلَمْ يُجِبْنِي إِلَى مَا أَرَدْتُ، فَانْطَلَقْتُ وَأَنَا مَهْمُومٌ عَلَى وَجْهِي، فَلَمْ أَسْتَفِقْ إِلَّا بِقَرْنِ الثَّعَالِبِ، فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا أَنَا بِسَحَابَةٍ قَدْ أَظَلَّتْنِي فَنَظَرْتُ فَإِذَا فِيهَا جِبْرِيلُ، فَنَادَانِي، فَقَالَ: إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ، وَمَا رُدُّوا عَلَيْكَ، وَقَدْ بَعَثَ إِلَيْكَ مَلَكَ الْجِبَالِ لِتَأْمُرَهُ بِمَا شِئْتَ فِيهِمْ “، قَالَ: ” فَنَادَانِي مَلَكُ الْجِبَالِ وَسَلَّمَ عَلَيَّ، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ، إِنَّ اللهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ، وَأَنَا مَلَكُ الْجِبَالِ وَقَدْ بَعَثَنِي رَبُّكَ إِلَيْكَ لِتَأْمُرَنِي بِأَمْرِكَ، فَمَا شِئْتَ، إِنْ شِئْتَ أَنْ أُطْبِقَ عَلَيْهِمُ الْأَخْشَبَيْنِ “، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَلْ أَرْجُو أَنْ يُخْرِجَ اللهُ مِنْ أَصْلَابِهِمْ مَنْ يَعْبُدُ اللهَ وَحْدَهُ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا»
Tamil-3674
Shamila-1795
JawamiulKalim-3358
சமீப விமர்சனங்கள்