தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3764

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13

(அரசியல்) குழப்பங்கள் தோன்றும்போதும் மற்ற சமயங்களிலும் முஸ்லிம்களின் கூட்டமைப்போடு (ஜமாஅத்) சேர்ந்திருப்பது கடமையாகும்; தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பதும் கூட்டமைப்பிலிருந்து விலகுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும்.

 ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சியதே காரணம்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும் தீமையிலும் மூழ்கிக்கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம் (இருக்கிறது)” என்று பதிலளித்தார்கள்.

நான், “அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்” என்று பதிலளித்தார்கள். நான், “அந்தக் கலங்கலான நிலை என்ன?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “ஒரு கூட்டத்தார் எனது வழிமுறை (சுன்னா) அல்லாததைக் கடைப்பிடிப்பார்கள். எனது நேர்வழியல்லாததைக் கொண்டு வழிகாட்டுவார்கள். அவர்களில் நீ நன்மையையும் காண்பாய்; தீமையையும் காண்பாய்” என்று பதிலளித்தார்கள்.

நான், “அந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். நரகத்தின் வாசல்களில் நின்றுகொண்டு (அங்கு வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவரை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்)களை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் நம் (அரபு) இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். நம் மொழிகளையே பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! இத்தகைய கால கட்டத்தை நான் அடைந்தால் என்ன செய்ய வேண்டும் என எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அதன் ஆட்சியாளரையும் பற்றிக்கொள்” என்று பதிலளித்தார்கள்.

அதற்கு நான், “அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஆட்சியாளரோ இல்லை (என்ற நிலையில் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது)?” என்று கேட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கிவிடு. (ஒதுங்கி வாழும் சூழலுக்கு முட்டுக்கட்டையாகப் பல்வேறு சிரமங்கள் நேர்ந்தாலும்) ஒரு மரத்தின் வேர் பாகத்தைப் பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, இறுதியில் அதே நிலையில் நீ இருக்கவே இறப்பு உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் நீ சேர்ந்துவிடாதே)” என்று விடையளித்தார்கள்.

Book : 33

(முஸ்லிம்: 3764)

13 – بَابُ الْأَمْرِ بِلُزُومِ الْجَمَاعَةِ عِنْدَ ظُهُورِ الْفِتَنِ وتحذير الدعاة إلى الكفر

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، حَدَّثَنِي بُسْرُ بْنُ عُبَيْدِ اللهِ الْحَضْرَمِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا إِدْرِيسَ الْخَوْلَانِيَّ، يَقُولُ: سَمِعْتُ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ، يَقُولُ

كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَيْرِ، وَكُنْتُ أَسْأَلُهُ عَنِ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ، فَجَاءَنَا اللهُ بِهَذَا الْخَيْرِ، فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ شَرٌّ؟ قَالَ: «نَعَمْ»، فَقُلْتُ: هَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ؟ قَالَ: «نَعَمْ، وَفِيهِ دَخَنٌ»، قُلْتُ: وَمَا دَخَنُهُ؟ قَالَ: «قَوْمٌ يَسْتَنُّونَ بِغَيْرِ سُنَّتِي، وَيَهْدُونَ بِغَيْرِ هَدْيِي، تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ»، فَقُلْتُ: هَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ؟ قَالَ: «نَعَمْ، دُعَاةٌ عَلَى أَبْوَابِ جَهَنَّمَ مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا»، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، صِفْهُمْ لَنَا، قَالَ: «نَعَمْ، قَوْمٌ مِنْ جِلْدَتِنَا، وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا»، قُلْتُ: يَا رَسُولَ اللهِ، فَمَا تَرَى إِنْ أَدْرَكَنِي ذَلِكَ؟ قَالَ: «تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ»، فَقُلْتُ: فَإِنْ لَمْ تَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلَا إِمَامٌ؟ قَالَ: «فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا، وَلَوْ أَنْ تَعَضَّ عَلَى أَصْلِ شَجَرَةٍ حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ»


Tamil-3764
Shamila-1847
JawamiulKalim-3440




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.