தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4351

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

அனுமதி கோருதல்.

 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மதீனாவில் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் பதற்றமடைந்தவர்களாக எங்களிடம் வந்தார்கள். நாங்கள் (அவரிடம்) “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “(கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் என்னைத் தம்மிடம் வரச் சொல்லி ஆளனுப்பியிருந்தார்கள்.

நான் அவர்களது வீட்டுவாசலுக்குச் சென்று (வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) மூன்று முறை முகமன் (சலாம்) கூறினேன். ஆனால், அவர்கள் எனக்குப் பதில் (சலாம்) சொல்லவில்லை. ஆகவே, நான் திரும்பிவிட்டேன்.

பிறகு அவர்கள் (என்னிடம்) “நீங்கள் என்னிடம் வராததற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் தங்களிடம் வந்து தங்கள் வீட்டுவாசலில் நின்று, மூன்று முறை முகமன் (சலாம்) கூறினேன். எனக்கு யாரும் பதில் சலாம் சொல்லவில்லை. ஆகவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும்” என்று கூறியுள்ளார்கள்” என்றேன்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இ(வ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் உங்களைத் தண்டிக்க வேண்டியதிருக்கும்” என்று கூறினார்கள். (இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றவர் உங்களில் யாரேனும் உள்ளாரா என்று கேட்டார்கள்.)

அதற்கு (அங்கிருந்த) உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “மக்களில் மிகச் சிறியவரே இவருடன் (இப்போது சாட்சியம் சொல்ல) எழுவார்” என்று சொன்னார்கள். நான் (அபூசயீத்), “நான்தான் மக்களிலேயே மிகச் சிறியவன்” என்று சொன்னேன். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் “இவரை அழைத்துச் செல்வீராக!” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “எனவே, நான் அபூ மூசா (ரலி) அவர்களுடன் எழுந்து, உமர் (ரலி) அவர்களிடம் சென்று சாட்சியமளித்தேன்” என்று அபூசயீத் (ரலி) கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

Book : 38

(முஸ்லிம்: 4351)

7 – بَابُ الِاسْتِئْذَانِ

حَدَّثَنِي عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ بُكَيْرٍ النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا وَاللهِ يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ

كُنْتُ جَالِسًا بِالْمَدِينَةِ فِي مَجْلِسِ الْأَنْصَارِ، فَأَتَانَا أَبُو مُوسَى فَزِعًا أَوْ مَذْعُورًا قُلْنَا: مَا شَأْنُكَ؟ قَالَ: إِنَّ عُمَرَ أَرْسَلَ إِلَيَّ أَنْ آتِيَهُ، فَأَتَيْتُ بَابَهُ فَسَلَّمْتُ ثَلَاثًا فَلَمْ يَرُدَّ عَلَيَّ فَرَجَعْتُ فَقَالَ: مَا مَنَعَكَ أَنْ تَأْتِيَنَا؟ فَقُلْتُ: إِنِّي أَتَيْتُكَ، فَسَلَّمْتُ عَلَى بَابِكَ ثَلَاثًا، فَلَمْ يَرُدُّوا عَلَيَّ، فَرَجَعْتُ، وَقَدْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلَاثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ، فَلْيَرْجِعْ» فَقَالَ عُمَرُ: أَقِمْ عَلَيْهِ الْبَيِّنَةَ، وَإِلَّا أَوْجَعْتُكَ. فَقَالَ: أُبَيُّ بْنُ كَعْبٍ: لَا يَقُومُ مَعَهُ إِلَّا أَصْغَرُ الْقَوْمِ، قَالَ: أَبُو سَعِيدٍ: قُلْتُ أَنَا أَصْغَرُ الْقَوْمِ، قَالَ: فَاذْهَبْ بِهِ

– حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، بِهَذَا الْإِسْنَادِ وَزَادَ ابْنُ أَبِي عُمَرَ، فِي حَدِيثِهِ قَالَ أَبُو سَعِيدٍ: فَقُمْتُ مَعَهُ فَذَهَبْتُ إِلَى عُمَرَ فَشَهِدْتُ


Tamil-4351
Shamila-2153
JawamiulKalim-4013




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.