தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4975

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 58

ஸகீஃப் குலத்தின் பெரும் பொய்யன் மற்றும் நாசகாரன் ஆகியோரைப் பற்றிய குறிப்பு.

 அபூநவ்ஃபல் முஸ்லிம் பின் அபீஅக்ரப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின் படையால் கொல்லப்பட்டு, பேரீச்ச மரத்தில் சிலுவையிலேற்றித் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்த) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது உடலை நான் மதீனா(விலிருந்து மக்கா வரும் வழியிலுள்ள) “அகபா” பள்ளத்தாக்கில் கண்டேன்.

அப்போது குறைஷியரும் மற்ற மக்களும் அவரது உடலை(ப் பார்த்துவிட்டு)க் கடந்து செல்லலானார்கள். இறுதியில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வந்து அவர்களுக்கு அருகில் நின்று, “அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும்; அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும்; அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் (ஆட்சியாளருக்கெதிரான போராட்டத்தில்) ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்துவந்தேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்து வந்தேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்துவந்தேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிந்தவரை நீர் அதிகமாக நோன்பு நோற்பவராகவும் அதிகமாக நின்று வழிபடக்கூடியவராகவும் உறவுகளை அரவணைக்கக்கூடியவராகவும் இருந்தீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! சமுதாயத்தில் நீர் மிகவும் தீயவர் என்றால், (இன்றைய) மக்களில் வேறு யார் நல்லவர்கள்?” என்று கூறிவிட்டுப் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (இப்னுஸ் ஸுபைருக்கு அருகில்) நின்றதைப் பற்றியும் அவர்கள் பேசியதைப் பற்றியும் ஹஜ்ஜாஜுக்குச் செய்தி எட்டியபோது, உடனே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரின் உடலை நோக்கி ஆளனுப்பினார்.

அவரது உடல் மரத்திலிருந்து இறக்கப்பட்டு, யூதர்களின் மையவாடியில் போடப்பட்டது. பிறகு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் தாயார் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களைத் தம்மிடம் வரும்படி ஹஜ்ஜாஜ் ஆளனுப்பினார். ஆனால், ஹஜ்ஜாஜிடம் வர அஸ்மா (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார்கள். மீண்டும் தம் தூதரை அனுப்பி, “ஒன்று நீயாக வருகிறாயா, அல்லது உமது சடையைப் பிடித்து இழுத்துவரக்கூடியவரை உன்னிடம் நான் அனுப்பட்டுமா?” என்று ஹஜ்ஜாஜ் கேட்டார்.

அப்போதும் அஸ்மா (ரலி) அவர்கள் வர மறுத்ததோடல்லாமல், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனது சடையைப் பிடித்து என்னை இழுத்துக் கொண்டுவரக்கூடியவரை நீர் அனுப்பாத வரையில் நான் உம்மிடம் வரப்போவதில்லை” என்று கூறிவிட்டார்கள்.

உடனே ஹஜ்ஜாஜ், “என் செருப்புகள் எங்கே?” என்று கூறி அதைப் பெற்று (அணிந்து) கொண்டு, பிறகு (இறுமாப்போடு) விரைவாக நடந்து அஸ்மா (ரலி) அவர்களிடம் வந்தார். பிறகு “அல்லாஹ்வின் விரோதியை (உமது மகனை) என்ன செய்தேன் பார்த்தாயா?” என்று கேட்டார்.

அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீ (என் மகன்) அப்துல்லாஹ்வின் இம்மையைச் சீரழித்துவிட்டாய்; அவரோ உன் மறுமையைச் சீரழித்துவிட்டார் என்றே நான் கருதுகிறேன். நீ அவரை “இரு கச்சுடையாளின் புதல்வரே!”என (நகைப்போடு) அழைப்பாய் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. (ஆம்) அல்லாஹ்வின் மீதாணையாக! இரு கச்சுடையாள் நான்தான். (மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உணவையும், (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் உணவையும் அவ்விரு கச்சுகளில் ஒன்றால் கட்டி எடுத்துச்சென்றேன். மற்றொன்று ஒரு பெண்ணிடம் அவசியம் இருக்க வேண்டிய கச்சாகும்.

நினைவிற்கொள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “ஸகீஃப் குலத்தாரில் மகா பொய்யன் ஒருவனும் நாசகாரன் ஒருவனும் இருப்பார்கள்” என்று கூறினார்கள். மகா பொய்யனை (முக்தார் பின் அபீஉபைத்) நாங்கள் பார்த்துவிட்டோம். அந்த நாசகாரன் நீதான் என்றே நான் கருதுகிறேன்” என்று கூறினார். உடனே ஹஜ்ஜாஜ் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்; அஸ்மா (ரலி) அவர்களுக்குப் பதிலேதும் சொல்லவில்லை.

Book : 44

(முஸ்லிம்: 4975)

58 – بَابُ ذِكْرِ كَذَّابِ ثَقِيفٍ وَمُبِيرِهَا

حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ يَعْنِي ابْنَ إِسْحَاقَ الْحَضْرَمِيَّ، أَخْبَرَنَا الْأَسْوَدُ بْنُ شَيْبَانَ، عَنْ أَبِي نَوْفَلٍ

رَأَيْتُ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ عَلَى عَقَبَةِ الْمَدِينَةِ، قَالَ: فَجَعَلَتْ قُرَيْشٌ تَمُرُّ عَلَيْهِ، وَالنَّاسُ حَتَّى مَرَّ عَلَيْهِ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ، فَوَقَفَ عَلَيْهِ فَقَالَ: السَّلَامُ عَلَيْكَ، أَبَا خُبَيْبٍ السَّلَامُ عَلَيْكَ أَبَا خُبَيْبٍ السَّلَامُ عَلَيْكَ أَبَا خُبَيْبٍ أَمَا وَاللهِ لَقَدْ كُنْتُ أَنْهَاكَ عَنْ هَذَا، أَمَا وَاللهِ لَقَدْ كُنْتُ أَنْهَاكَ عَنْ هَذَا، أَمَا وَاللهِ لَقَدْ كُنْتُ أَنْهَاكَ عَنْ هَذَا، أَمَا وَاللهِ إِنْ كُنْتَ، مَا عَلِمْتُ، صَوَّامًا، قَوَّامًا، وَصُولًا لِلرَّحِمِ، أَمَا وَاللهِ لَأُمَّةٌ أَنْتَ أَشَرُّهَا لَأُمَّةٌ خَيْرٌ، ثُمَّ نَفَذَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ، فَبَلَغَ الْحَجَّاجَ مَوْقِفُ عَبْدِ اللهِ وَقَوْلُهُ، فَأَرْسَلَ إِلَيْهِ، فَأُنْزِلَ عَنْ جِذْعِهِ، فَأُلْقِيَ فِي قُبُورِ الْيَهُودِ، ثُمَّ أَرْسَلَ إِلَى أُمِّهِ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، فَأَبَتْ أَنْ تَأْتِيَهُ، فَأَعَادَ عَلَيْهَا الرَّسُولَ: لَتَأْتِيَنِّي أَوْ لَأَبْعَثَنَّ إِلَيْكِ مَنْ يَسْحَبُكِ بِقُرُونِكِ، قَالَ: فَأَبَتْ وَقَالَتْ: وَاللهِ لَا آتِيكَ حَتَّى تَبْعَثَ إِلَيَّ مَنْ يَسْحَبُنِي بِقُرُونِي، قَالَ: فَقَالَ: أَرُونِي سِبْتَيَّ فَأَخَذَ نَعْلَيْهِ، ثُمَّ انْطَلَقَ يَتَوَذَّفُ، حَتَّى دَخَلَ عَلَيْهَا، فَقَالَ: كَيْفَ رَأَيْتِنِي صَنَعْتُ بِعَدُوِّ اللهِ؟ قَالَتْ: رَأَيْتُكَ أَفْسَدْتَ عَلَيْهِ دُنْيَاهُ، وَأَفْسَدَ عَلَيْكَ آخِرَتَكَ، بَلَغَنِي أَنَّكَ تَقُولُ لَهُ: يَا ابْنَ ذَاتِ النِّطَاقَيْنِ أَنَا، وَاللهِ ذَاتُ النِّطَاقَيْنِ، أَمَّا أَحَدُهُمَا فَكُنْتُ أَرْفَعُ بِهِ طَعَامَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَطَعَامَ أَبِي بَكْرٍ مِنَ الدَّوَابِّ، وَأَمَّا الْآخَرُ فَنِطَاقُ الْمَرْأَةِ الَّتِي لَا تَسْتَغْنِي عَنْهُ، أَمَا إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنَا، «أَنَّ فِي ثَقِيفٍ كَذَّابًا وَمُبِيرًا» فَأَمَّا الْكَذَّابُ فَرَأَيْنَاهُ، وَأَمَّا الْمُبِيرُ فَلَا إِخَالُكَ إِلَّا إِيَّاهُ، قَالَ: فَقَامَ عَنْهَا وَلَمْ يُرَاجِعْهَا


Tamil-4975
Shamila-2545
JawamiulKalim-4623




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.