தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5532

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 உஸ்மான் அஷ்ஷஹ்ஹாம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் ஃபர்கத் அஸ்ஸபகீ (ரஹ்) அவர்களும் முஸ்லிம் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்களிடம் அவர்களது வசிப்பிடத்திற்குச் சென்றோம். அவர்களிடம் நாங்கள் சென்றடைந்து, “குழப்பங்கள் தொடர்பாக தாங்கள் தங்கள் தந்தை (அபூபக்ரா-ரலி) அறிவித்த ஹதீஸ் எதையேனும் செவியுற்றீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: “ஆம்” (என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதைக் கேட்டேன்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அறிந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு குழப்பம் தோன்றும். அதற்கிடையே உட்கார்ந்து கொண்டிருப்பவர் (அதற்காக) எழுந்து நடப்பவரை விடவும், அதற்காக எழுந்து நடப்பவர் அதை நோக்கி ஓடுபவரைவிடவும் சிறந்தவர் ஆவார். கவனத்தில் கொள்ளுங்கள்: அந்தக் குழப்பம் நிகழ்ந்துவிட்டால் தம்மிடம் ஒட்டகங்கள் வைத்திருப்பவர், அவற்றிடம் சென்றடையட்டும். தம்மிடம் ஆடுகள் வைத்திருப்பவர், அவற்றிடம் சென்றடையட்டும். தம்மிடம் நிலம் வைத்திருப்பவர் தமது நிலத்திற்குச் சென்றுவிடட்டும்” என்று கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! தம்மிடம் ஒட்டகமோ ஆடோ நிலமோ இல்லாதவர் என்ன செய்யவேண்டும் எனக் கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் தமது வாள்முனையை ஒரு கல்லால் அடித்து முறித்துவிட்டு,(சண்டையிலிருந்து) தம்மைத் தற்காத்துக்கொள்ள முடிந்தால் அவர் தற்காத்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள். (பின்னர்) “இறைவா! (நீ தெரிவிக்கச் சொன்னவற்றை) நான் தெரிவித்துவிட்டேனா? இறைவா! நான் தெரிவித்துவிட்டேனா? இறைவா! நான் தெரிவித்து விட்டேனா?” என்று (மூன்று முறை) கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! (குழப்பமான காலகட்டத்தில்) என்னைக் கட்டாயப்படுத்தி இரு அணிகளில் ஒன்றுக்கு, அல்லது இரு குழுக்களில் ஒன்றுக்கு நான் இழுத்துச் செல்லப்பட்டு, என்னை ஒரு மனிதர் தமது வாளால் வெட்டிவிட்டால், அல்லது எங்கிருந்தோ வந்த மர்ம அம்பு என்னைக் கொன்றுவிட்டால் (எனது நிலை) என்ன கூறுங்கள்” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அ(வ்வாறு செய்த)வர், தமது பாவத்துடனும் உமது பாவத்துடனும் திரும்பிச் சென்று, நரகவாசிகளில் ஒருவராகிவிடுவார்” என்று சொன்னார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தம்மைத் தற்காத்துக்கொள்ள முடிந்தால் அவர் தம்மைத் தற்காத்துக்கொள்ளட்டும்” என்பதோடு ஹதீஸ் நிறைவடைகிறது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம்பெற வில்லை. இப்னு அபீஅதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (மேற்கண்ட ஹதீஸில் உள்ள விவரங்கள்) முழுமையாக இடம்பெற்றுள்ளன.

Book : 52

(முஸ்லிம்: 5532)

حَدَّثَنِي أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا عُثْمَانُ الشَّحَّامُ، قَالَ: انْطَلَقْتُ أَنَا وَفَرْقَدٌ السَّبَخِيُّ، إِلَى مُسْلِمِ بْنِ أَبِي بَكْرَةَ وَهُوَ فِي أَرْضِهِ، فَدَخَلْنَا عَلَيْهِ فَقُلْنَا: هَلْ سَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ فِي الْفِتَنِ حَدِيثًا؟ قَالَ: نَعَمْ، سَمِعْتُ أَبَا بَكْرَةَ يُحَدِّثُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

إِنَّهَا سَتَكُونُ فِتَنٌ: أَلَا ثُمَّ تَكُونُ فِتْنَةٌ الْقَاعِدُ فِيهَا خَيْرٌ مِنَ الْمَاشِي فِيهَا، وَالْمَاشِي فِيهَا خَيْرٌ مِنَ السَّاعِي إِلَيْهَا. أَلَا، فَإِذَا نَزَلَتْ أَوْ وَقَعَتْ، فَمَنْ كَانَ لَهُ إِبِلٌ فَلْيَلْحَقْ بِإِبِلِهِ، وَمَنْ كَانَتْ لَهُ غَنَمٌ فَلْيَلْحَقْ بِغَنَمِهِ، وَمَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَلْحَقْ بِأَرْضِهِ ” قَالَ فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ أَرَأَيْتَ مَنْ لَمْ يَكُنْ لَهُ إِبِلٌ وَلَا غَنَمٌ وَلَا أَرْضٌ؟ قَالَ: «يَعْمِدُ إِلَى سَيْفِهِ فَيَدُقُّ عَلَى حَدِّهِ بِحَجَرٍ، ثُمَّ لِيَنْجُ إِنِ اسْتَطَاعَ النَّجَاءَ، اللهُمَّ هَلْ بَلَّغْتُ؟ اللهُمَّ هَلْ بَلَّغْتُ؟ اللهُمَّ هَلْ بَلَّغْتُ؟» قَالَ: فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ أَرَأَيْتَ إِنْ أُكْرِهْتُ حَتَّى يُنْطَلَقَ بِي إِلَى أَحَدِ الصَّفَّيْنِ، أَوْ إِحْدَى الْفِئَتَيْنِ، فَضَرَبَنِي رَجُلٌ بِسَيْفِهِ، أَوْ يَجِيءُ سَهْمٌ فَيَقْتُلُنِي؟ قَالَ: «يَبُوءُ بِإِثْمِهِ وَإِثْمِكَ، وَيَكُونُ مِنْ أَصْحَابِ النَّارِ»

– وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ، قَالَا: حَدَّثَنَا وَكِيعٌ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، كِلَاهُمَا عَنْ عُثْمَانَ الشَّحَّامِ، بِهَذَا الْإِسْنَادِ، حَدِيثُ ابْنِ أَبِي عَدِيٍّ نَحْوَ حَدِيثِ حَمَّادٍ إِلَى آخِرِهِ، وَانْتَهَى حَدِيثُ وَكِيعٍ عِنْدَ قَوْلِهِ: «إِنِ اسْتَطَاعَ النَّجَاءَ» وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ


Tamil-5532
Shamila-2887
JawamiulKalim-5142




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.