தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-5556

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11

தஜ்ஜால் புறப்படும் வேளையில் ரோமர்கள் ஏராளமானோரைக் கொலை செய்து முன்னேறுவார்கள்.

 யுசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை இராக்கிலுள்ள) கூஃபாவில் அனல்காற்று வீசியது. அப்போது ஒரு மனிதர், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களே! யுகமுடிவு வந்துவிட்டது” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே வந்தார். உடனே சாய்ந்துகொண்டிருந்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நேராக எழுந்து அமர்ந்து, “சொத்துகள் பங்கு போடப்படாத நிலையும் போர்ச்செல்வத்தின் மூலம் மகிழ்ச்சியடையாத நிலையும் ஏற்படாத வரையில் யுகமுடிவு ஏற்படாது” என்று கூறிவிட்டு, தமது கரத்தால் (ஷாம் நாட்டின் திசையை நோக்கி) சைகை செய்து, “இஸ்லாமியரைத் தாக்குவதற்காக எதிரிகளின் படையொன்று ஒன்றுதிரளும். அவர்களை எதிர்கொள்வதற்காக இஸ்லாமியரும் ஒன்றுதிரளுவர்” என்று கூறினார்கள்.

உடனே நான், “ரோம (இத்தாலியக் கிறித்தவ)ர்களையா (எதிரிகள் என்று) கூறுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் “ஆம்” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

அந்தப் போரின்போது கடுமையான பலப்பிரயோகம் இருக்கும். அப்போது முஸ்லிம்கள் முதலில் ஒரு படையை அனுப்புவார்கள். ஒன்று வீர மரணம், அல்லது வெற்றியை இலக்காகக் கொண்டு அவர்கள் புறப்பட்டுச் செல்வார்கள். அவர்கள் (சென்று) போரிட்டுக்கொண்டிருக்கும்போது இரவு நேரம் குறுக்கிட்டுவிடும். ஆகவே, அவர்களில் எவரும் வெற்றி பெறாமல் இரு அணியினரும் (தாக்குதலை நிறுத்திவிட்டுத் தமது முகாமிற்குத்) திரும்பிவிடுவர். ஆனால்,முதலில் சென்ற படையினர் (போரில்) அழிந்துவிடுவர்.

பிறகு (மறுநாள்) முஸ்லிம்கள், ஒன்று வீர மரணம் அல்லது வெற்றி என்ற இலக்கில் மற்றொரு படையை முதலில் அனுப்புவார்கள். அவர்கள் (சென்று) போரிட்டுக்கொண்டிருப்பார்கள். இரவு குறுக்கிடும்போது அவர்களில் எவருமே வெற்றி பெறாமல் திரும்பி விடுவர். ஆனாலும், முதலில் சென்ற அணியினர் அழிந்துவிடுவார்கள்.

பிறகு (மூன்றாம் நாளு)ம், ஒன்று வீர மரணம் அல்லது வெற்றியை இலக்காக்கி மற்றொரு படையை முஸ்லிம்கள் அனுப்புவார்கள். அவர்கள் (சென்று) மாலை நேரமாகும் வரை போரிட்டு எவருக்கும் வெற்றிகிட்டாமல் திரும்பிவிடுவர். அப்போதும் முதலில் சென்ற அணியினர் அழிந்துவிடுவார்கள்.

நான்காம் நாளாகும்போது முஸ்லிம் (படை)களில் எஞ்சியிருப்பவர்கள் எதிரிகளை நோக்கி முன்னேறிச் செல்வார்கள். அப்போது அவர்களுக்கு அல்லாஹ் தோல்வியையே தருவான். (இருந்தாலும்) அவர்கள் ஏராளமான பேரைக் கொன்றுவிட்டிருப்பார்கள். அதைப் போன்ற ஓர் உயிரிழப்பை உலகம் கண்டிராது. எந்த அளவுக்கென்றால், அவர்களைச் சுற்றி பறவைகள் பறக்கும். அவற்றில் ஒன்றுகூட அவர்களைக் கடந்து செல்ல முடியாமல் செத்து விழும் (அந்த அளவுக்குப் பெரிய பரப்பளவில் அவர்கள் மடிந்து கிடப்பார்கள்). நூறு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் ஒரேயொருவர் மட்டுமே எஞ்சுவார்.

அப்போது எந்தப் போர்ச் செல்வத்தைக் கொண்டு மகிழ்ச்சி ஏற்படும்? அல்லது எந்தச் சொத்து பங்கிடப்படும்? இவ்வாறே அவர்கள் இருந்துகொண்டிருக்கும்போது இதைவிட மிகப்பெரிய பேராபத்து ஒன்றைப் பற்றி அவர்கள் கேள்விப்படுவார்கள். அப்போது ஒருவர் (வந்து), “உங்கள் குடும்பத்தாரிடையே தஜ்ஜால் வந்துவிட்டான்” என்று கூவியறிவிப்பார். உடனே அவர்கள் தம் கைகளிலுள்ளவற்றை அப்படியே போட்டுவிட்டு (தம் குடும்பத்தாரை) முன்னோக்கிவருவார்கள். முன்னதாக (தஜ்ஜாலைப் பற்றி அறிவதற்காக) பத்துக் குதிரை வீரர்களை உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் அவர்களுடைய பெயர்களையும் அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் அவர்களுடைய குதிரைகளின் நிறங்களையும் நன்கறிவேன். அன்றைய நாளில் பூமியின் மீதுள்ள குதிரை வீரர்களில் அவர்களே சிறந்தவர்கள்; அல்லது அன்றைய நாளில் பூமியின் மீதுள்ள சிறந்த குதிரை வீரர்களில் அவர்களும் அடங்குவர்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (யுசைர் பின் ஜாபிர் என்பதற்குப் பகரமாக) உசைர் பின் ஜாபிர் என்று இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் யுசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அனல் காற்று வீசியது” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.

ஆனாலும், மேற்கண்ட அறிவிப்பே முழுமையானதும் விரிவானதும் ஆகும்.

– மேற்கண்ட ஹதீஸ் உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.

அதில், “நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தேன். அப்போது வீடு நிறைய மக்கள் இருந்தனர். அப்போது கூஃபாவில் அனல் காற்று வீசியது” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.

Book : 52

(முஸ்லிம்: 5556)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، كِلَاهُمَا عَنِ ابْنِ عُلَيَّةَ – وَاللَّفْظُ لِابْنِ حُجْرٍ – حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ أَبِي قَتَادَةَ الْعَدَوِيِّ، عَنْ يُسَيْرِ بْنِ جَابِرٍ، قَالَ

هَاجَتْ رِيحٌ حَمْرَاءُ بِالْكُوفَةِ، فَجَاءَ رَجُلٌ لَيْسَ لَهُ هِجِّيرَى إِلَّا: يَا عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ جَاءَتِ السَّاعَةُ، قَالَ: فَقَعَدَ وَكَانَ مُتَّكِئًا، فَقَالَ: إِنَّ السَّاعَةَ لَا تَقُومُ، حَتَّى لَا يُقْسَمَ مِيرَاثٌ، وَلَا يُفْرَحَ بِغَنِيمَةٍ، ثُمَّ قَالَ: بِيَدِهِ هَكَذَا – وَنَحَّاهَا نَحْوَ الشَّأْمِ – فَقَالَ: عَدُوٌّ يَجْمَعُونَ لِأَهْلِ الْإِسْلَامِ، وَيَجْمَعُ لَهُمْ أَهْلُ الْإِسْلَامِ، قُلْتُ: الرُّومَ تَعْنِي؟ قَالَ: نَعَمْ، وَتَكُونُ عِنْدَ ذَاكُمُ الْقِتَالِ رَدَّةٌ شَدِيدَةٌ، فَيَشْتَرِطُ الْمُسْلِمُونَ شُرْطَةً لِلْمَوْتِ لَا تَرْجِعُ إِلَّا غَالِبَةً، فَيَقْتَتِلُونَ حَتَّى يَحْجُزَ بَيْنَهُمُ اللَّيْلُ، فَيَفِيءُ هَؤُلَاءِ وَهَؤُلَاءِ، كُلٌّ غَيْرُ غَالِبٍ، وَتَفْنَى الشُّرْطَةُ، ثُمَّ يَشْتَرِطُ الْمُسْلِمُونَ شُرْطَةً لِلْمَوْتِ، لَا تَرْجِعُ إِلَّا غَالِبَةً، فَيَقْتَتِلُونَ حَتَّى يَحْجُزَ بَيْنَهُمُ اللَّيْلُ، فَيَفِيءُ هَؤُلَاءِ وَهَؤُلَاءِ، كُلٌّ غَيْرُ غَالِبٍ، وَتَفْنَى الشُّرْطَةُ، ثُمَّ يَشْتَرِطُ الْمُسْلِمُونَ شُرْطَةً لِلْمَوْتِ، لَا تَرْجِعُ إِلَّا غَالِبَةً، فَيَقْتَتِلُونَ حَتَّى يُمْسُوا، فَيَفِيءُ هَؤُلَاءِ وَهَؤُلَاءِ، كُلٌّ غَيْرُ غَالِبٍ، وَتَفْنَى الشُّرْطَةُ، فَإِذَا كَانَ يَوْمُ الرَّابِعِ، نَهَدَ إِلَيْهِمْ بَقِيَّةُ أَهْلِ الْإِسْلَامِ، فَيَجْعَلُ اللهُ الدَّبْرَةَ عَلَيْهِمْ، فَيَقْتُلُونَ مَقْتَلَةً – إِمَّا قَالَ لَا يُرَى مِثْلُهَا، وَإِمَّا قَالَ لَمْ يُرَ مِثْلُهَا – حَتَّى إِنَّ الطَّائِرَ لَيَمُرُّ بِجَنَبَاتِهِمْ، فَمَا يُخَلِّفُهُمْ حَتَّى يَخِرَّ مَيْتًا، فَيَتَعَادُّ بَنُو الْأَبِ، كَانُوا مِائَةً، فَلَا يَجِدُونَهُ بَقِيَ مِنْهُمْ إِلَّا الرَّجُلُ الْوَاحِدُ، فَبِأَيِّ غَنِيمَةٍ يُفْرَحُ؟ أَوْ أَيُّ مِيرَاثٍ يُقَاسَمُ، فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ سَمِعُوا بِبَأْسٍ، هُوَ أَكْبَرُ مِنْ ذَلِكَ، فَجَاءَهُمُ الصَّرِيخُ، إِنَّ الدَّجَّالَ قَدْ خَلَفَهُمْ فِي ذَرَارِيِّهِمْ، فَيَرْفُضُونَ مَا فِي أَيْدِيهِمْ، وَيُقْبِلُونَ، فَيَبْعَثُونَ عَشَرَةَ فَوَارِسَ طَلِيعَةً، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَعْرِفُ أَسْمَاءَهُمْ وَأَسْمَاءَ آبَائِهِمْ، وَأَلْوَانَ خُيُولِهِمْ، هُمْ خَيْرُ فَوَارِسَ عَلَى ظَهْرِ الْأَرْضِ يَوْمَئِذٍ – أَوْ مِنْ خَيْرِ فَوَارِسَ عَلَى ظَهْرِ الْأَرْضِ يَوْمَئِذٍ -» قَالَ ابْنُ أَبِي شَيْبَةَ فِي رِوَايَتِهِ: عَنْ أُسَيْرِ بْنِ جَابِرٍ

– وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ أَبِي قَتَادَةَ، عَنْ يُسَيْرِ بْنِ جَابِرٍ، قَالَ: كُنْتُ عِنْدَ ابْنِ مَسْعُودٍ فَهَبَّتْ رِيحٌ حَمْرَاءُ، وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِهِ، وَحَدِيثُ ابْنِ عُلَيَّةَ أَتَمُّ وَأَشْبَعُ

– وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا سُلَيْمَانُ يَعْنِي ابْنَ الْمُغِيرَةِ، حَدَّثَنَا حُمَيْدٌ يَعْنِي ابْنَ هِلَالٍ، عَنْ أَبِي قَتَادَةَ، عَنْ أُسَيْرِ بْنِ جَابِرٍ، قَالَ: كُنْتُ فِي بَيْتِ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ وَالْبَيْتُ مَلْآنُ، قَالَ: فَهَاجَتْ رِيحٌ حَمْرَاءُ بِالْكُوفَةِ، فَذَكَرَ نَحْوَ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ


Tamil-5556
Shamila-2899
JawamiulKalim-5164




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.