தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1582

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 42 மக்காவின் சிறப்பும் கஅபாவின் நிர்மாணமும்.

அல்லாஹ் கூறுகிறான்:

(கஅபா என்னும்) இந்த வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை -மகாமு இப்ராஹீமை’- தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்! (என்றும் நாம் சொன்னோம்). மேலும் என் வீட்டைச் சுற்றி வருபவர்கள்,தங்கியிருப்பவர்கள், ருகூஉ செய்பவர்கள், சஜ்தா செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும் என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்.

(இன்னும் நினைவு கூருங்கள்:) இப்ராஹீம் அல்லாஹ்வே! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்குவாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனி வர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக!’ என்று கூறினார்;

(ஆம்;)யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகமனுபவிக்கச் செய்வேன்; பின்னர் அவரை நரக நெருப்பின் வேதனையின்பால் இழுத்துச் செல்வேன். அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே என்று அல்லாஹ் கூறுகிறான்.

இப்ராஹீமும் இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக, நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய். எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படியும் முஸ்லிம்களாக்குவாயாக;எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படியும் ஒரு கூட்டத்தினரை உருவாக்குவாயாக! நாங்கள் உன்னை வழிபடும் முறைகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிகவும் மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனுமாய் இருக்கின்றாய்! (என்று பிரார்த்தித்தனர்) (2:125-128). 

 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்டபோது (சிறுவராயிருந்த நபி(ஸல்) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் கற்களைச் சுமந்து சென்றார்கள். அப்போது அப்பாஸ்(ரலி), நபி(ஸல்) அவர்களை நோக்கி (கல்சுமப்பதற்கு வசதியாக), ‘உன்னுடைய வேட்டியை அவிழ்த்துத் தோளில் வைத்துக்கொள்!’ எனக் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள்) பிறகு (ஆடையின்றி உள்ளோம் என்றறிந்து) உடனே மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அவர்களின் கண்கள் வானத்தை நோக்கியிருந்தன. (அப்பாஸ்(ரலி) அவர்களை நோக்கி) ‘என்னுடைய ஆடையை எனக்குக் கொடுங்கள்!’ என்றார்கள். (ஆடையை எடுத்துக் கொடுத்த உடனே) அதை இறுக்கமாகக் கட்டிக் கொண்டார்கள்.
Book : 25

(புகாரி: 1582)

بَابُ فَضْلِ مَكَّةَ وَبُنْيَانِهَا

وَقَوْلِهِ تَعَالَى: {وَإِذْ جَعَلْنَا البَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ  أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ المَصِيرُ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ القَوَاعِدَ مِنَ البَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ} [البقرة: 126]

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

 لَمَّا بُنِيَتِ الكَعْبَةُ ذَهَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَبَّاسٌ يَنْقُلاَنِ الحِجَارَةَ، فَقَالَ العَبَّاسُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اجْعَلْ إِزَارَكَ عَلَى رَقَبَتِكَ، فَخَرَّ إِلَى الأَرْضِ، وَطَمَحَتْ عَيْنَاهُ إِلَى السَّمَاءِ، فَقَالَ: «أَرِنِي إِزَارِي» فَشَدَّهُ عَلَيْهِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.