தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2434

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை)விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) இறைநம்பிக்கையாளர்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பு எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.

இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கிறதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெறலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம்’ என்று கூறினார்கள்.

அப்பாஸ்(ரலி), ‘இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம்’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இத்கிர் புல்லைத் தவிரத்தான்’ என்று கூறினார்கள்.

அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ்(ரலி) என்பவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்’ என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்’ என்று உத்தரவிட்டார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான வலீத் இப்னு முஸ்லிம்(ரஹ்) கூறினார்:) நான் அவ்ஸாயீ(ரஹ்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு எழுதிக் கொடுங்கள்’ என்னும் அபூ ஷாஹ்(ரலி) அவர்களின் சொல் எதைக் குறிக்கிறது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அவர் கேட்ட இந்த உரையைத்தான் (எழுதிக் கொடுக்கச் சொன்னார்)’ என்று பதிலளித்தார்கள்.
Book :45

(புகாரி: 2434)

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

لَمَّا فَتَحَ اللَّهُ عَلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ قَامَ فِي النَّاسِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ حَبَسَ عَنْ مَكَّةَ الفِيلَ، وَسَلَّطَ عَلَيْهَا رَسُولَهُ وَالمُؤْمِنِينَ، فَإِنَّهَا لاَ تَحِلُّ  لِأَحَدٍ كَانَ قَبْلِي، وَإِنَّهَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، وَإِنَّهَا لاَ تَحِلُّ لِأَحَدٍ بَعْدِي، فَلاَ يُنَفَّرُ صَيْدُهَا، وَلاَ يُخْتَلَى شَوْكُهَا، وَلاَ تَحِلُّ سَاقِطَتُهَا إِلَّا لِمُنْشِدٍ، وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ، إِمَّا أَنْ يُفْدَى وَإِمَّا أَنْ يُقِيدَ»، فَقَالَ العَبَّاسُ: إِلَّا الإِذْخِرَ، فَإِنَّا نَجْعَلُهُ لِقُبُورِنَا وَبُيُوتِنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِلَّا الإِذْخِرَ» فَقَامَ أَبُو شَاهٍ – رَجُلٌ مِنْ أَهْلِ اليَمَنِ – فَقَالَ: اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اكْتُبُوا لِأَبِي شَاهٍ»، قُلْتُ لِلْأَوْزَاعِيِّ: مَا قَوْلُهُ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: هَذِهِ الخُطْبَةَ الَّتِي سَمِعَهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.