தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2482

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35 அடுத்தவரின் சுவரை இடித்து விட்டால் அதே போன்று கட்டித் தரவேண்டும்.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ‘ஜுரைஜ்’ என்று அழைக்கப்பட்டு வந்த ஒருவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். அவருக்கு பதில் கூற ஜுரைஜ் மறுத்துவிட்டார். ‘நான் அவருக்கு பதிலளிப்பதா, அல்லது தொழுவதா?’ என்று (மனத்திற்குள்) கூறினார். பிறகு (மீண்டும்), அவரின் தாயார் அவரிடம் வந்து, (தான் அழைத்தும் தன் மகன் பதிலளிக்கவில்லையே என்ற கோபத்தில்), ‘இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாத வரை அவனுக்கு (ஜுரைஜுக்கு) மரணத்தைத் தராதே’ என்று கூறினார்.

(ஒரு நாள்) ஜுரைஜ் தன் ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், ‘நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன்’ என்று கூறினாள். அதற்காக, ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு கொள்ள அழைத்துப்) பேச முனைந்தாள். அவர் (இணங்க) மறுத்துவிட்டார். எனவே, அவள் ஒர் இடையனிடம் சென்று, தன்னை அவனுடைய ஆளுகைக்குள் ஒப்படைத்துவிட்டாள். அதன் காரணமாக ஒரு (ஆண்) குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

பிறகு, ‘இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன்’ என்று கூறினாள். (இதைக் கேட்ட) மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்தனர்; (கோபாவேசத்தில்) அவரின் ஆசிரமத்தைத் தகர்த்து உடைத்துவிட்டனர்; அவரை (அவரின் அறையிலிருந்து) இறக்கி அவரை ஏசினர். ஜுரைஜ் உளூச் செய்து தொழுதார்.

பிறகு அக்குழந்தையிடம் வந்து, ‘குழந்தையே! உன் தந்தை யார்?’ என்று கேட்டார். அந்தக் குழந்தை (வாய் திறந்து), ‘(இன்ன) இடையன்’ என்று கூறியது. இதைச் செவியுற்ற மக்கள், ‘உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தால் நாங்கள் கட்டித் தருகிறோம்’ என்று (ஜுரைஜிடம் அனுமதி) கேட்டார்கள். அதற்கு ஜுரைஜ், ‘இல்லை; களிமண்ணால் கட்டித் தந்தாலே போதும்’ என்று கூறிவிட்டார்.
Book : 46

(புகாரி: 2482)

بَابٌ: إِذَا هَدَمَ حَائِطًا فَلْيَبْنِ مِثْلَهُ

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

كَانَ رَجُلٌ فِي بَنِي إِسْرَائِيلَ يُقَالُ لَهُ جُرَيْجٌ يُصَلِّي، فَجَاءَتْهُ أُمُّهُ، فَدَعَتْهُ، فَأَبَى أَنْ يُجِيبَهَا، فَقَالَ: أُجِيبُهَا أَوْ أُصَلِّي، ثُمَّ أَتَتْهُ فَقَالَتْ: اللَّهُمَّ لاَ تُمِتْهُ حَتَّى تُرِيَهُ وُجُوهَ المُومِسَاتِ، وَكَانَ جُرَيْجٌ فِي صَوْمَعَتِهِ، فَقَالَتِ امْرَأَةٌ: لَأَفْتِنَنَّ جُرَيْجًا، فَتَعَرَّضَتْ لَهُ، فَكَلَّمَتْهُ فَأَبَى، فَأَتَتْ رَاعِيًا، فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا، فَوَلَدَتْ غُلاَمًا فَقَالَتْ: هُوَ مِنْ جُرَيْجٍ، فَأَتَوْهُ، وَكَسَرُوا صَوْمَعَتَهُ، فَأَنْزَلُوهُ وَسَبُّوهُ، فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ أَتَى الغُلاَمَ، فَقَالَ: مَنْ أَبُوكَ يَا غُلاَمُ؟ قَالَ: الرَّاعِي، قَالُوا: نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ، قَالَ: لاَ، إِلَّا مِنْ طِينٍ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.