பாடம் : 7 அனாதைகள் மற்றும் வாரிசுதாரர்களின் பங்கு.
உர்வா இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.
நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘அநாதை(ப் பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்துகொள்ளுங்கள்’ (திருக்குர்ஆன் 04:03) என்னும் இறைவசனத்தைக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.
என் சகோதரி மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் (வலீயின்) மடியில் (பொறுப்பில்) வளர்கிற – அவரின் செல்வத்தில் கூட்டாக இருக்கிற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளுடைய மஹ்ர் விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் மற்றவர்கள் அவளுக்குக் கொடுப்பது போன்ற மஹ்ரை அவளுக்குக் கொடுக்காமல் – அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் என்னும் நிலையிலிருப்பவள் ஆவாள்.
இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செய்யாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை மணந்துகொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக) தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற பெண்களில் அவர்களுக்கு விருப்பமான பெண்களை மணந்துகொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.
பிறகு, (இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும்) மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். எனவே அல்லாஹ், ‘பெண்கள் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் கோருகின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவர்களின் விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான். மேலும், இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டங்களையும் நினைவுபடுத்துகிறான். (அதாவது,) எந்த அநாதைப் பெண்களுக்கு, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரிமையை நீங்கள் கொடுப்பதில்லையோ, மேலும், எவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லையோ அந்த அநாதைப் பெண்கள் பற்றிய சட்டங்களையும் (உங்களுக்கு நினைவுபடுத்துகிறான்)’ என்னும் (திருக்குர்ஆன் 04:127) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
மேலும், ‘இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிற சட்டங்களையும்…’ என்று அல்லாஹ் கூறியிருப்பது, ‘அநாதை(ப் பெண்)களுடன் நீதியுடன் நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால்…’ என்னும் (திருக்குர்ஆன் 04:03) இறைவசனத்தைக் குறிப்பதாகும்.
மேலும், 4:127 ம் இறைவசனத்தில், ‘மேலும் எவரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லையோ’ என்று கூறியிருப்பது, உங்களில் ஒரு காப்பாளர் தன் பராமரிப்பில் இருக்கும் அநாதைப் பெண் ஒருத்தியை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது அவளை விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும்.
(செல்வத்தில் குறைந்தவர்களாக இருக்கும் போது) அந்த (அநாதை)ப் பெண்களை மணந்துகொள்ள அவர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகுக்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் ‘நீதியான முறையிலே தவிர மணந்து கொள்ளலாகாது’ என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
Book : 47
بَابُ شَرِكَةِ اليَتِيمِ وَأَهْلِ المِيرَاثِ
حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ العَامِرِيُّ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ
أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنْ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا} [النساء: 3] إِلَى {وَرُبَاعَ} [النساء: 3]، فَقَالَتْ: «يَا ابْنَ أُخْتِي هِيَ اليَتِيمَةُ تَكُونُ فِي حَجْرِ وَلِيِّهَا تُشَارِكُهُ فِي مَالِهِ، فَيُعْجِبُهُ مَالُهَا وَجَمَالُهَا، فَيُرِيدُ وَلِيُّهَا أَنْ يَتَزَوَّجَهَا، بِغَيْرِ أَنْ يُقْسِطَ فِي صَدَاقِهَا، فَيُعْطِيهَا مِثْلَ مَا يُعْطِيهَا غَيْرُهُ، فَنُهُوا أَنْ يُنْكِحُوهُنَّ إِلَّا أَنْ يُقْسِطُوا لَهُنَّ، وَيَبْلُغُوا بِهِنَّ أَعْلَى سُنَّتِهِنَّ مِنَ الصَّدَاقِ، وَأُمِرُوا أَنْ يَنْكِحُوا مَا طَابَ لَهُمْ مِنَ النِّسَاءِ سِوَاهُنَّ» قَالَ عُرْوَةُ: قَالَتْ عَائِشَةُ: ثُمَّ إِنَّ النَّاسَ اسْتَفْتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ هَذِهِ الآيَةِ، فَأَنْزَلَ اللَّهُ: ” {وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ} [النساء: 127] إِلَى قَوْلِهِ {وَتَرْغَبُونَ أَنْ تَنْكِحُوهُنَّ} [النساء: 127] ” وَالَّذِي ذَكَرَ اللَّهُ أَنَّهُ يُتْلَى عَلَيْكُمْ فِي الكِتَابِ الآيَةُ الأُولَى، الَّتِي قَالَ فِيهَا: {وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي اليَتَامَى، فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ} [النساء: 3]، قَالَتْ عَائِشَةُ: وَقَوْلُ اللَّهِ فِي الآيَةِ الأُخْرَى: {وَتَرْغَبُونَ أَنْ تَنْكِحُوهُنَّ} [النساء: 127] يَعْنِي هِيَ رَغْبَةُ أَحَدِكُمْ لِيَتِيمَتِهِ الَّتِي تَكُونُ فِي حَجْرِهِ، حِينَ تَكُونُ قَلِيلَةَ المَالِ وَالجَمَالِ، فَنُهُوا أَنْ يَنْكِحُوا مَا رَغِبُوا فِي مَالِهَا وَجَمَالِهَا مِنْ يَتَامَى النِّسَاءِ إِلَّا بِالقِسْطِ، مِنْ أَجْلِ رَغْبَتِهِمْ عَنْهُنَّ
சமீப விமர்சனங்கள்