மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
ஏற்கப்படாத ஹதீஸ்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது, மவ்ளூவு என்ற வகை ஹதீஸ்களாகும்.
ஒரு அறிவிப்பாளர் நபியின் மீது பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுபவர் என்று விமர்சிக்கப் பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் ”மவ்ளூவு” என்று கூறப்படும்.
மவ்ளூவு என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாதவற்றை – செய்யாதவற்றை – அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.
திருக்குர்ஆனுக்கும், நிரூபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர் முரணாகவும், எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவையாகவும் அமைந்தவை.
புத்தியில்லாதவனின் உளறலுக்கு நிகராக அமைந்தவை.
அறிவிப்பாளரில் ஒருவரோ, பலரோ பெரும் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.
இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்தி, தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்.
மேற்கண்ட அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதன் அடிப்படையில் அமல் செய்யக் கூடாது.
இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.
ஹதீஸ்களில் இட்டுக்கட்டியதற்கான காரணங்கள்
1. இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்
2. ஆர்வக் கோளாறு
3. தனி மரியாதை பெறுவதற்காக
4. மன்னர்களை மகிழ்விக்க
5. இயக்க வெறி
6. பேச்சைப் பிழைப்பாக்க
7. சுயலாபத்திற்காக
8. மூளை குழம்பியவர்களின் உளறல்கள்
இது போன்ற காரணங்களினால் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டன.
உதாரணம்
கத்தரிக்காய் சாப்பிடுவது எல்லா நோய்களுக்கும் மருந்தாகும். (நக்துல் மன்கூல், பாகம் 1, பக்கம் 2)
பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது இதயத்தை மென்மையாக்கும். (அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ, பாகம் 1, பக்கம்161)
பெண்களிடம் ஆலோசனை கேளுங்கள். ஆனால் அதற்கு மாற்றமாக நடங்கள். (அல்ஃபவாயிதுல் மவ்லூஆ, பாகம் 1, பக்கம்99)
ஆலிமுக்கு முன்னால் மாணவர்கள் அமர்ந்தவுடன் அவனுக்கு அல்லாஹ் தனது அருளின் எழுபது வாசல்களைத் திறந்து விடுகின்றான். அவரை விட்டு எழும் போது அன்று பிறந்த பாலகனைப் போன்று அவன் எழுகின்றான். அவன் கற்ற ஒவ்வொரு எழுத்துக்காகவும் ஒரு ஷஹீதுடைய நன்மை அல்லாஹ் தருவான். (நூல்: தன்ஸீஹுஷ் ஷரீஅத்துல் மர்ஃபூஆ, பாகம் 1, பக்கம் 283)
ஸவ்ர் குகையில் சிலந்தி வலை பின்னியது. புறா முட்டையிட்டது பற்றிய அனைத்தும் பொய்யானவை. (நூல்: மீஅத்து ஹதீஸ் மினல் அஹாதீஸில் லயீஃபா வல் மவ்லூஆ, பாகம் 1, பக்கம் 4)
மவ்ளுவு, மத்ரூக் ஆகிய இரண்டுமே அடியோடு நிராகரிக்கப்படும் என்பதில் எந்த அறிஞரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் சில உதாரணங்களைத் தான் இங்கு குறிப்பிட்டுள்ளோம். இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அம்பலப்படுத்தும் வகையில் நல்லறிஞர்கள் தனியாக நூற்களையே எழுதியுள்ளனர்.
இப்னு ஜவ்ஸீ, முல்லா அலீ காரி, சுயூத்தி, ஷவ்கானி, தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
சுப்கீ போன்ற அறிஞர்களின் நூற்கள் இவற்றில் பிரபலமானவையாகும்.
தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப் பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள்.
இந்தப் பொய்களை இவர்கள் களையெடுக்கும் முயற்சியில் இறங்காதிருந்தால் இஸ்லாத்திற்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.
ஆனால் இன்றைக்கும் கூட மார்க்க அறிஞர்கள் இந்தப் பொய்களை மேடைகளிலும் ஜும்ஆப் பிரசங்கங்களிலும் கூறி வருகின்றார்கள் என்பது தான் வேதனை.
சமீப விமர்சனங்கள்