தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3129

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 நபி (ஸல்) அவர்களுடனோ, ஆட்சித் தலைவருடனோ சேர்ந்து அறப் போரிட்ட, உயிருள்ள அல்லது இறந்து விட்ட அறப்போர் வீரரின் செல்வத்தில் பரக்கத் (அருள் வளம்) உண்டு.

 அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.

(என் தந்தை) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) , ஜமல் போரின்போது நின்றபடி என்னை அழைத்தார்கள். நான் அவர்களின் பக்கத்தில் சென்று நின்றேன். அவர்கள், ‘என் அன்பு மகனே! இன்று (தனக்கு எதிரானவரின் பார்வையில்) அக்கிரமக்காரராகவோ, (தன் பார்வையில்) அநீதி இழைக்கப்பட்டவராகவோ இருப்பவரைத் தவிர வேறெவரும் கொல்லப்பட மாட்டார்கள். நான் இன்று அநீதியிழைக்கப்பட்ட நிலையில் (நிரபராதியாகக்) கொல்லப்பட்டு விடுவேன் என்றே கருதுகிறேன். (அதை விட) என்னுடைய கடன் தான் எனக்கு மிகவும் கவலையளிக்கிறது. நம்முடைய கடன் நம்முடைய செல்வத்தில் எதையாவது மீதம் வைக்கும் என்று நீ கருதுகிறாயா?

மகனே! நம் சொத்தை விற்றுவிட்டு என் கடனை அடைத்து விடு’ என்றார்கள். பிறகு, தம் சொத்தில் மூன்றிலொரு பங்கை (இன்ன நற்பணிகளுக்காகச் செலவிட வேண்டுமென்று இறுதி விருப்பம் தெரிவித்து) சாசனம் செய்தார்கள். அந்த மூன்றிலொரு பங்கில் மூன்றிலொரு பங்கைத் தம் மக்களுக்கு – அப்துல்லாஹ்வின் மக்களுக்கு – கொடுக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்கள். அதாவது, ‘ஒன்பதில் ஒரு பங்கை அதுவும் நம் சொத்திலிருந்து கடனை அடைத்த பின்பு மீதியிருந்தால் – உன் மக்களுக்குக் கொடுத்து விட வேண்டும்’ என்று விருப்பம் தெரிவித்தார்கள்.

… ஏனெனில் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) கூறினார்:

அப்துல்லாஹ்(ரலி) அவர்களின் பிள்ளைகள் சிலர், ஸுபைர்(ரலி) அவர்களின் பிள்ளைகளான குபைப், அப்பாத் ஆகியோருக்கு ஈடான வயதுடையவர்களாய் இருந்தனர். அப்போது ஸுபைர்(ரலி) அவர்களுக்கு ஒன்பது ஆண் பிள்ளைகளும் ஒன்பது பெண் பிள்ளைகளும் இருந்தனர்…

(தொடர்ந்து) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்:

தம் கடனை அடைத்து விடும்படி என்னிடம் சொல்லத் தொடங்கினார்கள். பிறகு, ‘என் அன்பு மகனே! அதில் சிறிது உன்னால் அடைக்க முடியவில்லையென்றால் என் எஜமானிடம் உதவி கேள்’ என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள், ‘என் எஜமான்’ என்று யாரைக் குறிப்பிட்டார்கள் என்று (முதலில்) எனக்குத் தெரியவில்லை’ அதனால் நான், ‘என் தந்தையே! தங்கள் எஜமான் யார்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அல்லாஹ் தான்’ என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களின் கடனை அடைப்பதில் எனக்குச் சிரமம் ஏற்பட்ட போதெல்லாம், ‘(என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களின் எஜமானனே! அவர் சார்பாக அவரின் கடனை நீ அடைப்பாயாக!’ என்று பிரார்த்தித்து வந்தேன்.

அந்த (எஜமான்) அல்லாஹ்வும் அதை அடைத்து வந்தான். ஸுபைர்(ரலி) போரில் கொல்லப்பட்டார்கள். ஆனால், அவர்கள் ஒரு தீனாரையும் ஒரு திர்ஹமையும் கூட (ரொக்கமாக)விட்டுச் செல்லவில்லை; இரண்டு நிலங்களைத் தவிர. அவற்றில் ஒன்று ஃகாபாவில் ஒரு வீட்டையும், எகிப்தில் ஒரு வீட்டையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்.

அவர்கள் மீதிருந்த கடன் ஏற்பட்ட விதம் இதுதான்: ஒருவர் ஸுபைர்(ரலி) அவர்களிடம் சில பொருட்களைக் கொண்டு வந்து அடைக்கலமாகத் தந்துவிட்டுச் செல்வது வழக்கம். ஸுபைர்(ரலி), ‘வேண்டாம். இதை நான் அடைக்கலப் பொருளாக ஏற்க மாட்டேன். மாறாக, இது என் பொறுப்பில் கடனாகும். அது அழிந்து போய் விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்’ என்றார்கள்.

ஸுபைர்(ரலி) எந்த ஆட்சிப் பொறுப்பையும் ஒருபோதும் விரும்பியதில்லை. ‘கராஜ்’ வரி வசூலிக்கும் பொறுப்பையோ வேறெந்தப் பணப் பொறுப்பையுமோ ஏற்றதில்லை; நபி(ஸல்) அவர்களுடன், அல்லது அபூ பக்கர், உமர், உஸ்மான் (ரலி – அன்ஹும்) ஆகியோருடன் புனிதப் போரில் பங்கெடுத்(து அதனால் கிடைத்த போர்ச் செல்வங்களில் பங்கு பெற்ற)ததைத் தவிர (அதிகாரத்தால் பொருளீட்டியதில்லை).

நான் அவர்கள் மீதிருந்த கடனை எண்ணிப் பார்த்தேன். மொத்தம் இருபத்திரண்டு லட்சம் கடன் இருக்கக் கண்டேன். அப்போது ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) என்னைச் சந்தித்து, ‘என் சகோதரர் மகனே! என் சகோதரர் மீது எவ்வளவு கடன் இருக்கிறது?’ என்று கேட்டார்கள். நான் அதை மறைத்து, ‘ஒரு லட்சம் தான்’ என்று சொன்னேன். ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் சொத்துகள் அவ்வளவு கடனை அடைக்கப் போதாதே’ என்றார்கள். நான், ‘என் தந்தையின் கடன் இருபத்திரண்டு லட்சமாக இருந்தால் என்ன சொல்வீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இவ்வளவு (பெருந் தொகையை அடைக்க) உங்களால் முடியாது என்றே கருதுகிறேன். உங்களால் அதில் ஓரளவு அடைக்க முடியாமல் போனால் என்னிடம் உதவி கேளுங்கள்’ என்றார்கள்.

ஸுபைர்(ரலி) ஃகாபாவில் ஒரு லட்சத்து எழுபதாயிரத்திற்கு ஒரு சொத்தை வாங்கியிருந்தார்கள். அதை நான் பதினாறு லட்சத்திற்கு விலை மதிப்பிட்டிருந்தேன். பிறகு (மக்களிடையே), எழுந்து நின்று, ‘எவருக்கு ஸுபைர்(ரலி) கடன் தர வேண்டியுள்ளதோ அவர் நம்மிடம் ஃகாபாவுக்கு வரட்டும்’ என்று அறிவித்தேன். உடனே அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி), என்னிடம் வந்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு ஸுபைர்(ரலி) நான்கு லட்சம் தர வேண்டியிருந்தது. எனவே, அவர்கள் என்னிடம், ‘நீங்கள் விரும்பினால் என் கடனை உங்களுக்கே விட்டுக் கொடுத்து விடுகிறேன்’ என்றார்கள். நான், ‘வேண்டாம்’ என்று சொன்னேன்.

உடனே அவர்கள், ‘சரி, நீங்கள் (சில கடன்களை) சற்றுத் தாமதமாக அடைப்பதாயிருந்தால் என் கடனையும் அப்படிப்பட்ட கடன்களில் ஒன்றாக நீங்கள் விரும்பினால் ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்றார்கள். நான், ‘அதுவும் வேண்டாம் (உடனே உங்கள் கடனை வாங்கிக் கொள்ளுங்கள்)’ என்று சொல்லி விட்டேன். அவர்கள், ‘அப்படியென்றால் (உங்கள் நிலத்திலிருந்து என் கடனுக்குச் சமமான) ஒரு துண்டை எனக்குத் தந்து விடுங்கள்’ என்றார்கள். நான், ‘இங்கிருந்து இது வரை உங்களுக்கு உரியது’ என்று (அவருக்குச் சேரும் நிலத்தின் அளவை வரையறுத்துச்) சொன்னேன்.

அதிலிருந்து சிறிதை நான் விற்று என் தந்தை ஸுபைர்(ரலி) கடனை (முழுவதுமாக) அடைத்து விட்டேன். ஃகாபாவின் நிலத்தில் நாலரைப் பங்குகள் மட்டும் விற்கப்படாமல் மீதமாயிருந்தன. முஆவியா(ரலி) அவர்களிடம் அம்ர் இப்னு உஸ்மான், முன்திர் இப்னு ஸுபைர், அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) ஆகியோர் இருக்க, நான் அங்கு சென்றேன். முஆவியா(ரலி) என்னிடம், ‘ஃகாபாவிலிருக்கும் (உங்கள் தந்தை ஸுபைர்(ரலி) அவர்களின்) ஃகாபாவிலுள்ள சொத்திற்கு எவ்வளவு விலைமதிப்பு சொல்லப்பட்டது’ என்று என்னிடம் கேட்க, நான், ‘ஒவ்வொரு பங்கும் ஒரு லட்சம்’ என்று பதிலளித்தேன்.

அவர்கள், ‘அதில் எவ்வளவு (விற்காமல்) எஞ்சியுள்ளது?’ என்று கேட்டார்கள். நான், ‘நாலரைப் பங்குகள் எஞ்சியுள்ளன’ என்று பதில் சொன்னேன். முன்திர் இப்னு ஸுபைர் அவர்கள், ‘நான் ஒரு பங்கை ஒரு லட்சம் கொடுத்து எடுத்துக் கொள்கிறேன்’ என்றார். அம்ர் இப்னு உஸ்மான் அவர்கள், ‘நான் ஒரு பங்கை ஒரு லட்சம் கொடுத்து எடுத்து கொள்கிறேன்’ என்றார்கள். இப்னு ஸம்ஆ(ரலி), ‘இப்போது எவ்வளவு மீதியுள்ளது?’ என்று கேட்டார்கள். நான், ‘ஒன்றரைப் பங்கு (மட்டும் தான்) மீதியுள்ளது’ என்று கேட்டார்கள். நான், ‘ஒன்றரைப் பங்கு (மட்டும் தான்) மீதியுள்ளது’ என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், ‘நான் அதை ஒன்றரை லட்சம் கொடுத்து எடுத்துக் கொள்கிறேன்’ என்றார்கள். அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) (தமக்கு வர வேண்டிய நான்கு லட்சத்திற்கு பதிலாக தமக்குத் தரப்பட்ட துண்டு நிலத்தை) முஆவியா(ரலி) அவர்களிடம் ஆறு லட்சத்திற்கு விற்று (இரண்டு லட்சம் லாபம் அடைந்து)விட்டார்கள்.

நான் என் தந்தையின் கடன்களையெல்லாம் அடைத்து முடித்த பிறகு (என் சகோதரர்களான) ஸுபைர்(ரலி) அவர்களின் மக்கள், ‘எங்களுக்கிடையே எங்கள் வாரிசுச் சொத்தைப் பங்கிட்டு விடுங்கள்’ என்று என்னிடம் கோரினர். நான், ‘முடியாது, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (ஹஜ்) பருவத்தில் நான்காண்டுகளுக்கு, ‘ஸுபைர்(ரலி) எவருக்குக் கடன் தர வேண்டியுள்ளதோ, அவர் நம்மிடம் வரட்டும். நாம் அவர் கடனை அடைப்போம்’ என்று அறிவிக்காமல் உங்களிடையே அவரின் சொத்துகளைப் பங்கிடவே மாட்டேன்’ என்று சொல்லிவிட்டேன்.

பிறகு, ஒவ்வோர் ஆண்டும் ஹஜ்ஜுப் பருவத்தில் அறிவிப்புக் கொடுக்கத் தொடங்கினேன். நான்காண்டுகள் கழிந்துவிட்ட பின் (யாரும் ஸுபைர்(ரலி) கடன் தர வேண்டியிருப்பதாகக் கேட்டு வராததால் (என் சகோதர சகோதரிகளான) ஸுபைர்(ரலி) அவர்களின் மக்களுக்கிடையே மீதிச் சொத்துகளைப் பங்கிட்டு விட்டேன்.

(என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுக்கு நான்கு மனைவியர் இருந்தனர். ஸுபைர்(ரலி) தம் இறுதி விருப்பமாகத் தெரிவித்த (மரண சாசனப் பங்கான) மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்தது போக, மீதியை அவர்களின் துணைவியருக்குக் கொடுத்தேன். ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டு லட்சம் கிடைத்தது. ஆக, ஸுபைர்(ரலி) அவர்களின் சொத்துகளுடைய மொத்த மதிப்பு (கடனுக்காகக் கொடுத்தது, நல்லறங்களுக்காகச் செய்த மரண சாசனத் தொகை, வாரிசுகளுக்குக் கிடைத்தது ஆகிய அனைத்தும் சேர்ந்து) ஐம்பது கோடியே இரண்டு இலட்சமாகும் (என மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.)
Book : 57

(புகாரி: 3129)

بَابُ بَرَكَةِ الغَازِي فِي مَالِهِ حَيًّا وَمَيِّتًا، مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوُلاَةِ الأَمْرِ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: قُلْتُ لِأَبِي أُسَامَةَ، أَحَدَّثَكُمْ هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ

لَمَّا وَقَفَ الزُّبَيْرُ يَوْمَ الجَمَلِ دَعَانِي، فَقُمْتُ إِلَى جَنْبِهِ فَقَالَ: ” يَا بُنَيِّ، إِنَّهُ لاَ يُقْتَلُ اليَوْمَ إِلَّا ظَالِمٌ أَوْ مَظْلُومٌ، وَإِنِّي لاَ أُرَانِي إِلَّا سَأُقْتَلُ اليَوْمَ مَظْلُومًا، وَإِنَّ مِنْ أَكْبَرِ هَمِّي لَدَيْنِي، أَفَتُرَى يُبْقِي دَيْنُنَا مِنْ مَالِنَا شَيْئًا؟ فَقَالَ: يَا بُنَيِّ بِعْ مَالَنَا، فَاقْضِ دَيْنِي، وَأَوْصَى بِالثُّلُثِ، وَثُلُثِهِ لِبَنِيهِ – يَعْنِي بَنِي عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ – يَقُولُ: ثُلُثُ الثُّلُثِ، فَإِنْ فَضَلَ مِنْ مَالِنَا فَضْلٌ بَعْدَ قَضَاءِ الدَّيْنِ شَيْءٌ، فَثُلُثُهُ لِوَلَدِكَ “، – قَالَ هِشَامٌ: وَكَانَ بَعْضُ وَلَدِ عَبْدِ اللَّهِ، قَدْ وَازَى بَعْضَ بَنِي الزُّبَيْرِ، خُبَيْبٌ، وَعَبَّادٌ وَلَهُ يَوْمَئِذٍ تِسْعَةُ بَنِينَ، وَتِسْعُ بَنَاتٍ -، قَالَ عَبْدُ اللَّهِ: فَجَعَلَ يُوصِينِي بِدَيْنِهِ، وَيَقُولُ: «يَا بُنَيِّ إِنْ عَجَزْتَ عَنْهُ فِي شَيْءٍ، فَاسْتَعِنْ عَلَيْهِ مَوْلاَيَ»، قَالَ: فَوَاللَّهِ مَا دَرَيْتُ مَا أَرَادَ حَتَّى قُلْتُ: يَا أَبَةِ مَنْ مَوْلاَكَ؟ قَالَ: «اللَّهُ»، قَالَ: فَوَاللَّهِ مَا وَقَعْتُ فِي كُرْبَةٍ مِنْ دَيْنِهِ، إِلَّا قُلْتُ: يَا مَوْلَى الزُّبَيْرِ اقْضِ عَنْهُ دَيْنَهُ، فَيَقْضِيهِ، فَقُتِلَ الزُّبَيْرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَلَمْ يَدَعْ دِينَارًا وَلاَ دِرْهَمًا إِلَّا أَرَضِينَ، مِنْهَا الغَابَةُ، وَإِحْدَى عَشْرَةَ دَارًا بِالْمَدِينَةِ، وَدَارَيْنِ بِالْبَصْرَةِ، وَدَارًا بِالكُوفَةِ، وَدَارًا بِمِصْرَ، قَالَ: وَإِنَّمَا كَانَ دَيْنُهُ الَّذِي عَلَيْهِ، أَنَّ الرَّجُلَ كَانَ يَأْتِيهِ بِالْمَالِ، فَيَسْتَوْدِعُهُ إِيَّاهُ، فَيَقُولُ الزُّبَيْرُ: «لاَ وَلَكِنَّهُ سَلَفٌ، فَإِنِّي أَخْشَى عَلَيْهِ الضَّيْعَةَ»، وَمَا وَلِيَ إِمَارَةً قَطُّ وَلاَ جِبَايَةَ خَرَاجٍ، وَلاَ شَيْئًا إِلَّا أَنْ يَكُونَ فِي غَزْوَةٍ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ مَعَ أَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، قَالَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ: فَحَسَبْتُ مَا عَلَيْهِ مِنَ الدَّيْنِ ، فَوَجَدْتُهُ أَلْفَيْ أَلْفٍ وَمِائَتَيْ أَلْفٍ، قَالَ: فَلَقِيَ حَكِيمُ بْنُ حِزَامٍ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، فَقَالَ: يَا ابْنَ أَخِي، كَمْ عَلَى أَخِي مِنَ الدَّيْنِ فَكَتَمَهُ؟ فَقَالَ: مِائَةُ أَلْفٍ، فَقَالَ حَكِيمٌ: وَاللَّهِ مَا أُرَى أَمْوَالَكُمْ تَسَعُ لِهَذِهِ، فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ: أَفَرَأَيْتَكَ إِنْ كَانَتْ أَلْفَيْ أَلْفٍ وَمِائَتَيْ أَلْفٍ؟ قَالَ: مَا أُرَاكُمْ تُطِيقُونَ هَذَا، فَإِنْ عَجَزْتُمْ عَنْ شَيْءٍ مِنْهُ فَاسْتَعِينُوا بِي، قَالَ: وَكَانَ الزُّبَيْرُ اشْتَرَى الغَابَةَ بِسَبْعِينَ وَمِائَةِ أَلْفٍ، فَبَاعَهَا عَبْدُ اللَّهِ بِأَلْفِ أَلْفٍ وَسِتِّ مِائَةِ أَلْفٍ، ثُمَّ قَامَ: فَقَالَ مَنْ كَانَ لَهُ عَلَى الزُّبَيْرِ حَقٌّ، فَلْيُوَافِنَا بِالْغَابَةِ، فَأَتَاهُ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، وَكَانَ لَهُ عَلَى الزُّبَيْرِ أَرْبَعُ مِائَةِ أَلْفٍ، فَقَالَ لِعَبْدِ اللَّهِ: إِنْ شِئْتُمْ تَرَكْتُهَا لَكُمْ، قَالَ عَبْدُ اللَّهِ: لاَ، قَالَ: فَإِنْ شِئْتُمْ جَعَلْتُمُوهَا فِيمَا تُؤَخِّرُونَ إِنْ أَخَّرْتُمْ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ: لاَ، قَالَ: قَالَ: فَاقْطَعُوا لِي قِطْعَةً، فَقَالَ عَبْدُ اللَّهِ: لَكَ مِنْ هَاهُنَا إِلَى هَاهُنَا، قَالَ: فَبَاعَ مِنْهَا فَقَضَى دَيْنَهُ فَأَوْفَاهُ، وَبَقِيَ مِنْهَا أَرْبَعَةُ أَسْهُمٍ وَنِصْفٌ، فَقَدِمَ عَلَى مُعَاوِيَةَ، وَعِنْدَهُ عَمْرُو بْنُ عُثْمَانَ، وَالمُنْذِرُ بْنُ الزُّبَيْرِ، وَابْنُ زَمْعَةَ، فَقَالَ لَهُ مُعَاوِيَةُ: كَمْ قُوِّمَتِ الغَابَةُ؟ قَالَ: كُلُّ سَهْمٍ مِائَةَ أَلْفٍ، قَالَ: كَمْ بَقِيَ؟ قَالَ: أَرْبَعَةُ أَسْهُمٍ وَنِصْفٌ، قَالَ المُنْذِرُ بْنُ الزُّبَيْرِ: قَدْ أَخَذْتُ سَهْمًا بِمِائَةِ أَلْفٍ، قَالَ عَمْرُو بْنُ عُثْمَانَ: قَدْ أَخَذْتُ سَهْمًا بِمِائَةِ أَلْفٍ، وَقَالَ ابْنُ زَمْعَةَ: قَدْ أَخَذْتُ سَهْمًا بِمِائَةِ أَلْفٍ، فَقَالَ مُعَاوِيَةُ: كَمْ بَقِيَ؟ فَقَالَ: سَهْمٌ وَنِصْفٌ، قَالَ: قَدْ أَخَذْتُهُ بِخَمْسِينَ وَمِائَةِ أَلْفٍ، قَالَ: وَبَاعَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ نَصِيبَهُ مِنْ مُعَاوِيَةَ بِسِتِّ مِائَةِ أَلْفٍ، فَلَمَّا فَرَغَ ابْنُ الزُّبَيْرِ مِنْ قَضَاءِ دَيْنِهِ، قَالَ بَنُو الزُّبَيْرِ: اقْسِمْ بَيْنَنَا مِيرَاثَنَا، قَالَ: لاَ، وَاللَّهِ لاَ أَقْسِمُ بَيْنَكُمْ حَتَّى أُنَادِيَ بِالْمَوْسِمِ أَرْبَعَ سِنِينَ: أَلاَ مَنْ كَانَ لَهُ عَلَى الزُّبَيْرِ دَيْنٌ فَلْيَأْتِنَا فَلْنَقْضِهِ، قَالَ: فَجَعَلَ كُلَّ سَنَةٍ يُنَادِي بِالْمَوْسِمِ، فَلَمَّا مَضَى أَرْبَعُ سِنِينَ قَسَمَ بَيْنَهُمْ، قَالَ: فَكَانَ لِلزُّبَيْرِ أَرْبَعُ نِسْوَةٍ، وَرَفَعَ الثُّلُثَ، فَأَصَابَ كُلَّ امْرَأَةٍ أَلْفُ أَلْفٍ وَمِائَتَا أَلْفٍ، فَجَمِيعُ مَالِهِ خَمْسُونَ أَلْفَ أَلْفٍ، وَمِائَتَا أَلْفٍ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.