தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3407

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 30

(அல்லாஹ் கூ.றுகிறான்:) மேலும், இந்தச் சந்தர்ப்பத்தை நினைவு கூருங்கள்: மூசா தம் சமூகத்தாரிடம், ஒரு பசுவை நீங்கள் அறுக்க வேண்டும் என்று அல்லாஹ் நிச்சயமாக உங்களுக்குக் கட்டளையிடுகின்றான் எனக் கூறினார். (அப்போது அவர்கள், மூசாவே!) நீர் எங்களை கேலி செய்கிறீரா? என்றார்கள். அதற்கு அவர், நான் (அவ்வாறு பேசி) அறிவீனர்களில் ஒருவனாகி விடுவதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்றார்.

அவர்கள் கூறினார்கள்: அது(பசு) எத்தன்மையுடையது என எங்களுக்கு விவரிக்கும்படி உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அதற்கு அவர், நிச்சயமாக அது கிழடாகவோ, கன்றாகவோ இல்லாமல் நடு வயதுள்ளதாய் இருக்க வேண்டும் என இறைவன் கூறுகின்றான்; எனவே, உங்களுக்கு இடப்படுகின்ற கட்டளையைச் செயல் படுத்துங்கள்! என்றார்.

மீண்டும் அவர்கள் கூறினார்கள்: (மூசாவே!) அதன் நிறம் என்ன என்று எங்களுக்கு விவரிக்குமாறு உமது இறைவனிடம் நீர் வேண்டுவீராக! அதற்கு அவர், நிச்சயமாக அது மஞ்சள் நிறமான பசுவாக இருக்க வேண்டும்; அதன் நிறம் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் வண்ணம் (அடர்த்தியாக) இருக்க வேண்டும்! என்றார்.

அதற்கு அவர்கள் கூறினார்கள்: (மூசாவே!) அது எத்தன்மையுடையது என (மிக மிகத்) தெளிவாக எங்களுக்கு விவரிக்கும் படி உம் இறைவனை வேண்டுவீராக! ஏனெனில், நிச்சயமாக அந்தப் பசு (எது வென்பது) பற்றி எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. மேலும், அல்லாஹ் நாடினால் (உரிய பசுவின் பக்கம்) நாங்கள் வழிகாட்டப்பெறுவோம்.

மூசா பதிலளித்தார்: பூமியை உழுவதற்கோ, வேளாண்மைக்கு நீரிறைப்பதற்கோ பயன்படுத்தப் படாத, ஊனமேதுமற்ற, எவ்வித வடுவுமற்ற பசுவாக அது இருக்க வேண்டும் என அவன் கூறுகின்றான். பிறகு அவர்கள் (ஆரவாரத்துடன்) கூறினார்கள்:

இப்போது தான் நீர் சரியான (விளக்கத்)தைத் தந்துள்ளீர். பின்னர் அவர்கள் அந்தப் பசுவை அறுத்தார்கள். ஆயினும் அவர்கள் அதனை முழுமனதோடு செய்பவர்களாய் இருக்கவில்லை. (2:67-71)

பாடம் : 31 மூசா (அலை) அவர்களின் இறப்பும், அதன் பின் அவர்களை நினைவு கூர்தலும்.

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

‘மலக்குல் மவ்த்’ (உயிரை எடுத்துச் செல்லவரும் வானவர்) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்தபோது மூஸா(அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்துவிட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று, ‘மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்’ என்று கூறினார்.

இறைவன், ‘நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரின் கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவிற்கு) அவரின் கரம் மூடுகிறதோ (அதில்) ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில் வாழ) அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்.)’ எனக் கூறினான்.

(அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூஸா(அலை) அவர்களிடம் கூறியபோது) அவர், ‘இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்?’ என்று கேட்டார்கள். இறைவன், ‘மரணம் தான்’ என்று பதிலளித்தான். மூஸா(அலை) அவர்கள், ‘அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக் கொள்’ என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத்தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.

(இதை எடுத்துரைத்த போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாக செம்மணல் குன்றின் கீழே அவரின் மண்ணறை இருப்பதை உங்களுக்கு காட்டியிருப்பேன்’ என்று கூறினார்கள்.

ஹம்மாம்(ரஹ்), ‘அபூ ஹுரைரா(ரலி) இதே போன்று நபி(ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்து உள்ளார்கள்’ என்று கூறுகிறார்கள்.
Book : 60

(புகாரி: 3407)

بَابُ {وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةً} [البقرة: 67] الآيَةَ

قَالَ أَبُو العَالِيَةِ: ” العَوَانُ: النَّصَفُ بَيْنَ البِكْرِ وَالهَرِمَةِ، {فَاقِعٌ} [البقرة: 69]: صَافٍ، {لاَ ذَلُولٌ} [البقرة: 71]: «لَمْ يُذِلَّهَا العَمَلُ»، {تُثِيرُ الأَرْضَ} [البقرة: 71]: لَيْسَتْ بِذَلُولٍ تُثِيرُ الأَرْضَ وَلاَ تَعْمَلُ فِي الحَرْثِ. {مُسَلَّمَةٌ} [البقرة: 71]: مِنَ العُيُوبِ، {لاَ شِيَةَ} [البقرة: 71]: بَيَاضٌ. {صَفْرَاءُ} [البقرة: 69]: إِنْ شِئْتَ سَوْدَاءُ، وَيُقَالُ: صَفْرَاءُ كَقَوْلِهِ (جِمَالاَتٌ صُفْرٌ). {فَادَّارَأْتُمْ} [البقرة: 72]: اخْتَلَفْتُمْ

بَابُ وَفَاةِ مُوسَى وَذِكْرِهِ بَعْدُ

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

أُرْسِلَ مَلَكُ المَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِمَا السَّلاَمُ، فَلَمَّا جَاءَهُ صَكَّهُ، فَرَجَعَ إِلَى رَبِّهِ، فَقَالَ: أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لاَ يُرِيدُ المَوْتَ، قَالَ: ارْجِعْ إِلَيْهِ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ، فَلَهُ بِمَا غَطَّتْ يَدُهُ بِكُلِّ شَعَرَةٍ سَنَةٌ، قَالَ: أَيْ رَبِّ، ثُمَّ مَاذَا؟ قَالَ: ثُمَّ المَوْتُ، قَالَ: فَالْآنَ، قَالَ: فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنَ الأَرْضِ المُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ، قَالَ أَبُو هُرَيْرَةَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كُنْتُ ثَمَّ لَأَرَيْتُكُمْ قَبْرَهُ، إِلَى جَانِبِ الطَّرِيقِ تَحْتَ الكَثِيبِ الأَحْمَرِ» قَالَ وَأَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ





மேலும் பார்க்க: புகாரி-1339 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.