தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3470

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒருவர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, ‘(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?’ என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், ‘கிடைக்காது’ என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார்.

பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒருவர், ‘(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!’ என்று அவருக்குக் கூறினார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார்.

அப்போது இறை கருணையைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) தர்கித்தனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, ‘நீ நெருங்கி வா!’ என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, ‘நீ தூரப்போ!’ என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான். பிறகு, ‘அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்’ என்று (வானவர்களுக்குக்) கூறினான்.

(அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட  ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது. என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book :60

(புகாரி: 3470)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا، ثُمَّ خَرَجَ يَسْأَلُ، فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ فَقَالَ لَهُ: هَلْ مِنْ تَوْبَةٍ؟ قَالَ: لاَ، فَقَتَلَهُ، فَجَعَلَ يَسْأَلُ، فَقَالَ لَهُ رَجُلٌ: ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا، فَأَدْرَكَهُ المَوْتُ، فَنَاءَ بِصَدْرِهِ نَحْوَهَا، فَاخْتَصَمَتْ فِيهِ مَلاَئِكَةُ الرَّحْمَةِ وَمَلاَئِكَةُ العَذَابِ، فَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَقَرَّبِي، وَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَبَاعَدِي، وَقَالَ: قِيسُوا مَا بَيْنَهُمَا، فَوُجِدَ إِلَى هَذِهِ أَقْرَبَ بِشِبْرٍ، فَغُفِرَ لَهُ


Bukhari-Tamil-3470.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3470.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  • இந்த ஹதீஸின் கருத்து குர்ஆனுக்கு முரணாக உள்ளது. தெரிந்தே கொலை செய்பவனுக்கு நிரந்தர நரகம் என்ற (4:93) வசனத்திற்கு மாற்றமாக உள்ளது.
  • தன் தவறை உணர்ந்த பிறகு, தவ்பா செய்தால் அல்லாஹ் மன்னிப்பான் என்பது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கை. அதற்கு மாற்றமாக, வேறு ஒரு ஊருக்கு பயணிக்க வேண்டும், வழியில் மரணித்தால், போக வேண்டிய ஊருக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமானது. எனவே இந்த ஹதீஸின் கருத்து குர்ஆன் கூறும் கருத்திற்கு முரணாக உள்ளது.

இந்தக் கருத்தில் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34220 , அஹ்மத்-11154 , 11687 , புகாரி-3470 , முஸ்லிம்-53395340 , 5341 , இப்னு மாஜா-2622 , முஸ்னத் அபீ யஃலா-1033 , 1356 , இப்னு ஹிப்பான்-611 , 615 , குப்ரா பைஹகீ-15836 ,

கூடுதல் தகவல் பார்க்க: வேண்டுமென்று கொலை செய்தவருக்கு மன்னிப்புண்டா? .

21 comments on Bukhari-3470

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    நீங்கள் தெரிந்தே கொலை செய்பவனுக்கு நிரந்தர நரகம் என்ற (4:93) வசனத்திற்கு முரண் என்று சொல்கிறீர்கள் நீங்களே அடுத்த வரியில் தன் தவறை உணர்ந்த பிறகு, தவ்பா செய்தால் அல்லாஹ் மன்னிப்பான் என்பது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கை என்று சொல்கிறீர்கள் அவர் தனது தவறை உணர்ந்து தவ்பாவை தேடி தானே சென்றார். இதில் என்ன முரண் என்று விளக்கவும்.

  2. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.

    கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

    ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

    குர்ஆன் 68-70

    அல்லாஹ் இந்த வசனத்தில் வீணாக கொலை செய்தவர் தவ்பா செய்தால் அல்லாஹ் மன்னிப்பதாக சொல்கிறான். ஆனால் நீங்கள் குறிப்பிடும் வசனம் தவ்பா செய்யாதவரையே குறிக்கிறது. இதில் குர்ஆனுக்கு எந்த முரணும் இல்லை சகோதரரே.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      1 . தவ்பா செய்ய வேறு ஒரு ஊருக்கு பயணிக்க வேண்டும் என்ற கருத்து சரியானதா?..

      1. வ அலைக்கும் சலாம்,

        உங்கள் கேள்விக்கான பதில் முஸ்லிம் அறிவிப்பில் உள்ளது என நினைக்கிறேன்.

        * பிறகு மீண்டும் அக்கால மக்களில் நன்கறிந்த அறிஞரைப் பற்றி அவர் விசாரித்தார். அப்போது அறிஞர் ஒருவர் அவருக்குக் காட்டப்பட்டார். (அவரிடம் சென்று) அந்த மனிதர், “நான் நூறு கொலைகள் செய்துவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?” என்று கேட்டார். அதற்கு அந்த அறிஞர், “ஆம் (கிடைக்கும்). இறைவனுக்கும் பாவமன்னிப்புக் கோரிக்கைக்கும் இடையே யார் குறுக்கே வந்து நிற்க முடியும்? நீ (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ. அங்கு மக்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் இறைவனை வழிபடு. நீ உனது ஊருக்குத் திரும்பிச் செல்லாதே! ஏனெனில், அது தீய ஊராகும்”என்று சொன்னார். – முஸ்லிம்-5339

        1. அஸ்ஸலாமு அலைக்கும்.

          2 . நீ உனது ஊருக்குத் திரும்பிச் செல்லாதே! ஏனெனில், அது தீய ஊராகும் என்ற கருத்து சரியானதா? எதை வைத்து அப்படி சொல்லியிருப்பார். அதற்கான ஆதாரம்…

          1. வ அலைக்கும் சலாம்,

            அதற்கான ஆதாரம் அந்த ஹதீஸிலேயே இருக்கிறது.

            1)அதிகமான கொலை செய்துள்ளார் ஆனால் அங்கு இவருக்கு எந்த ஒரு தண்டனையோ எதிர்போ இருக்கவில்லை ஆகவே அங்கே கொலை பெருகி இருந்திருக்கிறது.
            2)நல்லவரை விசாரித்து அறியும் நிலையில் தான் அங்கு நல்ல மனிதர்கள் அறிதாக இருந்துள்ளனர்.
            3)அக்கால மக்களில் நன்கறிந்த அறிஞர் என்று ஹதீஸில் வருகிறது அவருக்கு அந்த ஊர் அம்மக்கள் பற்றி தெரிந்திருக்கிறது.

        2. 3 . வானவர்களுக்கு மத்தியில் சர்ச்சை ஏற்படுமா?

          4 . அப்போது மற்றொரு வானவர் மனிதத் தோற்றத்தில் அங்கு வந்தார். அவரை அவ்விரு வானவர்களும் நடுவராக வைத்துக்கொண்டனர். அப்போது அந்த வானவர், “இவ்விரு ஊர்களுக்குமிடையிலுள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள். அவற்றில் எந்த ஊருக்கு மிக அருகில் அவரது உடல் இருக்கிறதோ அந்த ஊருக்குரியவராகவே அவர் இருப்பார்”என்று சொன்னார்…

          என்ற கருத்து சரியானதா?..

          1. 4)அல்லாஹ் என்ன சொல்கிறானோ அதை செய்வது மட்டுமே வானவர்களின் வேலை இங்கு இப்படி செய்தார்கள் என்றால் அது அல்லாஹ்வின் கட்டளை படிதான். ஏன் இப்படி செய்தார்கள் என்று நாம் கேள்வி எழுப்புவது அல்லாஹ்வை பார்த்து கேட்பதுபோல் ஆகிவிடும்.

            ஆதாரம்: மக்கள் படிப்பிணை பெறுவதற்காக அல்லாஹ் வானவர்கள் மூலம் நபியிடம் இதுபோன்ற விசயங்களை நடத்திகாட்டியிருப்பதை நாம் ஹதீஸ்களில் பார்க்கலாம்.

  3. அஸ்ஸலாமு அலைக்கும்,

    பலவீனமான செய்தி என சிலர் கூறுகின்றனர்….

    என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அந்த சிலர் யார்?

    1. வ அலைக்கும் ஸலாம்.

      ஒரு ஹதீஸ் விசயத்தில் கூறப்படும் இல்லத், விமர்சனங்களையே நாம் பார்க்கிறோம். அதைக் கூறுபவர் யார் என்று நாம் பார்ப்பதில்லை என்பதால் தான் சிலர் என்று குறிப்பிடுகிறோம். இதில் உங்களுக்கு ஆட்சேபனை உள்ளதா?

  4. ஸலாம். இந்த செய்தியின் படி தவ்பா செய்வதற்கு, நல்லவர்கள் வாழும் ஊருக்குச் சென்று விட வேண்டும். ”ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது” என்பது தான் பாவமன்னிப்பிற்காக இஸ்லாம் காட்டும் வழிமுறையா? அல்லது தவ்பா செய்ய வேண்டும் என்பது பாவமன்னிப்பிற்காக இஸ்லாம் காட்டும் வழிமுறையா?

    1. 5) இங்கு படிப்பிணை அல்லாஹ்வின் அளவில்லா மன்னிப்பு , தவ்பா என்பது அவன் வசம் உள்ளது அவன் நாடியவர்களை நாடிய முறையில் மன்னிப்பான்.

      ஆதாரம்: புகாரீ 3481 , 3467

      1. ”அல்லாஹ் தான் நாடியவர்களை நாடிய முறையில் மன்னிப்பான்” என்பது சரியான கருத்து தான் சகோ, நான் கேட்பது, இந்த ஹதீஸை செயல்படுத்தும் விதமாக, ”ஒருவர் தவறு செய்தால், தவ்பா செய்வதற்கு, நல்லவர்கள் வாழும் ஊருக்குச் சென்று விட வேண்டும்” என்று மக்களுக்கு பிரச்சாரம் செய்யலாமா? ஏனெனில் இது இஸ்லாம் காட்டும் வழிமுறைதானே! யோசித்து பதில் தாருங்கள். நீங்கள் தவ்பா செய்வதற்கு, அவ்வாறு தான் செய்வீர்களா?

        1. ”ஒருவர் தவறு செய்தால், தவ்பா செய்வதற்கு, நல்லவர்கள் வாழும் ஊருக்குச் சென்று விட வேண்டும்” என்று மக்களுக்கு பிரச்சாரம் செய்யலாமா?

          ஒரு குடிகாரன் மதுபானகடையில் வேலை பார்க்கிறான். அவன் தவ்பா செய்து திருந்தி வாழ நினைக்கிறான்.உங்களிடம் ஆலோசனை கேட்டால் நீங்கள் முதலில் அவன் அந்த இடத்தில் வேலை செய்யக்கூடாது என்று தான் சொல்வீர்கள் அல்லவா? அதே போல் தான் அந்த அறிஞரும் ஆலோசனை கொடுக்கிறார். இது இறை கட்டளை அல்ல அந்த அறிஞர் செய்யும் உபதேசம். இது சம்பந்தமாக பல விளக்கங்கள் உள்ளன. இன்ஷா அல்லாஹ் நீங்கள் விருப்பினால் அடுத்து சொல்கிறேன்.

          1. Anonymous says: ”இது இறை கட்டளை அல்ல அந்த அறிஞர் செய்யும் உபதேசம்”

            ஒரு மனிதர் செய்யும் உபதேசம் என்பதை நானும் ஏற்கிறேன். ஆனால், அதை உண்மைப்படுத்தும் விதமாக, ”அது தான் சரி – அப்படித்தான் செய்ய வேண்டும்” என்று கூறும் விதமாக, இந்த ஹதீஸின் கருத்து அமைந்துள்ளதை தாங்கள் கவனிக்கவில்லையா?

            ”அல்லாஹ் அதை நோக்கி, ‘நீ நெருங்கி வா!’ என்று உத்திரவிட்டான். இதை நோக்கி, ‘நீ தூரப்போ!’ என்று உத்திரவிட்டான். பிறகு, ‘அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்’ என்று கூறினான்.”

            இந்த வரிகள் கூறும் கருத்து என்ன?

            ”ஒருவர் தவறு செய்தால், தவ்பா செய்வதற்கு, நல்லவர்கள் வாழும் ஊருக்குச் சென்று விட வேண்டும்” ஒரு மனிதர் கூறியிருந்தால், அதை ஏற்க தேவையில்லை என்று கூறலாம். ஆனால், அதை ஆமோதிக்கும் விதமாக, இறைவன், பாவம் செய்த மனிதன் வெளியூருக்கு சென்று விட்டானா? என்று தெரிந்து கொள்ள, தூரத்தை அளவிட மலக்குகளை அனுப்பினான் என்று வருகிறதே!

            இப்போது சொல்லுங்கள்.
            1) இது ஏற்கத்தேவையில்லாத ஏதோ மனிதரின் கூற்றாக இந்த ஹதீஸின் கருத்து அமைந்துள்ளதா?
            2) இறைவனின் அங்கீகாரத்தோடு, இஸ்லாம் கூறும் போதனையாக இந்த ஹதீஸின் கருத்து அமைந்துள்ளதா?
            —————–

            ”வரம்பு மீறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளின்மீது நம்பிக்கை இழந்து விடாதீர்கள்” என்று கூறி தவ்பாவை ஏற்று, மனிதனை மன்னிக்கும் அளவில்லா கருணையுள்ள இறைவனை, வெளியூருக்கு அனுப்பி, சென்ற தூரத்தை அளவெடுத்துதான் மன்னிப்பான் என்று கூறுவறு இறைவனை அவமானப்படுத்தும் செயல் இல்லையா? சிந்தியுங்கள் சகோ.

          2. Anonymous says: இது சம்பந்தமாக பல விளக்கங்கள் உள்ளன. இன்ஷா அல்லாஹ் நீங்கள் விருப்பினால் அடுத்து சொல்கிறேன்.

            நாங்கள் விரும்பாவிட்டாலும், சுருக்கமாகவும் கண்ணியமாகவும் உங்கள் வாதங்களை பதிவு செய்யுங்கள். எங்கள் பதிவுகளில் தவறு இருந்தால், நாங்கள் விரும்பாவிட்டாலும் சுட்டிக்காட்டுவது உங்கள் கடமை.

            இறைவனுக்கு பயந்து எங்களுக்கு சரி என்று தெரிவதை, நாங்கள் பதிவு செய்கிறோம். இறைவனுக்கு பயந்து உங்களுக்கு சரி என்று தெரிவதை, நீங்கள் பதிவு செய்யுங்கள்.

  5. அஸ்ஸலாமு அலைக்கும் Farook , உங்கள் பதிலுக்கு நன்றி சகோதரரே, கீழ்வரும் ஹதீஸை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? இதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் எப்படி விளக்கம் கொடுப்பீர்கள்? என்பதை விளக்கவும்.

    நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

    (முற்காலத்தில்) ஒரு மனிதர், எல்லை மீறி (தீய செயல் புரிந்து)வந்தார். அவருக்கு மரணம் வந்தபோது தம் மகன்களை அழைத்து, ‘‘நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னைப் பொடிப் பொடியாக்கி பின்னர் காற்றில் தூவிவிடுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வளவும் செய்த பிறகும்) அல்லாஹ் என்னை உயிராக்க முடிந்தால் எவரையும் வேதனைப்படுத்தாத அளவுக்கு ஒரு வேதனையை (தண்டனையாக) எனக்கு அவன் அளிப்பான்” என்று கூறினார்.

    அவர் இறந்தபோது அவ்வாறே அவரைச் செய்துவிட்டார்கள். உடனே உயர்ந்தோன் அல்லாஹ், பூமியை நோக்கி, ‘‘அவரி(ன் உடல் அணுக்களி)லிருந்து உன்னில் இருப்பவற்றை ஒன்றுசேர்” என்று கட்டளையிட்டான். அவ்வாறே பூமி செய்தது. அவர் (அல்லாஹ்வின் முன்னிலையில் முழு உருப்பெற்று) நின்ற போது அல்லாஹ், ‘‘நீ இப்படிச் செய்யும் படி உன்னைத் தூண்டியது எது?” என்று கேட்டான். அவர், ‘‘என் இறைவா! உன் அச்சம்தான் இப்படிச் செய்யும்படி என் னைத் தூண்டியது” என்று பதிலளித்தார். ஆகவே, அவருக்கு அல்லாஹ் மன்னிப் பளித்தான்.

    புகாரீ – 3481

  6. அஸ்ஸலாமு அலைக்கும், நான் ஆதாரமாக சுட்டிக்காட்டிய புகாரீ – 3481 ஹதீஸையும் முரணாக உள்ளது என்று மறுத்துவிட்டீர்கள் என்பதை இப்போது தான் பார்த்தேன். இதுபோன்று இன்னும் நிறைய ஹதீஸ்களை இருக்கின்றன. அதற்கு முன்பு நீங்கள் ஒர் அடிப்படையை புரிந்துகொண்டால் இப்படி வரிசையாக ஹதீஸ்களை மறுக்கவேண்டிய நிலை வராது.

    நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

    என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். இஸ்ரவேலர் களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளை யும் அறிவியுங்கள். அதனால் குற்ற மில்லை. யார் என்மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.- புகாரீ 3461.

    இங்கு இஸ்ரவேலர் களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளை யும் அறிவியுங்கள். அதனால் குற்ற மில்லை. என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள். நீங்கள் வரிசையாக மறுக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் நடந்ததை நபி சொல்கிறார்கள். அவர்களுக்கு உள்ள சட்டங்கள், ஹலால், ஹராம் என்பது வேறு நமக்கு அவை மாற்றப்பட்டுள்ளது. இவையெல்லாம் படிப்பிணைக்காக சொல்லப்பட்டது . இந்த சட்டங்களை நமக்கு பொருந்திபார்க்ககூடாது.அது அவர்களுக்கு உரிய சட்டங்கள்.

  7. வஅலைக்கும் ஸலாம், முனாஃப்,திருமங்கலக்குடி bhai, அறிவிப்பாளர் தொடர் சரியான செய்திகள் அனைத்தையும், அனைத்து ஹதீஸ்கலை இமாம்களும் ஏற்றுக் கொள்வில்லை. இதை தாங்கள் அறிந்திருக்கக் கூடும். எனினும், இது சம்பந்தமாக ஒரு தனிக்கட்டுரையை எழுதுகிறோம். அதில் comment பகுதியில் அனைத்து வாதங்களையும் வரிசையாக அமைத்துக் கொள்வோம்.

  8. வஅலைக்கும் ஸலாம்,
    நீங்கள் சொல்வது போல் அறிவிப்பாளர் தொடர் சரியான செய்தியில் “ஷாத்” என்ற வகையும் ஹதீஸ் கலையில் உள்ளது தான். “ஷாத்” என்ற வகையிலும் யார் தவறு செய்தது என்று அறியலாம்.ஆனால் நீங்கள் மறுப்பது யாரோ ஒருவர் தவறு செய்திருக்கிறார் என்று பொத்தாம் பொதுவாக கூறுவது இப்படி சொல்லி யாரும் சஹீஹான ஹதீஸை மறுக்கவில்லை சகோதரரரே.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.