தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4040

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ ராஃபிஉவிடம் அப்துல்லாஹ் இப்னு அத்தீக் (ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு உத்பா (ரலி) அவர்களையும் அவர்களுடன் இன்னும் சிலரையும் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று கோட்டையை நெருங்கியபோது அவர்களை நோக்கி (தலைவர்) அப்துல்லாஹ் இப்னு அத்தீக் (ரலி), ‘நான் சென்று பார்த்து வரும் வரையில் நீங்கள் (இங்கேயே) இருங்கள்’ என்று கூறினார்கள். அப்போது (கோட்டை வாசிகளுக்குத் தெரியாமல்) கோட்டைக்குள் நுழைவதற்காக நான் உபாயம் செய்தேன். அப்போது அவர்களின் கழுதையொன்று காணாமல் போய்விட்டது. அதைத் தேடிய வண்ணம் தீப்பந்தத்துடன் அவர்கள் (கோட்டையிலிருந்து) வெளியேறினர். நான் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுவிடுவேனோ என்று அஞ்சினேன். நான் இயற்கைக் கடனை நிறைவேற்றுவது போன்று (என்னுடைய ஆடையால்) என் தலையையும் காலையும் மூடிக் கொண்டேன்.

பிறகு காவலன், ‘யார் (கோட்டைக்குள்) நுழைய விரும்புகிறார்களோ அவர்கள் நான் கதவை மூடுவதற்கு முன் நுழைந்து கொள்ளட்டும்’ என்று கூறினான். உடனே நான் நுழைந்து கோட்டைவாசலுக்கு அங்கிலிருந்த கழுதைத் தொழுவம் ஒன்றில் பதுங்கிக் கொண்டேன். அப்போது (யூத) மக்கள் அபூ ராஃபிஉவிடம் இரவுச் சாப்பாட்டை உண்டனர். பிறகு இரவின் ஒரு பகுதி முடியும் வரையில் (கதை) பேசிக் கொண்டிருந்தனர். பிறகு மக்கள் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினர். பின்னர் ஆரவாரங்கள் அடங்கி, எந்த அரவமும் கேட்காமலிருந்த போது நான் (பதுங்கியிருந்து இடத்திலிருந்து) வெளியேறினேன். (கோட்டையின்) காவலன் மாடத்தில் கோட்டையின் சாவியை வைத்ததை நான் (பதுங்கிக் கொண்டிருந்தபோது) பார்த்திருந்தேன். அதை நான் எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்தேன்.

நான் (என் மனத்திற்குள்) ‘மக்கள் என்னை இனம் கண்டு கொண்டால் நிதானமாக(த் தப்பி)ச் சென்று விடவேண்டும்’ என்று சொல்லிக் கொண்டேன். பிறகு, அந்த மக்கள் தங்கியிருந்த அறைகளின் கதவுகளை வெளியிலிருந்து பூட்டினேன். பிறகு அபூ ராஃபிஉ (தங்கியிருந்த மாடியறை) நோக்கி ஏணிவழியாக ஏறினேன். அப்போது அவனுடைய அறை இருள் சூழ்ந்திருந்தது. அதன் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. அந்த மனிதன் எங்கே (இருக்கிறான்) என்று என்னால் அறிய முடியவில்லை. உடனே நான், ‘அபூ ராஃபிஉவே!’ என்று அழைத்தேன். அவன், ‘யார் அது?’ என்று கேட்டான். உடனே நான் சப்தம் வந்த திசையைக் குறி வைத்து அவனை வெட்டினேன். அவன் கூச்சலிட்டான். அது (நான் நினைத்த) பலனைத் தரவில்லை. பிறகு அவனுக்கு நான் உதவுவது போன்று ‘அபூ ராஃபிஉவே! உனக்கு என்ன நேர்ந்தது?’ என்று என் குரலை மாற்றிக் கொண்டு கேட்டேன். அவன், ‘உனக்கு நான் ஆச்சரியமாகத் தெரிகிறேனா? உன் தாய்க்குக் கேடுண்டாகட்டும். என்னிடம் ஒருவன் வந்து வாளால் என்னை வெட்டினான்’ என்று கூறினான். மீண்டும் (குரல் வந்த திசையைக்) குறி வைத்து அவனை நான் வெட்டினேன். (நான் நினைத்த படி) அப்போதும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மீண்டும் அவன் கூச்சலிட்டான். அவனுடைய வீட்டார் எழுந்திருத்துவிட்டனர். பிறகு அவனுக்கு உதவுபவனைப் போன்று (பாசாங்கு செய்தபடி) குரலை மாற்றிக் கொண்டு (அவனுக்கு அருகில்) வந்தேன். அப்போது அவன் மல்லாந்து படுத்திருந்தான். உடனே (என்னுடைய) வாளை அவனுடைய வயிற்றில் வைத்து சுழற்றினேன். அப்போது (அவனுடைய) எலும்பின் (மீது என் வாள் குத்துகின்ற) சப்தத்தை கேட்டேன்.

பிறகு பதறிக் கொண்டே (அவனுடைய அறையிலிருந்து) வெளியேறி ஏணிப்படிக்கு வந்தேன். இறங்க விரும்பினேன். (ஆனால்,) அதிலிருந்து நான் விழுந்து விட்டேன். என்னுடைய கால் முறிந்துவிட்டது. நான் அதை (என்னுடைய தலைப்பாகைத் துணியால்) கட்டினேன். பிறகு கோட்டைக்கு வெளியிலிருந்த) என் சாகக்களிடம் நொண்டிக் கொண்டே வந்து அவர்களை நோக்கி, ‘நீங்கள் (விரைவாகச்) சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (காரியம் முடிந்துவிட்ட) நற்செய்தியைச் சொல்லுங்கள். (மரணச் செய்தி அறிவிப்பனிடமிருந்து அபூ ராஃபிஉவின் மரணச்) செய்தியை நான் கேட்கும் வரையில் நான் (இங்கிருந்து) நகரமாட்டேன்’ என்று கூறினேன்.

பிறகு, அதிகாலை நேரத்தில் மரணச் செய்தி அறிவிப்பவன் (கோட்டைச் சுவர் மீது) ஏறி, ‘அபூ ராஃபிஉ இறந்துவிட்டார்’ என்று அறிவிப்புச் செய்தான். உடனே நான் எழுந்து நடக்கலானேன். (அளவு கடந்த மகிழ்ச்சியினால்) எனக்கு வலி கூடத் தெரியவில்லை. என் சகாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சேர்வதற்கு முன் நான் சகாக்களைச் சென்றடைந்து விட்டேன். எனவே, நானே நபி (ஸல்) அவர்களிடம் (அந்த) நற்செய்தியைச் சொன்னேன்.
Book :64

(புகாரி: 4040)

دَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحٌ هُوَ ابْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:

«بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَبِي رَافِعٍ عَبْدَ اللَّهِ بْنَ عَتِيكٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ عُتْبَةَ، فِي نَاسٍ مَعَهُمْ، فَانْطَلَقُوا حَتَّى دَنَوْا مِنَ الحِصْنِ» فَقَالَ لَهُمْ عَبْدُ اللَّهِ بْنُ عَتِيكٍ: امْكُثُوا أَنْتُمْ حَتَّى أَنْطَلِقَ أَنَا فَأَنْظُرَ، قَالَ: فَتَلَطَّفْتُ أَنْ أَدْخُلَ الحِصْنَ، فَفَقَدُوا حِمَارًا لَهُمْ، قَالَ: فَخَرَجُوا بِقَبَسٍ يَطْلُبُونَهُ، قَالَ: فَخَشِيتُ أَنْ أُعْرَفَ، قَالَ: فَغَطَّيْتُ رَأْسِي وَجَلَسْتُ كَأَنِّي أَقْضِي حَاجَةً، ثُمَّ نَادَى صَاحِبُ البَابِ، مَنْ أَرَادَ أَنْ يَدْخُلَ فَلْيَدْخُلْ قَبْلَ أَنْ أُغْلِقَهُ، فَدَخَلْتُ ثُمَّ اخْتَبَأْتُ فِي مَرْبِطِ حِمَارٍ عِنْدَ بَابِ الحِصْنِ، فَتَعَشَّوْا عِنْدَ أَبِي رَافِعٍ، وَتَحَدَّثُوا حَتَّى ذَهَبَتْ سَاعَةٌ مِنَ اللَّيْلِ، ثُمَّ رَجَعُوا إِلَى بُيُوتِهِمْ، فَلَمَّا هَدَأَتِ الأَصْوَاتُ، وَلاَ أَسْمَعُ حَرَكَةً خَرَجْتُ، قَالَ: وَرَأَيْتُ صَاحِبَ البَابِ، حَيْثُ وَضَعَ مِفْتَاحَ الحِصْنِ فِي كَوَّةٍ، فَأَخَذْتُهُ فَفَتَحْتُ بِهِ بَابَ الحِصْنِ، قَالَ: قُلْتُ: إِنْ نَذِرَ بِي القَوْمُ انْطَلَقْتُ عَلَى مَهَلٍ، ثُمَّ عَمَدْتُ إِلَى أَبْوَابِ بُيُوتِهِمْ، فَغَلَّقْتُهَا عَلَيْهِمْ مِنْ ظَاهِرٍ، ثُمَّ صَعِدْتُ إِلَى أَبِي رَافِعٍ فِي سُلَّمٍ، فَإِذَا البَيْتُ مُظْلِمٌ، قَدْ طَفِئَ سِرَاجُهُ، فَلَمْ أَدْرِ أَيْنَ الرَّجُلُ، فَقُلْتُ: يَا أَبَا رَافِعٍ قَالَ: مَنْ هَذَا؟ قَالَ: فَعَمَدْتُ نَحْوَ الصَّوْتِ فَأَضْرِبُهُ وَصَاحَ، فَلَمْ تُغْنِ شَيْئًا، قَالَ: ثُمَّ جِئْتُ كَأَنِّي أُغِيثُهُ، فَقُلْتُ: مَا لَكَ يَا أَبَا رَافِعٍ؟ وَغَيَّرْتُ صَوْتِي، فَقَالَ: أَلاَ أُعْجِبُكَ لِأُمِّكَ الوَيْلُ، دَخَلَ عَلَيَّ رَجُلٌ فَضَرَبَنِي بِالسَّيْفِ، قَالَ: فَعَمَدْتُ لَهُ أَيْضًا فَأَضْرِبُهُ أُخْرَى، فَلَمْ تُغْنِ شَيْئًا، فَصَاحَ وَقَامَ أَهْلُهُ، قَالَ: ثُمَّ جِئْتُ وَغَيَّرْتُ صَوْتِي كَهَيْئَةِ المُغِيثِ فَإِذَا هُوَ مُسْتَلْقٍ عَلَى ظَهْرِهِ، فَأَضَعُ السَّيْفَ فِي بَطْنِهِ ثُمَّ أَنْكَفِئُ عَلَيْهِ حَتَّى سَمِعْتُ صَوْتَ العَظْمِ ثُمَّ خَرَجْتُ دَهِشًا حَتَّى أَتَيْتُ السُّلَّمَ، أُرِيدُ أَنْ أَنْزِلَ فَأَسْقُطُ مِنْهُ، فَانْخَلَعَتْ رِجْلِي فَعَصَبْتُهَا، ثُمَّ أَتَيْتُ أَصْحَابِي أَحْجُلُ، فَقُلْتُ: انْطَلِقُوا فَبَشِّرُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنِّي لاَ أَبْرَحُ حَتَّى أَسْمَعَ النَّاعِيَةَ، فَلَمَّا كَانَ فِي وَجْهِ الصُّبْحِ صَعِدَ النَّاعِيَةُ، فَقَالَ: أَنْعَى أَبَا رَافِعٍ، قَالَ: فَقُمْتُ أَمْشِي مَا بِي قَلَبَةٌ، فَأَدْرَكْتُ أَصْحَابِي قَبْلَ أَنْ يَأْتُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَشَّرْتُهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.