தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-506

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அப்துர்ரஹ்மான் பின் யஸார்-இப்னு அபூலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தொழுகை தொடர்பான சட்டங்கள் மூன்று நிலைகளில் மாற்றியமைக்கப்பட்டன.

எங்கள் தோழர்களான-நபித்தோழர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்களின் அல்லது முஃமின்களின் தொழுகை ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். தொழுகை நேரம் வந்தவுடன் மக்களை அழைக்க ஆண்களை வீடுகளுக்கு அனுப்ப நான் எண்ணினேன். மேலும், தொழுகை நேரத்தை முஸ்லிம்களுக்கு அறிவிக்க உயரமான மேடைகளின் மீது நின்று அழைக்க ஆண்களுக்கு நான் கட்டளையிடவும் எண்ணினேன். மக்கள் சங்கு ஊதத் தொடங்கும் அளவிற்கு, அல்லது கிட்டத்தட்ட அத்தகைய நிலைக்கு வந்துவிட்டார்கள்.

அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் கவலையைப் பார்த்த நான், திரும்பி வந்ததும் ஒருவரைக் (கனவில்) கண்டேன். அவர் இரண்டு பச்சைநிற ஆடைகளை அணிந்திருந்தார். அவர் பள்ளிவாசலின் மீது நின்று (சில வார்த்தைகளைக் கூறி) தொழுகைக்கு அழைத்தார். பிறகு சற்றே அமர்ந்து, பின்னர் எழுந்து அதைப் போன்றே கூறினார். ஆனால், அப்போது அவர் “கத் காமத்திஸ் ஸலாஹ்-தொழுகை ஆரம்பித்துவிட்டது” என்று சொன்னார். மக்கள் இதை பொய் என்று சொல்லிவிடுவார்கள் என்ற பயம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் நான் தூங்காமல் விழிப்புடன் தான் இதை பார்த்தேன் என்று சொல்லியிருப்பேன் என்றும் அவர் சொன்னார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக அல்லாஹ் உமக்கு நல்லதையே காட்டியுள்ளான்” என்று கூறினார்கள்.

(அம்ர் பின் மர்ஸூக் அவர்களின் அறிவிப்பில், “நிச்சயமாக அல்லாஹ் உமக்கு நல்லதையே காட்டியுள்ளான்” என்று இல்லை).

தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், “பாங்கின் வாசகங்களை பிலாலிடம் கூறி பாங்கு சொல்ல கட்டளையிடுங்கள்” என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்ஸாரித் தோழர் (கனவில்) கண்டது போன்றே நானும் (பாங்கின் வாசகங்களை) கண்டேன். ஆனால் அவர் முந்திக்கொண்டதால் நான் சொல்வதற்கு வெட்கப்பட்டேன்.


மேலும் எங்கள் தோழர்கள் கூறினார்கள்:

(ஆரம்பக் காலத்தில் ஜமாஅத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது) ஒருவர் பள்ளிக்கு வந்தால், தனக்கு முன்னால் நிறைவேற்றப்பட்ட தொழுகையின் ரக்அத்துகள் பற்றி கேட்பார். அப்போது மக்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையின் நிலையில், அல்லது ருகூஃவில் அல்லது அமர்ந்தோ தொழுதுக் கொண்டிருப்பார்கள். அந்நிலையில் சைகை மூலம் அவருக்கு தவறிவிட்ட ரக்அத்கள் குறித்து அறிவிக்கப்படும். (அல்லது இதன் கருத்து: தாமதமாக வந்தவர் தவறிவிட்டதை ஜமாஅத்தின் வரிசையில் நின்றுக் கொண்டே தனியாக நிலை, ருகூஃ, ஸஜ்தா செய்து இமாமின் ரக்அத்தை அடைவார்) 

(நிலை இவ்வாறு இருக்க) முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் (ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாக) வந்தபோது மக்கள் அவருக்கு தவறிவிட்ட ரக்அத்தை சுட்டிக் காட்டினார்கள். அதற்கு முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களை எந்த நிலையில் நான் பார்க்கிறோனோ அந்த நிலையில் தான் (நான் தொழுகையில்) இருப்பேன்” என்று கூறினார்கள்.

(தொழுகை முடிந்த போது) நபி (ஸல்) அவர்கள் “முஆத் உங்களுக்கு ஒரு முறையைக் காட்டித் தந்துள்ளார். அதையே நீங்கள் என் வழிமுறையாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.


மேலும் எங்கள் தோழர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, மக்களை மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.

பின்னர் ரமளான் நோன்பு குறித்த வசனங்கள் அருளப்பட்டன. அவர்கள் நோன்பு பழகாத ஒரு சமூகமாக இருந்ததால், அவர்களுக்கு நோன்பு கடினமாக இருந்தது. எனவே, நோன்பு நோற்காதவர்கள் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற சலுகை இருந்தது.

பின்னர், “உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கவும்” எனும் (அல்குர்ஆன்: 2:185) ஆவது இறைவசனம் அருளப்பட்டது. எனவே இதனால், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், பயணிகளுக்கும் நோன்பிலிருந்து சலுகை அளிக்கப்பட்டு, மற்றவர்களுக்கு நோன்பு நோற்குமாறு கட்டளையிடப்பட்டது.


மேலும் எங்கள் தோழர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் நோன்பு துறந்துவிட்டு, (பிறகு) சாப்பிடுவதற்கு முன் தூங்கிவிட்டால், மறுநாள் காலை வரை சாப்பிட மாட்டார். (இவ்வாறு நிலை இருந்தது). உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் தமது மனைவியை நாடினார்கள். அப்போது அவர் “நான் தூங்கி(விழித்து)யுள்ளேன்” என்றார். அவர் சாக்குப்போக்கு சொல்கிறார் என்று உமர் (ரலி) அவர்கள் நினைத்துக் கொண்டு அவருடன் உறவு கொண்டார்கள்.

அதேபோல், அன்சாரிகளில் ஒரு மனிதர் இரவு உணவு சாப்பிட வந்தார். வீட்டார்கள் “உங்களுக்கு உணவை சூடுபடுத்தும் வரை காத்திருங்கள்” என்றார்கள். அவர் (காத்திருந்த போது அசதியால்) தூங்கிவிட்டார்.

(இந்த நிலையில்) அவர்கள் காலையில் எழுந்தபோது தான், “நோன்பு நாட்களில் இரவில் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” எனும் (அல்குர்ஆன்: 2:187) ஆவது இறைவசனம் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.


இந்தச் செய்தியை அறிவிக்கும் அம்ர் பின் மர்ஸூக் (ரஹ்), இப்னுல் முஸன்னா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில் உள்ள வித்தியாசங்கள்:

1 . இப்னுல் முஸன்னா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு நன்மையைக் காட்டியுள்ளான்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அம்ர் பின் மர்ஸூக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இது இல்லை.


2 . இப்னுல் முஸன்னா (ரஹ்) அவர்களின் அறிவிப்பிலும், அம்ர் பின் மர்ஸூக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பிலும் சிறிது வார்த்தை வித்தியாசங்கள், அறிவிப்பாளர்தொடர் வித்தியாசங்கள் உள்ளன.

இதன் சுருக்கம்:

ஷுஅபா அவர்களிடமிருந்து நேரடியாக அம்ர் பின் மர்ஸூக் அறிவிக்கிறார். இப்னுல் முஸன்னா அவர்கள், முஹம்மத் பின் ஜஃபர் —> ஷுஅபா என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கிறார்.

ஷுஅபா அவர்கள் இந்த ஹதீஸை இரு அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கிறார்:

1 . அம்ர் பின் முர்ரா —> இப்னு அபூலைலா. இது ஹதீஸின் ஆரம்பம் முதல் முடிவு வரை உள்ள ஒரு நீண்ட அறிவிப்பு.

2 . ஹுஸைன் —> இப்னு அபூலைலா. இது ஹதீஸின் ஆரம்பம் முதல், “(தொழுகை முடிந்த போது) நபி (ஸல்) அவர்கள் முஆத் உங்களுக்கு ஒரு முறையைக் காட்டித் தந்துள்ளார். அதையே நீங்கள் என் வழிமுறையாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்” என்பது வரை உள்ளவை.


(இதை இன்னொரு வார்த்தையில் சொல்வதென்றால் ஷுஅபா அவர்களின் ஆசிரியரான அம்ர் பின் முர்ரா அவர்கள் இந்த ஹதீஸை இரு அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கிறார்:

1 . அம்ர் பின் முர்ரா அவர்கள் நேரடியாக இப்னு அபூலைலா அவர்களிடமிருந்து அறிவிக்கிறார். இது நீண்ட ஹதீஸ்.

2 . அம்ர் பின் முர்ரா அவர்கள், இதை ஹுஸைன் —> இப்னு அபூலைலா என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவிக்கிறார். இதில் “முஆத் (ரலி) வந்தார்கள்” என்பது வரை உள்ளது. எனவே இது சுருக்கமான ஹதீஸ்)


 

(அபூதாவூத்: 506)

حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي لَيْلَى، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، سَمِعْتُ ابْنَ أَبِي لَيْلَى، قَالَ:

أُحِيلَتِ الصَّلَاةُ ثَلَاثَةَ أَحْوَالٍ،

قَالَ: وَحَدَّثَنَا أَصْحَابُنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَقَدْ أَعْجَبَنِي أَنْ تَكُونَ صَلَاةُ الْمُسْلِمِينَ – أَوْ قَالَ – الْمُؤْمِنِينَ، وَاحِدَةً، حَتَّى لَقَدْ هَمَمْتُ أَنْ أَبُثَّ رِجَالًا فِي الدُّورِ يُنَادُونَ النَّاسَ بِحِينِ الصَّلَاةِ، وَحَتَّى هَمَمْتُ أَنْ آمُرَ رِجَالًا يَقُومُونَ عَلَى الْآطَامِ يُنَادُونَ الْمُسْلِمِينَ بِحِينِ الصَّلَاةِ حَتَّى نَقَسُوا أَوْ كَادُوا أَنْ يَنْقُسُوا»، قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَمَّا رَجَعْتُ لِمَا رَأَيْتُ مِنَ اهْتِمَامِكَ رَأَيْتُ رَجُلًا كَأَنَّ عَلَيْهِ ثَوْبَيْنِ أَخْضَرَيْنِ، فَقَامَ عَلَى الْمَسْجِدِ فَأَذَّنَ، ثُمَّ قَعَدَ قَعْدَةً، ثُمَّ قَامَ فَقَالَ مِثْلَهَا، إِلَّا أَنَّهُ يَقُولُ: قَدْ قَامَتِ الصَّلَاةُ وَلَوْلَا أَنْ يَقُولَ النَّاسُ قَالَ ابْنُ الْمُثَنَّى: أَنْ تَقُولُوا – لَقُلْتُ إِنِّي كُنْتُ يَقْظَانَ غَيْرَ نَائِمٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: – وَقَالَ ابْنُ الْمُثَنَّى – «لَقَدْ أَرَاكَ اللَّهُ عَزَّ وَجَلَّ خَيْرًا»، – وَلَمْ يَقُلْ عَمْرٌو: «لَقَدْ أَرَاكَ اللَّهُ خَيْرًا» – فَمُر بِلَالًا فَلْيُؤَذِّنْ، قَالَ: فَقَالَ عُمَرُ: أَمَا إِنِّي قَدْ رَأَيْتُ مِثْلَ الَّذِي رَأَى، وَلَكِنِّي لَمَّا سُبِقْتُ اسْتَحْيَيْتُ،


قَالَ: وَحَدَّثَنَا أَصْحَابُنَا، قَالَ: وَكَانَ الرَّجُلُ إِذَا جَاءَ يَسْأَلُ فَيُخْبَرُ بِمَا سُبِقَ مِنْ صَلَاتِهِ وَإِنَّهُمْ قَامُوا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَيْنِ قَائِمٍ وَرَاكِعٍ وَقَاعِدٍ وَمُصَلٍّ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ ابْنُ الْمُثَنَّى: قَالَ عَمْرٌو: وَحَدَّثَنِي بِهَا حُصَيْنٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى حَتَّى جَاءَ مُعَاذٌ، قَالَ شُعْبَةُ: وَقَدْ سَمِعْتُهَا مِنْ حُصَيْنٍ، فَقَالَ: لَا أَرَاهُ عَلَى حَالٍ إِلَى قَوْلِهِ كَذَلِكَ فَافْعَلُوا،

قَالَ أَبُو دَاوُدَ: ثُمَّ رَجَعْتُ إِلَى حَدِيثِ عَمْرِو بْنِ مَرْزُوقٍ، قَالَ: فَجَاءَ مُعَاذٌ، فَأَشَارُوا إِلَيْهِ، قَالَ شُعْبَةُ: وَهَذِهِ سَمِعْتُهَا مِن حُصَيْنٍ، قَالَ: فَقَالَ مُعَاذٌ: لَا أَرَاهُ عَلَى حَالٍ إِلَّا كُنْتُ عَلَيْهَا، قَالَ: فَقَالَ: إِنَّ مُعَاذًا، قَدْ سَنَّ لَكُمْ سُنَّةً، كَذَلِكَ فَافْعَلُوا “


قَالَ: وَحَدَّثَنَا أَصْحَابُنَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَدِمَ الْمَدِينَةَ ” أَمَرَهُمْ بِصِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ، ثُمَّ أُنْزِلَ رَمَضَانُ، وَكَانُوا قَوْمًا لَمْ يَتَعَوَّدُوا الصِّيَامَ، وَكَانَ الصِّيَامُ عَلَيْهِمْ شَدِيدًا فَكَانَ مَنْ لَمْ يَصُمْ أَطْعَمَ مِسْكِينًا، فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ} [البقرة: 185] فَكَانَتِ الرُّخْصَةُ لِلْمَرِيضِ، وَالْمُسَافِرِ فَأُمِرُوا بِالصِّيَامِ “


قَالَ: وَحَدَّثَنَا أَصْحَابُنَا، قَالَ: وَكَانَ الرَّجُلُ إِذَا أَفْطَرَ فَنَامَ قَبْلَ أَنْ يَأْكُلَ لَمْ يَأْكُلْ حَتَّى يُصْبِحَ، قَالَ: ” فَجَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَأَرَادَ امْرَأَتَهُ، فَقَالَتْ: إِنِّي قَدْ نِمْتُ فَظَنَّ أَنَّهَا تَعْتَلُّ فَأَتَاهَا، فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ فَأَرَادَ الطَّعَامَ فَقَالُوا: حَتَّى نُسَخِّنَ لَكَ شَيْئًا، فَنَامَ ” فَلَمَّا أَصْبَحُوا أُنْزِلَتْ عَلَيْهِ هَذِهِ الْآيَةُ {أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ} [البقرة: 187]


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-426.
Abu-Dawood-Shamila-506.
Abu-Dawood-Alamiah-426.
Abu-Dawood-JawamiulKalim-425.




இந்தச் செய்தியின் இரு அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . அம்ர் பின் மர்ஸூக்

3 . ஷுஅபா

4 . அம்ர் பின் முர்ரா

5 . அப்துர்ரஹ்மான்-இப்னு அபூலைலா

6 . சில நபித்தோழர்கள் (ரலி)


1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . முஹம்மத் பின் முஸன்னா

3 . முஹம்மத் பின் ஜஅஃபர்

4 . ஷுஅபா

5 . அம்ர் பின் முர்ரா

6 . அப்துர்ரஹ்மான்-இப்னு அபூலைலா

7 . சில நபித்தோழர்கள் (ரலி)


அல்வாரிதா-976.

 


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.