பாடம்: 5
நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றியிருந்த மக்களின் வழித் தோன்றல்களே நீங்கள். நிச்சயமாக, நூஹ் நன்றியுள்ள ஓர் அடியாராகவே திகழ்ந்தார் (அல்குர்ஆன்: 17:3) எனும் இறைவசனம்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) முன்கால் சப்பை ஒன்று அவர்களிடம் வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. (அதை) நபி (ஸல்) அவர்கள் தம் பற்களால் கடித்து அதிலிருந்து சிறிது உண்டார்கள்.
பிறகு கூறினார்கள்:
நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எதன் மூலம் ஒன்றுதிரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதை அவர்கள் செவியுற முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்துசேரும்.
அப்போது மனிதர்கள் (சிலர் வேறுசிலரை நோக்கி) “உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறுசிலரிடம், “(உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர்.
ஆகவே மனிதர்கள், ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும்படி உத்தர விட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம்பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப)நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா?” என்று கேட்பார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் இன்று (கடும்) கோபம் கொண்டிருக்கிறான். இதற்குமுன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது” என்று கூறிவிட்டு, “நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்” என்று சொல்வார்கள்.
உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று, “நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதலாவது (முக்கிய) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கேட்பார்கள்.
அதற்கு நூஹ் (அலை) அவர்கள், “என் இறைவன் இன்று (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்குமுன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப்போல் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பதுபோல் விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தாருக்கு எதிராகப் பயன்படுத்திவிட்டேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!” என்று கூறிவிட்டு, “நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீமிடம் செல்லுங்கள்” என்பார்கள்.
(அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று,) “இப்ராஹீமே! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கேட்பார்கள்.
அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், “என் இறைவன் இன்று (கடுங்)கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளேன்.
-அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூஹய்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். – நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) மூஸாவிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்களும் மூஸா (அலை) அவர்களிடம் சென்று, “மூஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தனது தூதுத்துவத்தை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும்விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கூறுவார்கள்.
அதற்கு மூஸா (அலை) அவர்கள், “இன்று என் இறைவன் (என்மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப்போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது. (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈஸாவிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்கள் ஈஸா (அலை) அவர்களிடம் சென்று, “ஈஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் குழந்தை யாய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?” என்று கேட்பார்கள்.
அதற்கு ஈஸா (அலை) அவர்கள், “என் இறைவன் இன்று (என்மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை – (தாம் புரிந்து விட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் – நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
அப்போது மக்கள் என்னிடம் வந்து “முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். இறைத்தூதர்களில் இறுதியானவர். உங்களது முன், பின் பாவங்களை இறைவன் மன்னித்துவிட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கூறுவர்.
அப்போது நான் நடந்து இறைவனின் அரியணைக்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) ஸஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்குமுன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான்.
பிறகு, “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி, “இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்’ என்பேன். அதற்கு “முஹம்மதே! சொர்க்கத்தின் வாயில்களில் வலப் பக்க வாயில் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாயில்களிலும் மக்களுடன் இணைந்து நுழையலாம்’ என்று கூறப்படும்.
என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்க வாயிலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் “மக்காவிற்கும், (யமனிலுள்ள) “ஹிம்யர்’ எனும் ஊருக்கும் இடையிலுள்ள’ அல்லது “மக்காவிற்கும், (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள’ தூரமாகும்.
அத்தியாயம்: 65
(புகாரி: 4712)بَابُ {ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا} [الإسراء: 3]
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِلَحْمٍ فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ، وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَشَ مِنْهَا نَهْشَةً، ثُمَّ قَالَ: ” أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ القِيَامَةِ، وَهَلْ تَدْرُونَ مِمَّ ذَلِكَ؟ يَجْمَعُ اللَّهُ النَّاسَ الأَوَّلِينَ وَالآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ، يُسْمِعُهُمُ الدَّاعِي وَيَنْفُذُهُمُ البَصَرُ، وَتَدْنُو الشَّمْسُ، فَيَبْلُغُ النَّاسَ مِنَ الغَمِّ وَالكَرْبِ مَا لاَ يُطِيقُونَ وَلاَ يَحْتَمِلُونَ، فَيَقُولُ النَّاسُ: أَلاَ تَرَوْنَ مَا قَدْ بَلَغَكُمْ، أَلاَ تَنْظُرُونَ مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ؟ فَيَقُولُ بَعْضُ النَّاسِ لِبَعْضٍ: عَلَيْكُمْ بِآدَمَ، فَيَأْتُونَ آدَمَ عَلَيْهِ السَّلاَمُ فَيَقُولُونَ لَهُ: أَنْتَ أَبُو البَشَرِ، خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ، وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ، وَأَمَرَ المَلاَئِكَةَ فَسَجَدُوا لَكَ، اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ، أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ، أَلاَ تَرَى إِلَى مَا قَدْ بَلَغَنَا؟ فَيَقُولُ آدَمُ: إِنَّ رَبِّي قَدْ غَضِبَ اليَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ، وَإِنَّهُ قَدْ نَهَانِي عَنِ الشَّجَرَةِ فَعَصَيْتُهُ، نَفْسِي نَفْسِي نَفْسِي، اذْهَبُوا إِلَى غَيْرِي، اذْهَبُوا إِلَى نُوحٍ، فَيَأْتُونَ نُوحًا فَيَقُولُونَ: يَا نُوحُ، إِنَّكَ أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى أَهْلِ الأَرْضِ، وَقَدْ سَمَّاكَ اللَّهُ عَبْدًا شَكُورًا، اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ، أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ؟ فَيَقُولُ: إِنَّ رَبِّي عَزَّ وَجَلَّ قَدْ غَضِبَ اليَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ، وَإِنَّهُ قَدْ كَانَتْ لِي دَعْوَةٌ دَعَوْتُهَا عَلَى قَوْمِي، نَفْسِي نَفْسِي نَفْسِي، اذْهَبُوا إِلَى غَيْرِي، اذْهَبُوا إِلَى إِبْرَاهِيمَ، فَيَأْتُونَ إِبْرَاهِيمَ فَيَقُولُونَ: يَا إِبْرَاهِيمُ أَنْتَ نَبِيُّ اللَّهِ وَخَلِيلُهُ مِنْ أَهْلِ الأَرْضِ، اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ، فَيَقُولُ لَهُمْ : إِنَّ رَبِّي قَدْ غَضِبَ اليَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ، وَإِنِّي قَدْ كُنْتُ كَذَبْتُ ثَلاَثَ كَذِبَاتٍ – فَذَكَرَهُنَّ أَبُو حَيَّانَ فِي الحَدِيثِ – نَفْسِي نَفْسِي نَفْسِي، اذْهَبُوا إِلَى غَيْرِي، اذْهَبُوا إِلَى مُوسَى فَيَأْتُونَ، مُوسَى فَيَقُولُونَ: يَا مُوسَى أَنْتَ رَسُولُ اللَّهِ، فَضَّلَكَ اللَّهُ بِرِسَالَتِهِ وَبِكَلاَمِهِ عَلَى النَّاسِ، اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ، أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ؟ فَيَقُولُ: إِنَّ رَبِّي قَدْ غَضِبَ اليَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ، وَإِنِّي قَدْ قَتَلْتُ نَفْسًا لَمْ أُومَرْ بِقَتْلِهَا، نَفْسِي نَفْسِي نَفْسِي، اذْهَبُوا إِلَى غَيْرِي، اذْهَبُوا إِلَى عِيسَى ابْنِ مَرْيَمَ، فَيَأْتُونَ عِيسَى، فَيَقُولُونَ: يَا عِيسَى أَنْتَ رَسُولُ اللَّهِ، وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ، وَكَلَّمْتَ النَّاسَ فِي المَهْدِ صَبِيًّا، اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ؟ فَيَقُولُ عِيسَى: إِنَّ رَبِّي قَدْ غَضِبَ اليَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ قَطُّ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ، وَلَمْ يَذْكُرْ ذَنْبًا، نَفْسِي نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى مُحَمَّدٍ، فَيَأْتُونَ مُحَمَّدًا فَيَقُولُونَ: يَا مُحَمَّدُ أَنْتَ رَسُولُ اللَّهِ وَخَاتِمُ الأَنْبِيَاءِ، وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ، فَأَنْطَلِقُ فَآتِي تَحْتَ العَرْشِ، فَأَقَعُ سَاجِدًا لِرَبِّي عَزَّ وَجَلَّ، ثُمَّ يَفْتَحُ اللَّهُ عَلَيَّ مِنْ مَحَامِدِهِ وَحُسْنِ الثَّنَاءِ عَلَيْهِ شَيْئًا، لَمْ يَفْتَحْهُ عَلَى أَحَدٍ قَبْلِي، ثُمَّ يُقَالُ: يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ سَلْ تُعْطَهْ، وَاشْفَعْ تُشَفَّعْ فَأَرْفَعُ رَأْسِي، فَأَقُولُ: أُمَّتِي يَا رَبِّ، أُمَّتِي يَا رَبِّ، أُمَّتِي يَا رَبِّ، فَيُقَالُ: يَا مُحَمَّدُ أَدْخِلْ مِنْ أُمَّتِكَ مَنْ لاَ حِسَابَ عَلَيْهِمْ مِنَ البَابِ الأَيْمَنِ مِنْ أَبْوَابِ الجَنَّةِ، وَهُمْ شُرَكَاءُ النَّاسِ فِيمَا سِوَى ذَلِكَ مِنَ الأَبْوَابِ، ثُمَّ قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّ مَا بَيْنَ المِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الجَنَّةِ، كَمَا بَيْنَ مَكَّةَ وَحِمْيَرَ – أَوْ كَمَا بَيْنَ مَكَّةَ وَبُصْرَى
Bukhari-Tamil-4712.
Bukhari-TamilMisc-4712.
Bukhari-Shamila-4712.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
السلام عليكم ورحمة الله وبركاته
புகாரி 4712 ஹதீஸில் இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைத்தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பக்கம் செல்ல சொன்னது விடுபட்டுள்ளது
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.
ஜஸாகல்லாஹு கைரா. பிழை திருத்தப்பட்டது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ முஸ்லிம் ஷரீபுடைய ஹதீஸ் நம்பர்கள் எதை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது மக்தப் ஷாமிலா அடிப்படையில் அல்லது வேறு ஏதாவது அடிப்படையில் தகவல் தந்தால் நன்றாக இருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு.
Muslim-Tamil-1.
Muslim-TamilMisc-9.
Muslim-Shamila-8.
Muslim-Alamiah-9.
Muslim-JawamiulKalim-12.
இது போன்று பெரும்பாலான ஹதீஸ்களில் இருக்கும். முதல் எண் தற்போது அனைவரும் பயன்படுத்தும் முஸ்லிம் தமிழாக்கம் எண். ஹதீஸ்நூல்களை தேர்வு செய்து நம்பர் கொடுத்தால் இந்த எண் அடிப்படையில் கிடைக்கும்.
Muslim-Shamila-8. இது ஷாமிலா எண்.