தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2941

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப்(ரலி) எனக்குப் பின்வருமாறு அறிவித்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தம் அமலில் இருந்த) கால கட்டத்தில் வியாபாரிகளாக வந்த குறைஷிகளில் சிலரிடையே நானும் ஷாம் நாட்டில் இருந்தேன். சீசருடைய தூதர் எங்களை ஷாமின் ஒரு பகுதியில் கண்டார். என்னையும் என் தோழர்களையும் அழைத்துச் சென்றார். நாங்கள் (அனைவரும்) ஈலியாவை அடைந்தோம். நாங்கள் சீசரிடம் கொண்டு செல்லப்பட்டோம்.

அவர் தன் அரசவையில் கிரீடம் அணிந்தவராய் அமர்ந்திருந்தார். அப்போது அவரைச் சுற்றிலும் ரோம நாட்டு ஆட்சியாளர்கள் பலரும் அமர்ந்திருந்தனர். தன் மொழி பெயர்ப்பாளரிடம் சீசர், ‘தன்னை இறைத்தூதர் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கும் இந்த மனிதருக்கு இவர்களில் நெருங்கிய உறவினர் யார்’ என்று நீ அவர்களிடம் கேள்’ என்று கூறினார். (அவ்வாறே அவர் கேட்டபோது,) நான், ‘இவர்களில் அவருக்கு நானே நெருங்கிய உறவினன்’ என்று சொன்னேன்.

உடனே அவர், ‘உமக்கும் அவருக்குமிடையில் என்ன உறவு?’ என்று கேட்டார். நான், ‘அவர் என் தந்தையின் சகோதரர் மகன்’ என்று கூறினேன். அந்த நேரத்தில் (எங்கள்) பயணக் குழுவில் (நபியவர்களின் முப்பாட்டனார்) அப்து மனாஃபின் மக்களில் என்னைத் தவிர வேறெவரும் இருக்கவில்லை.

உடனே சீசர், ‘அவரை என்னருகில் கொண்டு வாருங்கள்’ என்று கூறிவிட்டு, என் தோழர்களை என் முதுகுக்குப் பின்னே நிற்க வைக்கும்படி உத்தரவிட்டார். அவர்கள் அவ்வாறே என் முதுகுக்குப் பின்னே நிற்க வைக்கப்பட்டார்கள். பிறகு சீசர், தன் மொழிபெயர்ப்பாளரிடம், ‘தன்னை நபி (இறைத் தூதர்) என்று வலியுறுத்திக் கூறும் இந்த மனிதரைக் குறித்து இவரிடம் நான் (விபரங்கள்) கேட்கப் போகிறேன்’ என்றும், ‘இவர் பொய் சொன்னால் அதைப் பொய் என்று (நமக்குத்) தெரிவிக்கும்படி இவருடைய சகாக்களிடம் சொல்’ என்றும் சொன்னார்…

அல்லாஹ்வின் மீதாணையாக! என் தோழர்கள் என்னைக் குறித்து நான் பொய் சொன்னதாகத் தெரிவித்து விடுவார்களே என்னும் வெட்கம் மட்டும் எனக்கில்லாதிருந்திருந்தால் நான் (முஹம்மத்(ஸல்) அவர்களைப் பற்றி சீசர் என்னிடம் கேட்டபோது, அவரிடம் (அவர்களைக் குறித்து உண்மைக்கு மாறான தகவல்கள் தந்து) பொய் சொல்லியிருப்பேன்.

ஆனால், என்னைப் பற்றி நான் பொய் கூறினார்கள் என அவர்கள் தெரிவித்து விடுவார்களே என்று நான் வெட்கப்பட்டேன். எனவே, தான் (முஹம்மத்(ஸல்) அவர்களைப் பற்றி) உண்மையைச் சொன்னேன்… பிறகு சீசர், தன் மொழிபெயர்ப்பாளரிடம், ‘அந்த மனிதரின் குலம் எப்படிப்பட்டது என்று இவரிடம் கேள்’ என்றார். நான், ‘அவர் எங்களிடையே உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவராவார்’ என்று கூறினேன்.

அதற்கு அவர், ‘உங்களில் எவரேனும் இதற்கு முன் (நான் நபி- இறைத்தூதர் என்னும்) இந்த வாதத்தை முன்வைத்திருக்கிறாரா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை’ என்று பதிலளித்தேன். சீசர், ‘அவரின் முன்னோர்களில் அரசர் எவராவது (வாழ்ந்து) சென்றிருக்கிறாரா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை’ என்றேன். ‘அவரை மக்களில் மேட்டுக் குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா?’ என்று கேட்டார். நான், ‘அவர்களில் பலவீனர்கள் தான் அவரைப் பின்பற்றுகின்றனர்’ என்று கூறினேன்.

அவர், ‘அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்களா? அல்லது குறைந்து கொண்டே போகிறார்களா?’ என்று கேட்டார். நான், ‘அவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்’ என்று கூறினேன். பிறகு ‘(அவரின் மார்க்கத்தை ஏற்ற பிறகு) தன் புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து எவரேனும் மதம் மாறிச் செல்வதுண்டா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை’ என்றேன். அவர், ‘அந்த மனிதர் வாக்கு மீறுகிறாரா?’ என்று கேட்க, நான், ‘இல்லை. ஆனால், நாங்கள் இப்போது அவருடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சமாதான ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர் வாக்கு மீறி விடுவாரென்று நாங்கள் அஞ்சுகிறோம்’ என்று பதிலளித்தேன்… இதைத் தவிர என்னை என் தோழர்கள் காட்டிக் கொடுத்து விடுவார்களே என்று அஞ்சாமல் அவரைக் குறைசொல்லக் கூடிய வார்த்தை வேறு எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை…

பிறகு அவர், ‘நீங்கள் அவருடனும் அவர் உங்களுடனும் போர் புரிந்ததுண்டா?’ என்று கேட்டார். நான், ‘உண்டு’ என்றேன். அதற்கு அவர், ‘உங்களுக்கிடையிலான போர்(களின் முடிவு)கள் எவ்வாறிருந்தன?’ என்று கேட்டார். நான், ‘அவை (அவற்றின் வெற்றியும் தோல்வியும்) எங்களிடையே சுழல்முறையில் மாறிமாறி வருகின்றன. ஒருமுறை அவர் எங்களை வெற்றி கொள்வார்; மறுமுறை அவரை நாங்கள் வெற்றி கொள்வோம்’ என்று பதிலளித்தேன். சீசர், ‘என்ன செய்யும்படி அவர் உங்களுக்குக் கட்டளையிடுகிறார்?’ என்று கேட்டார்.

நான், ‘அல்லாஹ்வை மட்டுமே நாங்கள் வணங்கி வர வேண்டுமென்றும் அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது என்றும் அவர் எங்களுக்குக் கட்டளையிடுகிறார். எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வங்களை நாங்கள் வணங்கக் கூடாது என்று எங்களைத் தடுக்கிறார். தொழுகையை நிறைவேற்றும்படியும் தான தருமம் செய்யும்படியும் கற்பைப் பேணி வரும்படியும் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் படியும் நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைப் பாதுகாப்பாகத் திருப்பித் தரும்படியும். எங்களுக்குக் கட்டளையிடுகிறார்’ என்று கூறினேன்.

நான் இதை சீசரிடம் சொன்னபோது அவர் தன் மொழி பெயர்ப்பாளரிடம் கூறினார்; அவரிடம் கூறுங்கள்: நான் உம்மிடம், ‘உங்களிடையே அவரின் குலம் எப்படிப்பட்டது?’ என்று கேட்டேன். ‘அவர் உயர்குலத்தைச் சேர்ந்தவர்’ என்று நீர் பதிலளித்தீர். இவ்வாறே, இறைத்தூதர்கள் தம் சமுதாயத்தின் நற்குடியில் தான் அனுப்பப்படுவர்.

நான், ‘இவருக்கு முன்னர் உங்களில் எவராவது இந்த வாதத்தை முன் வைத்ததுண்டா?’ என்று கேட்டேன். ‘இல்லை’ என்று நீர் பதிலளித்தீர். இவருக்கு முன்னரும் எவரேனும் இந்த வாதத்தை முன் வைத்திருந்ததாக நீர் சொல்லியிருந்தால், ‘தமக்கு முன்னர் (சிலரால்) முன் வைக்கப்பட்ட ஒரு வாதத்தையே பின்பற்றிச் சொல்கிற ஒருவர் இவர்’ என்று நான் சொல்லியிருப்பேன்.

‘அவர் இந்த வாதத்தை முன் வைப்பதற்கு முன்பு, அவர் பொய் சொன்னதாக நீங்கள் குற்றம் சாட்டியதுண்டா?’ என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், ‘இல்லை’ என்று பதிலளித்தீர். (அதிலிருந்து) மக்களிடம் பொய் சொல்ல(த் துணியா)த அவர், அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல(த் துணிய) மாட்டார் என்று புரிந்து கொண்டேன்.

‘அவரின் முன்னோர்களிடையே அரசர் எவரேனும் இருந்திருக்கிறாரா?’ என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், ‘இல்லை’ என்றீர். அவரின் முன்னோர்களிடையே அரசர் எவரும் இருந்திருப்பாராயின், ‘தம் முன்னோர்களின் ஆட்சியதிகாரத்தை (தாமும்) அடைய விரும்பும் ஒருவர் இவர்’ என்று கூறியிருப்பேன்.

‘மக்களில் மேட்டுக் குடியினர் அவரைப் பின்பற்றுகிறார்களா? மக்களிடையேயுள்ள பலவீனர்கள் பின்பற்றுகிறார்களா?’ என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், ‘ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர்’ என்று பதிலளித்தீர். அவர்கள் தாம் (எப்போதும்) இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் (நாளுக்கு நாள்) அதிகரித்து வருகின்றனரா? குறைந்து கொண்டே வருகின்றனரா?’ என்று கேட்டேன். அதற்கு நீர், ‘அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்’ என்று பதிலளித்தீர் இறைநம்பிக்கை இத்தகையது தான். அது முழுமையடையும் வரை (அதிகரித்து கொண்டே செல்லும்.)

‘அவரின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டோரில் எவராவது தம் (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?’ என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், ‘இல்லை’ என்று பதிலளித்தீர். இறைநம்பிக்கை இத்தகையதே. அதன் எழில், இதயங்களில் கலக்கும்போது அதைக் குறித்து எவருமே அதிருப்தியடைய மாட்டார்.

‘அவர் வாக்கு மீறுவாரா?’ என்று நான் உம்மைக் கேட்டதற்கு நீர், ‘இல்லை’ என்று பதிலளித்தீர். இறைத் தூதர்கள் இத்தகையவர்களே. அவர்கள் வாக்கு மீறுவதில்லை. மேலும், நான், ‘நீங்கள் அவருடனும் அவர் உங்களுடனும் போர் புரிந்துண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நீர், ‘போர் புரிந்ததுண்டு’ என்றும், ‘உங்களுக்கும் அவருக்குமிடையே போர் (முடிவுகளான வெற்றியும் தோல்வியும்) மாறி மாறி (சுழன்று) வந்து கொண்டிருக்கும் என்றும்; ஒரு முறை உங்களுக்கு வெற்றி கிடைத்தால் மறுமுறை அவருக்கு வெற்றி கிடைக்கும்’ என்றும் பதிலளித்தீர். இப்படித் தான் இறைத்தூதர்கள் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதி வெற்றி அவர்களுக்கே கிடைக்கும்.

‘உங்களுக்கு அவர் என்ன கட்டறையிடுகிறார்?’ என்று நான் உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர், அல்லாஹ்வை வணங்கும்படியும் அவனுக்கு எதனையும் இணையாக்காமல் இருக்கும்படியும் கட்டளையிடுகிறார் என்றும் உங்கள் முன்னோர்கள் வணங்கிவந்தவற்றை நீங்கள் வணங்க வேண்டாமென்று உங்களைத் தடுக்கிறார் என்றும், தொழுகையை(நிலை நிறுத்தும்படி)யும் வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கைக்கொள்ளும்படியும் ஒப்பந்தங்களைச் சரிவர நிறைவேற்றும்படியும் அடைக்கலப் பொருளைப் பாதுகாப்பாகச் திருப்பித் தரும்படியும் அவர் உங்களுக்குக் கட்டளையிடுக்கிறார் என்றும் பதிலளித்தீர். எந்த இறைத்தூதர் வரவிருப்பதாக நான் அறிந்திருந்தேனோ அவரின் பண்புகள் இவை தாம். ஆனால், அவர் உங்களிலிருந்து வருவார் என்று நான் அறிந்திருக்கவில்லை.

நீர் சொல்வது உண்மையாயிருப்பின், என்னுடைய இவ்விரு பாதங்கள் பதிந்துள்ள இந்த இடத்திற்கு விரைவில் அவர் அதிபதியாவார். நான் அவரைச் சந்திப்பேன். அவரிடம் நான் இருந்திருப்பேனாயின் அவரின் கால்களைக் கழுவியிருப்பேன்’ என்று கூறினார். பிறகு, சீசர் அல்லாஹ்வின் தூதருடைய கடிதத்தைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். (அது கொண்டு வரப்பட்டதும்) அது அவருக்குப் படித்துக் காட்டப்பட்டது.

அதில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:
அளவற்ற அருளாளன், கருணையன்புடையோன் அல்லாஹ்தவின் திருப்பெயரால்…இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்).

நேர்வழியைப் பின்பற்றியவர் மீது (இறைவனின்) சாந்தி பொழியட்டும். நிற்க, நான் உங்களை இஸ்லாத்தை ஏற்கும்படி அழைக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.(நீங்கள் நம்பிக்கை கொண்டதற்காக) உங்களுக்குச் சேர வேண்டிய நன்மையை இருமடங்காகத் தருவான். நீங்கள் புறக் கணித்தால், உங்கள் குடிமக்களின் பாவமும்(அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போவதின் குற்றமும்) உங்களையே சேரும்.

வேதம் வழங்கப்பட்டவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு கொள்கையின் பக்கம் வாருங்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் நாம் வணங்கமாட்டோம். எதனையும் (எவரையும்) அவனுக்கு இணையாக்க மாட்டோம். அல்லாஹ்வை விட்டுவிட்டு நம்மில் ஒருவர், மற்றவரைக் கடவுள்களாக ஆக்கிக் கொள்ள மாட்டோம் (என்பதே அந்தக் கொள்கை).

அவர்கள் (இந்த அழைப்பைப்) புறக்கணிப்பார்களாயின், ‘நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிபவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாயிருங்கள்’ என்று (அவர்களிடம்) கூறிவிடுங்கள்.

சீசர் தன் கூற்றைச் சொல்லிமுடித்தவுடன் அவரைச் சுற்றிலுமிருந்த ரோம நாட்டு(பைஸாந்திய) ஆட்சியாளர்களின் குரல்கள் உயர்ந்து அவர்களின் கூச்சல் அதிகரித்தது. அதனால், அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நான் அறிய முடியாமல் போய்விட்டது. எங்களை வெளியே கொண்டு செல்லும்படி உத்தரவிடப்பபட்டது. நாங்கள் (சீசரின் அவையிலிருந்து) வெளியேற்றப்பட்டடோம். என் தோழர்களுடன் வெளியே வந்து அவர்களுடன் தனிமையில் (பேசியபடி) இருந்தபோது நான், ‘இப்னு அபீ கப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரின் மன்னனான இவனே அவருக்கு அஞ்சுகின்றானே’ என்று கூறினேன்.

(அன்றிலிருந்து) இறைவன் மீதாணையாக! நான் அடங்கிப் போனேன். இவரின் மார்க்கம் விரைவில் வெற்றி பெறும் என்று உறுதியாக எண்ணியவனாகவே இருந்து வந்தேன். அதற்குள், இஸ்லாத்தை நான் வெறுத்த போதிலும் அல்லாஹ் என் உள்ளத்தில் அதைப் புகுத்திவிட்டான்.
Book :56

(புகாரி: 2941)

قَالَ ابْنُ عَبَّاسٍ فَأَخْبَرَنِي أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ أَنَّهُ كَانَ بِالشَّأْمِ فِي رِجَالٍ مِنْ قُرَيْشٍ قَدِمُوا تِجَارًا فِي المُدَّةِ الَّتِي كَانَتْ بَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ كُفَّارِ قُرَيْشٍ، قَالَ أَبُو سُفْيَانَ، فَوَجَدَنَا رَسُولُ قَيْصَرَ بِبَعْضِ الشَّأْمِ، فَانْطُلِقَ بِي وَبِأَصْحَابِي، حَتَّى قَدِمْنَا إِيلِيَاءَ، فَأُدْخِلْنَا عَلَيْهِ، فَإِذَا هُوَ جَالِسٌ فِي مَجْلِسِ مُلْكِهِ، وَعَلَيْهِ التَّاجُ، وَإِذَا حَوْلَهُ عُظَمَاءُ الرُّومِ،

فَقَالَ لِتَرْجُمَانِهِ: سَلْهُمْ أَيُّهُمْ أَقْرَبُ نَسَبًا إِلَى هَذَا الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، قَالَ أَبُو سُفْيَانَ: فَقُلْتُ : أَنَا أَقْرَبُهُمْ إِلَيْهِ نَسَبًا، قَالَ: مَا قَرَابَةُ مَا بَيْنَكَ وَبَيْنَهُ؟ فَقُلْتُ: هُوَ ابْنُ عَمِّي، وَلَيْسَ فِي الرَّكْبِ يَوْمَئِذٍ أَحَدٌ مِنْ بَنِي عَبْدِ مَنَافٍ غَيْرِي، فَقَالَ قَيْصَرُ: أَدْنُوهُ، وَأَمَرَ بِأَصْحَابِي، فَجُعِلُوا خَلْفَ ظَهْرِي عِنْدَ كَتِفِي، ثُمَّ قَالَ لِتَرْجُمَانِهِ: قُلْ لِأَصْحَابِهِ: إِنِّي سَائِلٌ هَذَا الرَّجُلَ عَنِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، فَإِنْ كَذَبَ فَكَذِّبُوهُ،

قَالَ أَبُو سُفْيَانَ: وَاللَّهِ لَوْلاَ الحَيَاءُ يَوْمَئِذٍ، مِنْ أَنْ يَأْثُرَ أَصْحَابِي عَنِّي الكَذِبَ، لَكَذَبْتُهُ حِينَ سَأَلَنِي عَنْهُ، وَلَكِنِّي اسْتَحْيَيْتُ أَنْ يَأْثُرُوا الكَذِبَ عَنِّي، فَصَدَقْتُهُ، ثُمَّ قَالَ لِتَرْجُمَانِهِ: قُلْ لَهُ كَيْفَ نَسَبُ هَذَا الرَّجُلِ فِيكُمْ؟ قُلْتُ: هُوَ فِينَا ذُو نَسَبٍ، قَالَ: فَهَلْ قَالَ هَذَا القَوْلَ أَحَدٌ مِنْكُمْ قَبْلَهُ؟ قُلْتُ: لاَ، فَقَالَ: كُنْتُمْ تَتَّهِمُونَهُ عَلَى الكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ؟ قُلْتُ: لاَ، قَالَ: فَهَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ؟ قُلْتُ: لاَ، قَالَ: فَأَشْرَافُ النَّاسِ يَتَّبِعُونَهُ أَمْ ضُعَفَاؤُهُمْ؟ قُلْتُ: بَلْ ضُعَفَاؤُهُمْ، قَالَ: فَيَزِيدُونَ أَوْ يَنْقُصُونَ؟ قُلْتُ: بَلْ يَزِيدُونَ، قَالَ: فَهَلْ يَرْتَدُّ أَحَدٌ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ؟ قُلْتُ: لاَ، قَالَ: فَهَلْ يَغْدِرُ؟ قُلْتُ: لاَ، وَنَحْنُ الآنَ مِنْهُ فِي مُدَّةٍ، نَحْنُ نَخَافُ أَنْ يَغْدِرَ، – قَالَ أَبُو سُفْيَانَ: وَلَمْ يُمْكِنِّي كَلِمَةٌ أُدْخِلُ فِيهَا شَيْئًا أَنْتَقِصُهُ بِهِ، لاَ أَخَافُ أَنْ تُؤْثَرَ عَنِّي غَيْرُهَا -، قَالَ: فَهَلْ قَاتَلْتُمُوهُ أَوْ قَاتَلَكُمْ؟ قُلْتُ: نَعَمْ، قَالَ: فَكَيْفَ كَانَتْ حَرْبُهُ وَحَرْبُكُمْ؟ قُلْتُ: كَانَتْ دُوَلًا وَسِجَالًا، يُدَالُ عَلَيْنَا المَرَّةَ، وَنُدَالُ عَلَيْهِ الأُخْرَى،

قَالَ: فَمَاذَا يَأْمُرُكُمْ بِهِ؟ قَالَ: يَأْمُرُنَا أَنْ نَعْبُدَ اللَّهَ وَحْدَهُ لاَ نُشْرِكُ بِهِ شَيْئًا، وَيَنْهَانَا عَمَّا كَانَ يَعْبُدُ آبَاؤُنَا، وَيَأْمُرُنَا بِالصَّلاَةِ، وَالصَّدَقَةِ، وَالعَفَافِ، وَالوَفَاءِ بِالعَهْدِ، وَأَدَاءِ الأَمَانَةِ، فَقَالَ لِتَرْجُمَانِهِ حِينَ قُلْتُ ذَلِكَ لَهُ: قُلْ لَهُ: إِنِّي سَأَلْتُكَ عَنْ نَسَبِهِ فِيكُمْ، فَزَعَمْتَ أَنَّهُ ذُو نَسَبٍ، وَكَذَلِكَ الرُّسُلُ تُبْعَثُ فِي نَسَبِ قَوْمِهَا، وَسَأَلْتُكَ: هَلْ قَالَ أَحَدٌ مِنْكُمْ هَذَا القَوْلَ قَبْلَهُ، فَزَعَمْتَ أَنْ لاَ، فَقُلْتُ: لَوْ كَانَ أَحَدٌ مِنْكُمْ قَالَ هَذَا القَوْلَ قَبْلَهُ، قُلْتُ رَجُلٌ يَأْتَمُّ بِقَوْلٍ قَدْ قِيلَ قَبْلَهُ، وَسَأَلْتُكَ: هَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ، فَزَعَمْتَ أَنْ لاَ، فَعَرَفْتُ أَنَّهُ لَمْ يَكُنْ لِيَدَعَ الكَذِبَ عَلَى النَّاسِ وَيَكْذِبَ عَلَى اللَّهِ، وَسَأَلْتُكَ: هَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ، فَزَعَمْتَ أَنْ لاَ، فَقُلْتُ لَوْ كَانَ مِنْ آبَائِهِ مَلِكٌ، قُلْتُ يَطْلُبُ مُلْكَ آبَائِهِ، وَسَأَلْتُكَ: أَشْرَافُ النَّاسِ يَتَّبِعُونَهُ أَمْ ضُعَفَاؤُهُمْ، فَزَعَمْتَ أَنَّ ضُعَفَاءَهُمُ اتَّبَعُوهُ، وَهُمْ أَتْبَاعُ الرُّسُلِ، وَسَأَلْتُكَ: هَلْ يَزِيدُونَ أَوْ يَنْقُصُونَ، فَزَعَمْتَ أَنَّهُمْ يَزِيدُونَ، وَكَذَلِكَ الإِيمَانُ حَتَّى يَتِمَّ، وَسَأَلْتُكَ هَلْ يَرْتَدُّ أَحَدٌ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ، فَزَعَمْتَ أَنْ لاَ، فَكَذَلِكَ الإِيمَانُ حِينَ تَخْلِطُ  بَشَاشَتُهُ القُلُوبَ، لاَ يَسْخَطُهُ أَحَدٌ، وَسَأَلْتُكَ هَلْ يَغْدِرُ، فَزَعَمْتَ أَنْ لاَ، وَكَذَلِكَ الرُّسُلُ لاَ يَغْدِرُونَ، وَسَأَلْتُكَ: هَلْ قَاتَلْتُمُوهُ وَقَاتَلَكُمْ، فَزَعَمْتَ أَنْ قَدْ فَعَلَ، وَأَنَّ حَرْبَكُمْ وَحَرْبَهُ تَكُونُ دُوَلًا، وَيُدَالُ عَلَيْكُمُ المَرَّةَ وَتُدَالُونَ عَلَيْهِ الأُخْرَى، وَكَذَلِكَ الرُّسُلُ تُبْتَلَى وَتَكُونُ لَهَا العَاقِبَةُ،

وَسَأَلْتُكَ: بِمَاذَا يَأْمُرُكُمْ، فَزَعَمْتَ أَنَّهُ يَأْمُرُكُمْ أَنْ تَعْبُدُوا اللَّهَ وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَيَنْهَاكُمْ عَمَّا كَانَ يَعْبُدُ آبَاؤُكُمْ، وَيَأْمُرُكُمْ بِالصَّلاَةِ، وَالصَّدَقَةِ، وَالعَفَافِ، وَالوَفَاءِ بِالعَهْدِ، وَأَدَاءِ الأَمَانَةِ، قَالَ: وَهَذِهِ صِفَةُ النَّبِيِّ، قَدْ كُنْتُ أَعْلَمُ أَنَّهُ خَارِجٌ، وَلَكِنْ لَمْ أَظُنَّ أَنَّهُ مِنْكُمْ، وَإِنْ يَكُ مَا قُلْتَ حَقًّا، فَيُوشِكُ أَنْ يَمْلِكَ مَوْضِعَ قَدَمَيَّ هَاتَيْنِ وَلَوْ أَرْجُو أَنْ أَخْلُصَ إِلَيْهِ، لَتَجَشَّمْتُ لُقِيَّهُ، وَلَوْ كُنْتُ عِنْدَهُ لَغَسَلْتُ قَدَمَيْهِ،

قَالَ أَبُو سُفْيَانَ: ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُرِئَ، فَإِذَا فِيهِ: ” بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ، إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ، سَلاَمٌ عَلَى مَنِ اتَّبَعَ الهُدَى، أَمَّا بَعْدُ: فَإِنِّي أَدْعُوكَ بِدِعَايَةِ الإِسْلاَمِ، أَسْلِمْ تَسْلَمْ، وَأَسْلِمْ يُؤْتِكَ اللَّهُ أَجْرَكَ مَرَّتَيْنِ، فَإِنْ تَوَلَّيْتَ، فَعَلَيْكَ إِثْمُ الأَرِيسِيِّينَ وَ: {يَا أَهْلَ الكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ، أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلاَ نُشْرِكَ بِهِ شَيْئًا، وَلاَ يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ، فَإِنْ تَوَلَّوْا، فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ} [آل عمران: 64] ،

قَالَ أَبُو سُفْيَانَ: فَلَمَّا أَنْ قَضَى مَقَالَتَهُ، عَلَتْ أَصْوَاتُ الَّذِينَ حَوْلَهُ مِنْ عُظَمَاءِ الرُّومِ، وَكَثُرَ لَغَطُهُمْ، فَلاَ أَدْرِي مَاذَا قَالُوا، وَأُمِرَ بِنَا، فَأُخْرِجْنَا، فَلَمَّا أَنْ خَرَجْتُ مَعَ أَصْحَابِي، وَخَلَوْتُ بِهِمْ قُلْتُ لَهُمْ: لَقَدْ أَمِرَ أَمْرُ ابْنِ أَبِي كَبْشَةَ، هَذَا مَلِكُ بَنِي الأَصْفَرِ يَخَافُهُ،

قَالَ أَبُو سُفْيَانَ: وَاللَّهِ مَا زِلْتُ ذَلِيلًا مُسْتَيْقِنًا بِأَنَّ أَمْرَهُ سَيَظْهَرُ، حَتَّى أَدْخَلَ اللَّهُ قَلْبِي الإِسْلاَمَ وَأَنَا كَارِهٌ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.