அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
இன்று என்னிடம் ஒருவர் வந்து, ஒரு விஷயத்தைக் குறித்து கேட்டார். அவருக்கு என்ன பதில் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை. அவர், ‘ஆயுத பாணியான, செயல் வேகமுள்ள ஒருவர் தம் தலைவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொள்கிறார். அப்போது தலைவர் அவரால் செய்ய முடியாத சில விஷயங்களைச் செய்யும்படி (வற்புறுத்தி) அவருக்கு உத்தரவிடுகிறார் எனில் அவர் என்ன செய்வது?’ என்று கேட்டார்.
நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு என்ன(பதில்) சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், நாங்கள் (இத்தகைய புனிதப் போர்களில்) நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போதெல்லாம் அவர்கள் ஒரு விஷயத்தை ஒருமுறை தான் உத்தரவிடுவார்கள். நாங்கள் அதைச் செய்து விடுவோம். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கும் வரை நன்மையில் இருப்பீர்கள். (நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சித் தலைவருக்குக் கீழ்ப்படிவதால் தீங்கேதும் நேராது.)
உங்கள் உள்ளத்தில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் (விஷயமறிந்த) யாரிடமாவது கேளுங்கள். அவர், உங்கள் (நெருடலை நீக்கி) சந்தேகத்தை நிவர்த்தி செய்யக்கூடும். (இனிவரும் காலங்களில்) அத்தகைய (தகுதி வாய்ந்த ஒரு)வரை நீங்கள் அடைய முடியாமலும் போகக் கூடும்.
எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவரும் இல்லையோ அவன் மீதாணையாக! இந்த உலகத்தில் போனது போக எஞ்சியிருப்பவற்றை, தூய நீர் குடிக்கப்பட்டு கசடுகள் மட்டும் எஞ்சி (தேங்கி நின்று)விட்ட ஒரு குட்டையாகவே கருதுகிறேன்’ என்று கூறினேன்.
Book :56
بَابُ عَزْمِ الإِمَامِ عَلَى النَّاسِ فِيمَا يُطِيقُونَ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ
لَقَدْ أَتَانِي اليَوْمَ رَجُلٌ، فَسَأَلَنِي عَنْ أَمْرٍ مَا دَرَيْتُ مَا أَرُدُّ عَلَيْهِ، فَقَالَ: أَرَأَيْتَ رَجُلًا مُؤْدِيًا نَشِيطًا، يَخْرُجُ مَعَ أُمَرَائِنَا فِي المَغَازِي، فَيَعْزِمُ عَلَيْنَا فِي أَشْيَاءَ لاَ نُحْصِيهَا؟ فَقُلْتُ لَهُ: وَاللَّهِ مَا أَدْرِي مَا أَقُولُ لَكَ، إِلَّا أَنَّا «كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَسَى أَنْ لاَ يَعْزِمَ عَلَيْنَا فِي أَمْرٍ إِلَّا مَرَّةً حَتَّى نَفْعَلَهُ، وَإِنَّ أَحَدَكُمْ لَنْ يَزَالَ بِخَيْرٍ مَا اتَّقَى اللَّهَ، وَإِذَا شَكَّ فِي نَفْسِهِ شَيْءٌ سَأَلَ رَجُلًا، فَشَفَاهُ مِنْهُ، وَأَوْشَكَ أَنْ لاَ تَجِدُوهُ، وَالَّذِي لاَ إِلَهَ إِلَّا هُوَ مَا أَذْكُرُ مَا غَبَرَ مِنَ الدُّنْيَا إِلَّا كَالثَّغْبِ شُرِبَ، صَفْوُهُ وَبَقِيَ كَدَرُهُ»
சமீப விமர்சனங்கள்