தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3045

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 170 ஒருவர் தன்னைக் கைது செய்யும்படி எதிரியிடம் சரணடையலாமா? அவ்வாறு சரணடைய விரும்பாதவரும், எதிரிகளால் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு இரண்டு ரக்கஅத்துகள் தொழுதவரும்.

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்துப் பேர்கள் கொண்ட ஒரு குழுவினரை உளவுப்படையாக அனுப்பி வைத்தார்கள். உமர் இப்னு கத்தாபுடைய மகன் ஆஸிமின் (தாய்வழிப்) பாட்டனார் ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரியை உளவுப் படைக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் புறப்பட்டு, உஸ்ஃபானுக்கும் மக்காவுக்கும் இடையிலுள்ள ‘ஹத்ஆ’ என்னுமிடத்திற்கு வந்தபோது ஹுதைல் குலத்தைச் சேர்ந்த பனூலிஹ்யான் என்றழைக்கப்படும் ஒரு கிளையினருக்கு இந்த உளவுப் படையினர் வரும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

உடனே அக்கிளையினர் (அவர்களைப் பிடிப்பதற்காக) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்ற கிட்டத் தட்ட இருநூறு வீரர்களை தங்களுக்காகத் திரட்டிக் கொண்டு இந்த உளவுப் படையினரின் சுவடுகளைப் பின்பற்றி (அவர்களைத் தேடியபடி) சென்றனர். (வழியில்) உளவுப்படையினர் மதீனாவிலிருந்து பயண உணவாகக் கொண்டு வந்திருந்த பேரீச்சம் பழங்களைத் தின்று (அவற்றின் கொட்டைகளைப் போட்டு)விட்டுச் சென்ற இடத்தைக் கண்டனர். உடனே, ‘இது யத்ரிபுடைய (மதீனாவுடைய) பேரீச்சம் பழம்’ என்று கூறினர்.

எனவே, அவர்களின் கால் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றனர். அவர்களை ஆஸிம்(ரலி) அவர்களும் அவர்களின் சகாக்களும் கண்டபோது, உயரமான (குன்று போன்ற) ஓரிடத்தில் (புகலிடம் தேடி) ஒதுங்கி நின்றனர். அவர்களை பனூ லிஹ்யான் குலத்தினர் சூழ்ந்தனர். அவர்கள் அந்த உளவுப் படையினரிடம், ‘நீங்கள் இறங்கி வந்து எங்களிடம் சரணடைந்து விடுங்கள். உங்களுக்கு நாங்கள் உறுதிமொழியும் வாக்கும் அளிக்கிறோம். உங்களில் எவரையும் நாங்கள் கொல்லமாட்டோம்’ என்று கூறினார்கள்.

உளவுப் படையின் தலைவரான ஆஸிம் இப்னு ஸாபித்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் ஒரு நிராகரிப்பாளனின் பொறுப்பில் (என்னை ஒப்படைத்தவனாக இந்தக் குன்றிலிருந்து) கீழே இறங்க மாட்டேன்” என்று கூறிவிட்டு, ‘இறைவா! எங்கள் நிலை குறித்து உன் தூதருக்குத் தெரிவித்து விடு’ என்று பிரார்த்தித்தார்கள்.

எதிரிகள் அவர்களின் மீது அம்பெய்து ஆஸிம் உட்பட ஏழு பேரைக் கொன்றனர். உளவுப் படையினரில் (எஞ்சியிருந்த) மூன்று பேர் எதிரிகளிடம் உறுதிமொழியும் வாக்கும் பெற்று இறங்கினார்கள். அவர்கள் அன்சாரித் தோழர் குபைப் அவர்களும், இப்னு தசினா அவர்களுக்கு மற்றுமொருவரும் ஆவர். இவர்கள் தங்கள் கையில் கிடைத்தவுடன் நிராகரிப்பாளர்கள் தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அவர்களைக் கட்டினார்கள். (உளவுப் படையில் எஞ்சிய மூவரில்) மூன்றாவது மனிதர்,

‘இது முதலாவது நம்பிக்கை துரோகம் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுடன் வர மாட்டேன். (கொல்லப்பட்ட) இவர்கள் எனக்கு ஒரு (நல்ல பாடமாக அமைந்துள்ளனர்’ என்று கூறினார். உடனே, அவர்கள் அவரை இழுத்துச் சென்று தம்மோடு வரும்படி நிர்பந்தித்தார்கள். அதற்கு அவர் மறுத்து விடவே அவரைக் கொலை செய்துவிட்டார்கள். பிறகு குபைப் அவர்களையும் இப்னு தசினா அவர்களையும் பிடித்துச் சென்று மக்காவில் விற்றுவிட்டனர்.

இது பத்ருப் போருக்குப் பிறகு நடந்த சம்பவமாகும். குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் என்னும் குலத்தார் வாங்கினர். அந்தக் குலத்தின் தலைவர் ஹாரிஸ் இப்னு ஆமிர் என்பவரை குபைப் அவர்கள் பத்ருப் போரில் கொன்று விட்டிருந்தார்கள். எனவே, (அதற்குப் பழிவாங்குவதற்காக குபைப் அவர்களை பனூ ஹாரிஸ் குலத்தார் வாங்கிக் கைது செய்து வைத்திருந்தனர்.) அவர்களிடம் குபைப் அவர்கள் கைதியாக இருந்தார்கள்.

உபைதுல்லாஹ் இப்னு இயாள்(ரஹ்) கூறினார்கள் என அறிவிப்பாளர் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.

ஹாரிஸின் மகள் என்னிடம் கூறினார்:

குபைப் அவர்களைக் கொல்வதற்காக (எங்கள் குடும்பத்தார்) ஒன்று கூடியபோது, குபைப் தேவையற்ற முடிகளைக் களைவதற்காக ஒரு சவரக் கத்தியை என்னிடமிருந்து இரவல் வாங்கினார். அப்போது என்னுடைய குழந்தை ஒருவனை அவர் கையிலிலெடுத்தார். அவன் அவரிடம் சென்றபோது நான் (பார்க்காமல்) கவனக் குறைவாக இருந்து விட்டேன். அவர் கையில் சவரக் கத்தி இருக்க, தம் மடியின் மீது அவனை உட்கார வைத்திருப்பதை கண்டேன். அதைக் கண்டு நான் கடும் பீதியடைந்தேன். என் முகத்தில் தெரிந்த பீதியை குபைப் புரிந்து கொண்டார். உடனே, ‘நான் இவனைக் கொன்று விடுவேன் என்று நீ பயப்படுகிறாயா? நான் அப்படிச் செய்யமாட்டேன்’ என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! குபைப் அவர்களை விடச் சிறந்த ஒரு கைதியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஒரு நாள் தம் கையிலிருந்த திராட்சைக் குலை ஒன்றிலிருந்து (பழங்களை எடுத்து) உண்டு கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அவரின் கை இரும்புக் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்தது. மேலும், அப்போது மக்கா நகரில் பழம் (விளையும் பருவம்) எதுவும் இருக்கவில்லை.

…மேலும், ஹாரிஸின் மகள், ‘அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த இரணமாகும். அல்லாஹ் அதை குபைப் அவர்களுக்கு அளித்திருந்தான்’ என்று கூறி வந்தார். (என அறிவிப்பாளர் இடையில் கூறுகிறார்.)

(தொடர்ந்து அறிவிப்பாளர் கூறுகிறார்:)

அவர்கள் குபைப் அவர்களைக் கொல்வதற்காக ஹரம் (எனும் இரத்தம் சிந்துவது அனுமதிக்கப்படாத புனிதப்) பகுதியிலிருந்து ‘ஹில்’ (எனும் புனித எல்லைக்கு வெளியே இருக்கும் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றபோது அவர்களிடம் குபைப் அவர்கள், ‘என்னை இரண்டு ரக்அத்துகள் தொழ விடுங்கள்’ என்று கூறினார்கள். (தொழுது முடித்து) பிறகு, ‘நான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் நீண்ட நேரம் தொழுதிருப்பேன்’ என்று கூறிவிட்டு,

‘இறைவா! இவர்களை எண்ணி வைத்துக் கொண்டு (ஒருவர் விடாமல்) பழி வாங்குவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். மேலும், ‘நான் முஸ்லிமாகக் கொல்லப்படுவதால் நான் எதைப் பற்றியும் பொருட்படுத்தப் போவதில்லை. எந்த இடத்தில் நான் இறந்தாலும் நான் இறைவனுக்காகவே கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும்போது, அவன் நாடினால் என்னுடைய துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது கூட (தன்) அருள் வளத்தைப் பொழிவான்’ என்று கவி பாடினார்கள்.

பின்னர், குபைப் அவர்களை ஹாரிஸின் மகன் (உக்பா) கொன்றுவிட்டார். அன்றிலிருந்து அடைத்து வைத்து அல்லது கட்டி வைத்துக் கொல்லப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் குபைப் அவர்களே என்றாயிற்று. ஆஸிம் இப்னு ஸாபித் அவர்கள் கொல்லப்பட்டபோது, அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு (அவர்களின் நிலைகுறித்து தன் தூதருக்குத் தெரிவித்து)விட்டான். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களுக்கு உளவுப் படையினரின் செய்தியையும், அவர்களுக்கு குறைஷிக்குல நிராகரிப்பாளர்களில் சிலருக்கு ஆஸிம் அவர்கள் கொல்லப்பட்டது குறித்துத் தெரிவிக்கப்பட்டவுடன் (கொல்லப்பட்டது அவர்தான் என்று) அவரை அடையாளம் தெரிந்து கொள்ள அவரின் அங்கம் எதையாவது தமக்குக் கொடுத்தனுப்பும் படி கேட்டு அவர்கள் ஆளனுப்பினார்கள்.

ஏனெனில், ஆஸிம் அவர்கள் பத்ருப் போரின்போது குறைஷிகளின் தலைவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தார்கள். அப்போது ஆஸிம் அவர்களுக்காக (அவர்களின் உடலுக்குப் பாதுகாப்பாக) ஆண் தேனீக்களின் கூட்டம் ஒன்று நிழல் தரும் மேகத்தைப் போன்று (அவரைச் சுற்றிலும் அரணாகப் படர்ந்திருக்கும் படி) அனுப்பப்பட்டது. அது அவர்களை குறைஷிகளின் தூதுவரிடமிருந்து காப்பாற்றியது. எனவே, அவர்களின் சதையிலிருந்து அவர்களால் எதையும் துண்டித்து எடுத்துச் செல்ல முடியவில்லை.
Book : 56

(புகாரி: 3045)

بَابٌ: هَلْ يَسْتَأْسِرُ الرَّجُلُ وَمَنْ لَمْ يَسْتَأْسِرْ، وَمَنْ رَكَعَ رَكْعَتَيْنِ عِنْدَ القَتْلِ

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ أَبِي سُفْيَانَ بْنِ أَسِيدِ بْنِ جَارِيَةَ الثَّقَفِيُّ، وَهُوَ حَلِيفٌ لِبَنِي زُهْرَةَ وَكَانَ مِنْ أَصْحَابِ أَبِي هُرَيْرَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

«بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشَرَةَ رَهْطٍ سَرِيَّةً عَيْنًا، وَأَمَّرَ عَلَيْهِمْ عَاصِمَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ جَدَّ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الخَطَّابِ»، فَانْطَلَقُوا حَتَّى إِذَا كَانُوا بِالهَدَأَةِ، وَهُوَ بَيْنَ عُسْفَانَ وَمَكَّةَ، ذُكِرُوا لِحَيٍّ مِنْ هُذَيْلٍ، يُقَالُ لَهُمْ بَنُو لَحْيَانَ، فَنَفَرُوا لَهُمْ قَرِيبًا مِنْ مِائَتَيْ رَجُلٍ كُلُّهُمْ رَامٍ، فَاقْتَصُّوا آثَارَهُمْ حَتَّى وَجَدُوا مَأْكَلَهُمْ تَمْرًا تَزَوَّدُوهُ مِنَ المَدِينَةِ، فَقَالُوا: هَذَا تَمْرُ يَثْرِبَ فَاقْتَصُّوا آثَارَهُمْ، فَلَمَّا رَآهُمْ عَاصِمٌ وَأَصْحَابُهُ لَجَئُوا إِلَى فَدْفَدٍ وَأَحَاطَ بِهِمُ القَوْمُ، فَقَالُوا لَهُمْ: انْزِلُوا وَأَعْطُونَا بِأَيْدِيكُمْ ، وَلَكُمُ العَهْدُ وَالمِيثَاقُ، وَلاَ نَقْتُلُ مِنْكُمْ أَحَدًا، قَالَ عَاصِمُ بْنُ ثَابِتٍ أَمِيرُ السَّرِيَّةِ: أَمَّا أَنَا فَوَاللَّهِ لاَ أَنْزِلُ اليَوْمَ فِي ذِمَّةِ كَافِرٍ، اللَّهُمَّ أَخْبِرْ عَنَّا نَبِيَّكَ، فَرَمَوْهُمْ بِالنَّبْلِ فَقَتَلُوا عَاصِمًا فِي سَبْعَةٍ، فَنَزَلَ إِلَيْهِمْ ثَلاَثَةُ رَهْطٍ بِالعَهْدِ وَالمِيثَاقِ، مِنْهُمْ خُبَيْبٌ الأَنْصَارِيُّ، وَابْنُ دَثِنَةَ، وَرَجُلٌ آخَرُ، فَلَمَّا اسْتَمْكَنُوا مِنْهُمْ أَطْلَقُوا أَوْتَارَ قِسِيِّهِمْ فَأَوْثَقُوهُمْ، فَقَالَ الرَّجُلُ الثَّالِثُ: هَذَا أَوَّلُ الغَدْرِ، وَاللَّهِ لاَ أَصْحَبُكُمْ إِنَّ لِي فِي هَؤُلاَءِ لَأُسْوَةً يُرِيدُ القَتْلَى، فَجَرَّرُوهُ وَعَالَجُوهُ عَلَى أَنْ يَصْحَبَهُمْ فَأَبَى فَقَتَلُوهُ، فَانْطَلَقُوا بِخُبَيْبٍ، وَابْنِ دَثِنَةَ حَتَّى بَاعُوهُمَا بِمَكَّةَ بَعْدَ وَقْعَةِ بَدْرٍ، فَابْتَاعَ خُبَيْبًا بَنُو الحَارِثِ بْنِ عَامِرِ بْنِ نَوْفَلِ بْنِ عَبْدِ مَنَافٍ، وَكَانَ خُبَيْبٌ هُوَ قَتَلَ الحَارِثَ بْنَ عَامِرٍ يَوْمَ بَدْرٍ، فَلَبِثَ خُبَيْبٌ عِنْدَهُمْ أَسِيرًا، فَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عِيَاضٍ، أَنَّ بِنْتَ الحَارِثِ أَخْبَرَتْهُ: أَنَّهُمْ حِينَ اجْتَمَعُوا اسْتَعَارَ مِنْهَا مُوسَى يَسْتَحِدُّ بِهَا، فَأَعَارَتْهُ، فَأَخَذَ ابْنًا لِي وَأَنَا غَافِلَةٌ حِينَ أَتَاهُ قَالَتْ: فَوَجَدْتُهُ مُجْلِسَهُ عَلَى فَخِذِهِ وَالمُوسَى بِيَدِهِ، فَفَزِعْتُ فَزْعَةً عَرَفَهَا خُبَيْبٌ فِي وَجْهِي، فَقَالَ: تَخْشَيْنَ أَنْ أَقْتُلَهُ؟ مَا كُنْتُ لِأَفْعَلَ ذَلِكَ، وَاللَّهِ مَا رَأَيْتُ أَسِيرًا قَطُّ خَيْرًا مِنْ خُبَيْبٍ، وَاللَّهِ لَقَدْ وَجَدْتُهُ يَوْمًا يَأْكُلُ مِنْ قِطْفِ عِنَبٍ فِي يَدِهِ، وَإِنَّهُ لَمُوثَقٌ فِي الحَدِيدِ، وَمَا بِمَكَّةَ مِنْ ثَمَرٍ، وَكَانَتْ تَقُولُ: إِنَّهُ لَرِزْقٌ مِنَ اللَّهِ رَزَقَهُ خُبَيْبًا، فَلَمَّا خَرَجُوا مِنَ الحَرَمِ لِيَقْتُلُوهُ فِي الحِلِّ، قَالَ لَهُمْ خُبَيْبٌ: ذَرُونِي أَرْكَعْ رَكْعَتَيْنِ، فَتَرَكُوهُ، فَرَكَعَ رَكْعَتَيْنِ، ثُمَّ قَالَ: لَوْلاَ أَنْ تَظُنُّوا أَنَّ مَا بِي جَزَعٌ لَطَوَّلْتُهَا، اللَّهُمَّ أَحْصِهِمْ عَدَدًا،

مَا أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا … عَلَى أَيِّ شِقٍّ كَانَ لِلَّهِ مَصْرَعِي
وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَأْ … يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ

فَقَتَلَهُ ابْنُ الحَارِثِ فَكَانَ خُبَيْبٌ هُوَ سَنَّ الرَّكْعَتَيْنِ لِكُلِّ امْرِئٍ مُسْلِمٍ قُتِلَ صَبْرًا، فَاسْتَجَابَ اللَّهُ لِعَاصِمِ بْنِ ثَابِتٍ يَوْمَ أُصِيبَ، «فَأَخْبَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْحَابَهُ خَبَرَهُمْ، وَمَا أُصِيبُوا، وَبَعَثَ نَاسٌ مِنْ كُفَّارِ قُرَيْشٍ إِلَى عَاصِمٍ حِينَ حُدِّثُوا أَنَّهُ قُتِلَ، لِيُؤْتَوْا بِشَيْءٍ مِنْهُ يُعْرَفُ، وَكَانَ قَدْ قَتَلَ رَجُلًا مِنْ عُظَمَائِهِمْ يَوْمَ بَدْرٍ، فَبُعِثَ عَلَى عَاصِمٍ مِثْلُ الظُّلَّةِ مِنَ الدَّبْرِ، فَحَمَتْهُ مِنْ رَسُولِهِمْ، فَلَمْ يَقْدِرُوا عَلَى أَنْ يَقْطَعَ مِنْ لَحْمِهِ شَيْئًا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.