தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3142

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஹுனைன் போர் நடந்த ஆண்டில் (போருக்காக) நாங்கள் புறப்பட்டோம். (எதிரிகளைப் போர்க்களத்தில்) நாங்கள் சந்தித்தபோது (ஆரம்பத்தில்) முஸ்லிம்களுக்குள் பதற்றம் நிலவியது. (அவர்கள் தோல்வியுற்றனர்.) நான் இணைவைப்பவன் ஒருவனைப் பார்த்தேன். அவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்து அவரைக் கொல்ல முயன்றான். நான் அவனைச் சென்று வாளால் அவனுடைய (கழுத்துக்குக் கீழே) தோள் நரம்பில் வெட்டினேன். உடனே அவன் (அந்த முஸ்லிமை விட்டுவிட்டு) என்னை இறுக அணைத்தான். அதனால் நான் மரணக் காற்றை சுவாசிக்கலானேன். பிறகு மரணம் அவனைத் தழுவ அவன் என்னைவிட்டுவிட்டான்.

உடனே நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களைச் சென்றடைந்து, ‘மக்களுக்கு என்ன நேர்ந்தது? (இப்படிக் களத்திலிருந்து பின்வாங்கி ஓடுகிறார்களே)’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘(இது) அல்லாஹ் விதித்த விதி’ என்று பதிலளித்தார்கள். பிறகு, மக்கள் (அப்பாஸ்(ரலி) அழைத்ததால் போர்க் களத்திற்குத்) திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்.) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அமர்ந்து, ‘போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருள்கள் உரியவை’ என்று கூறினார்கள்.

அப்போது நான் எழுந்து நின்று, ‘எனக்கு சாட்சி சொல்வார் யார்?’ என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து கொண்டேன். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருள்கள் உரியவை’ என்று கூறினார்கள். உடனே, நான் எழுந்து நின்று, ‘எனக்கு சாட்சி சொல்வார் யார்?’ என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து விட்டேன். பிறகு, மூன்றவாது முறையாக அதே போன்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடனே, நான் எழுந்தேன்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அபூ கத்தாதாவே! உங்களுக்கென்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். நடந்த நிகழ்ச்சியை நான் அவர்களிடம் எடுத்துரைத்தேன். ஒருவர், இறைத்தூதர் அவர்களே! இவர் உண்மையே சொன்னார். இவரால் கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்கள் என்னிடம் உள்ளன. எனக்காக அவரை (ஏதாவது கொடுத்துத்) திருப்திப்படுத்தி விடுங்கள்’ என்றார்.

அப்போது அபூ பக்ர் சித்திக்(ரலி), ‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வின் சார்பாகவும் போரிட்டு (தன்னால்) கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுக்க இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்’ என்று கூறினார்கள்.

உடனே நபி(ஸல்) அவர்கள், ‘(அபூ பக்ர்) உண்மை சொன்னார்’ என்று கூறிவிட்டு அதை எனக்கே கொடுத்து விட்டார்கள். நான் அந்தப் போர்க் கவசத்தை விற்றுவிட்டு பனூ ஸலமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந் தோட்டத்தை வாங்கினேன். அதுதான் இஸ்லாத்தைத் தழுவிய பின் நான் சேகரித்த முதல் சொத்தாகும்.
Book :57

(புகாரி: 3142)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ ابْنِ أَفْلَحَ، عَنْ أَبِي مُحَمَّدٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ، عَنْ أَبِي قَتَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ حُنَيْنٍ، فَلَمَّا التَقَيْنَا كَانَتْ لِلْمُسْلِمِينَ جَوْلَةٌ، فَرَأَيْتُ رَجُلًا مِنَ المُشْرِكِينَ عَلاَ رَجُلًا مِنَ المُسْلِمِينَ، فَاسْتَدَرْتُ حَتَّى أَتَيْتُهُ مِنْ وَرَائِهِ حَتَّى ضَرَبْتُهُ بِالسَّيْفِ عَلَى حَبْلِ عَاتِقِهِ، فَأَقْبَلَ عَلَيَّ فَضَمَّنِي ضَمَّةً وَجَدْتُ مِنْهَا رِيحَ المَوْتِ، ثُمَّ أَدْرَكَهُ المَوْتُ، فَأَرْسَلَنِي، فَلَحِقْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ فَقُلْتُ: مَا بَالُ النَّاسِ؟ قَالَ: أَمْرُ اللَّهِ، ثُمَّ إِنَّ النَّاسَ رَجَعُوا، وَجَلَسَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَنْ قَتَلَ قَتِيلًا لَهُ عَلَيْهِ بَيِّنَةٌ فَلَهُ سَلَبُهُ»، فَقُمْتُ فَقُلْتُ: مَنْ يَشْهَدُ لِي، ثُمَّ جَلَسْتُ، ثُمَّ قَالَ: «مَنْ قَتَلَ قَتِيلًا لَهُ عَلَيْهِ بَيِّنَةٌ فَلَهُ سَلَبُهُ»، فَقُمْتُ فَقُلْتُ: مَنْ يَشْهَدُ لِي، ثُمَّ جَلَسْتُ، ثُمَّ قَالَ الثَّالِثَةَ مِثْلَهُ، فَقُمْتُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لَكَ يَا أَبَا قَتَادَةَ؟»، فَاقْتَصَصْتُ عَلَيْهِ القِصَّةَ، فَقَالَ رَجُلٌ: صَدَقَ يَا رَسُولَ اللَّهِ، وَسَلَبُهُ عِنْدِي فَأَرْضِهِ عَنِّي، فَقَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُ: لاَهَا اللَّهِ، إِذًا لاَ يَعْمِدُ إِلَى أَسَدٍ مِنْ أُسْدِ اللَّهِ، يُقَاتِلُ عَنِ اللَّهِ وَرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُعْطِيكَ سَلَبَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقَ»، فَأَعْطَاهُ، فَبِعْتُ الدِّرْعَ، فَابْتَعْتُ بِهِ مَخْرَفًا فِي بَنِي سَلِمَةَ، فَإِنَّهُ لَأَوَّلُ مَالٍ تَأَثَّلْتُهُ فِي الإِسْلاَمِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.