தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3165

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து நிதி ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘அதைப் பள்ளி வாசலில் பரப்பி வையுங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். அது நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட செல்வத்திலேயே அதிகமானதாக இருந்தது. அப்போது, அப்பாஸ்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குக் கொடுங்கள். நான் (பத்ருப் போரில் கைது செய்யப்பட்ட பின் விடுதலை பெறுவதற்காக) எனக்காகவும் (என் சகோதரர் மகன்) அகீலுக்காகவும் பிணைத் தொகை கொடுத்திருக்கிறேன்’ என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள். உடனே, அப்பாஸ்(ரலி), தம் துணியில் அதை அள்ளிப் போட்டார்கள். பிறகு அதைத் தூக்கிச் சுமக்கச் சென்றார்கள். அவர்களால் (அதைச் சுமக்க) முடியவில்லை. எனவே, ‘(உங்கள் தோழர்களான) இவர்களில் ஒருவருக்கு இதை என் (தோளின்) மீது தூக்கி வைக்கும்படி உத்தரவிடுங்கள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நான் உத்தரவிட மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு அப்பாஸ்(ரலி), ‘நீங்களாவது என் தோள் மீது இதைத் தூக்கி வையுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கும் நபி(ஸல்) அவர்கள், ‘வைக்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார்கள்.

பிறகு, அதிலிருந்து கொஞ்சத்தை (எடுத்துக் கீழே) போட்டுவிட்டு அதைத் தூக்கிச் சுமக்க முயன்றார்கள். (அப்போதும்) அதை அவர்களால் தூக்க முடியவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்களிடம், ‘இதைத் தூக்கி என் மீது சுமத்தும்படி இவர்களில் ஒருவருக்கு உத்தரவிடுங்கள்’ என்று (மீண்டும்) கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார்கள். பிறகு, அதிலிருந்து கொஞ்சத்தை (எடுத்துக் கீழே) போட்டுவிட்டு அதைத் தம் தோளில் சுமந்து கொண்டு நடக்கலானார்கள்.

நபி(ஸல்) அவர்கள், அப்பாஸ்(ரலி) அவர்களின் பேராசையைக் கண்டு வியப்படைந்துவிட்டு அவர்கள் மறையும் வரை அவர்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். அங்கே, அந்த நிதியிலிருந்து ஒரேயொரு திர்ஹம் கூட மிஞ்சாமல் (தர்மம் செய்து) தீர்ந்துவிட்ட பின்புதான் நபி(ஸல்) அவர்கள் தம் இடத்தைவிட்டு எழுந்தார்கள்.
Book :58

(புகாரி: 3165)

وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَالٍ مِنَ البَحْرَيْنِ، فَقَالَ: «انْثُرُوهُ فِي المَسْجِدِ»، فَكَانَ أَكْثَرَ مَالٍ أُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ جَاءَهُ العَبَّاسُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي إِنِّي فَادَيْتُ نَفْسِي وَفَادَيْتُ عَقِيلًا، قَالَ: «خُذْ»، فَحَثَا فِي ثَوْبِهِ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ فَلَمْ يَسْتَطِعْ، فَقَالَ: اؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ إِلَيَّ، قَالَ: «لاَ» قَالَ: فَارْفَعْهُ أَنْتَ عَلَيَّ، قَالَ: «لاَ»، فَنَثَرَ مِنْهُ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ فَلَمْ يَرْفَعْهُ، فَقَالَ: فَمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ عَلَيَّ، قَالَ: «لاَ»، قَالَ: فَارْفَعْهُ أَنْتَ عَلَيَّ، قَالَ: «لاَ»، فَنَثَرَ مِنْهُ، ثُمَّ احْتَمَلَهُ عَلَى كَاهِلِهِ، ثُمَّ انْطَلَقَ فَمَا زَالَ يُتْبِعُهُ بَصَرَهُ حَتَّى خَفِيَ عَلَيْنَا، عَجَبًا مِنْ حِرْصِهِ، فَمَا قَامَ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلم وَثَمَّ مِنْهَا دِرْهَمٌ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.