தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3168

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(ரலி), ‘(அந்த) வியாழக்கிழமை! எப்படிப்பட்ட வியாழக்கிழமை (தெரியுமா)?’ என்று சொல்லிவிட்டு சிறு சரளைக் கற்களை அவர்களின் கண்ணீர் நனைத்து விடும் அளவிற்கு அழுதார்கள். நான், ‘இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களே! வியாழக்கிழமை (அப்படி) என்ன (நடந்தது)?’ என்று கேட்டேன். அவர்கள், ‘(அன்று தான்) அல்லாஹ்வின் தூதருக்கு அவர்களின் (நோயின்) வேதனை கடுமையாகிவிட்டது.

அப்போது அவர்கள், ‘என்னிடம் புஜ எலும்பு ஒன்றைக் கொண்டு வாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை (இறுதியுபதேசத்தை) நான் எழுதுகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள்’ என்று கூறினார்கள். மக்கள் (கருத்து பேதம் கொண்டு) சச்சரவிட்டார்கள். (இதனைக் கண்ட நபி(ஸல்) அவர்கள்), ‘இறைத்தூதரின் முன்பாக சச்சரவிட்டுக் கொள்வது அழகல்ல’ (என்று கூறினார்கள்.) மக்கள், ‘அவர்களுக்கு என்ன நேர்ந்தது? (எழுதித் தர முடியாத அளவிற்கு) அவர்கள் பலவீனமடைந்துவிட்டார்களா? அவர்களிடமே (விளக்கம்) கேளுங்கள்’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘என்னைவிட்டு விடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள இந்த (இறை நினைவில் லயித்திருக்கும்) நிலையே சிறந்தது’ என்று கூறிவிட்டு மூன்று விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்: (அந்த மூன்று விஷயங்களாவன:)

இணைவைப்பவர்களை அரபு தீபகற்பத்திலிருந்து வெளியேற்றி விடுங்கள். நான் (வெளிநாட்டிலிருந்து வரும்) தூதுக் குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கி வந்ததைப் போன்றே நீங்களும் பரிசுகளை வழங்கி வாருங்கள்.

(அறிவிப்பாளர் தொடர்ந்து கூறுகிறார்: மூன்றாவது கட்டளையை ஒன்று, நபி(ஸல்) அவர்கள் சொல்லாமல் மெளனமாக இருந்து விட்டிருக்க வேண்டும்; அல்லது அதை அவர்கள் கூறி (இந்நிகழ்ச்சியை எனக்கு அறிவித்தவரும் கூறி) நான் அதை மறந்து விட்டிருக்க வேண்டும். (எப்படியாயினும், மூன்றாவது) ஒரு நல்ல விஷயம் தான்.
சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), ‘இப்படிச் சொன்ன அறிவிப்பாளர், சுலைமான் இப்னு அபில் முஸ்லிம் அல் அஹ்வல்(ரஹ்) தாம்’ என்று கூறுகிறார்கள்.
Book :58

(புகாரி: 3168)

حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ أَبِي مُسْلِمٍ الأَحْوَلِ، سَمِعَ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ

يَوْمُ الخَمِيسِ وَمَا يَوْمُ الخَمِيسِ، ثُمَّ بَكَى حَتَّى بَلَّ دَمْعُهُ الحَصَى، قُلْتُ يَا أَبَا عَبَّاسٍ: مَا يَوْمُ الخَمِيسِ؟ قَالَ: اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعُهُ، فَقَالَ: «ائْتُونِي بِكَتِفٍ أَكْتُبْ لَكُمْ كِتَابًا لاَ تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا»، فَتَنَازَعُوا، وَلاَ يَنْبَغِي عِنْدَ نَبِيٍّ تَنَازُعٌ، فَقَالُوا: مَا لَهُ أَهَجَرَ اسْتَفْهِمُوهُ؟ فَقَالَ: «ذَرُونِي، فَالَّذِي أَنَا فِيهِ خَيْرٌ مِمَّا تَدْعُونَنِي إِلَيْهِ»، فَأَمَرَهُمْ بِثَلاَثٍ، قَالَ: «أَخْرِجُوا المُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ العَرَبِ، وَأَجِيزُوا الوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ» وَالثَّالِثَةُ خَيْرٌ، إِمَّا أَنْ سَكَتَ عَنْهَا، وَإِمَّا أَنْ قَالَهَا فَنَسِيتُهَا، قَالَ سُفْيَانُ: هَذَا مِنْ قَوْلِ سُلَيْمَانَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.