தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3340

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன், ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது (சமைக்கப்பட்ட) முன்கால் சப்பை ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்துவந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதைத் தம்) பற்களால் கடித்து அதிலிருந்து சிறிது உண்டார்கள்.

பிறகு கூறினார்கள்: ‘‘நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களைப் பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியுறுவார்கள்.

சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), ‘‘நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்)பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்பார்கள்.

மக்கள் சிலர், ‘‘உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)” என்று கூறுவார்கள்.

ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, ‘‘ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம்பணிந்தார்கள். உங்களைச் சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்பார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘‘(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என்மீது (கடும்) கோபம் கொண்டான். அதற்குமுன் அதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. அதற்குப் பிறகும் அதைப்போல் அவன் கோபம் கொள்ளமாட்டான். (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன். (ஆகவே,) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.

உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று, ‘‘நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பட்ட) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ், நன்றி செலுத்தும் அடியார்’ என்று குறிப்பிட்டுள்ளான். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் அவல நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்துள்ள (இந்தத் துன்ப) நிலையை நீங்கள் காணவில்லையா? எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரைக்க மாட்டீர்களா?” என்று கேட்பார்கள்.

அதற்கு அவர்கள், ‘‘என் இறைவன் இன்று என்மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்குமுன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப்போல் கோபம் கொள்ளமாட்டான். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் (இறுதி) நபி (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்.

மக்கள் என்னிடம் வருவார்கள். நான் இறை அரியணைக்குக் கீழே ஸஜ்தா செய்வேன். அப்போது ‘‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! பரிந்துரை செய்யுங்கள். (உங்கள்) பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும். கேளுங்கள். அது உங்களுக்குத் தரப்படும்” என்று (இறை வனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும்.

அறிவிப்பாளர் முஹம்மத் பின் உபைத் (ரஹ்) அவர்கள், ‘‘இந்த ஹதீஸ் முழுமையாக எனக்கு நினைவில்லை” என்று கூறுகிறார்கள்.

அத்தியாயம்: 60

(புகாரி: 3340)

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا أَبُو حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَعْوَةٍ، «فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ، وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَسَ مِنْهَا نَهْسَةً»
وَقَالَ: ” أَنَا سَيِّدُ القَوْمِ يَوْمَ القِيَامَةِ، هَلْ تَدْرُونَ بِمَ؟ يَجْمَعُ اللَّهُ الأَوَّلِينَ وَالآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ، فَيُبْصِرُهُمُ النَّاظِرُ وَيُسْمِعُهُمُ  الدَّاعِي، وَتَدْنُو مِنْهُمُ الشَّمْسُ، فَيَقُولُ بَعْضُ النَّاسِ: أَلاَ تَرَوْنَ إِلَى مَا أَنْتُمْ فِيهِ، إِلَى مَا بَلَغَكُمْ؟ أَلاَ تَنْظُرُونَ إِلَى مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ، فَيَقُولُ بَعْضُ النَّاسِ: أَبُوكُمْ آدَمُ فَيَأْتُونَهُ فَيَقُولُونَ: يَا آدَمُ أَنْتَ أَبُو البَشَرِ، خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ، وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ، وَأَمَرَ المَلاَئِكَةَ فَسَجَدُوا لَكَ، وَأَسْكَنَكَ الجَنَّةَ، أَلاَ تَشْفَعُ لَنَا إِلَى رَبِّكَ، أَلاَ تَرَى مَا نَحْنُ فِيهِ وَمَا بَلَغَنَا؟ فَيَقُولُ: رَبِّي غَضِبَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلاَ يَغْضَبُ بَعْدَهُ مِثْلَهُ، وَنَهَانِي عَنِ الشَّجَرَةِ فَعَصَيْتُهُ، نَفْسِي نَفْسِي، اذْهَبُوا إِلَى غَيْرِي، اذْهَبُوا إِلَى نُوحٍ، فَيَأْتُونَ نُوحًا، فَيَقُولُونَ: يَا نُوحُ، أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى أَهْلِ الأَرْضِ، وَسَمَّاكَ اللَّهُ عَبْدًا شَكُورًا، أَمَا تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ، أَلاَ تَرَى إِلَى مَا بَلَغَنَا، أَلاَ تَشْفَعُ لَنَا إِلَى رَبِّكَ؟ فَيَقُولُ: رَبِّي غَضِبَ اليَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلاَ يَغْضَبُ بَعْدَهُ مِثْلَهُ، نَفْسِي نَفْسِي، ائْتُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَأْتُونِي فَأَسْجُدُ تَحْتَ العَرْشِ، فَيُقَالُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ، وَاشْفَعْ تُشَفَّعْ، وَسَلْ تُعْطَهْ ” قَالَ مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ: لاَ أَحْفَظُ سَائِرَهُ


Bukhari-Tamil-3340.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3340.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.