இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பெண்கள் முதன் முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் ஹாஜர் (அலை) அவர்களின் தரப்பிலிருந்துதான். சாரா (அலை) அவர்களுக்குத் தம்மால் ஏற்பட்ட பாதிப்பை நீக்குவதற்காக அவர்கள் ஓர் இடுப்புக் கச்சையை அணிந்துகொண்டார்கள்.
பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், ஹாஜர் (தம் மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக்கொண்டிருக்கும் கால கட்டத்தில் இருவரையும் கொண்டுவந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்குமேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர்கூடக் கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம்பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்பை ஒன்றையும் வைத்தார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் (அவர்களை அங்கேயே விட்டுவிட்டு தமது நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள்.
அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் பின்தொடர்ந்து வந்து, ‘‘இப்ராஹீமே! மனிதரோ வேறெந்தப் பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே, அவர்களிடம் ஹாஜர் (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ்தான் உங்களுக்கு இப்படிக் கட்டளையிட்டானா?” என்று கேட்க, அவர்கள், ‘ஆம்’ என்று சொன்னார்கள்.
அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், ‘‘அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் (சிறிது தூரம்) நடந்து சென்று மலைக்குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது, தமது முகத்தை இறையில்லம் கஅபாவின் பக்கம் திருப்பி, தம் இரு கரங்களையும் உயர்த்தி, இந்தச் சொற்களால் பிரார்த்தித்தார்கள்:
‘‘எங்கள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்). எனவே, இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள்” என்று இறைஞ்சி னார்கள். (அல்குர்ஆன்: 14:37)
இஸ்மாயீலின் அன்னை, இஸ்மாயீலுக்குப் பாலூட்டவும் அந்தத் தண்ணீரிலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடங்கினார்கள். தண்ணீர்பையில் இருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டபோது அவரும் தாகத்திற்குள்ளானார். அவருடைய மகனும் தாகத்திற்குள்ளானார்.
தம் மகன் (தாகத்தால்) புரண்டு புரண்டு அழுவதை அல்லது தரையில் காலை அடித்துக்கொண்டு அழுவதை அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்றுகொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கிப் பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே, ஸஃபாவிலிருந்து இறங்கிவிட்டார்கள்.
இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்தபோது தமது மேலங்கியின் ஓரத்தை உயர்த்திக்கொண்டு சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதனைப்போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கைக் கடந்தார்கள். பிறகு மர்வா மலைக்குன்றுக்கு வந்து அதன் மீது (ஏறி) நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறைகள் செய்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே செய்கின்ற “ஸஃயு” (தொங்கோட்டம்) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்றுகொண்டபோது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, ‘‘சும்மாயிரு” என்று தமக்கே கூறிக்கொண்டார்கள். பிறகு, காதைத் தீட்டிக்கொண்டு கேட்டார்கள். அப்போதும் (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, ‘‘(அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்)” என்று சொன்னார்கள்.
அப்போது அங்கே தம்முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின்) அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் (மண்ணில்) தோண்டினார். அல்லது ‘‘தமது இறக்கையால் தோண்டினார்கள்” என்று அறிவிப்பாளர் சொல்லியிருக்கலாம்.
அதன் விளைவாகத் தண்ணீர் வெளிப்பட்டது. உடனே ஹாஜர் (அலை) அவர்கள் அதை ஒரு தடாகம்போல் (கையில்) அமைக்கலானார்கள்; அதைத் தம் கையால் இப்படி (‘‘ஓடிவிடாதே! நில்” என்று சைகை செய்து) சொன்னார்கள். அந்தத் தண்ணீரை அள்ளித் தமது தண்ணீர்பையில் ஊற்றலானார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடியே இருந்தது.
‘‘நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னைக்குக் கருணைபுரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால் அல்லது அந்தத் தண்ணீரிலிருந்து அள்ளியிருக்காவிட்டால் ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் ஓர் ஊற்றாக மாறிவிட்டிருக்கும்’ என்று சொன்னார்கள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
பிறகு, அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) தாமும் அருந்தி தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம், ‘‘நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்துபோய் விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில், இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித்துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிடமாட்டான்” என்று சொன்னார். இறையில்லமான கஅபா, மேட்டைப் போன்று பூமியிலிருந்து உயர்ந்திருந்தது. வெள்ளங்கள் வந்து அதன் வலப்பக்கமாகவும் இடப் பக்கமாகவும் (வழிந்து) சென்றுவிடும். இவ்வாறே அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் (தண்ணீர் குடித்துக்கொண்டும் பாலூட்டிக் கொண்டும்) இருந்தார்கள்.
இந்நிலையில் (யமன் நாட்டைச் சேர்ந்த) ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர் அல்லது ஜுர்ஹும் குலத்தாரில் ஒரு வீட்டார் அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் “கதாஃ” எனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில் தங்கினர். அப்போது தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் (வழக்கமுடைய) ஒரு வகைப் பறவையைக் கண்டு, ‘‘இந்தப் பறவை தண்ணீரின் மீதுதான் வட்டமடித்துக்கொண்டிருக்க வேண்டும்; நாம் இந்தப் பள்ளத்தாக்கைப் பற்றி முன்பே அறிந்திருக்கிறோம். அப்போது இதில் தண்ணீர் இருந்ததில்லையே” என்று (வியப்புடன்) பேசிக்கொண்டார்கள்.
பிறகு அவர்கள் ஒரு தூதுவரை அல்லது இரு தூதுவர்களை செய்தி அறிந்து வர அனுப்பினார்கள். அவர்கள் (சென்று பார்த்தபோது) அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் (தம் குலத்தாரிடம்) திரும்பிச் சென்று அங்கே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள். உடனே அக்குலத்தார், இஸ்மாயீலின் அன்னை தண்ணீரருகே இருக்க முன்னே சென்று, ‘‘நாங்கள் உங்களிடம் தங்கிக்கொள்ள எங்களுக்கு நீங்கள் அனுமதியளிப்பீர்களா?” என்று கேட்க, அவர்கள், ‘‘ஆம் (அனுமதியளிக்கிறேன்); ஆனால், தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது” என்று சொன்னார்கள். அவர்கள், ‘‘சரி” என்று சம்மதித்தனர்.
”(ஜுர்ஹும் குலத்தார் தங்கிக் கொள்ள அனுமதிகேட்ட) அந்தச் சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயாருக்கு, அவர்கள் (தனிமையால் துன்பமடைந்து) மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்…” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
ஆகவே, அவர்கள் அங்கே தங்கினார்கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்ப, அவர்களும் (வந்து) அவர்களுடன் தங்கினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச் சேர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றிவிட்டன. குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார்.
ஜுர்ஹும் குலத்தாரிடமிருந்து அவர் அரபு மொழியைக் கற்றுக்கொண்டார். அவர் வாலிபரானபோது அவர்களுக்குப் பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விருப்பமானவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்தபோது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்துவைத்தனர்.
இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துகொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள், தாம் விட்டுச்சென்ற (தம் மனைவி, மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துகொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீலின் மனைவியிடம் இஸ்மாயீலைக் குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர், ‘‘எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார்” என்று சொன்னார்.
பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலை பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர், ‘‘நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்” என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் உரைத்து அவரது நிலைப்படியை மாற்றிவிடும்படி சொல்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, எவரோ வந்து சென்றிருப்பதுபோல் உணர்ந்தார்கள்.
ஆகவே, ‘‘எவரேனும் உங்களிடம் வந்தார்களா?” என்று கேட்டார்கள். அவருடைய மனைவி, ‘‘ஆம்; இப்படிப்பட்ட (அடையாளங்கள்கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார்; எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன். என்னிடம், உங்கள் வாழ்க்கை நிலை எப்படியுள்ளது?› என்று கேட்டார். நான் அவரிடம், நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம்’ என்று சொன்னேன்” என்று பதிலளித்தார்.
அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா?” என்று கேட்க, அதற்கு அவர், ‘‘ஆம்; உங்களுக்குத் தமது சார்பாக ஸலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, உன் நிலைப்படியை மாற்றிவிடு’ என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார்” என்று பதிலளித்தார்.
இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘அவர் என் தந்தைதான். உன்னைவிட்டுப் பிரிந்துவிடும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார். ஆகவே, நீ உன் (தாய்) வீட்டாருடன் போய்ச் சேர்ந்துகொள்” என்று சொல்லிவிட்டு, உடனே அவரை மணவிலக்குச் செய்துவிட்டார்.
பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், இறைவன் நாடிய காலம்வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார். அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால், இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அங்கு) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார்.
அதற்கு அவர், ‘‘எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார்” என்று சொன்னார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா)?” என்று கேட்டார்கள் மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார், ‘‘நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.
இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உங்கள் உணவு என்ன?” என்று கேட்க அவர், ‘‘இறைச்சி” என்று பதிலளித்தார். அவர்கள், ‘‘உங்கள் பானம் எது?” என்று கேட்க, ‘‘தண்ணீர்” என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் வளத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் வளம் வழங்கும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள். ஆகவேதான், மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாகப் பயன்படுத்திவருபவர்களுக்கு அவை ஒத்துக்கொள்வதேயில்லை” என்று சொன்னார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் சொல். அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்தபோது, ‘‘உங்களிடம் யாரேனும் வந்தார்களா?” என்று கேட்க, அவருடைய மனைவி, ‘‘ஆம்; எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார்” என்று (சொல்லிவிட்டு) அவரைப் புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) ‘‘என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படியுள்ளது என்று கேட்டார். நான், நாங்கள் நலமுடன் இருக்கிறோம்’ என்று தெரிவித்தேன்” என்று பதில் சொன்னார்.
‘‘அவர், உனக்கு அறிவுரை ஏதும் சொன்னாரா?” என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம்; உங்களுக்கு ஸலாம் உரைத்தார்; உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக்கொள்ளும் படி உங்களுக்குக் கட்டளையிட்டார்” என்று சொன்னார். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘அவர் என் தந்தை; நீதான் அந்த நிலைப்படி. உன்னை (மணவிலக்குச் செய்யாமல்) அப்படியே (மனைவியாக) வைத்துக்கொள்ளும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார்” என்று சொன்னார்கள்.
பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம்வரை அவர் களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள். அதன் பிறகு, (ஒருநாள்) இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்குக் கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக்கொண்டிருந்தபோது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டதும் இஸ்மாயீல் (அலை) அவர்கள், அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடு நாட்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும்போது) தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்துகொள்வார்களோ அப்படி நடந்துகொண்டார்கள். (பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள்.)
பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்தர விட்டுள்ளான்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘உங்கள் இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள்” என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்ற உதவுவாயா?” என்று கேட்க, இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘உங்களுக்கு நான் உதவுகிறேன்” என்று பதிலளித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘அப்படியென்றால், நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்துக்) கட்ட வேண்டுமென்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்” என்று சொல்லிவிட்டு, சுற்றியிருந்த இடங்களைவிட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சுட்டிக் காட்டினார்கள்.
அப்போது இருவரும் இறையில்லம் கஅபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களைக் கொண்டுவந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டலானார்கள். கட்டடம் உயர்ந்தபோது இஸ்மாயீல் (அலை) அவர்கள், (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டுவந்து இப்ராஹீம் (அலை) அவர்களுக்காக வைத்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அதன்மீது (ஏறி) நின்று கஅபாவைக் கட்டலானார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை எடுத்துத் தரலானார்கள்.
அப்போது இருவருமே, ‘‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தத் புனிதப் பணியை) ஏற்றுக்கொள்வாயாக!. நிச்சயம் நீயே நன்கு செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவாய்” (அல்குர்ஆன்: 2:127) என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இருவரும் அந்த ஆலயத்தைச் சுற்றிலும் வட்டமிட்டு நடந்தபடி, ‘‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயம் நீயே நன்கு செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய்” (அல்குர்ஆன்: 2:127) என்று பிரார்த்தித்தவாறு (கஅபாவைப் புதுப்பித்துக் கட்டத்) தொடங்கினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம்: 60
(புகாரி: 3364)وحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، وَكَثِيرِ بْنِ كَثِيرِ بْنِ المُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ، يَزِيدُ أَحَدُهُمَا عَلَى الآخَرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ ابْنُ عَبَّاسٍ
أَوَّلَ مَا اتَّخَذَ النِّسَاءُ المِنْطَقَ مِنْ قِبَلِ أُمِّ إِسْمَاعِيلَ، اتَّخَذَتْ مِنْطَقًا لِتُعَفِّيَ أَثَرَهَا عَلَى سَارَةَ، ثُمَّ جَاءَ بِهَا إِبْرَاهِيمُ وَبِابْنِهَا إِسْمَاعِيلَ وَهِيَ تُرْضِعُهُ، حَتَّى وَضَعَهُمَا عِنْدَ البَيْتِ عِنْدَ دَوْحَةٍ، فَوْقَ زَمْزَمَ فِي أَعْلَى المَسْجِدِ، وَلَيْسَ بِمَكَّةَ يَوْمَئِذٍ أَحَدٌ، وَلَيْسَ بِهَا مَاءٌ، فَوَضَعَهُمَا هُنَالِكَ، وَوَضَعَ عِنْدَهُمَا جِرَابًا فِيهِ تَمْرٌ، وَسِقَاءً فِيهِ مَاءٌ، ثُمَّ قَفَّى إِبْرَاهِيمُ مُنْطَلِقًا، فَتَبِعَتْهُ أُمُّ إِسْمَاعِيلَ فَقَالَتْ: يَا إِبْرَاهِيمُ، أَيْنَ تَذْهَبُ وَتَتْرُكُنَا بِهَذَا الوَادِي، الَّذِي لَيْسَ فِيهِ إِنْسٌ وَلاَ شَيْءٌ؟ فَقَالَتْ لَهُ ذَلِكَ مِرَارًا، وَجَعَلَ لاَ يَلْتَفِتُ إِلَيْهَا، فَقَالَتْ لَهُ: آللَّهُ الَّذِي أَمَرَكَ بِهَذَا؟ قَالَ نَعَمْ، قَالَتْ: إِذَنْ لاَ يُضَيِّعُنَا، ثُمَّ رَجَعَتْ، فَانْطَلَقَ إِبْرَاهِيمُ حَتَّى إِذَا كَانَ عِنْدَ الثَّنِيَّةِ حَيْثُ لاَ يَرَوْنَهُ، اسْتَقْبَلَ بِوَجْهِهِ البَيْتَ، ثُمَّ دَعَا بِهَؤُلاَءِ الكَلِمَاتِ، وَرَفَعَ يَدَيْهِ فَقَالَ: رَبِّ {إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِنْدَ بَيْتِكَ المُحَرَّمِ} [إبراهيم: 37]- حَتَّى بَلَغَ – {يَشْكُرُونَ} [إبراهيم: 37] ” وَجَعَلَتْ أُمُّ إِسْمَاعِيلَ تُرْضِعُ إِسْمَاعِيلَ وَتَشْرَبُ مِنْ ذَلِكَ المَاءِ، حَتَّى إِذَا نَفِدَ مَا فِي السِّقَاءِ عَطِشَتْ وَعَطِشَ ابْنُهَا، وَجَعَلَتْ تَنْظُرُ إِلَيْهِ يَتَلَوَّى، أَوْ قَالَ يَتَلَبَّطُ، فَانْطَلَقَتْ كَرَاهِيَةَ أَنْ تَنْظُرَ إِلَيْهِ، فَوَجَدَتِ الصَّفَا أَقْرَبَ جَبَلٍ فِي الأَرْضِ يَلِيهَا، فَقَامَتْ عَلَيْهِ، ثُمَّ اسْتَقْبَلَتِ الوَادِيَ تَنْظُرُ هَلْ تَرَى أَحَدًا فَلَمْ تَرَ أَحَدًا، فَهَبَطَتْ مِنَ الصَّفَا حَتَّى إِذَا بَلَغَتِ الوَادِيَ رَفَعَتْ طَرَفَ دِرْعِهَا، ثُمَّ سَعَتْ سَعْيَ الإِنْسَانِ المَجْهُودِ حَتَّى جَاوَزَتِ الوَادِيَ، ثُمَّ أَتَتِ المَرْوَةَ فَقَامَتْ عَلَيْهَا وَنَظَرَتْ هَلْ تَرَى أَحَدًا فَلَمْ تَرَ أَحَدًا، فَفَعَلَتْ ذَلِكَ سَبْعَ مَرَّاتٍ، قَالَ ابْنُ عَبَّاسٍ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَذَلِكَ سَعْيُ النَّاسِ بَيْنَهُمَا» فَلَمَّا أَشْرَفَتْ عَلَى المَرْوَةِ سَمِعَتْ صَوْتًا، فَقَالَتْ صَهٍ – تُرِيدُ نَفْسَهَا -، ثُمَّ تَسَمَّعَتْ، فَسَمِعَتْ أَيْضًا، فَقَالَتْ: قَدْ أَسْمَعْتَ إِنْ كَانَ عِنْدَكَ غِوَاثٌ، فَإِذَا هِيَ بِالْمَلَكِ عِنْدَ مَوْضِعِ زَمْزَمَ، فَبَحَثَ بِعَقِبِهِ، أَوْ قَالَ بِجَنَاحِهِ، حَتَّى ظَهَرَ المَاءُ، فَجَعَلَتْ تُحَوِّضُهُ وَتَقُولُ بِيَدِهَا هَكَذَا، وَجَعَلَتْ تَغْرِفُ مِنَ المَاءِ فِي سِقَائِهَا وَهُوَ يَفُورُ بَعْدَ مَا تَغْرِفُ. قَالَ ابْنُ عَبَّاسٍ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَرْحَمُ اللَّهُ أُمَّ إِسْمَاعِيلَ، لَوْ تَرَكَتْ زَمْزَمَ – أَوْ قَالَ: لَوْ لَمْ تَغْرِفْ مِنَ المَاءِ -، لَكَانَتْ زَمْزَمُ عَيْنًا مَعِينًا ” قَالَ: فَشَرِبَتْ وَأَرْضَعَتْ وَلَدَهَا، فَقَالَ لَهَا المَلَكُ: لاَ تَخَافُوا الضَّيْعَةَ، فَإِنَّ هَا هُنَا بَيْتَ اللَّهِ، يَبْنِي هَذَا الغُلاَمُ وَأَبُوهُ، وَإِنَّ اللَّهَ لاَ يُضِيعُ أَهْلَهُ، وَكَانَ البَيْتُ مُرْتَفِعًا مِنَ الأَرْضِ كَالرَّابِيَةِ، تَأْتِيهِ السُّيُولُ، فَتَأْخُذُ عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ، فَكَانَتْ كَذَلِكَ حَتَّى مَرَّتْ بِهِمْ رُفْقَةٌ مِنْ جُرْهُمَ، أَوْ أَهْلُ بَيْتٍ مِنْ جُرْهُمَ، مُقْبِلِينَ مِنْ طَرِيقِ كَدَاءٍ، فَنَزَلُوا فِي أَسْفَلِ مَكَّةَ فَرَأَوْا طَائِرًا عَائِفًا، فَقَالُوا: إِنَّ هَذَا الطَّائِرَ لَيَدُورُ عَلَى مَاءٍ، لَعَهْدُنَا بِهَذَا الوَادِي وَمَا فِيهِ مَاءٌ، فَأَرْسَلُوا جَرِيًّا أَوْ جَرِيَّيْنِ فَإِذَا هُمْ بِالْمَاءِ، فَرَجَعُوا فَأَخْبَرُوهُمْ بِالْمَاءِ فَأَقْبَلُوا، قَالَ: وَأُمُّ إِسْمَاعِيلَ عِنْدَ المَاءِ، فَقَالُوا: أَتَأْذَنِينَ لَنَا أَنْ نَنْزِلَ عِنْدَكِ؟ فَقَالَتْ: نَعَمْ، وَلَكِنْ لاَ حَقَّ لَكُمْ فِي المَاءِ، قَالُوا: نَعَمْ، قَالَ ابْنُ عَبَّاسٍ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَلْفَى ذَلِكَ أُمَّ إِسْمَاعِيلَ وَهِيَ تُحِبُّ الإِنْسَ» فَنَزَلُوا وَأَرْسَلُوا إِلَى أَهْلِيهِمْ فَنَزَلُوا مَعَهُمْ، حَتَّى إِذَا كَانَ بِهَا أَهْلُ أَبْيَاتٍ مِنْهُمْ، وَشَبَّ الغُلاَمُ وَتَعَلَّمَ العَرَبِيَّةَ مِنْهُمْ، وَأَنْفَسَهُمْ وَأَعْجَبَهُمْ حِينَ شَبَّ، فَلَمَّا أَدْرَكَ زَوَّجُوهُ امْرَأَةً مِنْهُمْ، وَمَاتَتْ أُمُّ إِسْمَاعِيلَ، فَجَاءَ إِبْرَاهِيمُ بَعْدَمَا تَزَوَّجَ إِسْمَاعِيلُ يُطَالِعُ تَرِكَتَهُ، فَلَمْ يَجِدْ إِسْمَاعِيلَ، فَسَأَلَ امْرَأَتَهُ عَنْهُ فَقَالَتْ: خَرَجَ يَبْتَغِي لَنَا، ثُمَّ سَأَلَهَا عَنْ عَيْشِهِمْ وَهَيْئَتِهِمْ، فَقَالَتْ نَحْنُ بِشَرٍّ، نَحْنُ فِي ضِيقٍ وَشِدَّةٍ، فَشَكَتْ إِلَيْهِ، قَالَ: فَإِذَا جَاءَ زَوْجُكِ فَاقْرَئِي عَلَيْهِ السَّلاَمَ، وَقُولِي لَهُ يُغَيِّرْ عَتَبَةَ بَابِهِ، فَلَمَّا جَاءَ إِسْمَاعِيلُ كَأَنَّهُ آنَسَ شَيْئًا، فَقَالَ: هَلْ جَاءَكُمْ مِنْ أَحَدٍ؟ قَالَتْ: نَعَمْ، جَاءَنَا شَيْخٌ كَذَا وَكَذَا، فَسَأَلَنَا عَنْكَ فَأَخْبَرْتُهُ، وَسَأَلَنِي كَيْفَ عَيْشُنَا، فَأَخْبَرْتُهُ أَنَّا فِي جَهْدٍ وَشِدَّةٍ، قَالَ: فَهَلْ أَوْصَاكِ بِشَيْءٍ؟ قَالَتْ: نَعَمْ، أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ السَّلاَمَ، وَيَقُولُ غَيِّرْ عَتَبَةَ بَابِكَ، قَالَ: ذَاكِ أَبِي، وَقَدْ أَمَرَنِي أَنْ أُفَارِقَكِ، الحَقِي بِأَهْلِكِ، فَطَلَّقَهَا، وَتَزَوَّجَ مِنْهُمْ أُخْرَى، فَلَبِثَ عَنْهُمْ إِبْرَاهِيمُ مَا شَاءَ اللَّهُ، ثُمَّ أَتَاهُمْ بَعْدُ فَلَمْ يَجِدْهُ، فَدَخَلَ عَلَى امْرَأَتِهِ فَسَأَلَهَا عَنْهُ، فَقَالَتْ: خَرَجَ يَبْتَغِي لَنَا، قَالَ: كَيْفَ أَنْتُمْ؟ وَسَأَلَهَا عَنْ عَيْشِهِمْ وَهَيْئَتِهِمْ، فَقَالَتْ: نَحْنُ بِخَيْرٍ وَسَعَةٍ، وَأَثْنَتْ عَلَى اللَّهِ، فَقَالَ: مَا طَعَامُكُمْ؟ قَالَتِ اللَّحْمُ، قَالَ فَمَا شَرَابُكُمْ؟ قَالَتِ المَاءُ. قَالَ: اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي اللَّحْمِ وَالمَاءِ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَلَمْ يَكُنْ لَهُمْ يَوْمَئِذٍ حَبٌّ، وَلَوْ كَانَ لَهُمْ دَعَا لَهُمْ فِيهِ». قَالَ: فَهُمَا لاَ يَخْلُو عَلَيْهِمَا أَحَدٌ بِغَيْرِ مَكَّةَ إِلَّا لَمْ يُوَافِقَاهُ، قَالَ: فَإِذَا جَاءَ زَوْجُكِ فَاقْرَئِي عَلَيْهِ السَّلاَمَ، وَمُرِيهِ يُثْبِتُ عَتَبَةَ بَابِهِ، فَلَمَّا جَاءَ إِسْمَاعِيلُ قَالَ: هَلْ أَتَاكُمْ مِنْ أَحَدٍ؟ قَالَتْ: نَعَمْ، أَتَانَا شَيْخٌ حَسَنُ الهَيْئَةِ، وَأَثْنَتْ عَلَيْهِ، فَسَأَلَنِي عَنْكَ فَأَخْبَرْتُهُ، فَسَأَلَنِي كَيْفَ عَيْشُنَا فَأَخْبَرْتُهُ أَنَّا بِخَيْرٍ، قَالَ: فَأَوْصَاكِ بِشَيْءٍ، قَالَتْ: نَعَمْ، هُوَ يَقْرَأُ عَلَيْكَ السَّلاَمَ، وَيَأْمُرُكَ أَنْ تُثْبِتَ عَتَبَةَ بَابِكَ، قَالَ: ذَاكِ أَبِي وَأَنْتِ العَتَبَةُ، أَمَرَنِي أَنْ أُمْسِكَكِ، ثُمَّ لَبِثَ عَنْهُمْ مَا شَاءَ اللَّهُ، ثُمَّ جَاءَ بَعْدَ ذَلِكَ، وَإِسْمَاعِيلُ يَبْرِي نَبْلًا لَهُ تَحْتَ دَوْحَةٍ قَرِيبًا مِنْ زَمْزَمَ، فَلَمَّا رَآهُ قَامَ إِلَيْهِ، فَصَنَعَا كَمَا يَصْنَعُ الوَالِدُ بِالوَلَدِ وَالوَلَدُ بِالوَالِدِ، ثُمَّ قَالَ يَا إِسْمَاعِيلُ، إِنَّ اللَّهَ أَمَرَنِي بِأَمْرٍ، قَالَ: فَاصْنَعْ مَا أَمَرَكَ رَبُّكَ، قَالَ: وَتُعِينُنِي؟ قَالَ: وَأُعِينُكَ، قَالَ: فَإِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَبْنِيَ هَا هُنَا بَيْتًا، وَأَشَارَ إِلَى أَكَمَةٍ مُرْتَفِعَةٍ عَلَى مَا حَوْلَهَا، قَالَ: فَعِنْدَ ذَلِكَ رَفَعَا القَوَاعِدَ مِنَ البَيْتِ، فَجَعَلَ إِسْمَاعِيلُ يَأْتِي بِالحِجَارَةِ وَإِبْرَاهِيمُ يَبْنِي، حَتَّى إِذَا ارْتَفَعَ البِنَاءُ، جَاءَ بِهَذَا الحَجَرِ فَوَضَعَهُ لَهُ فَقَامَ عَلَيْهِ، وَهُوَ يَبْنِي وَإِسْمَاعِيلُ يُنَاوِلُهُ الحِجَارَةَ، وَهُمَا يَقُولاَنِ: {رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ} [البقرة: 127]، قَالَ: فَجَعَلاَ يَبْنِيَانِ حَتَّى يَدُورَا حَوْلَ البَيْتِ وَهُمَا يَقُولاَنِ: {رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ} [البقرة: 127]
Bukhari-Tamil-3364.
Bukhari-TamilMisc-3364.
Bukhari-Shamila-3364.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்