தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-344

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 தண்ணீருக்குப் பகரமாக சுத்தமான மண் ஒரு முஸ்லிமுக்கு சுத்தம் செய்யப் போதுமானதாகும்.

ஒரு தடவை ஒருவர் தயம்மும் செய்து விட்டால் சிறுதுடக்கு (எனும் உளூவை முறிக்கும் காரியங்கள்) ஏற்படாதவரை அந்த தயம்மும் அவருக்குப் போதமானதாக அமையும் (ஒவ்வொரு தொழுகைக்கும் தனித் தனி தயம்மும் செய்யவேண்டியதில்லை) என ஹஸன் அல்பஸரீ  (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து கொண்டு (உளூ செய்திருக்கும் மக்களுக்கு) இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள்.

யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள், (எதையும் முளைக்கச் செய்யாத உப்புத்தன்மை கொண்ட) உவர் நிலத்தில் தொழுவதோ, அந்நிலத்தில் தயம்மும் செய்வதோ குற்றமல்ல என்று கூறியுள்ளார்கள். 

 நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணம் சென்றோம். இரவின் கடைசி நேரம் வந்தபோது எங்களுக்கு தூக்கம் மேலிட்டது. பயணிக்கு அதைவிட இன்பமான தூக்கம் எதுவும் இருக்க முடியாது. அந்தத் தூக்கத்திலிருந்து எங்களை (அதிகாலை) சூரிய வெப்பம்தான் எழுப்பியது. முதல் முதலாகத் தூக்கத்திலிருந்து எழுந்தவர் இன்னவர், அடுத்த இன்னவர் அவரை அடுத்து இன்னவர் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ரஜா எழுந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் கூறினார். அவருக்கு அடுத்த அறிவிப்பாளரான அவ்ஃப் அவர்களின் பெயர்களை மறந்துவிட்டார். நான்காவதாகத் தூக்கத்திலிருந்து எழுந்தவர் உமர் இப்னு கத்தாப்(ரலி) ஆவார்கள்.’

நபி(ஸல்) அவர்கள் தூங்கினால் அவர்கள் தாமாகவே தூக்கத்திலிருந்து விழிக்கும் வரை வேறு யாராலும் எழுப்பப்பட மாட்டார்கள். காரணம் அவர்களின் தூக்கத்தில் என்ன செய்தி வருமென்பது எங்களுக்குத் தெரியாது. உமர்(ரலி) தூக்கத்தைவிட்டு எழுந்து மக்களுக்கு ஏற்பட்ட (ஸுப்ஹ் தொழுகை தவறிப்போன) இந்நிலையைப் பார்த்ததும் அல்லாஹு அக்பர்!’ என்று சப்தமிட்டார். அவர் திடகாத்திரமான மனிதராக இருந்தார். அவர் சப்தமிட்டுத் தக்பீர் முழங்கிக் கொண்டே இருந்தார். அவர்களின் சப்தத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்களும் தூக்கத்திலிருந்து எழுந்தார்கள். உடனே மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலையை நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள்.

அப்போது ‘அதனால் எந்தப் பாதிப்புமில்லை. நீங்கள் இங்கிருந்து புறப்படுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அந்த இடத்தைவிட்டும் புறப்பட்டார்கள். சிறிது தூரம் சென்றதும் அங்கே தங்கி உளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதில் உளூச் செய்தார்கள். தொழுகைக்காக அழைப்புக் கொடுக்கப்பட்டது. மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது, அங்கு ஒருவர் கூட்டத்துடன் தொழாமல் தனியாக இருந்தார். ‘ஜமாஅத்துடன் நீர் தொழாமலிருக்கக் காரணமென்ன?’ என்று அவரிடம் கேட்டபோது,

‘எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர் இல்லை’ என்று அவர் கூறினார். ‘மண்ணில் தயம்மும் செய். அது உனக்குப் போதுமானது’ என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் சென்று ‘தாகமாக இருக்கிறது; தண்ணீர் இல்லை’ என முறையிட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி, ஒரு மனிதரையும் அவர் பெயரை அபூ ரஜா குறிப்பிட்டார்கள். அவ்ஃப் என்பவர் மறந்துவிட்டார். அலீ(ரலி) அவர்களையும் அழைத்து’ நீங்கள் இருவரும் சென்று தண்ணீரைத் தேடுங்கள்’ என்று கூறினார்கள். அவர்கள் இருவரும் தண்ணீரைத் தேடிச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒரு பெண்ணைச் சந்தித்தார்கள். அவள் ஓர் ஒட்டகத்தின் மீது இரண்டு தோல் பைகளில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதற்கிடையில் அமர்ந்திருந்தாள்.

‘தண்ணீர் எங்கே கிடைக்கிறது?’ என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கேட்டனர். ‘தண்ணீர் ஒரு நாள் பயண தூரத்தில் இருக்கிறது. எங்களுடைய ஆண்கள் தண்ணீருக்காகப் பின்தங்கிவிட்டனர்’ என அப்பெண் கூறினாள். ‘அப்படியானால் நீ புறப்படு’ என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கூறினார்கள். ‘எங்கே?’ என்று அவள் கேட்டாள். ‘அல்லாஹ்வின் தூதரிடம்’ என்று கூறினார்கள். ‘மதம் மாறியவர் என்று கூறப்படுகிறாரே அவரிடத்திலா?’ என்று அப்பெண் கேட்டாள். ‘நீ கூறுகிற அவரேதான்’ என்று கூறிவிட்டு அவளை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து நடந்ததைக் கூறினார்கள்.

‘அந்தப் பெண்ணை அவளுடைய ஒட்டகத்திலிருந்து இறங்கச் சொல்லுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அந்த இரண்டு தோல் பைகளிலிருந்த தண்ணீரைப் பாத்திரங்களில் நிரப்பினார்கள். பின்னர் அந்த இரண்டு தோல் பைகளின் அடிப்புற வாயைக் கட்டிவிட்டுத் தண்ணீர் செலுத்தும் மேற்புற வாயைக் கட்டாமல் விட்டுவிட்டார்கள். ‘எல்லோரும் வந்து தண்ணீர் குடியுங்கள். சேகரித்து வையுங்கள்’ என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. விரும்பியவர்கள் குடித்தார்கள்; விரும்பியவர்கள் பாத்திரங்களில் எடுத்து வைத்தார்கள். குளிப்புக் கடமையான அவர்தாம் கடைசியாக வந்தவர். அவருக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் கொடுத்து, ‘இதைக் கொண்டு போய் உம் மீது ஊற்றிக் கொள்ளும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண் தன்னுடைய தண்ணீர் எந்தெந்த வகையிலெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கவனித்துக் கொண்டே நின்றாள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவளுடைய உள்ளத்தில் நபி(ஸல்) மீது இருந்த வெறுப்பு நீங்கிவிட்டது. அந்த இரண்டு தோல் பைகளிலிருந்து முதலில் தண்ணீரை எடுக்கும்போது இருந்ததை விட அதிகமான தண்ணீர் பிறகு அத்தோல் பையில் இருப்பது போன்று எங்களுக்குத் தெரிந்தது. (தண்ணீர் குறையவில்லை.)

‘அந்தப் பெண்ணுக்கு ஏதாவது சேகரித்துக் கொடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவளுக்காகப் பேரீச்சம் பழம், மாவு போன்றவற்றைச் சேகரித்தார்கள். அவளுக்குப் போதுமான உணவு சேர்ந்தது. அதைத் துணியில் வைத்துக் (கட்டி) அவளை ஒட்டகத்தின் மீது அமரச் செய்து உணவுப் பொட்டலமுள்ள துணியை அவளுக்கு முன்னால் வைத்தார்கள். பின்னர், அந்தப் பெண்ணிடம் ‘உன்னுடைய தண்ணீரிலிருந்து எதையும் நாங்கள் குறைக்கவில்லை; அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் புகட்டினான்’ என்பதைத் தெரிந்து கொள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்தினரிடம் குறிப்பிட்ட நேரத்தை விடத் தாமதமாக வந்தபோது, ‘பெண்ணே! நீ பிந்தி வரக்காரணமென்ன?’ என்று கேட்டதற்கு ‘ஓர் ஆச்சரியமான விஷயம் நிகழ்ந்தது. இரண்டு மனிதர்கள் என்னைச் சந்தித்து மதம் மாறியவர் என்று கூறப்படக் கூடிய அந்த மனிதரிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவர் இப்படியெல்லாம் செய்தார்’ (என நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினாள்.)

அவள் தன் கையின் நடுவிரலையும், ஆட்காட்டி விரலையும் வானத்தின் பக்கம் உயர்த்தி, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த வானத்திற்கும் இந்த பூமிக்கும் இடையிலுள்ள சூனியக்காரர்களில் அவர் மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் இறைத்தூதராக இருக்க வேண்டும்’ என்று கூறினாள்.
பின்னர் முஸ்லிம்கள் அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்தவர்களை எதிர்த்துப் போராடினார்கள். அப்போது அந்தப் பெண் எந்தக் குடும்பத்தைச் சார்ந்துள்ளாளோ அந்தக் குடும்பத்தை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.

ஒரு முறை அந்தப் பெண் தங்களின் கூட்டத்தாரிடம், ‘இந்த முஸ்லிம்கள் வேண்டுமென்றே (உங்களிடம் போரிடாமல்) உங்களைவிட்டு விடுகிறார்கள் என்றே கருதுகிறேன். எனவே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?’ என்று கேட்டபோது அவர்கள் எல்லோரும் அவளுடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள்’ என இம்ரான்(ரலி) அறிவித்தார்.
Book : 7

(புகாரி: 344)

بَابٌ: الصَّعِيدُ الطَّيِّبُ وَضُوءُ المُسْلِمِ، يَكْفِيهِ مِنَ المَاءِ

وَقَالَ الحَسَنُ: «يُجْزِئُهُ التَّيَمُّمُ مَا لَمْ يُحْدِثْ» وَأَمَّ ابْنُ عَبَّاسٍ وَهُوَ مُتَيَمِّمٌ ” وَقَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ: «لاَ بَأْسَ بِالصَّلاَةِ  عَلَى السَّبَخَةِ وَالتَّيَمُّمِ بِهَا»

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا عَوْفٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ عِمْرَانَ، قَالَ

كُنَّا فِي سَفَرٍ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنَّا أَسْرَيْنَا حَتَّى كُنَّا فِي آخِرِ اللَّيْلِ، وَقَعْنَا وَقْعَةً، وَلاَ وَقْعَةَ أَحْلَى عِنْدَ المُسَافِرِ مِنْهَا، فَمَا أَيْقَظَنَا إِلَّا حَرُّ الشَّمْسِ، وَكَانَ أَوَّلَ مَنِ اسْتَيْقَظَ فُلاَنٌ، ثُمَّ فُلاَنٌ، ثُمَّ فُلاَنٌ – يُسَمِّيهِمْ أَبُو رَجَاءٍ فَنَسِيَ عَوْفٌ ثُمَّ عُمَرُ بْنُ الخَطَّابِ الرَّابِعُ – وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَامَ لَمْ يُوقَظْ حَتَّى يَكُونَ هُوَ يَسْتَيْقِظُ، لِأَنَّا لاَ نَدْرِي مَا يَحْدُثُ لَهُ فِي نَوْمِهِ، فَلَمَّا اسْتَيْقَظَ عُمَرُ وَرَأَى مَا أَصَابَ النَّاسَ وَكَانَ رَجُلًا جَلِيدًا، فَكَبَّرَ وَرَفَعَ صَوْتَهُ بِالتَّكْبِيرِ، فَمَا زَالَ يُكَبِّرُ وَيَرْفَعُ صَوْتَهُ بِالتَّكْبِيرِ حَتَّى اسْتَيْقَظَ بِصَوْتِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا اسْتَيْقَظَ شَكَوْا إِلَيْهِ الَّذِي أَصَابَهُمْ، قَالَ: «لاَ ضَيْرَ – أَوْ لاَ يَضِيرُ – ارْتَحِلُوا»، فَارْتَحَلَ، فَسَارَ غَيْرَ بَعِيدٍ، ثُمَّ نَزَلَ فَدَعَا بِالوَضُوءِ، فَتَوَضَّأَ، وَنُودِيَ بِالصَّلاَةِ، فَصَلَّى بِالنَّاسِ، فَلَمَّا انْفَتَلَ مِنْ صَلاَتِهِ إِذَا هُوَ بِرَجُلٍ مُعْتَزِلٍ لَمْ يُصَلِّ مَعَ القَوْمِ، قَالَ: «مَا مَنَعَكَ يَا فُلاَنُ أَنْ تُصَلِّيَ مَعَ القَوْمِ؟» قَالَ: أَصَابَتْنِي جَنَابَةٌ وَلاَ مَاءَ، قَالَ: «عَلَيْكَ بِالصَّعِيدِ، فَإِنَّهُ يَكْفِيكَ»، ثُمَّ سَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاشْتَكَى إِلَيْهِ النَّاسُ مِنَ العَطَشِ، فَنَزَلَ فَدَعَا فُلاَنًا – كَانَ يُسَمِّيهِ أَبُو رَجَاءٍ نَسِيَهُ عَوْفٌ – وَدَعَا عَلِيًّا فَقَالَ: «اذْهَبَا، فَابْتَغِيَا المَاءَ» فَانْطَلَقَا، فَتَلَقَّيَا امْرَأَةً بَيْنَ مَزَادَتَيْنِ – أَوْ سَطِيحَتَيْنِ – مِنْ مَاءٍ عَلَى بَعِيرٍ لَهَا، فَقَالاَ لَهَا: أَيْنَ المَاءُ؟ قَالَتْ: عَهْدِي بِالْمَاءِ أَمْسِ هَذِهِ السَّاعَةَ وَنَفَرُنَا خُلُوفٌ، قَالاَ لَهَا: انْطَلِقِي، إِذًا قَالَتْ: إِلَى أَيْنَ؟ قَالاَ: إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: الَّذِي يُقَالُ لَهُ الصَّابِئُ، قَالاَ: هُوَ الَّذِي تَعْنِينَ، فَانْطَلِقِي، فَجَاءَا بِهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَدَّثَاهُ الحَدِيثَ، قَالَ: فَاسْتَنْزَلُوهَا عَنْ بَعِيرِهَا، وَدَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِنَاءٍ، فَفَرَّغَ فِيهِ مِنْ أَفْوَاهِ المَزَادَتَيْنِ – أَوْ سَطِيحَتَيْنِ – وَأَوْكَأَ أَفْوَاهَهُمَا وَأَطْلَقَ العَزَالِيَ، وَنُودِيَ فِي النَّاسِ اسْقُوا وَاسْتَقُوا، فَسَقَى مَنْ شَاءَ وَاسْتَقَى مَنْ شَاءَ وَكَانَ آخِرُ ذَاكَ أَنْ أَعْطَى الَّذِي أَصَابَتْهُ الجَنَابَةُ إِنَاءً مِنْ مَاءٍ، قَالَ: «اذْهَبْ فَأَفْرِغْهُ عَلَيْكَ»، وَهِيَ قَائِمَةٌ تَنْظُرُ إِلَى مَا يُفْعَلُ بِمَائِهَا، وَايْمُ اللَّهِ لَقَدْ أُقْلِعَ عَنْهَا، وَإِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْنَا أَنَّهَا أَشَدُّ مِلْأَةً مِنْهَا حِينَ ابْتَدَأَ فِيهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْمَعُوا لَهَا» فَجَمَعُوا لَهَا مِنْ بَيْنِ عَجْوَةٍ وَدَقِيقَةٍ وَسَوِيقَةٍ حَتَّى جَمَعُوا لَهَا طَعَامًا، فَجَعَلُوهَا فِي ثَوْبٍ وَحَمَلُوهَا عَلَى بَعِيرِهَا وَوَضَعُوا الثَّوْبَ بَيْنَ يَدَيْهَا، قَالَ لَهَا: «تَعْلَمِينَ، مَا رَزِئْنَا مِنْ مَائِكِ شَيْئًا، وَلَكِنَّ اللَّهَ هُوَ الَّذِي أَسْقَانَا»، فَأَتَتْ أَهْلَهَا وَقَدِ احْتَبَسَتْ عَنْهُمْ، قَالُوا: مَا حَبَسَكِ يَا فُلاَنَةُ، قَالَتْ: العَجَبُ لَقِيَنِي رَجُلاَنِ، فَذَهَبَا بِي إِلَى هَذَا الَّذِي يُقَالُ لَهُ الصَّابِئُ فَفَعَلَ كَذَا وَكَذَا، فَوَاللَّهِ إِنَّهُ لَأَسْحَرُ  النَّاسِ مِنْ بَيْنِ هَذِهِ وَهَذِهِ، وَقَالَتْ: بِإِصْبَعَيْهَا الوُسْطَى وَالسَّبَّابَةِ، فَرَفَعَتْهُمَا إِلَى السَّمَاءِ – تَعْنِي السَّمَاءَ وَالأَرْضَ – أَوْ إِنَّهُ لَرَسُولُ اللَّهِ حَقًّا، فَكَانَ المُسْلِمُونَ بَعْدَ ذَلِكَ يُغِيرُونَ عَلَى مَنْ حَوْلَهَا مِنَ المُشْرِكِينَ، وَلاَ يُصِيبُونَ الصِّرْمَ الَّذِي هِيَ مِنْهُ، فَقَالَتْ: يَوْمًا لِقَوْمِهَا مَا أُرَى أَنَّ هَؤُلاَءِ القَوْمَ يَدْعُونَكُمْ عَمْدًا، فَهَلْ لَكُمْ فِي الإِسْلاَمِ؟ فَأَطَاعُوهَا، فَدَخَلُوا فِي الإِسْلاَمِ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” صَبَأَ: خَرَجَ مِنْ دِينٍ إِلَى غَيْرِهِ ” وَقَالَ أَبُو العَالِيَةِ: «الصَّابِئِينَ فِرْقَةٌ مِنْ أَهْلِ الكِتَابِ يَقْرَءُونَ الزَّبُورَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.