தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3505

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அறிவித்தார்:

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு, நபி (ஸல்) மற்றும் அபூ பக்ர் (ரலி) ஆகியோருக்கு அடுத்தபடியாக, (தம் சகோதரி அஸ்மாவின் மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) மீது எல்லா மனிதர்களை விடவும் அதிகமான பிரியம் இருந்தது. மக்களிலேயே அதிகமாக ஆயிஷா (ரலி) அவர்களுக்கு நன்மை புரியக் கூடியவராக அப்துல்லாஹ் இருந்தார். ஆயிஷா (ரலி), தம்மிடம் வருகிற அல்லாஹ்வின் கொடை எதையும் தன்னிடமே வைத்துக் கொள்ளாமல் தர்மம் செய்து விடுவது வழக்கம்.

எனவே, அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி), ‘ஆயிஷா (ரலி) அவர்களின் கரத்தை (தர்மம் செய்ய விடாமல்) பிடித்துக் கொள்வது அவசியம்’ என்று கூறினார்கள். அதனால் அவர்கள் (கோபமுற்று), ‘(தர்மம் செய்ய விடாமல்) என் கையைப் பிடித்துக் கொள்வதா? (இனி அப்துல்லாஹ்வுடன் பேச மாட்டேன்.) அவருடன் (என் சபதத்தை மீறி) நான் பேசினால் (சத்தியத்தை முறித்த குற்றத்திற்காக) நான் பரிகாரம் செய்ய நேரிடும்’ என்று கூறினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி), (ஆயிஷா (ரலி) அவர்களின் கோபத்தைத் தணித்து அவர்களைத் தம்முடன் பேசச் செய்வதற்காக) (அன்னை) ஆயிஷாவிடம் தனக்காகப் பரிந்துரை செய்யும் படி குறைஷிகள் சிலரையும் குறிப்பாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தாய் மாமன் மார்களையும் கேட்டுக் கொண்டார்கள். (அவர்கள் பரிந்துரை செய்தும்) ஆயிஷா (ரலி) பேச மறுத்துவிட்டார்கள். எனவே, அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்து யகூஸ் மற்றும் மிஸ்வர் இப்னு மக்ரமா உள்ளிட்ட நபி (ஸல்) அவர்களின் தாய் மாமன்களான பனூ ஸுஹ்ரா கிளையினர் அப்துல்லாஹ்விடம், ‘நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டுக் கொண்டிருக்கும் போதே நீங்கள் திரையைக் கடந்து (அனுமதி பெறாமலே) சென்று விடுங்கள்’ என்று கூறினார்கள்.

அவ்வாறே அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களும் செய்தார்கள். பிறகு (ஆயிஷா (ரலி) அவர்களும் ஒப்புக் கொண்டு பேசிவிட்டார்கள். அவர்களின் சத்தியம் முறிந்து போனதற்குப் பரிகாரமாக) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் பத்து அடிமைகளை (விடுதலை செய்வதற்காக) அனுப்பி வைத்தார்கள். அவர்களை ஆயிஷா (ரலி) விடுதலை செய்துவிட்டார்கள். பிறகு (இது போதுமான பரிகாரம் ஆகாதோ என்ற எண்ணத்தில்) தொடர்ந்து நாற்பது எண்ணிக்கையை அடையும் வரை அடிமைகளை விடுதலை செய்து கொண்டேயிருந்தார்கள்.

இறுதியில், நான் (அப்துல்லாஹ்வுடன் பேசமாட்டேன் என்று) சத்தியம் செய்த போதே, ‘என் சத்தியம் முறிந்து போனால் அதற்குக் குறிப்பிட்ட பரிகாரத்தைச் செய்வேன்’ என்று முடிவு செய்து விட்டிருந்தால் அதை மட்டும் செய்து பொறுப்பிலிருந்து விடுபட்டிருப்பேன்’ (‘இன்ன பரிகாரம் என்று குறிப்பிட்டு முடிவு செய்யாததால் இவ்வளவு செய்தும் இந்த அளவு பரிகாரம் நிவர்த்தியானதோ, இல்லையோ என்ற சந்தேகம் இன்னும் என்னை வாட்டுகிறது’) என்று கூறினார்கள்.
Book :61

(புகாரி: 3505)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي أَبُو الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ

كَانَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ أَحَبَّ البَشَرِ إِلَى عَائِشَةَ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ، وَكَانَ أَبَرَّ النَّاسِ بِهَا، وَكَانَتْ لاَ تُمْسِكُ شَيْئًا مِمَّا جَاءَهَا مِنْ رِزْقِ اللَّهِ إِلَّا تَصَدَّقَتْ، فَقَالَ ابْنُ الزُّبَيْرِ: يَنْبَغِي أَنْ يُؤْخَذَ عَلَى يَدَيْهَا، فَقَالَتْ: «أَيُؤْخَذُ عَلَى يَدَيَّ، عَلَيَّ نَذْرٌ إِنْ كَلَّمْتُهُ»، فَاسْتَشْفَعَ إِلَيْهَا بِرِجَالٍ مِنْ قُرَيْشٍ، وَبِأَخْوَالِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاصَّةً فَامْتَنَعَتْ، فَقَالَ لَهُ الزُّهْرِيُّونَ أَخْوَالُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنْهُمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ، وَالمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ: إِذَا اسْتَأْذَنَّا فَاقْتَحِمُ الحِجَابَ، فَفَعَلَ فَأَرْسَلَ إِلَيْهَا بِعَشْرِ رِقَابٍ فَأَعْتَقَتْهُمْ، ثُمَّ لَمْ تَزَلْ تُعْتِقُهُمْ حَتَّى بَلَغَتْ أَرْبَعِينَ، فَقَالَتْ: «وَدِدْتُ أَنِّي جَعَلْتُ حِينَ حَلَفْتُ عَمَلًا أَعْمَلُهُ فَأَفْرُغُ مِنْهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.