அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்துப் பேர்களை உளவுப்படையாக (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். இப்படைக்கு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் மகன் ஆஸிமின் (தாய் வழிப்)பாட்டனார் ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) அவர்களைத் தலைவராக்கினார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து) மக்காவிற்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள ‘ஹத்தா’ என்ற இடத்தில் இருந்தபோது ‘ஹுதைல்’ குலத்தைச் சேர்ந்த ‘பனூ லிஹ்யான்’ எனும் கிளைக் குலத்தாருக்கு அவர்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. உடனே அக்கிளையினர் (அவர்களைப் பிடிப்பதற்காக) அம்பெய்யும் வீரர்கள் சுமார் நூறு பேருடன் திரண்டு, உளவுப்படையினரின் பாதச் சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் இறங்கித் தங்கி, சாப்பிட்டுவிட்டுச் சென்றிருந்த இடத்தில் பேரீச்சம் பழங்களைக் கண்டனர். ‘(இது) யஸ்ரிப் (மதீனா) நகரின் பேரீச்சம் பழம்’ என்று (தங்களுக்குள்) பேசிக் கொண்டனர். எனவே, அவர்களின் பாதச் சுவடுகளைப் பின்தொடர்ந்தனர். இவர்களின் வரவு ஆஸிம் அவர்களுக்கும், அவர்களின் தோழர்களுக்கும் தெரிந்தபோது அவர்கள் (மலைப் பாங்கான) உயரமான ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தனர். அப்போது (துரத்தி வந்த) அந்தக் கூட்டத்தினர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து, ‘இறங்கி வந்து சரணடைந்து விடுங்கள். உங்களில் யாரையும் கொல்ல மாட்டோம் என்று உங்களுக்கு உறுதிமொழியும் வாக்குறுதியும் தருகிறோம்’ என்று கூறினர். அப்போது ஆஸிம் இப்னு ஸாபித் அவர்கள் (தம் சகாக்களை நோக்கி), ‘(என்) சமூகத்தாரே! நான் ஓர் இறை மறுப்பாளனின் (வாக்குறுதியை) நம்பி அவனுடைய) பொறுப்பில் இறங்கிச் செல்ல மாட்டேன்’ (என்று கூறிவிட்டு), ‘இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்து விடு’ என்று கூறினார்கள். அந்த இறைமறுப்பாளர்கள், உளவுப்படையினரின் மீது அம்பெய்து ஆஸிமை(யும், மற்றும் அறுவரையும்) கொன்றுவிட்டனர். பிறகு குபைப், ஸைத் இப்னு தஸினா மற்றும் இன்னொரு மனிதர் (ஆகிய மூவரும்) அவர்களின் உறுதிமொழி மற்றும் வாக்குறுதியின் பேரில் இறங்கி வந்தனர். அவர்கள் (மூவரும்) தங்கள் கையில் கிடைத்தவுடன் நிராகரிப்பாளர்கள் தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அதன் மூலம் அவர்களைப் பிணைத்தனர். (இதைக் கண்ட) அந்த மூன்றாம் மனிதர், ‘இது முதல் துரோகம். அல்லாஹவின் மீதாணையாக! நான் உங்களுடன் வரமாட்டேன். இவர்களிடம் எனக்கு நல்ல பகுதி இருக்கிறது’ (என்று) கொல்லப்பட்ட தன்னுடைய சாக்களைக் கருத்தில் கொண்டு கூறினார். அவர்கள் அவரை (அடித்துத்) துன்புறுத்தி இழுத்துச சென்றனர். அவர் அவர்களுடன் செல்ல மறுத்தார். (எனவே, அவரைக் கொன்றுவிட்டனர்.) பிறகு, குபைப் அவர்களையும், ஸைத் இப்னு தஸினா அவர்களையும் கொண்டு சென்று பத்ருப் போர் நடந்து முடிந்திருந்த (அந்தச்) சமயத்தில் (மக்காவில்) விற்றுவிட்டனர். பனூ ஹாரிஸ் இப்னு ஆமிர் இப்னி நவ்ஃபல் என்னும் குலத்தார் குபைப்(ரலி) அவர்களை (பழி தீர்ப்பதற்காக) விலைக்கு வாங்கிக் கொண்டனர். (ஏனெனில்) குபைப் அவர்கள் (இக்குலத்தாரின் தலைவர்) ஹாரிஸ் இப்னு ஆமிரை பத்ருப் போரின்போது கொலை செய்திருந்தார். (புனித மாதங்கள் முடிந்து பழிக்குப் பழியாக) தம்மைக் கொலை செய்ய அவர்கள் ஒன்று திரளும் (நாள் வரும்) வரை பனூ ஹாரிஸ் குலத்தாரிடம் குபைப் கைதியாக இருந்து வந்தார். (கொலை செய்யப் போகும் நாள் நெருங்கியபோது தன்னுடைய மறைவான உறுப்புகளிலிருந்து முடிகளை) மழிப்பதற்காக ஹாரிஸின மகள் ஒருத்தியிடம் சவரக்கத்தி ஒன்றை குபைப் இரவலாகக் கேட்டார். அவளும் இரவல் தந்தாள். அப்போது, அவள் கவனிக்காமல் இருக்க. அவளுடைய சிறிய மகன் (விளையாடிக் கொண்டே) தவழ்ந்து குபைபிடம் வந்து சேர்ந்தான். குபைப் தன்னுடைய மடியில் அவனை அமர்த்திக் கொண்டிருக்க, அந்தக் கத்தி அவரின் கையிலிருக்கும் நிலையில் அவரை அவள் பார்த்தாள்.
அந்தப் பெண் (ஸைனப் பின்த் அல் – ஹாரிஸ்) கூறுகிறாள்: (கத்தி அவர் கையிலும் குழந்தை அவரின் மடியிலும் இருப்பதைப் பார்த்து எங்கே அவனை அவர் கொன்று விடுவாரோ) என்று நான் அஞ்சி நடுங்கினேன். என்னுடைய அச்சத்தை குபைப் புரிந்து கொண்டார். அப்போது அவர், ‘அவனை நான் கொன்றுவிடுவேன் என்று அஞ்சுகிறாயா? நான் அப்படிச் செய்பவன் அல்லன்’ என்று கூறினார்.
(பின்னொரு நாளில், தாம் இஸ்லாத்தை ஏற்றபின் இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தபடி அந்தப் பெண்) கூறினார்: ‘குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கண்டதில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு நாள் திராட்சைப் பழக் குலையொன்றை தம் கையில் வைத்து அவர் சாப்பிட்டுக கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது அவர் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். (அந்தப் பருவத்தில்) மக்காவில் எந்தப் பழங்களும் இருக்கவில்லை. ‘அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு’ என்று அந்தப் பெண் கூறி வந்தார். (அவரைக் கொலை செய்வதற்காக மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே உள்ள இடத்திற்கு அவரைக் கொண்டு வந்தபோது, ‘என்னை இரண்டு ரக்அத்கள் தொழ விடுங்கள்’ என்று (குபைப்) கேட்டார். அவர்களும் அனுமதித்தபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார். பிறகு, ‘மரணத்தை அஞ்சித் தான் நான் (நீண்ட நேரம் தொழுகிறேன்) என்று நீங்கள் எண்ணாவிட்டால் நான் (தொழுகையை) அதிகமாக்கியிருப்பேன்’ என்று கூறினார். பின்பு, ‘இறைவா! இவர்களை நீ எண்ணி வைத்துக் கொண்டு இவர்களை நீ தனித்தனியாகக் கொன்று விடு. இவர்களில் ஒருவனைக் கூடவிட்டு வைக்காதே’ என்று (அவர்களுக்கெதிராக) குபைப் பிரார்த்தனை புரிந்தார். அதன் பிறகு, ‘நான் முஸ்லிமாகக் கொல்லப்படும்போது எதைப் பற்றியும் நான் பொருட்படுத்த மாட்டேன். எந்த இடத்தில் நான் இறந்தாலும் நான் இறைவனுக்காகவே கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே) நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும்போது, அவன் நாடினால் என்னுடைய துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது கூட (தன்) அருள்வளத்தைப் பொழிவான்’ என்று கவிபாடினார்கள்.
பிறகு, ‘அபூ சிர்வஆ – உக்பா இப்னு ஹாரிஸ்’ என்பவன் குபைப் அவர்களிடம் வந்து, அவர்களைக் கொலை செய்தான். (அன்றிலிருந்து அடைத்து வைத்து அல்லது கட்டி வைத்துக் கொல்லப்படும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் (கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்கள்) தொழுவதை முன்மாதிரியாக்கிவிட்டவர் குபபைப் அவர்களே என்றாயிற்று. மேலும், நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு உளவுப் படையினர் (கொல்லப்பட்ட) செய்தியை அவர்கள் கொல்லப்பட்ட அன்றே (இறையறிவிப்பின் மூலம்) தெரிவித்தார்கள். ஆஸிம் இப்னு ஸாபித் அவர்கள் கொல்லப்பட்டுவிட்ட செய்தி குறைஷிகளுக்குக் கிடைத்தபோது அவர்களில் சிலர் (கொல்லப்பட்டது ஆஸிம் தான் என்று) அடையாளம் தெரிந்து கொள்ள அவரின் (முக்கிய) உறுப்புகளில் ஒன்றை (வெட்டிக்) கொண்டு வருமாறு ஆளனுப்பி வைத்தனர். (ஏனெனில்) ஆஸிம்(ரலி) (பத்ருப் போரின் போது) அவர்களின் தலைவர் ஒருவரைக் கொன்று விட்டிருந்தார். (அவரின் உடலின் முக்கிய உறுப்பொன்றை வெட்டியெடுத்து வரப்போன போது) ஆஸிம் அவர்களுக்காக (அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில்) அல்லாஹ் மேகத்தைப் போன்று ஆண்தேனீக் கூட்டமொன்றை அனுப்பினான். அவை குறைஷிகளின் தூதர்களிடமிருந்து ஆஸிம் அவர்களை பாதுகாத்தன. அவர்களின் உடலிலிருந்து எதையும் வெட்டியெடுத்துச் செல்ல அவர்களால் முடியவில்லை.
கஅப் இப்னு மாலிக்(ரலி) கூறினார்: ‘முராரா இப்னு ரபீஉ அம்ரீ(ரலி) அவர்களும் ஹிலால் இப்னு உமைய்யா அல் வாக்கிஃபீ(ரலி) அவர்களும் பத்ருப் போரில் பங்கெடுத்த நல்ல மனிதர்கள்’ என்று என்னிடம் மக்கள் கூறினர்.
Book :64
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُمَرُ بْنُ أَسِيدِ بْنِ جَارِيَةَ الثَّقَفِيُّ، حَلِيفُ بَنِي زُهْرَةَ، وَكَانَ مِنْ أَصْحَابِ أَبِي هُرَيْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
«بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشَرَةً عَيْنًا، وَأَمَّرَ عَلَيْهِمْ عَاصِمَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ جَدَّ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الخَطَّابِ» حَتَّى إِذَا كَانُوا بِالهَدَةِ بَيْنَ عَسْفَانَ، وَمَكَّةَ ذُكِرُوا لِحَيٍّ مِنْ هُذَيْلٍ يُقَالُ لَهُمْ بَنُو لِحْيَانَ، فَنَفَرُوا لَهُمْ بِقَرِيبٍ مِنْ مِائَةِ رَجُلٍ رَامٍ، فَاقْتَصُّوا آثَارَهُمْ حَتَّى وَجَدُوا مَأْكَلَهُمُ التَّمْرَ فِي مَنْزِلٍ نَزَلُوهُ، فَقَالُوا: تَمْرُ يَثْرِبَ، فَاتَّبَعُوا آثَارَهُمْ، فَلَمَّا حَسَّ بِهِمْ عَاصِمٌ وَأَصْحَابُهُ لَجَئُوا إِلَى مَوْضِعٍ فَأَحَاطَ بِهِمُ القَوْمُ، فَقَالُوا لَهُمْ: انْزِلُوا فَأَعْطُوا بِأَيْدِيكُمْ، وَلَكُمُ العَهْدُ وَالمِيثَاقُ: أَنْ لاَ نَقْتُلَ مِنْكُمْ أَحَدًا، فَقَالَ عَاصِمُ بْنُ ثَابِتٍ: أَيُّهَا القَوْمُ: أَمَّا أَنَا فَلاَ أَنْزِلُ فِي ذِمَّةِ كَافِرٍ، ثُمَّ قَالَ: اللَّهُمَّ أَخْبِرْ عَنَّا نَبِيَّكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَمَوْهُمْ بِالنَّبْلِ فَقَتَلُوا عَاصِمًا، وَنَزَلَ إِلَيْهِمْ ثَلاَثَةُ نَفَرٍ عَلَى العَهْدِ وَالمِيثَاقِ، مِنْهُمْ خُبَيْبٌ، وَزَيْدُ بْنُ الدَّثِنَةِ، وَرَجُلٌ آخَرُ، فَلَمَّا اسْتَمْكَنُوا مِنْهُمْ أَطْلَقُوا أَوْتَارَ قِسِيِّهِمْ، فَرَبَطُوهُمْ بِهَا، قَالَ الرَّجُلُ الثَّالِثُ: هَذَا أَوَّلُ الغَدْرِ، وَاللَّهِ لاَ أَصْحَبُكُمْ، إِنَّ لِي بِهَؤُلاَءِ أُسْوَةً، يُرِيدُ القَتْلَى، فَجَرَّرُوهُ وَعَالَجُوهُ فَأَبَى أَنْ يَصْحَبَهُمْ، فَانْطُلِقَ بِخُبَيْبٍ، وَزَيْدِ بْنِ الدَّثِنَةِ حَتَّى بَاعُوهُمَا بَعْدَ وَقْعَةِ بَدْرٍ، فَابْتَاعَ بَنُو الحَارِثِ بْنِ عَامِرِ بْنِ نَوْفَلٍ خُبَيْبًا، وَكَانَ خُبَيْبٌ هُوَ قَتَلَ الحَارِثَ بْنَ عَامِرٍ يَوْمَ بَدْرٍ، فَلَبِثَ خُبَيْبٌ عِنْدَهُمْ أَسِيرًا حَتَّى أَجْمَعُوا قَتْلَهُ، فَاسْتَعَارَ مِنْ بَعْضِ بَنَاتِ الحَارِثِ مُوسًى يَسْتَحِدُّ بِهَا فَأَعَارَتْهُ، فَدَرَجَ بُنَيٌّ لَهَا وَهِيَ غَافِلَةٌ حَتَّى أَتَاهُ، فَوَجَدَتْهُ مُجْلِسَهُ عَلَى فَخِذِهِ وَالمُوسَى بِيَدِهِ، قَالَتْ: فَفَزِعْتُ فَزْعَةً عَرَفَهَا خُبَيْبٌ، فَقَالَ: أَتَخْشَيْنَ أَنْ أَقْتُلَهُ؟ مَا كُنْتُ لِأَفْعَلَ ذَلِكَ، قَالَتْ: وَاللَّهِ مَا رَأَيْتُ أَسِيرًا قَطُّ خَيْرًا مِنْ خُبَيْبٍ، وَاللَّهِ لَقَدْ وَجَدْتُهُ يَوْمًا يَأْكُلُ قِطْفًا مِنْ عِنَبٍ فِي يَدِهِ، وَإِنَّهُ لَمُوثَقٌ بِالحَدِيدِ، وَمَا بِمَكَّةَ مِنْ ثَمَرَةٍ، وَكَانَتْ تَقُولُ: إِنَّهُ لَرِزْقٌ رَزَقَهُ اللَّهُ خُبَيْبًا، فَلَمَّا خَرَجُوا بِهِ مِنَ الحَرَمِ لِيَقْتُلُوهُ فِي الحِلِّ، قَالَ لَهُمْ خُبَيْبٌ: دَعُونِي أُصَلِّي رَكْعَتَيْنِ، فَتَرَكُوهُ فَرَكَعَ رَكْعَتَيْنِ، فَقَالَ: وَاللَّهِ لَوْلاَ أَنْ تَحْسِبُوا أَنَّ مَا بِي جَزَعٌ لَزِدْتُ، ثُمَّ قَالَ: اللَّهُمَّ أَحْصِهِمْ عَدَدًا، وَاقْتُلْهُمْ بَدَدًا، وَلاَ تُبْقِ مِنْهُمْ أَحَدًا، ثُمَّ أَنْشَأَ يَقُولُ
[البحر الطويل]
فَلَسْتُ أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا … عَلَى أَيِّ جَنْبٍ كَانَ لِلَّهِ مَصْرَعِي
وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَأْ … يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ
ثُمَّ قَامَ إِلَيْهِ أَبُو سِرْوَعَةَ عُقْبَةُ بْنُ الحَارِثِ فَقَتَلَهُ، وَكَانَ خُبَيْبٌ هُوَ سَنَّ لِكُلِّ مُسْلِمٍ قُتِلَ صَبْرًا الصَّلاَةَ، وَأَخْبَرَ أَصْحَابَهُ يَوْمَ أُصِيبُوا خَبَرَهُمْ، وَبَعَثَ نَاسٌ مِنْ قُرَيْشٍ إِلَى عَاصِمِ بْنِ ثَابِتٍ – حِينَ حُدِّثُوا أَنَّهُ قُتِلَ – أَنْ يُؤْتَوْا بِشَيْءٍ مِنْهُ يُعْرَفُ، وَكَانَ قَتَلَ رَجُلًا عَظِيمًا مِنْ عُظَمَائِهِمْ، فَبَعَثَ اللَّهُ لِعَاصِمٍ مِثْلَ الظُّلَّةِ مِنَ الدَّبْرِ، فَحَمَتْهُ مِنْ رُسُلِهِمْ، فَلَمْ يَقْدِرُوا أَنْ يَقْطَعُوا مِنْهُ شَيْئًا
وَقَالَ كَعْبُ بْنُ مَالِكٍ: «ذَكَرُوا مَرَارَةَ بْنَ الرَّبِيعِ العَمْرِيَّ، وَهِلاَلَ بْنَ أُمَيَّةَ الوَاقِفِيَّ، رَجُلَيْنِ صَالِحَيْنِ قَدْ شَهِدَا بَدْرًا»
சமீப விமர்சனங்கள்