(மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹ்ரி (ரஹ்) அறிவித்தார்.
இந்த ஹதீஸை நான் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்களிடம் கூறியபோது உர்வா அவர்கள், ‘மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) உண்மையே கூறினார்கள்’ என்று கூறி, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள் என அறிவித்தார்கள்:
(அபூ பக்ர் – ரலி அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது) நபி(ஸல்) அவர்களின் துணைவியர் உஸ்மான்(ரலி) அவர்களை அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அனுப்பி, அல்லாஹ் தன் தூதருக்கு ஒதுக்கித் தந்த (போர் புரியாமல் கிடைத்த ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வத்திலிருந்து தங்களுக்குச் சேரவேண்டிய எட்டில் ஒரு பகுதியைக் கேட்டனர். நான் அவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தேன். ‘நீங்கள் அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்களா? நபி(ஸல்) அவர்கள், ‘(நபிமார்களான நாங்கள்விட்டுச் செல்லும் சொத்தில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே’ என்று தம்மை(யும் தம் ஃபய்உ சொத்தையும்) கருத்தில் கொண்டு கூறக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? மேலும், ‘முஹம்மதின் குடும்பத்தார் இச்செல்வத்திலிருந்து (சிறிதளவைத்) தான் உண்பார்கள்; (இச்சொத்து முழுவதும் அவர்களுக்கு மட்டுமே உரியதன்று)’ என்றும் நபியவர்கள் கூறினார்கள் (என்பதும் நீங்கள் அறியாததா?)’ என்று நான் எடுத்துரைத்தவற்றைக் கேட்டு நபி (ஸல்) அவர்களின் துணைவியர் (தங்களின் கருத்தை மாற்றிக் கொண்டு பங்கு கேட்பதை) நிறுத்திக் கொண்டார்கள்.
அறிவிப்பாளர் உர்வா(ரஹ்) கூறினார்:
இந்த தர்மச் சொத்து அப்போது அலீ(ரலி) அவர்களின் கையில் இருந்தது. அலீ (ரலி) அச்சொத்தை (பராமரிக்கும் அதிகாரத்தை) அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (தர) மறுத்தார்கள். அச்சொத்தின் (பராமரிப்பு) விஷயத்தில் அப்பாஸ் (ரலி) அவர்களை விட அலீ (ரலி) கூடுதல் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். பிறகு, அந்தப் பொறுப்பு அலீ (ரலி) அவர்களின் (மூத்த) மகன் ஹஸன் (ரலி) அவர்களின் கைவசம் வந்தது. அதற்குப் பிறகு அலீ அவர்களின் (இளைய) மகன் ஹுஸைன் (ரலி) அவர்களின் கரத்திற்கு வந்தது. அதற்குப் பிறகு ஹுஸைன் (ரலி) அவர்களின் மகன் அலீ (ரஹ்) என்பவரின் கரத்திலும், ஹஸன் (ரலி) அவர்களின் மகன் ஹஸன் (ரஹ்) என்பவரின் கரத்திலும் (கூட்டாக) இருந்து வந்தது. அவர்கள் இருவரும் முறைவைத்துக் கொண்டு மாறிமாறி அதனைப் பராமரித்து வந்தனர். பிறகு ஹஸன் (ரஹ்) அவர்களின் மகன் ஸைத் (ரஹ்) அவர்களின் கரத்தில் இருந்து வந்தது. (இவர்கள் அனைவரும் அச்சொத்தின் பராமரிப்பிற்குப் பொறுப்பாளர்களாக மட்டுமே இருந்தார்கள். அதை உடைமையாக ஆக்கிக் கொள்ளவில்லை) உண்மையாக இது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தர்மச் சொத்தாகும்.
Book :64
قَالَ: فَحَدَّثْتُ هَذَا الحَدِيثَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، فَقَالَ:
صَدَقَ مَالِكُ بْنُ أَوْسٍ: أَنَا سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَقُولُ: ” أَرْسَلَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُثْمَانَ إِلَى أَبِي بَكْرٍ، يَسْأَلْنَهُ ثُمُنَهُنَّ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكُنْتُ أَنَا أَرُدُّهُنَّ، فَقُلْتُ لَهُنَّ: أَلاَ تَتَّقِينَ اللَّهَ، أَلَمْ تَعْلَمْنَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «لاَ نُورَثُ، مَا تَرَكْنَا صَدَقَةٌ – يُرِيدُ بِذَلِكَ نَفْسَهُ – إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا المَالِ» فَانْتَهَى أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى مَا أَخْبَرَتْهُنَّ، قَالَ: فَكَانَتْ هَذِهِ الصَّدَقَةُ بِيَدِ عَلِيٍّ، مَنَعَهَا عَلِيٌّ عَبَّاسًا فَغَلَبَهُ عَلَيْهَا، ثُمَّ كَانَ بِيَدِ حَسَنِ بْنِ عَلِيٍّ، ثُمَّ بِيَدِ حُسَيْنِ بْنِ عَلِيٍّ، ثُمَّ بِيَدِ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، وَحَسَنِ بْنِ حَسَنٍ، كِلاَهُمَا كَانَا يَتَدَاوَلاَنِهَا، ثُمَّ بِيَدِ زَيْدِ بْنِ حَسَنٍ، وَهِيَ صَدَقَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَقًّا
சமீப விமர்சனங்கள்