தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4274

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 47 மக்கா வெற்றியின் போது நடந்த புனிதப் போரும் ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் போர் தொடுக்கவிருக்கும் செய்தியை மக்காவாசிகளுக்கு (ஒரு பெண் மூலம் இரகசியமாக) அனுப்பி வைத்ததும்.313
 அலீ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களையும் மிக்தாத் இப்னு அஸ்வத் அவர்களையும், ‘நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ எனும் இடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் ‘ரவ்ளா’ எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), ‘கடிதத்தை வெளியே எடு’ என்று கூறினோம். அவள், ‘என்னிடம் கடிதம் எதுவுமில்லை’ என்று சொன்னாள். நாங்கள், ‘ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்’ என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்கா வாசிகளான இணைவைப்போரிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஹாத்திபே! என்ன இது?’ என்று கேட்டார்கள். ஹாத்திப்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாகவே இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால், (இணைவைப்பவர்களான) மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் எதையாவது செய்து அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் அங்குள்ள என் (பலவீனமான) உறவினர்களைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (அதனால், இணைவைப்பவர்கள் கேட்டுக் கொண்டதால் இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் என் மார்க்க(மான இஸ்லா)த்தைவிட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இவர் உங்களிடம் உண்மை பேசினார்’ என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விடுகிறேன்!’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உங்களுக்கென்ன தெரியும்? ஒரு வேளை, அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களிடம் ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்’ என்று கூறிவிட்டிருக்கலாம்’ என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ் பின்வரும் (60-வது) அத்தியாயத்தை அருளினான்: இறைநம்பிக்கையாளர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்போரை நண்பர்களாக எடுத்துக் கொண்டு, நட்பின் காரணத்தினால் (உங்களின் இரகசியங்களை) அவர்களுடன் (பரிமாறிக் கொண்டு) உறவாட வேண்டாம்! அவர்கள், உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை மறுத்துவிட்டவர்கள்… (திருக்குர்ஆன் 60:01)
Book : 64

(புகாரி: 4274)

بَابُ غَزْوَةِ الفَتْحِ

وَمَا بَعَثَ حَاطِبُ بْنُ أَبِي بَلْتَعَةَ إِلَى أَهْلِ مَكَّةَ يُخْبِرُهُمْ بِغَزْوِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي الحَسَنُ بْنُ مُحَمَّدٍ، أَنَّهُ سَمِعَ عُبَيْدَ اللَّهِ بْنَ أَبِي رَافِعٍ، يَقُولُ: سَمِعْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ

بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَالزُّبَيْرَ، وَالمِقْدَادَ، فَقَالَ: «انْطَلِقُوا حَتَّى تَأْتُوا رَوْضَةَ خَاخٍ، فَإِنَّ بِهَا ظَعِينَةً مَعَهَا كِتَابٌ، فَخُذُوا مِنْهَا» قَالَ: فَانْطَلَقْنَا تَعَادَى بِنَا خَيْلُنَا حَتَّى أَتَيْنَا الرَّوْضَةَ، فَإِذَا نَحْنُ بِالظَّعِينَةِ، قُلْنَا لَهَا: أَخْرِجِي الكِتَابَ، قَالَتْ: مَا مَعِي كِتَابٌ، فَقُلْنَا: لَتُخْرِجِنَّ الكِتَابَ، أَوْ لَنُلْقِيَنَّ الثِّيَابَ، قَالَ: فَأَخْرَجَتْهُ مِنْ عِقَاصِهَا، فَأَتَيْنَا بِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا فِيهِ: مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ، إِلَى نَاسٍ بِمَكَّةَ مِنَ المُشْرِكِينَ، يُخْبِرُهُمْ بِبَعْضِ أَمْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا حَاطِبُ، مَا هَذَا؟» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، لاَ تَعْجَلْ عَلَيَّ، إِنِّي كُنْتُ امْرَأً مُلْصَقًا فِي قُرَيْشٍ، يَقُولُ: كُنْتُ حَلِيفًا، وَلَمْ أَكُنْ مِنْ أَنْفُسِهَا، وَكَانَ مَنْ مَعَكَ مِنَ المُهَاجِرِينَ مَنْ لَهُمْ قَرَابَاتٌ يَحْمُونَ أَهْلِيهِمْ وَأَمْوَالَهُمْ، فَأَحْبَبْتُ إِذْ فَاتَنِي ذَلِكَ مِنَ النَّسَبِ فِيهِمْ، أَنْ أَتَّخِذَ عِنْدَهُمْ يَدًا يَحْمُونَ قَرَابَتِي، وَلَمْ أَفْعَلْهُ ارْتِدَادًا عَنْ دِينِي، وَلاَ رِضًا بِالكُفْرِ بَعْدَ الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكُمْ»، فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، دَعْنِي أَضْرِبْ عُنُقَ هَذَا المُنَافِقِ، فَقَالَ: ” إِنَّهُ قَدْ شَهِدَ بَدْرًا، وَمَا يُدْرِيكَ لَعَلَّ اللَّهَ اطَّلَعَ عَلَى مَنْ شَهِدَ بَدْرًا فَقَالَ: اعْمَلُوا مَا شِئْتُمْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ “. فَأَنْزَلَ اللَّهُ السُّورَةَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاءَ تُلْقُونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوا بِمَا جَاءَكُمْ مِنَ الحَقِّ} [الممتحنة: 1]- إِلَى قَوْلِهِ – {فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ} [البقرة: 108]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.