தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4280

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 49 மக்கா வெற்றி நாளில் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை நபி (ஸல்) அவர்கள் எங்கே நட்டு வைத்தார்கள்?
 உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (அதனை வெற்றி கொள்வதற்காக மதீனாவிலிருந்து) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பயணம் மேற்கொண்டபோது, அவர்கள் வருகிற செய்தி (மக்கா) குறைஷிகளுக்கு எட்டியது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பற்றிய செய்தியை (உளவு) அறிவதற்காக அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப், ஹகீம் இப்னு ஹிஸாம், புதைல் இப்னு வர்கா ஆகியோர் (மக்காவிலிருந்து) புறப்பட்டனர். அவர்கள் பயணம் மேற்கொண்டு ‘மர்ருழ் ழஹ்ரான்’ என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தபோது (அங்கே பல இடங்களில் மூடப்பட்டிருந்த) நெருப்புகளைக் கண்டனர். அவை, அரஃபா(வில் ஹாஜிகள் மூட்டும்) நெருப்புகள் போன்றிருந்தன. அப்போது அபூ சுஃப்யான், ‘இது என்ன நெருப்பு? இது அரஃபா நெருப்பைப் போன்றே இருக்கிறதே’ என்று கேட்டதற்கு புதைல் இப்னு வர்கா, ‘இது (‘குபா’வில் குடியிருக்கும் ‘குஸாஆ’ எனப்படும்) பனூஅம்ர் குலத்தாரின் நெருப்புகள்’ என்று கூறினார். உடனே அபூ சுஃப்யான் (பனூ) அம்ர் குலத்தவரின் எண்ணிக்கை இதை விட மிகக் குறைவாகும். (எனவே, அவர்களின் நெருப்புகளாக இருக்க வாய்ப்பில்லை)’ என்று கூறினார். அப்போது அவர்கள் மூவரையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காவலர்களில் சிலர் பார்த்துவிட்டனர். உடனே, அவர்களை அடைந்து, அவர்களைப் பிடித்து (கைது செய்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். பின்பு அபூ சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றார். அதற்குப் பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள். (மக்காவை நோக்கி முன்னேறிச்) சென்றபோது அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘குதிரைப் படை செல்லும்போது நெரிசல் ஏற்படக் கூடிய (குறுகலான) இடத்தில் அபூ சுஃப்யானை நிறுத்திவையுங்கள். அவர் முஸ்லிம்களைப் பார்க்கட்டும். (அவர்களின் படை பலத்தைப் புரிந்து கொள்ளட்டும்)’ என்று கூறினார்கள். (அவ்வாறே) அப்பாஸ்(ரலி) அவரை (அந்த இடத்தில்) நிறுத்திவைத்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களுடன் அனைத்துக குலத்தாரின் படைகளும் ஒவ்வொன்றாக அபூ சுஃப்யானைக் கடந்து செல்லத் தொடங்கின. அவரை ஒரு படை கடந்து சென்றவுடன் ‘அப்பாஸே! இவர்கள் யார்?’ என்று அபூ சுஃப்யான் கேட்டதற்கு அப்பாஸ்(ரலி), ‘இவர்கள் ஃம்ஃபாரீ குலத்தினர்’ என்று பதிலளித்தார்கள். (உடனே,) ‘எனக்கும் ஃம்ஃபார் குலத்தாருக்கும் என்ன சம்பந்தம்? (எங்களுக்கிடையில் பூசலோ மோதலோ இல்லையே!)’ என்று அபூ சுஃப்யான் கூறினார். பிறகு ஜுஹைனா குலத்தார் அவரைக் கடந்து சென்றனர். அப்போது அபூ சுஃப்யான் முன் போன்றே கேட்டார். பிறகு (அவரைக் கடந்து) ஸஅத் இப்னு ஹுதைம் குலத்தினர் சென்றனர். அப்போதும் அவ்வாறே அபூ சுஃப்யான் கேட்டார். (பிறகு) சுலைம் குலத்தினர் சென்றனர். முன்பு போன்றே அபூ சுஃப்யான் கேட்டார். (அப்பாஸ் – ரலி அவர்களும் முன்பு போன்றே பதிலளித்தார்கள்.) கடைசியில் ஒரு (பெரிய) படை முன்னோக்கி வந்தது. அதைப் போன்ற (பெரும்) படையை அபூ சுஃப்யான் பார்த்திருக்கவில்லை. ‘இவர்கள் யார்?’ என்று அபூ சுஃப்யான் கேட்க, ‘இவர்கள் தாம் அன்சாரிகள். ஸஅத் இப்னு உபாதா இவர்களின் தலைவர். அவருடன் தான் (அன்சாரிகளின்) கொடியிருக்கிறது’ என்று அப்பாஸ்(ரலி) பதிலளித்தார்கள்.
அப்போது ஸஅத் இப்னு உபாதா(ரலி), ‘அபூ சுஃப்யானே! இன்று, (தப்பிக்க முடியாத மாபெரும்) யுத்த நாளாகும். இன்று கஅபாவி(ன் புனித எல்லையி)னுள்ளே கூட யுத்தம் அனுமதிக்கப்படும்’ என்று (உணர்ச்சி வசப்பட்டுக்) கூறினார்கள். அதற்கு அபூ சுஃப்யான் ‘அப்பாஸே! அழிவு நாளில் இது மிக நல்ல நாள் (குறைஷிகளுக்கு ஆபத்தே; என்றாலும், நீங்கள் கருணை காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு)’ என்று கூறினார்.
பிறகு, ஒரு படை வந்தது. அது (இதுவரை வந்த) படைகளிலேயே மிகவும் சிறியதாக இருந்தது. அவர்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களுக்குரிய கொடி, ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களிடம் இருந்தது. அபூ சுஃப்யானைக் கடந்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றபோது அவர், (இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்) ‘ஸஅத் இப்னு உபாதா என்ன கூறினார் என்பது உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவர் என்ன கூறினார்?’ என்று கேட்டார்கள். இப்படி… இப்படி… எல்லாம் கூறினார்’ என்று அபூ சுஃப்யான் (விவரித்துச்) கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உண்மைக்குப் புறம்பானதை ஸஅத் கூறிவிட்டார்’ என்று சொல்லிவிட்டு, ‘மாறாக, இந்த நாள் இறையில்லம் கஅபாவை அல்லாஹ் கண்ணியப்படுத்தும் நாள். கஅபாவிற்குத் திரை போர்த்தப்படும் (முக்கியமான) நாள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தக் கொடியினை (மக்காவின் பொது அடக்கத்தலத்திற்கு அருகிலுள்ள) ‘ஹஜூன்’ என்னும் இடத்தில் நட்டு வைக்கம்படி உத்தரவிட்டார்கள்.
(மக்கா வெற்றிக்குப் பின்) அப்பாஸ்(ரலி) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களிடம், ‘அபூ அப்தில்லாஹ்வே!’ இங்கு தான் அந்தக் கொடியினை நட்டு வைக்கும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்கு உத்தரவிட்டார்கள்’ என்றார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் அன்றைய தினம் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களை மக்காவின் மேற்பகுதியான ‘கதா’ என்னும் கணவாய் வழியாக (மக்காவிற்குள்) நுழையுமாறு உத்தரவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘குதா’ வழியாக நுழைந்தார்கள். அன்றைய தினம் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களின் குதிரைப் படையினரில் இருவரான ஹுபைஷ் இப்னு அல் அஷ்அர்(ரலி) அவர்களும் குர்ஸ் இப்னு ஜாபிர் அல்ஃபிஹ்ரீ(ரலி) அவர்களும் (உயிர்த்தியாகிகளாகக்) கொல்லப்பட்டனர்.
Book : 64

(புகாரி: 4280)

بَابٌ: أَيْنَ رَكَزَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّايَةَ يَوْمَ الفَتْحِ؟

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، قَالَ

لَمَّا سَارَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفَتْحِ، فَبَلَغَ ذَلِكَ قُرَيْشًا، خَرَجَ أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ، وَحَكِيمُ بْنُ حِزَامٍ، وَبُدَيْلُ بْنُ وَرْقَاءَ، يَلْتَمِسُونَ الخَبَرَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَقْبَلُوا يَسِيرُونَ حَتَّى أَتَوْا مَرَّ الظَّهْرَانِ، فَإِذَا هُمْ بِنِيرَانٍ كَأَنَّهَا نِيرَانُ عَرَفَةَ، فَقَالَ أَبُو سُفْيَانَ: مَا هَذِهِ، لَكَأَنَّهَا نِيرَانُ عَرَفَةَ؟ فَقَالَ بُدَيْلُ بْنُ وَرْقَاءَ: نِيرَانُ بَنِي عَمْرٍو، فَقَالَ أَبُو سُفْيَانَ: عَمْرٌو أَقَلُّ مِنْ ذَلِكَ، فَرَآهُمْ نَاسٌ مِنْ حَرَسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَدْرَكُوهُمْ فَأَخَذُوهُمْ، فَأَتَوْا بِهِمْ  رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَ أَبُو سُفْيَانَ، فَلَمَّا سَارَ قَالَ لِلْعَبَّاسِ: «احْبِسْ أَبَا سُفْيَانَ عِنْدَ حَطْمِ الخَيْلِ، حَتَّى يَنْظُرَ إِلَى المُسْلِمِينَ». فَحَبَسَهُ العَبَّاسُ، فَجَعَلَتِ القَبَائِلُ تَمُرُّ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَمُرُّ كَتِيبَةً كَتِيبَةً عَلَى أَبِي سُفْيَانَ، فَمَرَّتْ كَتِيبَةٌ، قَالَ: يَا عَبَّاسُ مَنْ هَذِهِ؟ قَالَ: هَذِهِ غِفَارُ، قَالَ: مَا لِي وَلِغِفَارَ، ثُمَّ مَرَّتْ جُهَيْنَةُ، قَالَ مِثْلَ ذَلِكَ، ثُمَّ مَرَّتْ سَعْدُ بْنُ هُذَيْمٍ فَقَالَ مِثْلَ ذَلِكَ، وَمَرَّتْ سُلَيْمُ، فَقَالَ مِثْلَ ذَلِكَ، حَتَّى أَقْبَلَتْ كَتِيبَةٌ لَمْ يَرَ مِثْلَهَا، قَالَ: مَنْ هَذِهِ؟ قَالَ: هَؤُلاَءِ الأَنْصَارُ، عَلَيْهِمْ سَعْدُ بْنُ عُبَادَةَ مَعَهُ الرَّايَةُ، فَقَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ: يَا أَبَا سُفْيَانَ، اليَوْمَ يَوْمُ المَلْحَمَةِ، اليَوْمَ تُسْتَحَلُّ الكَعْبَةُ، فَقَالَ أَبُو سُفْيَانَ: يَا عَبَّاسُ حَبَّذَا يَوْمُ الذِّمَارِ، ثُمَّ جَاءَتْ كَتِيبَةٌ، وَهِيَ أَقَلُّ الكَتَائِبِ، فِيهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ، وَرَايَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ الزُّبَيْرِ بْنِ العَوَّامِ، فَلَمَّا مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَبِي سُفْيَانَ قَالَ: أَلَمْ تَعْلَمْ مَا قَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ؟ قَالَ: «مَا قَالَ؟» قَالَ: كَذَا وَكَذَا، فَقَالَ: «كَذَبَ سَعْدٌ، وَلَكِنْ هَذَا يَوْمٌ يُعَظِّمُ اللَّهُ فِيهِ الكَعْبَةَ، وَيَوْمٌ تُكْسَى فِيهِ الكَعْبَةُ» قَالَ: وَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُرْكَزَ رَايَتُهُ بِالحَجُونِ قَالَ عُرْوَةُ، وَأَخْبَرَنِي نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ: سَمِعْتُ العَبَّاسَ، يَقُولُ لِلزُّبَيْرِ بْنِ العَوَّامِ: يَا أَبَا عَبْدِ اللَّهِ هَا هُنَا أَمَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَرْكُزَ الرَّايَةَ، قَالَ: ” وَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ خَالِدَ بْنَ الوَلِيدِ أَنْ يَدْخُلَ مِنْ أَعْلَى مَكَّةَ مِنْ كَدَاءٍ، وَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ كُدَا، فَقُتِلَ مِنْ خَيْلِ خَالِدِ بْنِ الوَلِيدِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَوْمَئِذٍ رَجُلاَنِ: حُبَيْشُ بْنُ الأَشْعَرِ، وَكُرْزُ بْنُ جابِرٍ الفِهْرِيُّ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.