தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4987

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்

ஹுதைஃபா யமான் (ரலி) உஸ்மான் (ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான் (ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9

ஹுதைஃபா (ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10

எனவே, ஹுதைஃபா (ரலி) உஸ்மான் (ரலி) அவர்களிடம், ‘யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!’ என்று கூறினார்கள். எனவே, உஸ்மான் (ரலி) (அன்னை) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி ‘தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்’ என்று தெரிவித்தார்கள்.

எனவே, ஹஃப்ஸா (ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான் (ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி), ஸயீத் இப்னு ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம் (ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் (ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான் (ரலி) (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, ‘நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறைஷியரின் (வட்டார) மொழிவழக்குப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று’ என்று கூறினார்கள்.

அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான் (ரலி) உத்தரவிட்டார்கள்.

Book :66

(புகாரி: 4987)

حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، حَدَّثَهُ

أَنَّ حُذَيْفَةَ بْنَ اليَمَانِ، قَدِمَ عَلَى عُثْمَانَ وَكَانَ يُغَازِي أَهْلَ الشَّأْمِ فِي فَتْحِ أَرْمِينِيَةَ، وَأَذْرَبِيجَانَ مَعَ أَهْلِ العِرَاقِ، فَأَفْزَعَ حُذَيْفَةَ اخْتِلاَفُهُمْ فِي القِرَاءَةِ، فَقَالَ حُذَيْفَةُ لِعُثْمَانَ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، أَدْرِكْ هَذِهِ الأُمَّةَ، قَبْلَ أَنْ يَخْتَلِفُوا فِي الكِتَابِ اخْتِلاَفَ اليَهُودِ وَالنَّصَارَى، فَأَرْسَلَ عُثْمَانُ إِلَى حَفْصَةَ: «أَنْ أَرْسِلِي إِلَيْنَا بِالصُّحُفِ نَنْسَخُهَا فِي المَصَاحِفِ، ثُمَّ نَرُدُّهَا إِلَيْكِ»، فَأَرْسَلَتْ بِهَا حَفْصَةُ إِلَى عُثْمَانَ، فَأَمَرَ زَيْدَ بْنَ ثَابِتٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ العَاصِ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الحَارِثِ بْنِ هِشَامٍ فَنَسَخُوهَا فِي المَصَاحِفِ “، وَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ القُرَشِيِّينَ الثَّلاَثَةِ: «إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي شَيْءٍ مِنَ القُرْآنِ فَاكْتُبُوهُ بِلِسَانِ قُرَيْشٍ، فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ» فَفَعَلُوا حَتَّى إِذَا نَسَخُوا الصُّحُفَ فِي المَصَاحِفِ، رَدَّ عُثْمَانُ الصُّحُفَ إِلَى حَفْصَةَ، وَأَرْسَلَ إِلَى كُلِّ أُفُقٍ بِمُصْحَفٍ مِمَّا نَسَخُوا، وَأَمَرَ بِمَا سِوَاهُ مِنَ القُرْآنِ فِي كُلِّ صَحِيفَةٍ أَوْ مُصْحَفٍ، أَنْ يُحْرَقَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.