தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5361

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 அல்லாஹ் கூறுகின்றான்: (தம் குழந்தைகளுக்குப்) பால்குடியை முழுமையாக்க விரும்புகிற(கண)வர்களுக் காகத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிறைவான இரண்டு ஆண்டுகள் அமுதூட்டு வார்கள். அமுதூட்டும் அவர்களுக்கு உணவும் உடையும் முறைப்படி வழங்குவது குழந்தைக்குரிய தகப்பன் மீது கடமையாகும். எவருக்கும் அவரது சக்திக்கேற்பவே தவிர கட்டளைகள் பிறப்பிக்கப்பட மாட்டா. ஒரு தாய் தன் குழந்தைக்காகவோ, ஒரு தந்தை தன் குழந்தைக்காகவோ துன்புறுத்தப்பட மாட்டார்கள். (தந்தை இறந்துவிட்டால்) அதைப் போன்ற கடமை வாரிசுகள் மீதும் உண்டு. (தாய், தந்தை) இருவரும் ஆலோசனை கலந்து திருப்தி அடைந்து (ஈராண்டுகளுக்கு முன்பே) பால்குடிப் பழக்கத்தை நிறுத்திவிட விரும்பினால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:233)12 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரையில் முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடனேயே கழிகின்றன). (46:15)13 மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: (குழந்தைக்குப் பாலூட்டுவதில் தம்பதிய ரான) உங்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டால், தந்தையின் சார்பில் வேறொரு பெண் பாலூட்டுவாள். வசதியுடையவர் தம் வசதிக்கேற்பச் செலவு செய்யட்டும்! யாருக்கு அளவான வசதி அளிக்கப்பட்டுள்ளதோ அவர் தமக்கு இறைவன் வழங்கியதிலிருந்து செலவழிக்கட்டும்! அல்லாஹ், தான் வழங்கிய தற்கேற்பவே தவிர எவருக்கும் கட்டளைகள் பிறப்பிப்பதில்லை. கஷ்டத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் வழங்குவான். (65:6, 7)14 ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (2:233ஆவது வசனத்தின் விளக்கவுரையில்) கூறினார்கள்: எந்தத் தாயும் தன் குழந்தை மூலம் (குழந்தையின் தந்தைக்கு) இடையூறு அளிப்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான். அது எவ்வாறெனில், தன்னால் குழந்தைக்குப் பாலூட்ட முடியாது எனத் தாய் மறுக்கிறாள். உண்மையில், தாய்ப்பால்தான் குழந்தைக்குச் சிறந்த உணவாகும். மற்றவர்களைவிடத் தாயே தன் குழந்தை மீது அதிகப் பரிவும் பாசமும் கொண்டவள் ஆவாள். எனவே, (குழந்தையின்) தந்தை, தன் மீது இறைவன் விதித்துள்ள கடமையை (ஜீவனாம்சத்தை) அவளுக்கு நிறைவேற்றிய பின்பும் அவள் (பாலூட்ட) மறுக்கக் கூடாது. (இதைப் போன்றே,) குழந்தையின் தந்தை தன் குழந்தை மூலம் அதன் தாய்க்கு இடையூறு அளிக்கலாகாது. (உதாரணமாக) தாய் பாலூட்ட முன்வந்தும்,அவளுக்கு இடரளிப்பதற்காக மற்றொரு பெண்ணைப் பாலூட்டுமாறு கூறி, தாயைத் தடுப்பது கூடாது. ஆனால், தாயும் தந்தையும் மனமொப்பி வேறொரு பெண்ணைப் பாலூட்ட ஏற்பாடு செய்தால் குற்றமாகாது. மேலும், இருவரின் திருப்தியோடும் ஆலோசனையின் பேரிலும் பால்குடியை நிறுத்த இருவரும் விரும்பினால் அதுவும் குற்றமாகாது. (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபிஸால்’ எனும் சொல்லுக்குப் பால்குடியை நிறுத்துதல்’ என்று பொருள். பாடம் : 6 கணவனின் வீட்டு வேலைகளை மனைவி செய்வது.

 அலீ(ரலி) அறிவித்தார்

(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி(ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஃபாத்திமா நபி(ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே, நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அவர்கள், ‘நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்’ என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்.) அப்போது அவர்கள், ‘நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? ‘நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது’ அல்லது ‘உங்கள் விரிப்புக்குச் செல்லும் போது’ முப்பத்து மூன்று முறை ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை ‘அல்ஹம்துலில்லாஹ்’ (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்’ என்று கூறினார்கள். 15

Book : 69

(புகாரி: 5361)

بَابُ عَمَلِ المَرْأَةِ فِي بَيْتِ زَوْجِهَا

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ: حَدَّثَنِي الحَكَمُ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، حَدَّثَنَا عَلِيٌّ

أَنَّ فَاطِمَةَ عَلَيْهِمَا السَّلاَمُ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشْكُو إِلَيْهِ مَا تَلْقَى فِي يَدِهَا مِنَ الرَّحَى، وَبَلَغَهَا أَنَّهُ جَاءَهُ رَقِيقٌ، فَلَمْ تُصَادِفْهُ، فَذَكَرَتْ ذَلِكَ لِعَائِشَةَ، فَلَمَّا جَاءَ أَخْبَرَتْهُ عَائِشَةُ، قَالَ: فَجَاءَنَا وَقَدْ أَخَذْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْنَا نَقُومُ، فَقَالَ: «عَلَى مَكَانِكُمَا» فَجَاءَ فَقَعَدَ بَيْنِي وَبَيْنَهَا، حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى بَطْنِي، فَقَالَ: «أَلاَ أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَا؟ إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا – أَوْ أَوَيْتُمَا إِلَى فِرَاشِكُمَا – فَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَكَبِّرَا أَرْبَعًا وَثَلاَثِينَ، فَهُوَ خَيْرٌ لَكُمَا مِنْ خَادِمٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.